குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவது பால புரஸ்கார் விருது. மா. கமலவேலன், ம.லெ.தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன், குழ. கதிரேசன், கொ.மா. கோதண்டம் வரிசையில் 2020ம் ஆண்டுக்கான விருது பத்திரிகையாளர் யெஸ். பாலபாரதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்னும் நூல் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதை எப்படி எதிர்கொள்வது, எப்படி மீண்டு வருவது என்பதைக் கதையின் வழியாகச் சொல்கிறது இந்த நூல். சிறார் வதை குறித்துத் தமிழில் வெளியாகியிருக்கும் முதல் நூல் இதுதான்.
பத்திரிகையாளர் யெஸ். பாலபாரதி 'ஆட்டிசம்' பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றி மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு 'ஆட்டிசம் சில புரிதல்கள்', 'சந்துருவுக்கு என்னாச்சு? - ஒரு சிறப்புக்குழந்தையின் கதை' போன்ற தலைப்புகளில் பல நூல்களைத் தந்துள்ளார். குழந்தை வளர்ப்பு பற்றி இவர் எழுதியிருக்கும் 'அன்பான பெற்றோரே' பரவலான வரவேற்பைப் பெற்ற ஒன்று. மா. கமலவேலன், டாக்டர் ருத்ர துளசிதாஸ், எழுத்தாளர் யூமா வாஸுகி ஆகியோர் இணைந்த நடுவர் குழு, இவரை இவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது.
சாகித்ய அகாதமி சார்பில் 24 மொழிகளில் யுவ புரஸ்கார் விருதும், 21 மொழிகளில் பால சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருது ரூ. 50000 ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் கொண்டது.
|