காட்டில் ஒரு பெரிய, வயதான மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு பொந்து இருந்தது. ரொம்ப நாட்களாக அதில் முயலம்மாவும் அதன் குட்டி ரேபியும் வசித்து வந்தன. முயலம்மாவுக்கு ரேபி என்றால் உயிர். அது இரைதேடப் போகும்போதெல்லாம் குட்டியைத் தன்னந்தனியாக வீட்டில் விட்டுச்செல்லும்.
ஒவ்வொரு தடவையும் வெளியே போய்விட்டுத் திரும்பி வரும்வரை வீட்டுவாசலில் மணலையும் இலைகளையும் பரப்பி துளை வாயிலை அடைத்து வைக்கும்.
அன்றொரு நாள்...
ரேபி குட்டி வீட்டில் தனியாக இருந்தது. அப்போது ஒரு அழைப்புக்குரல் கேட்டது.
"ரேபி! ரேபி! வெளியே வர்றியா. நாம விளையாடுவோம்"
முயல் குட்டி வீட்டைத் தாண்டி வரவில்லை.
"ஊஹூம்! நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. நான் வீட்டைவிட்டு வெளிய வந்தது அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க" என்று பொந்துக்குள்ளிருந்து பதில் சொன்னது குட்டிமுயல்.
"நான் யாருன்னு ஒனக்குத் தெரியுமா? உங்க வீட்டுக்கு மேலே வளர்ந்திருக்கிற மரம் பேசுறேன். இன்னக்கி எனக்குப் பொறந்தநாள். அணில், ஓணான், பல்லி, கிளி, குருவி, மரங்கொத்தின்னு பல சிறு விலங்குகள் வந்திருக்காங்க. நீயும் கொஞ்சநேரம் இங்கே வரலாம்ல."
பிறந்த நாள் கொண்டாட்டம் என்றதும் ரேபிக்கு ஆர்வம் கூடியது. பேசும் மரத்தையும் மற்ற விலங்குகளையும் பார்க்க ஆசைப்பட்டது.
சற்று நேரத்தில் வீட்டுக்கு முன்பு இருந்த மணலையும் இலைகளையும் யாரோ அகற்றினார்கள். முயல் வீட்டில் வெளிச்சம் பரவியது. ரேபி, அங்கிருந்து தாவிப் புல்வெளிக்கு வந்தது.
ஆமாம்! முயல்குட்டியை வீட்டுக்கு வெளியே கொண்டுவந்தது யார்? நாலாபக்கமும் கண்களை அலையவிட்டுத் தேடிப்பார்த்த குட்டிமுயலுக்கு முன்னால் ஒரு ஓணான் வந்து நின்றது.
"பயப்படாதே! நான்தான் உங்க வீட்டு வாசலைத் திறக்கச்சொல்லி ஓணானிடம் சொன்னேன்" என்று பேசியபடி வயதான மரம் தனது நீளமான கிளை ஒன்றை வளைத்துக் கீழே இறக்கியது. அங்கு நடக்கிற விநோதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டது குட்டிமுயல்.
"உன்னை என்னோட தோள்மீது ஏற்றி வெச்சுக்க ஆசை" என்று மரம் பேசியதைக் கேட்ட முயலுக்கு ஒரு சந்தேகம்.
"ஐயோ! எனக்கு மரமேறத் தெரியாதே" என்றது குட்டிமுயல்.
உடனே அந்த மரம் தனது நீளமான கிளையை வளைத்து நிலத்தைத் தொட்டது. உட்கார வசதியாக, தன் நுனிக்கிளையில் ரேபியை ஏற்றிக்கொண்டது. பிறகு, அந்தக் கிளை மெல்ல மெல்ல மேலே எழுந்துசென்றது. முயல் குட்டியை உச்சிக்குக் கூட்டிட்டுப் போனது.
ரேபி குட்டி, மரத்தில் உட்கார்ந்தபடி அழகான காட்டைப் பார்த்து ரசித்தது.
"எனக்கிப்போ நாற்பத்தி இரண்டு வயசு. ஒன்னோட தாத்தா பாட்டிகளுக்குக்கூட என்னைத் தெரியும்" என்ற வயதான மரம், மற்ற சிறு விலங்குகளை முயலுக்கு அருகில் அழைத்தது. அவையெல்லாமே பெரிய கிளைக்கு அருகில் ஒன்று கூடின. காட்டின் கதைகளைக் குட்டிமுயலுக்குச் சொல்லிக்கொடுத்தன. காடு பற்றிய விவரங்களையும் விலங்குகள் பற்றியும் தெரிந்துகொண்ட ரேபி நன்றி சொன்னது.
கதை கேட்கிற ஆர்வத்தில் மரத்தின் பிறந்தநாள் பற்றி மறந்துபோனது குட்டிமுயல்.
"ஐயோ! என்ன மன்னிச்சிடு. பிறந்தநாளுக்குப் பரிசாத் தர எங்கிட்ட எதுவுமே இல்லையே. அம்மா தந்த காரட் துண்டைக்கூட ஒத்தையில சாப்பிட்டுட்டேனே."
"உன்னைப் போல சின்னக் குழந்தைகளோட பேச்சே இந்த உலகத்துக்கும் எனக்கும் கிடைச்ச பெரிய பரிசு. அதில்லாம வாழ்நாள் முழுக்க தங்கிட்ட இருக்கிறதை மத்தவங்களுக்குப் பரிசாகத் தருவது மரங்களோட வழக்கம்" என்ற மரம் சற்று யோசித்துச் சொன்னது: "ஆனாலும் நானிப்போ ஒனக்காக ஒரு கிஃப்ட் தரப்போறேன்" என்ற மரம் கம்பீரமான குரலில் அணிலை அழைத்துச் சொன்னது.
"அணிலே! அணிலே! எல்லாக் கிளைகளிலும் ஏறிச்சென்று ஒரு பெரிய இலையைப் பறித்து வா" என்றதும் பாய்ந்தோடியது அணில். அகலமான இலையுடன் திரும்பிய அணில், மரம் சொல்லச் சொல்ல, இலையைக் கூம்பாக மடித்துக் குட்டி முயலின் தலையில் கவிழ்த்தது. அங்கிருந்த பிற விலங்குகள் ரேபியைப் பாராட்டி மகிழ்ந்தன.
"அய், இந்த இலைக் கிரீடம் உனக்கு அழகா இருக்குது. இந்தக் காட்டுக்கு இனி உன்னையே இளவரசனாக நியமிச்சுடலாம்" என்று ஒரு பச்சைக்கிளி சொன்னது.
நேரமாக ஆக முயல்குட்டிக்குப் பசியெடுத்தது. தனது குடும்ப உறுப்பினர்களில் ஒன்றான மரங்கொத்திக்கு அகத்திக் கீரைச் செடியிலிருந்து இலைகளைப் பறித்துத் தரச்சொல்லி மரம் வேண்டுகோள் வைத்தது. மரங்கொத்தியும் அப்படியே செய்தது.
சாப்பாட்டை முடித்ததும் ரேபிக்கு விளையாட ஆசை வந்தது. இதை மரத்திடம் சொன்னது. அதைக் கேட்ட அணில், நாகலிங்க மரத்தின் காயைப் பறித்துத் தந்தது. உச்சியில் உட்கார்ந்திருந்த குட்டிமுயல் அதை உதைத்து விளையாடியது. காய் கீழே உருண்டு நிலத்தில் விழுந்தது.
இப்படி மரத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் சாயங்காலம் வரை தொடர்ந்தது. புதிய நண்பர்களுடன் சேர்ந்து பல விளையாட்டுகளை ஆடி முடித்த ரேபிக்கு வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
"நான் வீட்டுக்குப் போணும். என்னை வீட்டு வாசலில் இறக்கி விடுங்க" என மரத்திடம் உதவி கேட்டது குட்டிமுயல்.
வணக்கம் சொல்லி வாழ்த்திய வயதான மரம், குட்டி முயலை நிலத்தில் இறக்கிவிட்டது. மற்ற சிறு விலங்குகள் எல்லாம் இறங்கி வந்து நன்றி சொல்லிவிட்டுச் சென்றன. அப்போது அங்கு வந்த முயலம்மா, இலைக் கீரிடம் அணிந்திருந்த ரேபியைப் பார்த்து வியந்துபோனது.
"யார் உனக்கு இலைக் கீரிடம் சூட்டியது" என கேட்டது முயலம்மா. நடந்ததை சொன்னதும், மரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக் கை குலுக்கியது முயலம்மா.
என்ன குழந்தைகளே! நீங்களும் மரத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வருகிறீர்களா?
கொ.மா.கோ. இளங்கோ |