முல்லை முத்தையா
"வள்ளலாருக்கு ஒரு தொழுவூர் வேலாயுத முதலியார்போல் பாவேந்தருக்கு ஒரு முல்லை முத்தையா" என்று பாராட்டினார் உவமைக் கவிஞர் சுரதா. அதை ஆமோதிப்பதுபோல் "முத்தையா என் சொத்தையா" என்று மனமுவந்து பாராட்டினார் பாவேந்தர் பாரதிதாசன். இப்படி பாரதிதாசனின் அன்புக்குப் பாத்திரமான முத்தையா, ஜூன் 7, 1920ல் தேவகோட்டையில் பழனியப்பச் செட்டியார் - மனோன்மணி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை தமிழார்வம் மிக்கவர். தாய்வழி, தந்தைவழிப் பாட்டனார் இருவருமே பாவலர்கள். சைவப் பற்றுள்ளவர்கள். அவர்கள் வழி முத்தையாவும் இயல்பிலேயே தமிழின்மீதும் சைவத்தின்மீதும் மிகுந்த பற்றுடையவராக வளர்ந்தார். பள்ளியிறுதி வகுப்புவரை படித்தார். தனிப்பட்ட ஆர்வத்தால் சமஸ்கிருதமும் கற்றுக்கொண்டார். தந்தை பர்மாவில் காசுக்கடை நடத்தி வந்தார். அதனை நிர்வகிக்க 16 வயதான முல்லை முத்தையா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கிடைத்த நேரத்தில் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்படும் இதழ்களை, நூல்களை வாசித்தார். குறிப்பாக, பாரதிதாசனின் கவிதைகள் இவரைப் பித்துக்கொள்ள வைத்தன. பாவேந்தரின் கவிதைகளில் இருந்த இலக்கிய நயமும் தமிழ்ச்சுவையும் இவரை மிகவும் கவர்ந்தன. அவற்றை வாசிப்பதும் அதன் சிறப்புகள் குறித்து நண்பர்களுடன் உரையாடுவதும் வழக்கமானது.



இரண்டாம் உலகப்போர் மூண்டது. பர்மாவில் தொழில் செய்து வந்தவர்கள் தங்களது சொத்து, தொழிற்கூடம் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டுத் தாயகம் திரும்பினர். அவர்களுள் முத்தையாவும் ஒருவரானார். வெ. சாமிநாதசர்மா, கண. முத்தையா உள்ளிட்டவர்களுடன் இணைந்து கால்நடையாகவே இந்தியாவுக்குத் திரும்பினார். தமிழகம் வந்ததும் என்ன செய்வதென யோசித்தவருக்கு, தங்கள் குலத்தவர் பலர் செய்துவந்த பதிப்பகத் தொழிலைச் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அது குறித்த அனுபவம் பெறுவதற்காக 'சக்தி' இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து சில காலம் பணியாற்றினார்.

தன் மனம் கவர்ந்த பாரதிதாசனின் பாடல்களை அச்சிட்டு நாடெங்கும் பரப்ப விரும்பிய முத்தையா, கவிஞர் பாரதிதாசனைச் சந்தித்து தனது விருப்பத்தைச் சொன்னார். முத்தையாவின் அன்பையும், அவரது உறுதியையும் கண்டு வியந்த பாரதிதாசன், அதற்குச் சம்மதித்தார். தனது கவிதைகளை, நூல்களை முத்தையா பதிப்பிக்க அனுமதி அளித்ததுடன், அந்தப் பதிப்பகத்திற்கு 'முல்லை' என்ற பெயரையும் சூட்டினார். 1943ல் முல்லை பதிப்பகத்தின் முதல் நூலாக பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு' வெளியானது. தொடர்ந்து பாரதிதாசனின், 'அமைதி', 'நல்ல தீர்ப்பு', 'பாண்டியன் பரிசு', 'தமிழியக்கம்', 'குடும்ப விளக்கு', 'இருண்ட வீடு', 'எதிர்பாராத முத்தம்', 'காதல் நினைவுகள்', 'தந்தையின் காதல்' உள்ளிட்ட பல நூல்களை வெளியிட்டு அவரது புகழைத் தமிழ்நாடெங்கும் பரப்பினார். அதுமுதல் 'முல்லை' என்பது அவரது பெயரின் முன்னொட்டாக ஆகி 'முல்லை முத்தையா' என்று அழைக்கப்பட்டார்.



பாரதிதாசனின் நூல்கள் மட்டுமல்லாது, ராஜாஜியின் நூல்களையும், (கள் ஒழிக, மதுவிலக்கு) கோவை அய்யாமுத்து, எம்.எஸ். உதயமூர்த்தியின் தொடக்ககால நூல்களையும் வெளியிட்டது முல்லை பதிப்பகம். டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.ஜி. வேங்கடாச்சாரி, தி.ஜ. ரங்கநாதன், சிரஞ்சீவி, எஸ்.எஸ். மாரிசாமி, எஸ்.டி. சுந்தரம், புதுமைப்பித்தன், ரகுநாதன், கல்வி கோபாலகிருஷ்ணன், வல்லிக்கண்ணன், கி.ரா., குமுதினி, பி.ஸ்ரீ., க. ராஜாராம், சக்திதாசன், க.நா. சுப்பிரமணியம் எனப் பலரது நூல்கள் முல்லை பதிப்பகம் மூலம் வெளியாகின. பாரதிதாசனின் ஆதரவு மற்றும் வாழ்த்துடன் 1946ல் 'முல்லை' இதழைத் தொடங்கினார் முத்தையா. அதனை மிகச்சிறந்த இலக்கிய இதழாக வளர்த்தெடுத்தார். அவ்விதழில் திரு,.வி.க., டாக்டர் மு.வ., கம்பதாசன், கா.ஸ்ரீ.ஸ்ரீ., அறிஞர் அண்ணா, கா. அப்பாதுரை எனப் பலர் பங்களித்தனர். நாளடைவில் 'முல்லை' இலக்கிய இதழும், 'முல்லை' பதிப்பகமும் இலக்கிய அன்பர்களின் மனங்கவர்ந்தவை ஆகின. இலக்கிய நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சிறார் நூல்கள் இவற்றுடன் மருத்துவ நூல்கள், சட்ட நூல்கள், கவிதை நூல்கள், அரசியல் நூல்கள், பள்ளிக்கல்வி தொடர்பான நூல்கள் எனப் பல வகைமைகளில் நூல்களை வெளியிட்டார் முத்தையா.



பாரதிதாசனுடன் தொடர்புடைய பல சான்றோர்களிடம் கட்டுரை, கவிதை, கருத்துரைகளைக் கேட்டு வாங்கி, அதனைத் தொகுத்து 'புரட்சிக் கவிஞர்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். பாரதிதாசனைப் பற்றி வெளிவந்த முதல் தொகுப்பு நூலாக அந்நூல் கருதப் பெறுகிறது. 'பார் புகழும் பாவேந்தர்', 'பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து', 'அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்', 'புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்', 'புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்', 'தமிழ்ச்சொல் விளக்கம்', 'தமிழர் இனிய வாழ்வு', 'மாணவ மாணவியருக்கு நீதிக்கதைகள்', 'மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்', 'வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்', 'நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்', 'நபிகள் நாயகம் வரலாறு', 'முல்லை கதைகள்', 'பஞ்சாயத்து நிர்வாக முறை' என இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்திருக்கிறார் முத்தையா. '1001 இரவுகள்', 'ஷேக்ஸ்பியர் கதைகள்', 'மனோன்மணியம்', 'குறுந்தொகை' உள்ளிட்ட நூல்களை மலிவுவிலைப் பதிப்புகளாக வெளியிட்டிருக்கிறார். மாக்சிம் கார்க்கியின் 'தாய்', லியோ டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா' போன்ற புகழ்பெற்ற நூல்களைத் தமிழில் பெயர்த்துக் குறைந்த விலையில் வெளியிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. பஞ்சாயத்து, நகராட்சி வளர்ச்சிக்காக 'நகரசபை' என்ற மாத இதழையும் நடத்தியிருக்கிறார்.



சிறுவயது முதலே இவரிடம் இருந்த குறிப்பெடுக்கும் பழக்கமே பல நூல்கள் உருவாகக் காரணம் என்று தனது நூல்களின் முன்னுரைகளில் குறித்துள்ளார் முத்தையா. தன்னைப்பற்றிக் கூறும்போது, "எதற்கும் விளம்பரத்தைத் தேடி ஓடும் காலம் இது! அதற்குமே 'தான் தான்' எனத் தன் தலையை நீட்டிக்கொண்டு திரிபவர்கள் மலிந்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன். விளம்பரத்தையே விரும்பாதவன். என்னால் இயன்ற பணிகளைச் செய்து மனநிறைவு கொள்பவன்" என்கிறார்.

எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என இதழியல் சார்ந்த அனைத்துத் தளங்களிலும் ஆழமாகத் தன் முத்திரையைப் பதித்த முத்தையா, திருக்குறள்மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். 1946ல் திருவள்ளுவர் கழகத்தைத் தொடங்கியதுடன், 'திருக்குறள் தெளிவுரை', 'திருக்குறளின் பெருமை', 'திருக்குறள் அறிவுரைகள்', 'திருக்குறள் உவமைகள்' போன்ற பல நூல்களைத் தமது பதிப்பகம் மூலம் வெளியிட்டுக் குறளின் பெருமையைப் பரப்பினார். தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத்தைத் தொடங்கி, அதன் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். நாத்திகரான பாரதிதாசனின் நண்பராக இருந்தாலும்



முத்தையா மிகுந்த ஆன்மீகப் பற்று உள்ளவர். சிறந்த முருக பக்தர். முருகனின் மீதான பக்திப் பாடல்களைத் தொகுத்து 'முருகன் அருள் செல்வம்' என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். அருணகிரிநாதரின் 'கந்தர் அலங்காரம்' நூலுக்கு உரை எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு. பாரதிதாசனின் சீடராகவும் பாரதிதாசனின் மனம் கவர்ந்த நண்பராகவும் இருந்த முத்தையா, புதுச்சேரியில் பாரதிதாசனுக்கு 4000 ரூபாய் செலவழித்து வீடு வாங்கிக் கொடுத்த சிறப்புக்குரியவர். (அந்த வீடு தற்போது அரசு அருங்காட்சியகமாகத் திகழ்கிறது.)

'திருக்குறள் சீர் பரவுவார்', 'பாவேந்தர் சீர் பரவுவார்', 'திருக்குறள் நெறித்தோன்றல்', 'குறள் ஆய்வுச் செம்மல்', 'மர்ரே எஸ். ராஜம் நினைவுப் பரிசு', தமிழக அரசின் 'பாவேந்தர் விருது' உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர் முத்தையா. மனைவி நாச்சம்மை ஆச்சி. இவர்களுக்கு ஆண்மக்கள் மூவர்; பெண்மக்கள் மூவர்.

பாவேந்தருடன் முல்லை முத்தையா



பிப்ரவரி 9, 2000 அன்று எண்பதாம் வயதில் முல்லை முத்தையா காலமானார். தமிழக அரசு இவருக்குச் சிறப்புச் செய்யும் வகையில் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது (அவற்றை வாசிக்க)

சக்தி வை. கோவிந்தன், சின்ன அண்ணாமலை வரிசையில் இதழியல் வளர்த்த முன்னோடி முல்லை பி.எல். முத்தையா. 2020-2021ம் ஆண்டு இவரது நூற்றாண்டு.

பா.சு. ரமணன்

© TamilOnline.com