டேபிள் விரிப்பைச் சரிசெய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பிக், கோப்பைகள், தட்டுகள் என்று சாப்பாட்டு மேசையைச் சரி செய்தாள் மேகலா. இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டி பார்ட்டி. வருபவர்கள் அனைவரும் பெண்கள் என்பதால், அவள் கணவன் அருணும் தனது நண்பர்களோடு டென்னிஸ் விளையாடப் போய்விட்டான்.
கச்சோரி, மட்டர்பனீர், அவல் கேசரி, பட்டன் இட்லி, புதினா சட்னி, தயிர்வடை என்று எல்லா ஐட்டங்களும் அணிவகுத்திருந்தன. கூடவே ஐஸ் மிதக்கும் எலுமிச்சை நன்னாரி சர்பத்தும் உலர்பழக் கலவை ஃப்ரூட் சாலடும்" துளசியின் திருமணத்திற்குப் பிறகு முதன்முதலாக எல்லோரையும் பார்ப்பதால், அழகிய டெரகோட்டா விநாயகரையும் தாம்பூலத்தில் வைத்துக்கொடுக்க கிஃப்ட்ராப் செய்து வைத்தாயிற்று"
கொரோனா வந்து உலகத்தையே ஆட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போதுதான் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்ற நிலையில், இந்தக் கிட்டி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தாள் மேகலா.
துளசியின் திருமணம், அதையொட்டிய இந்தியப் பயணம் என்று முடிந்தபோது, கொரோனாவின் தீவிரம் தொடங்கிய காலம். யாரும் யாரையும் பார்க்க முடியாமல், எல்லாவிதக் கேளிக்கையும் கொண்டாட்டமும், தடைப்பட்டுப் போனதில் ஒருவிதத் தொய்வு ஏற்பட்டு, எல்லோரையும் முடக்கிப் போட்டு விட்டது.
இன்னமும் நிலைமை சீராகவில்லைதான். இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று பயமுறுத்துகிறதே என்று அனைவரும் கவசம் அணிந்தும், தொலைவை அதிகப்படுத்தியும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம். அத்தோடு இந்தியா சென்று துளசியைப் போய்ப் பார்த்துவரக்கூட முடியாத பயணத் தடைகள்" இது இன்னும் எத்தனை நாளுக்கோ. கனத்துப்போன மனம் பெருமூச்செரிந்தது. துளசியைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு வந்ததோடு சரி. தினம் ஜூம் காலும்.வாட்சப்புமாகப் போய்க் கொண்டிருக்கு.
கலிஃபோர்னியாவில், மவுண்டன்வியூவுக்கு வந்ததிலிருந்து, இந்தக் கிட்டி பார்ட்டி பதினைந்தில் ஆரம்பித்து, இப்போது இருபத்தைந்தில் வந்து நிற்கிறது" ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று யாரேனும் ஒருவர் வீட்டில் இப்படிக் கூடுவது வழக்கமாகிப் போனது.
உதவிக்கரம் நீட்டவும், உருப்படியான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் இந்தக் கிட்டி பார்ட்டி அனுகூலமாக இருந்தாலும், அவ்வப்போது நாட்டு நடப்பும், ஊர்வம்பும், இன்னபிற சமாச்சாரங்களை அளக்கும் வம்புமடமாகவும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும், கல்பனாவும், காயத்ரியும் பேசும் விஷயங்கள் எல்லாமே கையும் காலும் முளைத்த கதையாகத் தானிருக்கும். இரண்டை நாலாக்கி, நாலை எட்டாக்கிப் பேசுவதில் படு சமர்த்தர்கள். நாடு விட்டு நாடு வந்து, இப்படி வாழும்போது நண்பர்கள் மிகவும் அத்யாவசியமென்று நன்றாக உணர்ந்தபடியால் மேகலாவும், தனது இயல்புக்கு மாறான இந்தப் பெண்களுடன் சிநேகமாக இருந்து வந்தாள்.
நினைத்தும் பார்க்கவில்லை; மவுண்டன்வியூவுக்கு வந்து இருபத்துமூன்று வருஷம் விளையாட்டுப் போல் ஓடிவிட்டது. எல்லாம் நேற்று நடந்தாற்போல் இருக்கிறது. மேகலாவின் மனப்பறவை சிறகடித்துப் பறந்த நினைவுகளை அசை போட்டது.
★★★★★
டிகிரி வாங்கின கையோடு தட்டச்சும், குறுக்கெழுத்தும் பாஸ் பண்ணி ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்துப் போய்க்கொண்டிருந்த நாட்கள் நிழலாடின. அவளது பிறந்த ஊர் ஒரு கிராமமாகப் போய்விட்ட படியால், மேல்தட்டு மக்களின் ஆடம்பரமும் நாகரிகப் போக்கும் இன்றைய காலம்போல் தொழில்நுட்ப சாதனங்களும் புகுந்து கலப்படம் செய்யாத அழகிய நாட்கள் அவை. கிராமத்து அத்தியாயங்கள்"
பஸ்ஸில் வேலைக்குச் சென்ற காலகட்டம். மேகலா வேலை செய்துவந்த கம்பெனிக்கு ஆடிட் செய்ய வந்த அருணுக்கு அவளை நிரம்பவே பிடித்துப்போனது. அதிகம் அலட்டிக் கொள்ளாமல், பதவிசாக அவள் பணியாற்றிய விதமும், பளீரென்ற புன்னகையுடன் பழகிய விதமும் அவனை அவள்பால் ஈர்த்தது.
சற்றே அறியாத்தனமும், கொஞ்சம் அப்பவித்தனமும் மிகுந்து காணப்பட்ட மேகலாவைத், தனது தேவைக்கு ஏற்றாற்போலவும், தனது குடும்பம், முக்கியமாகத் தனது தாயாருக்குத் தகுந்தாற்போல் தயார்ப்படுத்தவும், ரொம்பவே மெனக்கெடணும் என்று அவனது உள்மனது எச்சரித்தாலும், ஆசை யாரை விட்டது?
மேகலாவிடம் தனது விருப்பத்தை அருண் கண்ணியமாகச் சொன்னபோது, தனது சம்மதத்தை மெளனத்தால் உணர்த்திய மேகலாவின் கன்னங்கள், அவனது அந்த எதிர்பாராத கேள்வியால் சற்றே சிவந்தன. நெஞ்சம் படபடத்து நெற்றியில் முத்து முத்தாக வியர்வை பூத்தது. அவளுக்கும் அவனது அணுகுமுறை பிடித்திருந்தது.
அருண் தன் அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவன் எதிர்பார்த்தபடியே அத்தனை வரவேற்பில்லை. "தோ பாரு அருண்" நீ சொல்ற பொண்ணுக்கு, உனக்குச் சமமான உயர்படிப்பு இல்ல; கண்ணுக்கு லட்சணமா இருந்தா மட்டும் போறாது. ஒரு வரனைப் பார்க்கும்போது, அந்தஸ்து, இங்கிதம், சங்கீதம், அப்புறம் சரியான குடும்பப் பின்னணி என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. கல்யாணங்கிறது ஆயிரங்காலத்துப் பயிரு.இப்படிக் கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு சட்சட்டுனு நடத்திட முடியாது. நம்பளோட ஸ்திதிக்கு ஏத்தமாதிரி பொண்ணு இருந்தாக்க சொல்லும்படி சீனு வாத்யாரண்ட சொல்லி வச்சிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு" என்றாள் கற்பகம்.
அம்மாவின் வார்த்தைகளுக்கு அருண் படிந்தானில்லை. "அம்மா" ப்ளீஸ். எனக்குப் பிடிச்சவளோடதான் என்னோட வாழ்க்கை அம்மா" உன்னோட வார்த்தைகளை நான் என்னிக்கும் மதிக்கிறேன்.ஆனால் வார்த்தைளால் வரும் கட்டுப்பாட்டைக் கட்டாயமாக மறுக்கிறேன். அம்மா, நான் ஒன்றும் அறியாத பையனல்ல. எனது தேர்வு சரியானது என்பதை நீ ஒருநாள் தெரிந்து கொள்வாய்"" என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிக் கற்பகத்தை அழைத்துக்கொண்டு, மேகலாவைப் பெண்பார்க்க வந்தான்.
அருணின் தாயார் கற்பகத்துக்குப் பூர்வீகம் தஞ்சாவூர்ப் பக்கமென்பதால், சங்கீதம் அவள் குடும்பத்தில் ஊறிப் போயிருந்தது. இரு பெண்களுக்கும் வீணையும், வாய்ப்பாட்டும் முறையாகச் சொல்லி வைத்திருந்தாள். ஒவ்வோர் ஆண்டும் திருவையாறு தியாகராஜ ஆராதனையில் அந்தப் பெண்கள் தவறாமல் பங்கேற்றுப் பாடுவதில் அலாதிப் பெருமை வேறு.
கற்பத்தின் தந்தை மிருதங்கம் வாசிப்பதில் தேர்ந்தவர் என்பதால், நல்ல வித்வான்களின் அறிமுகமும், சபாக்களின் அங்கீகாரமும் அந்தக் குடும்பத்திற்குப் பல காலமாகவே கிடைத்திருந்தது" இப்படிப் பேச்சும் மூச்சும் சங்கீதமாகவே இருந்த பட்சத்தில், கற்பகத்தைப் பொறுத்த மட்டில் சங்கீதம் தெரியாதவர்களெல்லாம், அற்பப் பிறவிகளாகத்தான் தெரிந்தார்கள்"
மேகலா சற்றே நடுங்கித்தான் போனாள். மேகலாவின் அம்மாதான் அவளைச் சமாதானம் செய்தாள். "மேகலா.எல்லாம் போகப்போகச் சரியாய்டும். உன்னோட பொறுமையும் நிதானமும் சமர்த்தும் எதுக்கும் ஈடாகாதுங்கிறதை நாளடைவுல புரிஞ்சுப்பா. குடும்பத்தை நடத்தறதுக்கு என்னத்துக்குப் பாட்டும் கூத்தும்? சுவாமி விளக்கேற்றி, தினமும் ரெண்டு ஸ்லோகம் சொன்னாலே லட்சுமி கடாட்சம் வந்துடுமே" தைரியமா இரு. இந்தமட்டுக்கும், அருண் உங்கிட்ட எத்தனை பிரியமா இருக்கார் பாரு.உன்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்கவே மாட்டார். கவலைப்படாதே"" என்று சொல்லி, பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்துத் திருமணத்தையே முடித்துவிட்டாள்.
சங்கீதம் தெரியாதது ஒன்றும் தகுதிக்குறைவு இல்லையே? ஆனாலும் அருணின் அம்மா கற்பகத்துக்கு அது பெரிய மனக்குறையாகவே பட்டது" சங்கீதம் தெரியாதது ஒரு பக்கம் இருந்தாலும், தனது பேச்சை மீறிப் பிள்ளை தன் இஷ்டப்படி இப்படி மேகலாவைக் கல்யாணம் செய்துகொண்டதுதான் அவளுக்குப் பெருத்த ஏமாற்றமாகவும், தாங்க முடியாத வலியாகவும் ஆகிப்போனது. அதனாலேயே அவளது வார்த்தைகளில் உஷ்ணமும், உக்கிரமும் கொப்புளித்தன. எந்தவொரு உணர்ச்சியும் இதுவரையில் காட்டாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருந்த மேகலாவின் வாயைக் கிண்டுவதில் ஒரு அல்ப சந்தோஷம் ஏற்பட்டது கற்பகத்துக்கு.
"அதெப்படி ஒரு கல்யாணம் ஆகப்போற பொண்ணுக்கு, நல்லதா ஒரு பாட்டு சொல்லித் தரணும்னு உன் வீட்டில யாருக்கும் தோணல? நம்மோட குடும்பங்கள்ல பாட்டுங்கிறது, எல்லாச் சடங்கிலும், சம்ப்ரதாயங்களிலும் கலந்துதானே இருக்கு? தாலாட்ட ஒரு பாட்டு, பூஜைக்கு ஒரு பாட்டு, பஜனைக்கொரு பாட்டு, ஆரத்திக்கு ஒரு பாட்டு. ஏன், இறந்துபோய்ட்டா இழவுக்குக்கூடப் பாட்டுன்னு வகைக்கொரு தினுசுல பாட்டு இருக்கே. ஹூம்" நல்ல குடும்பம் போ"" என்று ஒருநாள் கற்பகம் அலுப்பும் எரிச்சலுமாகச் சொன்னபோது ஆற்றாமையால் மேகலாவுக்கு மனசெல்லாம் வலித்தது.
கொஞ்சம் ரோஷமும் பொத்துக்கொண்டு வரவே "இங்க பாருங்கோ.எங்க ஊரு கிராமாந்தரம். பாட்டு சொல்லித் தர்றவானு யாரும் இல்ல. பக்கத்து டவுனுக்குப் போய்த்தான் கத்துக்கணும். அதுக்கு எனக்கு நேரமும் இல்ல. அத்தோட இன்ட்ரஸ்டும் இல்ல. கஷ்டப்படற அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கணும்னுதான் தோணித்து. அது சரி" நீங்க ஏன் அருணுக்குப் பாட்டு சொல்லித் தரலை? அவர் சமயங்களில் முணுமுணுத்துப் பாடும்போது, நல்ல குரலா இருக்கேனு நினைச்சுப்பேன்."
அவ்வளவுதான்" இப்படி மேகலா எதார்த்தமாகச் சொன்னதும் பொங்கி எழுந்து விட்டாள் கற்பகம். "ரொம்ப நன்னா இருக்கே நீ பேசறது? புருஷாளுக்கு என்னத்துக்குப் பாட்டு? பொம்மனாட்டிக்குத்தான் எல்லாம் தெரிஞ்சிருக்கணும். சும்மா புளியைக் கரைச்சுக், கூட்டும் குழம்பும் பண்ணினா மட்டும் போறாது. வேலைல சலிச்சுப் போய் வீடு திரும்பற புருஷாளை உற்சாகப்படுத்தப் பொம்மனாட்டிக்குத்தான் பாட்டு, வாத்தியம்னு தெரியணும்" கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? உன்கிட்டப் போயி சங்கீதத்தைப் பத்திப் பேசறேனே" நன்னாக் கேட்டே போ ஒரு கேள்வி""
சூறைக் காற்றைப் போலக் கற்பகத்தின் கோபம் வார்த்தைகளைச் சிதறடித்தது. நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் நம்மீது காட்டும் வெறுப்பும் கோபமும் நம்மைப் பாதிப்பது இயற்கைதானே" ஏன் இப்படி? குடும்பம் என்கிற அளவில், பெண்கள் மீதான அதிகாரமும் ஆளுமையும் குறையவே இல்லையே. பெண்ணுக்குப் பெண்ணே எதிரியோ?.
சொற்களுக்கு வாசமில்லை; எடைகூட இல்லை.ஆனாலும் கத்தியை விடவும் கூரான முனை உள்ளதே? அது யார் மனத்தையும் குத்திக் கிழித்து ரணப்படுத்தும் தானே? ஒவ்வொருவரும், தன்னளவில் வன்முறையைக் காட்டுவதற்குத்தான் பெரும்பாலும் வார்த்தைகளைப் பிரயோகிக்கிறார்களோ என்று மேகலாவுக்குத் தோன்றியது" எத்தனை வலிகள்" இந்த வலிக்கு எங்கு போய் நிவாரணம் தேடுவது?
காலம் காலமாக மனிதமனம், பிறரைச் சொல்லால் வதைப்பதை ஒரு கலையாகவே பயின்று வந்திருக்கிறதோ? ஒருவர்மீது காட்டும் கோபமும், வெறுப்பும், உறவின் வண்ண ஜாலங்கள் ஓர் அழகிய ஓவியமாக உருவாகும் முன்பே அழிக்கப்பட்டு விடுகிறதே. பிடிக்காத மனதுக்கு இயல்பிலேயே நாளாவட்டத்தில், சுற்றம், வீடு, சூழல், மனிதர்கள் என்று எதுவொன்றும் பிடிக்காமல் போய்விடுகிறதே. இயலாமையும், ஆற்றாமையும்தான் ஒருவருக்கு ஏற்படும் கோபத்தின் ஊற்றுக்காலோ?.
மெளனமானாள் மேகலா. பேச்சைக் கற்றுக்கொள்வதைப் போல அத்தனை எளிதாக அவளால் மெளனத்தைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், வாசனையால் பூக்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்வது போல, சொற்களில்லாத மெளனத்தால் தன்னை வெளிக்காட்ட முயன்று கொண்டிருந்தாள். எதற்கும் காலம் விடை சொல்லும் என்று காத்திருந்தாள். பொறுமையா இரு என்று அம்மா அடிக்கடி சொன்னது மனதுள் வந்து போனது.
அந்த நாளும் வந்தது. அருணின் கம்பெனி விரிவாக்கம் கண்டு அவனுடன் அமெரிக்கா போகச் சந்தர்ப்பம் கிடைத்தபோது மனசு ஆனந்தக் கூத்தாடியது. "விடுதலை, விடுதலை, விடுதலை" என்று கூச்சலிட வேண்டும் போலிருந்தது.
அமெரிக்காவின் பிரம்மாண்டமும், சுதந்திரமான அணுகுமுறையும், வெளிப்படையான வாழ்க்கை முறையும், அவளை நிரம்பவே கவர்ந்தன. புத்துணர்ச்சியுடன் புது ரத்தம் பாய்ச்சியது போலிருந்தது. கடந்த காலத்தின் நிழல் விழாமல் குடும்பத்தைக் கொண்டுசெல்ல மன உறுதியோடு இருந்தாள். ஊரும் வேண்டாம், உறவும் வேண்டாமென்று தனது ஒரே பெண் துளசியை அமெரிக்க நாகரீகத்துடனேயே வளர்த்தாள்.
நடை, உடை, பாவனை, பேச்சு, நட்பு வட்டம், உணவுப் பழக்கம் என்று, துளசி இன்றைய அமெரிக்கப் பெண்ணாகத் துடிப்புடன் இருந்தாலும், பக்தியும், பாட்டும், சாத்வீக குணமும் இயல்பாகவே அவளிடம் படிந்து கிடந்தன. யாரையும் எளிதில் கவர்ந்துவிடும் வசீகரம் துளசியிடம் நிறையவே இருந்தது. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட பெண்ணாக இருந்ததோடு, எந்தப் பிரச்னையையும் கொஞ்சமும் பதட்டமில்லாமல், அறிவார்த்தமான அணுகுமுறையில் சரியாக்கும் பக்குவமும் துளசிக்கு இருந்தது.
கலிஃபோர்னியா தமிழ்க்கூடம் அமைப்பின் பிரசிடென்ட்டாக அருண் இருந்தபடியால், இந்தியாவில் இருந்து, குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அமெரிக்கா வந்து செல்லும் பேச்சாளர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோரிடம் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. பிரம்மாண்டமான அருணின் வீட்டில் அவர்கள் தங்கியதோடு மட்டுமின்றி, மேகலா செய்யும் வற்றல் குழம்பு, அடை அவியலுக்கும் அடிமையாகிப் போனார்கள்.
இப்படித்தான் துளசியின் சங்கீதமும் விட்டகுறை தொட்ட குறையாக, அங்கு வந்துபோகும் வித்வான்களின் மூலம் வளர்ந்தது. சரளி வரிசை, வர்ணம் என்று ஆரம்பித்து, மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளையும், தனிப் பாடல்களையும் அப்பழுக்கில்லாமல் பாட ஆரம்பித்திருந்தாள் துளசி. பாவூர் கண்ணன் என்ற பிரபல பாடகர் துளசிக்கு ஆன்லைனிலேயே பயிற்சி அளித்து வந்தார். துளசியின் குரல் இந்த முறையான பயிற்சியால், தேனாக இனித்தது. நாளுக்கு நாள் மெருகேறியது.
"அருண் சார், மேகலா மேடம்" நம்ப துளசி இங்க இருக்க வேண்டிய பொண்ணே இல்ல போங்கோ" இந்தியா வந்தாக்க நிச்சயமா கொடி கட்டிப் பறப்பாள். ஸ்ருதியும் லயமும் அப்படியே இழைஞ்சு வரது. அதோட அவளுக்குக் குரலில் க்ளாரிட்டியும் டிக்ஷனும் சூப்பரா இருக்கு" என்று சிலாகித்துச் சொன்னார்.
அடுத்தமுறை அமெரிக்க விஜயத்தின் போது அவர் சற்று அழுத்தமாகவே சொன்னார். "தோ பாருங்கோ" பாம்பே ஷண்முகானந்தா சபையிலே ஒரு சீனியர் வித்வானின் பட்டமளிப்பு விழாவுக்கு நம்ப பிரதமர் வரப்போறார். எனக்கு அங்க நல்ல தொடர்பு இருக்கிறதால நம்ப துளசியை அங்க பாட வச்சா ஒரு நல்ல ஆரம்பமா இருக்கும். நல்ல சந்தர்ப்பம். தவறவிடாம தக்க வச்சுக்கறது உங்க கையில்தான் இருக்கு" என்று சொல்லி நிறுத்தியபோது, சில்லென்ற ஐஸ்கட்டியை விழுங்கினாற்போல் இருந்தது மேகலாவுக்கு"
அருணுக்கு உற்சாகம் கரை புரண்டது. "ஒ" நிச்சயமா. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல. ஷ்யூர். நம்ப துளசிக்கு இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையாது. குரு கடாட்சம்தான்" கட்டாயம் நாங்கள் பாம்பே வரச் சம்மதம்"" என்று பூரிப்போடு கூறினான். மேகலாவும் சிலிர்த்துப் போயிருந்தாள்.
துளசிக்கும் ஒரே எக்சைட்மென்ட். ஒரு நாட்டின் பிரதமருக்கு முன்பாகப் பாடுவது என்பது எத்தனை பெரிய விஷயம்? மாஸ்டர்ஸ் முடித்து அப்போதுதான் ஒரு பிரபல கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்த படியால், சரியாகப் பத்து நாட்களுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தியா செல்ல ஆயத்தம் செய்தார்கள். துளசியை ஊக்கப்படுத்திய சங்கீதப் பெருமக்களுக்கும் குருவான பாவூர் கண்ணனுக்கும், மற்றுமுள்ள சிநேகிதர்களுக்கும் என்று சில பரிசுப்பொருட்களை வங்கிக்கொண்டாள் மேகலா.
செம்பூரிலிருந்த சித்திபெண் சியாமளாவைக் கூப்பிட்டு இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டபோது, "ஒ" ரொம்ப நல்ல விஷயம் மேகலா" நானும் கிருஷ்ணனும் வேணுங்கிற ஹெல்ப் பண்ணத் தயாரா இருக்கோம். "பெரீமா, பெரீப்பா"னு நாங்க அமெரிக்க வந்தபோது, எங்ககிட்ட எத்தனை ஒட்டுதலா இருந்தா துளசிக்குட்டி" இப்போ பிரதமர் முன்னே கச்சேரி பண்ற அளவுக்கு வந்தாச்சா? கிரேட்"" என்று உற்சாகமாகப் பேசினாள். அவள் கணவர் தொழில்ரீதியாக அடிக்கடி அமெரிக்கா வந்து செல்பவர். எனவே அவர்களுக்குள் நிரம்பவே அன்னியோன்னியம் இருந்தது.
உற்சாகமாக மேகலாவும், கிருஷ்ணனும் துளசியோடு இந்தியா கிளம்பினார்கள்.
பாம்பே ஷண்முகானந்தா ஹாலில் எள்ளுப் போட்டால் எண்ணை விழும் அளவுக்குக் கூட்டம். அதுவும் பிரதமரின் வருகை என்பதால், மலர்மேடைகளும் விளக்கு அலங்காரங்களும் அழகிய இருக்கைகளும் ஒருவித சோபிதத்தைக் கொடுத்திருந்தன.
மயில்கழுத்து நிறப் பட்டுப்புடவையும் வைர நெக்லசும் குண்டு ஜிமிக்கியுமாக இருந்த துளசி, அனைவரின் கண்களுக்கும் ஒரு அழகிய தேவதையாகவே தெரிந்தாள்.
வரவேற்புரைக்குப் பின்னர், சீனியர் வித்வானைப் பாராட்டிப் பட்டமளிப்பு நிகழ்ந்த பின்னர், துளசி பாட ஆரம்பித்தாள். சம்ப்ரதாயப் பாடல்களும், மீரா பஜனும் பாடியபோது அவையில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. முத்தாய்ப்பாக "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே" அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே" இதை வந்தனை கூறி மனதிலிருத்தி வாழ்த்தி வணங்கேனோ. இதை வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ"" என்று பாரதியின் பாடலைப் பாடி நிறுத்தியபோது, சபையோர் அனைவரும் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீரில் நனைந்திருந்தனர். கைதட்டல் அடங்க வெகு நேரமானது.
துளசியைத் தட்டிக் கொடுத்துப் பொன்னாடை போர்த்தி, உயர்ந்த பதக்கமொன்றையும் அணிவித்துப் பிரதமர் பேசலானார்.
"துளசி என்பது, நமது பாரதத்தின் பாரம்பரிய, புனிதமான, அனைவராலும் வணங்கத்தக்க ஒரு செடி" துளசியின் ஒவ்வொரு இலையும் நறுமணம் என்பதுபோல், இந்தப் பெண் துளசியின் ஒவ்வொரு பாடலும் இவ்விடத்தில் நம்மிடையே, பக்தி மணத்தையும், நாட்டுப் பற்றையும் ஒருமித்து உண்டாக்கியது என்பதை மறுப்பதிற்கில்லை" முதல் இலையிலிருந்து கடைசி இலை வரையில் மாறாத மணம் கொண்ட துளசி வேறு, இந்தப் பெண் வேறு இல்லை. இந்தப் பெண் துளசி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்த போதிலும், தனது வேர்கள் இந்த பாரதத்தில் ஊன்றப்பட்டதை உணர்ந்து, மிக அருமையாகப் பாடிக் காட்டியதிலிருந்து நாம் தெரிந்து கொண்டோம்"
இவரைப் போன்ற இளைஞர்களும், யுவதிகளும் உள்ளவரையில் நமது தேசத்தின் கலாச்சாரமும், பண்பாடும் மென்மேலும் தழைத்தோங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை" துளசி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிப் புகழோடும், பெயரோடும் விளங்க வாழ்த்துகிறேன்" வாழ்க பாரதம்""
பாராட்டு மழையில் அருணும் மேகலாவும் அப்படியே நனைந்து போயிருந்தனர். எங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். சியாமளாவும், கிருஷ்ணனும் மனதாரப் பாராட்டினர். "துளசி" யூ ஆர் எ பிளெஸ்டு கேர்ல்"" என்றபோது மேகலாவுக்கு வார்த்தைகள் வராமல் தொண்டையில் சிக்கிக் கொண்டன. தன்னால் முடியாத ஒன்றைத் தனது பெண் சாதித்துக் காட்டியபோது, மனது விம்மியது. துளசிக்குள் இத்தனை திறமையா? என்று வியந்து போயிருந்தாள்" துளசியைக் கட்டிக் கொண்டபோது அந்த இறுக்கத்தில் நெகிழ்ச்சி தெரிந்தது.
சியாமளாவிடமும் கிருஷ்ணனிடமும் விடைபெற்று முன்பே புக் செய்து வைத்திருந்த ஹோட்டலுக்குத் திரும்பினார்கள். மறுநாள் இரவு அமெரிக்கப் பயணம் என்பதால், ஏர்போர்ட்டுக்கு மிக அருகிலேயே இருந்த அந்தப் பிரபலமான ஹோட்டலுக்கு விரைந்தனர். அது சமயம் அவர்கள் அனைவருக்குமே ஒரு ஆனந்தமான அமைதி தேவையாக இருந்ததும் ஒரு காரணம்"
மறுநாள் காலை உணவுக்கு அவர்கள் கிளம்பும் சமயம், அவர்களைப் பார்க்க ரிசப்ஷனில் யாரோ காத்திருப்பதாக ரூம் பாய் வந்து சொன்னான். சியாமளாவாகத்தான் இருக்கும் என்று போனவர்கள், அங்கே முன்பின் தெரியாத மூன்று பேர் இருப்பதைக் கண்ணுற்றதும் கொஞ்சம் குழம்பினர்.
"ஹலோ அங்கிள்" ஆன்ட்டி" ஐம் தீபக்" ப்ளீஸ் மீட் மை பேரண்ட்ஸ்"" அந்தப் பையன் தீபக் பார்ப்பதற்குக் கண்ணியமாகவும், வசீகரமாகவும் தெரிந்தான். ஒரு விளையாட்டு வீரன் போன்ற தோற்றம்.
"யெஸ் ப்ளீஸ்" குட் மார்னிங்"" என்று அருணும் கை குலுக்கினான். அந்தப் பையனின் அப்பா, உயர்ந்த சூட், டை கட்டி, அந்தக் காலத்து தர்மேந்திராபோல கம்பீரமாகத் தெரிந்தார்.
அந்த அம்மாவும், சந்தனநிற மைசூர்சில்க் புடவையில் வைரப்பதக்கம் பதித்த நாலுவடச் சங்கிலியும், ரோலக்ஸ் வாட்சுமாக ஜம்மென்று இருந்தாள். அழகாகப் புன்னகைத்தவள் தனது கையிலிருந்த பூங்கொத்தை மேகலாவிடம் கொடுத்தது எதற்கோ கட்டியம் கூறுவது போல இருந்தது.
"ஸாரி டு டிஸ்டர்ப் யூ இன் த மார்னிங். நேத்திக்கு உங்க பெண்ணோட பாட்டு எங்களை அப்படியே கட்டிப்போட்டு விட்டது. எங்களை விடவும் எங்கள் பிள்ளை தீபக்கிற்கு ரொம்பப் பிடிச்சுப் போய்டுத்து. பாட்டை மாத்திரம் அல்ல, பாடின பொண்ணையும்" என்று கண் சிமிட்டியபடி சொன்னபோது, அருணும் மேகலாவும் நிதானத்துக்கு வருவதற்குச் சற்றுநேரம் பிடித்தது.
அவர்களை அதிகம் குழப்ப விரும்பாதவராக அவரே பேசலானார். "நாங்கள் தஞ்சாவூர் பக்கம். ஆனா பாம்பே வந்து ரொம்ப காலம் ஆச்சு. தெற்கே அப்பப்ப குலதெய்வம் கோவிலுக்குப் போய் வரதோட சரி. ஆனாலும் பாருங்கோ" நாம எங்கே குடிபெயர்ந்து போனாலும், கூடவே நம்மோட ஊரும் ஒரு கைப்பிடி அளவு தங்கிடும்னு சொல்லுவா. பேச்சிலோ, உணவிலோ, செய்கையிலோ, எதிலாவது அந்தந்த ஊரின் ஜாடை நிச்சயம் தெரிஞ்சுடும், இல்லையா?
நீங்களும் அநேகமா தஞ்சாவூர்க்காராளாகத் தானிருக்க வேண்டும்னு நினைக்கிறேன். ஏன் சொல்றேன்னா, நம்ப துளசி பாட்டிலும் தஞ்சாவூர் பாணி தெரிகிறது. எங்கள் பிள்ளைக்கு உங்க பெண்ணைப் பிடித்துப் போனதால், உங்களை வந்து பார்த்து, இந்தப் பேச்சை ஆரம்பித்தேன். தவறாக எண்ணாதீர்கள். துளசிக்காக நீங்கள் ஏற்கனவே ஏதேனும் திட்டமிட்டு வைத்திருந்தால், வற்புறுத்தப் போவதில்லை. நல்ல நண்பர்களாகப் பிரிந்து விடுவோம்". தீபக்கின் தந்தை தாமோதரனின் பேச்சில் உண்மையான விருப்பமும், கண்ணியமும், வெளிப்படையாகத் தெரிந்தன.
இது என்ன, விசித்திரமாக அல்லவா இருக்கிறது? எதுவொன்றும் கைவசமாவது என்பது, அவரவரின் விருப்பத்தையும் முயற்சியையும் ஒட்டித்தானே நடக்கும்?
ஒரு பளபளவென்ற பாதரச உருண்டை போல அல்லவா இந்த வாழ்க்கை, நமது கைகளில் அகப்படாமல் மிகவும் வசீகரமாக நம் முன்னே உருண்டோடிக் கொண்டிருக்கிறது? கண்ணுக்குத் தெரியாத நமது வாழ்வின் அர்ப்பணிப்புகள், நாம் செய்த புண்ணியங்கள், துளசிக்கு இப்போது ஒரு சிம்மாசனத்தைத் தரப்போகிறதா? மாயமந்திரம் போல் அல்லவா இருக்கிறது?.
எப்போது பெய்யும், எப்போது நிற்கும் என்பது இயற்கையின் பெருங்கொடையாகிய மழைக்கு மட்டுமல்ல.வாழ்க்கையின் அரிதான கணங்களுக்கும் கூடப் பொருந்துகிறதே" எதுவொன்றும் சற்றும் எதிர்பாராமல் நடப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எந்த ஊரின் நிழல்கூடப் படியக்கூடாது என்று துளசியைப் பொத்திப் பொத்தி வளர்த்தேனோ, அங்கேயே துளசி வேரூன்றப் போகிறாளா?
வாழ்க்கையில் நிறையக் கேள்விகள் பதிலற்று இருப்பதுதான், அதன் சுவாரஸ்யம் போலும்" மேகலாவுக்கு நிஜமாகவே உடம்பும் உள்ளமும் படபடத்தன. பதில் சொல்லத் திராணியற்று அருணைப் பார்த்தாள்.
அருண் சற்றுக் காலம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவர்களிடமிருந்து விடைபெற்றான். உடனடியாக சியாமளாவிடம் இவ்விஷயத்தைப் பகிர்ந்துகொண்ட போது, அவள் அக்குடும்பத்தைப் பற்றி விசாரித்து நல்ல விதமாகவே அப்டேட் செய்தாள்.
மிக நல்ல குடும்பமென்றும், ஆசாரமானதென்றும், விருந்தோம்பலும், நாள் கிழமைகளில் பாட்டும் கச்சேரியும் அடிக்கடி நடத்தும் வீடு என்றும், சத்சங்கமும், பூஜையும் அடிக்கடி அங்கே நடைபெறுவதுண்டு என்றும் சொல்லி நிறுத்தியபோது, நல்ல சம்பந்தத்தை விட்டுவிடக்கூடாது என்று அருணும், மேகலாவும் நல்ல நாளில் பேச்சைத் தொடங்கித் துளசியின் கல்யாணத்தையே முடித்தாயிற்று. கண்மூடித் திறப்பதற்குள், இப்படித் துளசியின் திருமணம் நடந்துவிடும் என்று கனவிலும் எண்ணவில்லை.
இசையைத் தவிர எல்லாவற்றிலும் ரொம்பவே அமெரிக்கத்தனமாக இருக்கும் துளசி, பாரத மண்ணோடு எப்படி ஒத்துப் போகமுடியும்? அடிக்கடி பிரபலங்கள் வந்துபோகும் வீட்டை இந்தப் பெண் எப்படிச் சமாளிக்கும்?
பாஸ்தாவும், பீட்சாவும், சாலட்டுமாகச் சாப்பிட்டு, ஜீன்ஸும் டாப்ஸுமாக வளைய வந்து கொண்டிருந்த பெண்ணைச் சரியான இடத்தில்தான் கொடுத்திருக்கோமா? சமயங்களில் வேதனை மிஞ்சி அருணிடம் அங்கலாய்ப்பாள்.
திருமணம் ஆன கையோடு கொரோனா வந்துவிட்டதால் எல்லாம் தடைப்பட்டுப் போனதே. இப்போது யாரும் பயணம் செய்யமுடியாமல் இடையூறு வந்துவிட்டதே? இல்லாவிட்டால் ஒரு எட்டு போய்ப் பார்த்து வந்துவிடலாமே? இதுதான் பெத்த மனசு என்பதா?
★★★★★
டிங் டாங். காலிங்பெல். கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்டவள், எல்லோரையும் வரவேற்கத் தயாரானாள். பிரியாவைத் தவிர அனைவரும் வந்தாயிற்று. சிரிப்பும் அரட்டையுமாக அந்த இடம் கலகலத்தது. கொரோனா, டெல்டா வைரஸ். அமெரிக்காவின் விசா முறைகள், சர்வதேச அரசியல் செய்திகள், கமலா ஹாரிஸ், தமிழக அரசியல், மோடியின் சீர்திருத்தச் சட்டங்கள், நெட்ஃப்லிக்ஸ் படங்கள், ஜப்பான் ஒலிம்பிக்ஸ், சித் ஸ்ரீராமின் திரைப்பாடல்கள், பரம்பரம் பரமசுந்தரி என்று ஒரு சுற்று வந்தார்கள்.
காயத்ரி ஆரம்பித்தாள். "என்ன மேகலா, எப்படி இருக்கா உன் பொண்ணு? டம்முடம்முனு பூமி அதிர நடந்து போவாளே. ஹவ் ஈஸ் ஷீ?"
"ரொம்ப நன்னாவே இருக்கா."
"பெரிய குடும்பமாச்சே. பிரச்னையெல்லாம் சமாளிக்க முடியறதா?" இது கல்யாணி. மேற்கொண்டு தொடர்ந்தாள் கல்யாணி, "இன்னிக்கு ஏன் ப்ரியா வரலைன்னு தெரியுமோ? அவ பொண்ணு இஷ்டப்படியே கல்யாணம் பண்ணி வச்சா. ஆனாக்க பொண்ணுக்குச் சமைக்கத் தெரியலை, இங்கிதமாப் பழகத் தெரியலை, மரியாதையாப் பேசத் தெரியலை, சும்மா சீரியலும், சினிமாவும் பார்த்துண்டு பொழுது போக்கிறதுன்னு ஒரே கம்ப்ளயிண்டாம். கடேசில அந்தப் பொண்ணுக்கு இந்தச் சூழலும், அந்தக் குடும்பத்தின் பழக்கங்களும் சரிப்பட்டு வராமல், இப்போ டிவோர்ஸ் வரைக்கும் வந்தாச்சு. அதனால நம்ப ப்ரியா மனசு உடஞ்சு போயி எங்கயும் வரலை."
மேகலாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. என்ன பெண்கள் இவர்கள்? பிறரது வேதனையை அம்பலமாக்கி, அதில் குளிர் காய்கிறார்களே" ஹூம்" மனசு ஒரு நிலையில் இல்லை. அவர்களெல்லோரும் எப்போது கிளம்புவார்கள் என்று காத்துக் கிடந்தாள். ஒருவழியாக அவர்கள் சென்றபின், அருண் வந்தவுடன் புலம்பித் தீர்த்தாள்.
"மேகலா" உலகம் அப்படித்தான் பேசும்" ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். டேக் இட் ஈஸி" நம்ப பொண்ணுமேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு.படு கெட்டிக்காரி. அநாவசியமா கற்பனை பண்ணிக்கொண்டு மனசையும் உடம்பையும் கெடுத்துக்காதே" ஜஸ்ட் ரிலாக்ஸ்"" உண்மையிலேயே துளசியிடம் அருண் கொண்டிருந்த நம்பிக்கையும் மதிப்பீடும் அத்தனை உசத்தியாகத்தான் இருந்தது.
மேகலாவுக்கு ஏனோ இருப்புக் கொள்ளவில்லை.சியாமளாவுக்கு ஃபோன் செய்தாள். ஒரு நடை துளசியைப் போய்ப் பார்த்து வரும்படி கேட்டுக்கொண்டாள். மேகலாவின் குரலில் தெரிந்த கலக்கத்தை உணர்ந்துகொண்ட சியாமளா அந்த வார இறுதியில் போய்ப் பார்த்து வருவதாகச் சொன்னாள்.
சொன்னபடிக்கு, அந்தச் சனிக்கிழமையன்று சியாமளாவிடமிருந்து போன். "மேகலா" உனது பெண் படு சமர்த்து. ரெண்டு நாட்களுக்கு முன்னால அங்கே ஒரு விருந்துபசாரம் நடந்திருக்கு.நம்ப துளசிதான் முன்னின்று எல்லாவற்றையும் கவனிச்சுண்டு இருந்திருக்கா. அத்தோட இப்போ இந்தக் கொரோனா அமர்க்களம் என்பதால், அந்த ஏரியாவில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசியின் அவசியத்தைப் பற்றிச் சொல்லியும், பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு, உடைகள் அளித்து, பாதுகாப்பாக இருக்க ஓர் இடம் ஏற்படுத்தி, மாலை நேரங்களில் அவர்களுக்குப் பாடங்களும், ஒய்வுநேரத்தில் பாட்டும் சொல்லிக் கொடுக்கிறாளாம்.
அவர்கள் வீட்டுப் பின்புறம் இருக்கும் விளையாட்டுத் திடலில் ஒரு உடற்பயிற்சிக்கூடம் அமைத்து அவர்களைத் தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யும்படி சில ஆட்களைப் பணியில் அமர்த்தி ஏற்பாடு செய்திருக்கிறாள். இன்னமும் நிறையத் திட்டங்கள் கைவசம் இருக்காம். சிலம்பம், வில்வித்தை, இவற்றைச் சொல்லித் தரவும் எல்லோரும் பயன்பெறும்படி ஒரு பொது நூலகமும் வைக்கப் போறாளாம். உன் சம்பந்தியம்மாவுக்கு ஒரே பெருமை. நீ அவளைப் பற்றிக் கவலையே படாதே" அவள் நிச்சயமா "வேற லெவல்."
மனப்பாரம் நீங்கியது போல் இருந்தது மேகலாவுக்கு.
டங்… துளசியிடமிருந்துதான் வாட்ஸ்அப். நீண்ட தகவலாக இருக்கவே ஆசுவாசப்படுத்திக்கொண்டு படிக்கலானாள்.
"அம்மா" சியாமளா பெரீமா இங்க வந்திருந்தார். நீ ஏன் என்னைப்பத்தி இவ்வளவு கவலைப்படறே? நான் உன்னோட பொண்ணு. உன்னோட வளர்ப்பு இல்லையா? எங்கிருந்து தப்பும் தவறும் வரும், சொல்லு?
முதல்ல, தீபக்கிற்கு என்னைத் திருமணம் செய்து வைத்ததற்கு ரொம்ப தாங்க்ஸ். என்னோட பார்வையும், உலகமும் இப்போ ரொம்பவே விரிஞ்சு கிடக்கு. எந்தவொரு சரித்திரமும் இல்லாத, கொலம்பஸ் கண்டுபுடிச்ச புதிய கண்டம் அமெரிக்காலேருந்து கிளம்பிவந்து, பழைய சரித்திரங்களும், வரலாறும் நிறைந்த ஒரு புராதன இந்தியாவைப் பார்க்கும்போது, நான் தெரிந்துகொள்ள எத்தனையோ விஷயங்கள் இருப்பது தெரிகிறது அம்மா.
நானும் புதிது; இங்குள்ள மனிதர்களும் புதிது; இடமும் புதிது; இப்படி எல்லாமே புதியது என்பதால் எனக்கு ரொம்பவே இன்டரஸ்டிங்கா இருக்குமா. எல்லாமே அனுபவம் கற்றுத்தரும் பாடம் இல்லையா? எனது வீட்டார் இங்கே எனக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருப்பதால், எதையும் பயமின்றி, அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு அணுக முடிகிறது.
அப்பா மாதிரி எல்லாவற்றையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக் கொள்ளும்போது மனதில் பாரமும் இல்லை; பயமும் இல்லை" எந்தவிதக் கவலையும் வந்து கூடு கட்டுவதும் இல்லை.
அம்மா.அங்கீகாரம் என்பது ஒரு ஆளுயர மாலையோ, ஒரு மலர்க் கிரீடமோ இல்லை. ஒரு புன்சிரிப்பு, ஒரு இதமான வார்த்தை, வாஞ்சையுடன் கூடிய ஒரு தோள் தட்டல், அழகான கைகுலுக்கல், ஜஸ்ட் லைக் தட், இப்படி இருந்தாலே போதும்.இவையெல்லாம் எனக்கு அன்றாடம், வேண்டிய மட்டும் கிடைக்கின்றன அம்மா"
நாம் செய்பவைதானே நமது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் ஏற்படுத்துகிறது? நாம் கடந்து செல்லும் அனுபவங்களைவிடப் பெரிய ஆசான் எதுவாக இருக்கமுடியும் சொல்லு? அம்மா, உனது இளவயதுத் துயரங்களை நான் அறிவேன். உனது உள்மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். அதனாலேயே உனது கேள்விகள் எல்லாம், பதிலை நோக்கியதாக அல்லாமல், பயத்தை உருவாக்குவதாகவே உள்ளன. நீ பட்ட அடியும், அவமானமும் என்மீது விழக்கூடாது என்பதில் நீ எத்தனை கவனமாக இருந்திருக்கிறாய்" யூ ஆர் கிரேட் அம்மா"
அம்மா. ஒன்று தெரியுமா? ஒரு பெண் காற்றே இல்லாமல் சுவாசிப்பதும், வார்த்தைகளின்றிப் பேசுவதும், கண்கள் இல்லாமல் காட்சிகள் காண்பதுவும், உணர்ச்சிகள் இல்லாமல் கிடப்பதுவும், கனவுகளும் கவலைகளும் இன்றி உறங்குவதும். ஒரு தாயின் கருவறையில் மட்டுமே சாத்தியம் அம்மா" உண்மையில், ஒரு பெண் வெளியில் வந்துவிட்டால், பொதுவிடத்திலும், புது இடங்களிலும் மனிதர்களிடத்திலும், அவள் பயின்ற அறமும் திறமும், கற்றுத் தெளிந்த பாடமும், தாய் தந்தையரின் வளர்ப்பும் அவளுக்குத் துணையாக நிற்குமே அம்மா" ஒப்புக் கொள்கிறாயா?
பட்டங்கள் ஒரே ஆகாயத்தில் பறந்தாலும், ஒவ்வொன்றும் தனித்தனி விசையும் உயரமும் கொண்டல்லவா பறக்கிறது? நானும் இங்கே உயரே, உயரே பறக்கிறேன் அம்மா. துளசி என்று பேரிட்டு மிகவும் பத்திரமாக, பவித்திரமாக இந்தப் புண்ணிய பூமியில் என்னை நீ ஊன்றிவிட்டாய்" எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய பாரத நாட்டில் அல்லவா நான் வாழ்கிறேன்" விதைகள் என்றுமே முளைப்பதற்குத்தான் அம்மா.யாரும் உண்டு ஜீரணிப்பதற்கல்ல. மண்ணில் வேர் பிடித்து வியாபிப்பதற்குத்தான் அம்மா. துளசியின் புனிதம் கெடாமல், அதன் புகழ் மங்காமல் காய்ந்தாலும் மணக்கும்படியாக வாழ்வேன் அம்மா" கவலைப்படாதே""
கண்களில் ஆனந்தக் கண்ணீர் முட்ட, டேபிளில் இருந்த துளசியின் புகைப்படத்தை எடுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள் மேகலா"
பானு ரவி, சிங்கப்பூர் |