ஹரி கிருஷ்ணனின் அனுமன்: வார்ப்பும் வனப்பும்
எந்த மொழியிலானாலும் காவியங்கள் பயமுறுத்தும் குணம் கொண்டவை. பல நூல் பயின்ற அறிஞர்களும் ஆங்காங்கே கையளவு எடுத்துப் பருகி நாக்கைச் சப்புக்கொட்டிப் போவார்களே தவிர, முனைந்து உட்கார்ந்து படித்துச் சுவைக்க அஞ்சுவர். அதிலும் கல்வியிற் பெரியவன் கம்பனைப் படிக்க மிகுந்த பொறுமையும், மொழித் தேர்ச்சியும், கவியுள்ளம் காணும் நுண்ணறிவும் தேவை. இவற்றோடு பக்தியும் இருக்குமானால் ஒரு அதிலே ஒரு புதிய பரிமாணம் காணும். இவையெல்லாம் இல்லாமல் அதனைப் போகிற போக்கில், மாத நாவல் போலப் படித்தெறிந்துவிட்டுப் போக முடியாது.

விரிகுடாப் பகுதியில் ஆறுமாத காலம் ஞாயிறுதோறும் 'கம்பனைக் காண்போம்' தொடர் உரையை நான் ஆற்றிய போது அங்கு தென்பட்ட உற்சாகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் ஊருக்குப் புறப்பட வேண்டிய சமயத்தில் அங்கிருந்தோர் வகுப்புகளை எப்படித் தொடரலாம் என்று யோசிக்கத் தொடங்கினர். காரணம், கம்பன் காவியச் சுவை! எளிதில் விடுவதல்ல அது. அதன் ஆழமும் வீச்சும் மனதைக் கவ்விப் பிடித்து நிறுத்துபவை.

கம்பன் காவியத்தைப் பலர் பலவிதமாக அணுகியதுண்டு. அண்மையில் மறைந்த நீதியரசர் மு.மு. இஸ்மாயில் அவர்கள் கம்பன் கவியழகைப் பிரபல பத்திரிகைகள் வழியே கட்டுரைகளாகவும், மேடைச் சொற்பொழிவுகளாகவும் பிழிந்து தந்ததுண்டு. ரசிகமணி டி.கே.சி. அவர்கள் ஒவ்வொரு பாடலாக எடுத்துப் பார்த்து இது கம்பனுடையது, இது இடைச்செருகல் என்று கூறு பிரித்ததுண்டு. கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூல மொழியிலேயே படித்தறிந்த விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு. அய்யர் ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்ததுண்டு. வால்மீகியின் ஆதிகாவியத்தை நுணுகி ஆராய்ந்த 'வெள்ளிநாப் பேச்சாளர்' ரைட் ஆனரபிள் ஸ்ரீனிவாச சாத்திரியார் ஆங்கிலத் தில் பாத்திரவாரியாக வழங்கிய தொடர் சொற்பொழிவு வெகு சிறப்பானது.

தமிழ்ச் சமுதாயம் மது, மங்கை, கேளிக்கைகள், போர்வெறி இவற்றின் போதை ஏறி, இறையுணர்வும் விழுமியங்களும் மங்கிய காலத்தில் மீண்டும் நல்லொழுக்கத்தை நினைவூட்டும் பொருட்டுக் கம்பன் தமிழில் இராமாயணத்தைக் காவியமாக வடித்தான் என்று சமூகவியல் நோக்கில் பல சான்று களோடு சொல்லுவார் பேரா. அ.ச. ஞான சம்பந்தன் தனது 'கம்பன்: புதிய பார்வை' நூலில்.

இவர்கள் வரிசையிலே, ஆனால் இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் கம்பனைக் கையில் எடுத்து வருகிறார் ஹரி கிருஷ்ணன். இணையத்தில் தமிழ் இலக்கியம் வாசிப்போருக்கு இவர் மிகப் பரிச்சயமானவர். 'மரபிலக்கியம்' மின்மடற்குழுவில் தொடர்ந்து கம்பனைப் பற்றியும் இன்னும் பிற இலக்கிய ஜாம்பவான்கள் பற்றியும் ஹரி கிருஷ்ணன் எழுதியவை மிகப் பிரபலம். சில ஆண்டுகளுக்கு முன்னால் சான் ·பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் கம்பன் விழா எடுத்தபோது, இவர் சீதையைப் பற்றி எழுதிய 'கனலை எரித்த கற்பின் கனலி' நெடுங்கட்டுரையை அங்கு வந்திருந்தவர்கள் அள்ளிச் சென்றார்கள் என்று கூறினார் மணி மு. மணிவண்ணன். மிகக் கூர்மையான பார்வை இவருடையது. பாரபட்சம் பார்க்காதது.

அதே சமயத்தில் இலக்கியக் கட்டுரையாளர்களுக்கே உரிய கடும் நடை இவரிடம் இல்லை. ஒரு நெருங்கிய நண்பருடன் கடற்கரையில் நின்று, சுண்டல் கொறித்தபடி உரையாடும் சரளம் இவருக்குக் கை வந்திருக்கிறது. ஆனால் எளிமையின் பீடத்தில் நுணுக்கத்தைப் பலியிடுவதும் இல்லை. சொல்லவந்ததை நிச்சயம் முழுமையாக, விரிவாக ஆனால் இலகுவாகச் சொல்லியே தீருவார். புராணக் கதை சொல்லும் பலர் தவறவிட்டவற்றைப் பளிச்சென்று எடுத்துச் சொல்லுவார். சான்றுக்கு ஒரு பகுதி:

"அனுமன் இலங்கைக்குள் முதன்முதலாக அடி எடுத்து வைத்தபோது இலங்கையின் காவல் தெய்வமான இலங்கிணி வழி மறித்தாள். அனுமன் வெகு எளிதாக அவளை வீழ்த்தினான். 'ஒரு குரங்கின் கையால் என்று நான் எற்றுண்ணப்படுவேனோ, அன்றே இந்த நகரத்தின் வீழ்ச்சி தொடங்குகிறது' என்று எனக்குச் சொல்லப் பட்டது. இந்த வீழ்ச்சி காரணமில்லாத வீழ்ச்சியில்லை. தவறான செய்கைகளால், நடவடிக்கைகளால், தொடர்ந்து கேடு விளைவித்தும், தீங்கு விளைவித்தும் திரிந்ததால் தானாகப் போய்த் தேடிக் கொண்ட கேடு.

"நான்முகன் எனக்குச் சொன்னது போலவே ஒரு குரங்கு என்னை வீழ்த்தி விட்டது. அவன் சொன்னதே நடக்கத் தொடங்கியிருக்கிறது. ஐயா! அறம்தான் வெல்லும். பாவம் எவ்வளவு நீண்டகாலம் ஆட்சி செலுத்தினாலும் தோற்கும் என்ற இதனை நான் சொல்லவும் வேண்டுமோ?"

எத்தனை சரளமான நடை பாருங்கள். இலக்கியம் எல்லோரையும் எட்டவேண்டுமானால் இத்தகைய அச்சுறுத்தாத விளக்கம் தேவை. படித்தால் மேற்கொண்டு கம்பனையும் படிக்கலாம் என்ற நம்பிக்கையும், படிக்கவேண்டும் என்ற ஆவலையும் தூண்டுவது அவசியம். அதை மிகச் செம்மையாகச் செய்கிறார் ஹரி கிருஷ்ணன்.

இந்தப் புத்தகம் கம்பனது அனுமனின் முழுப் பரிமாணத்தையும் காட்டுவது. அத்தோடு நில்லாமல் ஆங்காங்கே வால்மீகியின் சித்திரத்தோடு ஒப்பிடும். அப்படிச் செய்யும்போது மிகுந்த நிதானத்தோடு பேசும். எதனையும் மட்டம் தட்டாது. சன் சூவின் 'போர்க் கலை' (Sun Tzu's 'Art of War') நூலின் போர்த் தந்திரத்தை அனுமனின் செயல்பாட்டுடன் ஒப்பிடும். தேவையான இடத்தில் ஹோசே சில்வாவின் 'சில்வா மனக் கட்டுப்பாடு' (Jose Silva's 'Silva Mind Control') நூல் காரிய சாதனைக்குப் பரிந்துரைத்த வழிகளை எப்படி அனுமன் அப்போதே அறிந்திருந்தான் என்பதையும் சொல்லும்.

எல்லாப் பாத்திரங்களையும் பற்றி எழுதிய வ.வே.சு. அய்யரின் நூலைவிடப் பலமடங்கு பெரியது ஹரி கிருஷ்ணனின் அனுமன் நூல். இதுபோல இன்னும் பிற பாத்திரங்களைப் பற்றியும் 'வாலி வதம்' போன்ற முக்கியச் சம்பவங்களைப் பற்றியும் எழுதவிருக்கிறார் என்னும் செய்தி ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது. தமிழறிந்தோரிடையே மீண்டும் கம்பன் காவியத்தைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டி, அறியவும் வைக்கும் இந்த நூல் என்பதில் சந்தேகம் இல்லை.

நூல்: அனுமன்: வார்ப்பும் வனப்பும்
ஆசிரியர்: ஹரி கிருஷ்ணன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,
எண் 16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர், சென்னை 600004.

இணையத்தளம்: www.newhorizonmedia.co.in
இணையம் மூலம் வாங்க: www.kamadenu.com


மதுரபாரதி

© TamilOnline.com