எங்கிருந்தோ வந்த விதை (அத்தியாயம் - 10)
மறுநாள் சாராவின் அம்மாவும் அப்பாவும் வக்கீலுடன் ஆலோசனை செய்யக் காலையில் புறப்பட்டுச் சென்றார்கள். சாராவை அருண் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார்கள். அருணிற்கு அதில் மிக்க மகிழ்ச்சி.

சாரா வீட்டுக்குள் வந்ததுதான் தாமதம், அருண் அவளை விறுவிறுவென்று அழைத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்றான். சாரா காலைச் சிற்றுண்டி முடித்துக் கொள்ளட்டும் என்று கீதா சத்தம் கொடுத்தார். அருண் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. சாராவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு மாடிப் படிகளில் ஏறிச்சென்றான்.

"அருண், என்ன இது? வந்ததும் வராததுமா சாராவை இப்படியா தொல்லைபண்றது? அவள் ஏதாவது சாப்பிட வேண்டாமா?" கீதா சமையல் அறையிலிருந்து குரல் கொடுத்தார். அருணிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சாராவிடம் இருந்து கூடத்தான்.

அருண் அறையில் கம்ப்யூட்டர் ஓடிக்கொண்டிருந்தது.அதில் காப்புரிமம் பெற்ற விதைகளைப் பற்றி நிறைய வலைதளங்களைத் திறந்து வைத்திருந்தான். ஒவ்வொன்றாக சாராவிற்கு விளக்கினான்.

"சாரா, இதப் பாத்தியா? எப்படி ஏழை விவசாயிங்களை மாட்டி விட்டிருங்காங்க இந்தப் பாவி ஹோர்ஷியானா ஆளுங்க!"

அருண் காட்டக் காட்ட சாரா பொறுமையாகப் படித்தாள். அவளுக்கு, அருண் தனக்காக இவ்வளவு பண்ணுகிறானே என்று ஆனந்தத்தில் கண்ணீர் வந்தது.

"எதுக்கு அழற சாரா? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?"

சாரா அருணை அரவணைத்து, "தேங்க்ஸ்டா" என்றாள். அருணுக்கு ஆச்சரியமாக இருந்தது. இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டும் சாரா, மரத்தின் மேலே உட்கார்ந்துகொண்டு புஸ்தகம் படிக்கும் சாரா! இப்படிக் கண்ணீர் விட்டு அவன் பார்த்ததேயில்லை.

அருண் கடகடவென்று சாராவின் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைப் பற்றி தங்களது பள்ளிக்கூட முகநூல் பகத்தில் விலாவாரியாக எழுதினான். சாராவிடம் கேள்வி கேட்டு, அவள் பதில் சொல்லச் சொல்ல அதை அப்படியே டைப் அடித்தான். அவளது குடும்பத்தினர் ஒரு தப்பும் செய்யாதபோதும் அவர்களை நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கும் ஹோர்ஷியானா நிறுவனத்தின் ஈவு இரக்கமற்ற செயலை அப்படியே புட்டுப் புட்டு வைத்தான். அருண் பள்ளிக்கூட முகநூல் பக்கத்தில் எழுதியது தான் தாமதம், உடனே எல்லா மாணவர்களும் பெற்றோர்களும் சாராவை ஆதரித்து பதில் கொடுக்க ஆரம்பித்தனர்.

பள்ளிக்கூட ட்விட்டர் கணக்கில் அவர்களது தலைமை ஆசிரியர் இதைப்பத்தி ட்வீட் செய்தார். செய்தி ஊரெங்கும் தீப்போல வேகமாகப் பரவியது. அருண் தனது தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டு, அனைவரையும் பள்ளிக்கூட வளாகத்தில் உடனேயே வந்து கூடுமாறு கேட்டுக்கொண்டான். ட்விட்டரில் பதில்கள் வந்து குவிந்தன.

அழுதுகொண்டிருந்த சாரா, தங்களது குடும்பத்திற்குக் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து சந்தோஷத்தில் திக்குமுக்காடினாள்.

"இதுதான் சாரா சோஷியல் மீடியாவோட சக்தி. ஒரு சின்ன பதிவு, ஒரு பெரிய வெள்ளமே வந்தாப்போல இருக்கு. நாம யாருன்னு அந்த ஹோர்ஷியானா பசங்களுக்கு காட்டணும்."

கீதா அருணின் அறைக்குள் விறுவிறுவென்று வந்தார். அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"என்ன அருண், இப்படி சாரா அப்பா அம்மாகிட்ட கேக்காம எல்லாரையும் வரச் சொல்லிட்டயே? அவங்க ரெண்டு பேரும் இப்ப அவங்க வீட்டு வக்கீலோட பேசப் போயிருக்காங்க. தப்பா எடுத்துக்கப் போறாங்க கண்ணா. இதெல்லாம் சின்னக் குழந்தைங்க விளையாட்டு இல்லை. பெரிய அளவுல சட்டம், வக்கீல் சம்பந்தப்பட்டது," கீதா கவலையுடன் பேசினார்.

கீதாவின் செல்ஃபோன் அடித்தது. யாரென்று பார்த்தார். அது சாராவின் அம்மாவிடமிருந்து.

"சொல்லுங்க சூஸன்…" கீதா தயக்கத்தோடு பதில் அளித்தார்.

அருணும் சாராவும் கீதாவின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருணுக்கு உள்ளூரக் கொஞ்சம் பயமாக இருந்தது. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

"அப்படியே ஆகட்டும் சூஸன்." கீதா புன்சிரிப்போடு அருணையும் சாராவையும் பார்த்தார். "பசங்களா, நீங்க ரெண்டு பேரும் இப்ப பள்ளிக் கூட்டத்துக்கு போவீங்களாம். நானும் வரேன் உங்ககூட, சரியா?"

"அம்மா, சாராவோட அம்மா என்ன சொன்னாங்க?" என்று அருண் கேட்டான். கீதா சிரித்துக்கொண்டே, "அது எங்களுக்குள்ளே ரகசியம்" என்று சொல்லி இருவரையும் கிளப்பினார்.

★★★★★


பள்ளிக்கூட வளாகத்தில் பெற்றோரும் மாணவர்களும் அலைமோதினர். அருண், சாரா, அம்மாவுடன் அங்கே போகும்போது, தலைமை ஆசிரியர் ஒலிபெருக்கி வைத்துப் பேசிக்கொண்டிருந்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாதிரியே இல்லை. கடுகு போட்டாலும் கீழே விழாத கூட்டம். அங்கே சாராவின் அம்மாவும் வந்து சேர்ந்தார்.

சூஸன் ஓடிவந்து அருணையும் சாரவையும் இறுக்கமாக அணைத்துக் கொண்டார். "கிளப்பிட்டீங்கடா கண்ணுங்களா. அசத்திட்டீங்க!"

"அருண்தான் அம்மா செய்தான்."

தூரத்திலிருந்து தலைமையாசிரியர் சாராவையும் அருணையும் அருகில் வருமாறு அழைத்தார். அவர் ஒரு மேடைமீது நின்றிருந்தார். சாராவும் அருணும் அவர் அருகில் போய் மேடையில் ஏறி நின்றார்கள். அருணிடம் ஒலிபெருக்கியைத் தலைமையாசிரியர் கொடுத்தார்.

அருண் ஒரு தேர்ந்த பேச்சாளனைப் போலப் பேச ஆரம்பித்தான்.

"நண்பர்களே! பெற்றோர்களே! நம்ம சாரா குடும்பத்துக்கு நடந்த மாதிரி நமக்கும் நாளைக்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம்? நம்மமேல இப்படித்தான் திருட்டுப் பட்டம் கட்டுவாங்களா? நம்ம அம்மா அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை இப்படி நம்ம கிட்டேயிருந்து ஹோர்ஷியானாவை எடுத்துக்க விடலாமா? அது என்ன சட்டம்? காத்துல வந்து விழுமாம், அதுக்கு நாம நஷ்ட ஈடு கட்டணுமாம்? என்ன அநியாயம் இது? கேட்டா, சட்டப்படி அவங்க காப்புரிமம் பண்ணிண சொத்தாம்."

கூட்டத்தில் பலர் கூக்குரல் இட்டனர், "கூடாது! கூடாது!"

அருண் உற்சாகம் கொண்டான். "நாம நம்ம ஊரு சட்டத்தை மாத்தணும். இந்த மாதிரி ஒரு தனி நிறுவனம் நம்ம வாழ்க்கைய பயமுறுத்த விடக்கூடாது. நாம ஒரு பாடம் கற்பிக்கணும்."

கூட்டம் இன்னும் சத்தமாகக் கத்தியது. "ஆமாம்! ஆமாம்!"

அருண் கொடுத்த தெம்பில் சாராவும் ஒலிபெருக்கியை வாங்கிப் பேசினாள். அவர்கள் வீட்டுக்கு வந்த வக்கீல்கள் என்ன சொன்னார்கள் என்று விலாவாரியாகச் சொன்னாள். கூட்டத்தில் சில பெற்றோற்களுக்கு சாரா சொன்னதைக் கேட்டுக் கண்ணீர் வந்தது.

"மாற்று, மாற்று, சட்டத்தை மாற்று." சாரா கோஷம் எழுப்பினாள்.

ஒரு சிலர் கூட்டத்தின் ஓரத்தில் நின்றுகொண்டு மௌனமாக கவனித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் தனது செல் ஃபோனை எடுத்து மெதுவாகப் பேசினார்.

"டேவிட் ராப்ளே அண்ணே, ஜனங்க ரொம்ப கொந்தளிக்கறாங்க அண்ணே! இப்ப என்ன பண்ணச் சொல்லறீங்க. இந்த பொடிப்பயல இரண்டு தட்டு தட்டலாமா?"

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com