தெய்வமாக்கிய தெய்வம்
"ராஜாதிராஜ, ராஜ மார்த்தாண்ட, வீராதிவீர, வீர மார்த்தாண்ட, அகிலம் புகழும் அதிவீர, தீர, பராக்கிரம கேசரி, சர்வகலா விசாரத, சங்கீத, நாட்டிய, நாடக, ரசிக சிரோமணி, மலய சிம்ம மகாராஜா வருகிறர், பராக்!"

பாராக்காரன் 'பராக்' போட மன்னர் மலயசிம்மர் கம்பீர நடை பயின்று கலைக்கூடத்துக்குள் பிரவேசித்தார்.

அருங்கலைப் பொருள்கள் அனந்தமாகச் சேகரித்து வைக்கப்பட்ட கலைக்கூடம் அது. அதில் இல்லாத கலைச் செல்வங்கள் அவனியில் இல்லை என்றே சொல்லவேண்டும். கவினுறு சித்திரங்கள், எழிலுறச் சமைக்கப்பட்ட சிலைகள், பார்ப்பவர் பிரமிக்கும் வண்ணம் படைக்கப்பெற்ற பஞ்சலோக பிம்பங்கள், பாரதத்தின் பண்டைய பெருமையைப் பறைசாற்றும் பற்பல கலைச் செல்வங்கள் அங்கே கொலு வீற்றிருந்தன.

ஆண்டுதோறும் அரசரின் பணியாட்கள் எண்திசைக்கும் சென்று அகப்படும் அருங்கலைச் செல்வங்களைக் குவிப்பார்கள். ஆண்டில் ஒருநாள் மன்னர் அவற்றைப் பார்வையிடக் கலைக்கூடத்துக்கு விஜயம் செய்வார். அது அந்த அரசாங்கத்தின் சம்பிரதாயம்.

அன்றும் அதே நன்னாள், பொன்னாள்; திருநாள். அலங்காரத்துக்குக் கேட்க வேண்டுமா? கலைக்கூடம் சொர்க்கபுரியெனத் திகழ்ந்தது.

மன்னர் மலயசிம்மர் திக்கெட்டும் புகழ் எட்ட எழுபது கோடைகளைக் கண்டவர். புவியோர் பேரதிசயப்படும் வண்ணம் செங்கோல் ஓச்சிவந்த பேரரசர். கலையின் கருவூலமாகத் தம் நாட்டைத் திகழச்செய்த கலையன்பர். நீதிக்கும், நேர்மைக்கும், தர்மத்துக்கும், நியாயத்துக்கும் உறைவிடமாக விளங்கிய பெருந்தகையாளர். தெய்வ பக்தியிலே திளைத்து அடியார்க்கும் அடியாராக அடிபணிந்து வாழ்பவர். அத்தகைய மன்னர் கலைக்கூடத்தைக் காண வருகிறார் என்றால், அலங்காரத்துக்கும் அணிக்கும் கேட்க வேண்டுமா?

மன்னர் ஒவ்வொரு பகுதியாக, ஒவ்வொரு பொருளாக ஆற அமர இருந்து பார்த்து ரசித்தவாறே நடந்தார். பஞ்சலோகப் படிமங்கள் வைத்திருந்த பகுதிக்கு வந்ததும் விக்கிரகங்களில் சிலவற்றைப் பார்த்தவர், பிரமித்து நின்றுவிட்டார். பேசும் பொற்சித்திரங்களாக வீற்றிருந்த விக்கிரகங்களைத் தாண்டிச்செல்ல மனம் ஒப்பவில்லை. எந்த ஸ்தபதியின் கைவண்ணம் இப்படிக் கலையுருவங்களாக உயிர்பெற்றுத் திகழ்கிறது? அதோ நிற்கும் கல்யாணசுந்தரர் நித்யகல்யாண மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்! இதோ வீற்றிருக்கும் ஆனைமுகத்தான்-ஐங்கரத்தான் கட்டமைந்த மானிட உடல் பெற்று, கைகளும், கால்களும் கரணை கரணையாகத் திகழ, மோதகம் தின்ற வயிறு புடைத்திருக்க, தம்மைத் தஞ்சம் அடைந்தவர்களுக்கு ஊறு நேராவண்ணம் அபயஹஸ்த முத்திரையோடு கருணையொளி கண்களில் படரக் காட்சி தருகிறார்! அதோ, அந்த வில்லேந்திய ராமன் பிராட்டியும், இளையவனும் இரு பக்கங்களிலும் நிற்க, சாந்தமே உருவாக நிற்கிறார்! பக்கத்தில் நிற்கும் பிராட்டியின் ஒரு கை கீழ்நோக்கி எதைச் சுட்டிக் காட்டுகிறது? 'இறைவனான இராமனின் அருட் பாதங்களைச் சரணடைவதல்லால் கதியில்லை' என்பதைச் சுட்டிக் காட்டுகிறதோ? இல்லை, இல்லை! அதோடு 'கால் அமைப்பிலே ஸ்தபதியின் கை வண்ணத்தைக் கண்டு களிப்பாய்!' என்றும் கூறுகிறது. பஞ்சலோகத்தாலான மூர்த்தியாக இருந்தாலும், புறங்கால்களிலே நரம்பு ஓடுவதை அந்த ஸ்தபதியினால் எப்படித் தத்ரூபமாகக் காட்ட முடிந்தது. கால் அழகைக் காணக் கோடிக்கண்கள் தான் வேண்டும்! அடுத்த விக்கிரகத்தைப் பார்க்கக் கண்களைப் பலவந்தப்படுத்தித்தான் பிரிக்க வேண்டியிருந்தது.

மன்னரது குலதெய்வமான கூத்தபிரான் கொவ்வைச் செவ்வாயும், குமிண் சிரிப்புமாக அருகிலே அம்மை சிவகாமி நிற்கத் தரிசனம் தந்து கொண்டிருந்தான், உருவத்திலே சிறியதாயினும் கீர்த்தியிலே மாணப் பெரிது என்பது மூர்த்தியைப் பார்த்த மாத்திரத்திலே தெரியவந்தது. ஒரு காலைத் தூக்கிநின்ற தெய்வத்தின் கால்களில் சதங்கை கொஞ்சியது. ஒரு காலைத் தூக்கி ஒரு காலில் நின்றிருந்த காரணத்தினால் உடலிலே ஓர் அநாயாசமான வளைவு, தானும் ஆடித் தரணிதன்னையும் ஆட்டும் ஆண்டவனது வதனாரவிந்தத்திலே அலட்சியமான கம்பீரத் திருப்பம். ஆட்டத்துக்கேற்றபடி திருவாச்சியிலும் அதியற்புதமான வேலைப்பாடு. அன்னை சிவகாமி ஆடாமல் அசையாமல் அருகில் நின்றவண்ணம் அகிலமனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவனது ஆடலைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாள், அற்புத மூர்த்திகரம் வாய்ந்த அந்த விக்கிரகங்களைக் கண்டு களித்துக் கொண்டிருந்த மன்னரும் அப்படியே அசையாமல் சிலையெனச் சமைந்து நின்றுவிட்டார்.

எத்தனை நேரம் அவர் அப்படி நின்றாரோ, தெரியாது. கலைக்கூடத்தின் இடைவேளை மணி ஒலித்தபின்தான் அவர் தமது சமாதி நிலையை விட்டு இவ்வுலக நினைவுக்கு வந்தார். அரசருக்குரிய அலட்சிய பாவத்துடன் உடலை வளைக்காமல் கழுத்தை மட்டும் திருப்பியபொழுது. பக்கத்தில் மந்திரி பிரதானிகளும் அதிகாரிகளும் கைகட்டி வாய் புதைத்து நிற்பதைக் கண்டார். கலைக்கூடத்து அதிகாரியை அருகில் அழைத்து, "இந்த ஐம்பொன் விக்கிரகங்கள் இவ்வாண்டுதான் கலைக்கூடத்துக்கு வந்து சேர்ந்தனவோ?" என்று கேட்டார்.

"ஆம், அரசே!"

"விநாயகரது இந்த விக்கிரகத்தை வார்த்த ஸ்தபதி யார்?"

"ஸ்தபதி சிவாச்சாரியாரின் சீடன் சாம்பமூர்த்தி"

"வில்லேந்திய இராமனை?"

"சாம்பமூர்த்தியே தான்!"

"ஆடும் அம்பலத்தரசனை?"

"அதுவும் அவனேதான்!"

அப்புறம் அரசருக்குக் கேள்வி கேட்கவேண்டும் என்று தோன்றவில்லை. அதற்குள்ளாக ஆடும் அம்பலத்தரசன் அரசரது மனத்துள் புகுந்து ஆட்டுவிக்கத் தொடங்கிவிட்டான். சின்னஞ்சிறு மூர்த்தியாகத் திகழும் அவனை மானிட ஆகிருதியில் சமைத்துக் கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆசை அவரைப் பற்றிக் கொண்டது.

"சாம்பமூர்த்தி ஸ்தபதி எங்கிருந்தாலும் இன்று மாலைக்குள் நமது மாளிகைக்கு அழைத்து வருவது உங்கள் பொறுப்பு!" கலையுள்ளம் படைத்த காவலர் கனகம்பீரமாகவும், ஆனால், அதே நேரத்தில் கண்ணியத்தோடும் ஆணையிட்டுச் சென்றார்,

★★★★★


அரசர் ஆணையென்றால் அப்புறம் கேட்க வேண்டுமா? குறிப்பிட்டபடி ஸ்தபதி சாம்பமூர்த்தி அரசவைக்கு அழைத்து வரப்பட்டான். எழுபது கோடையையும் குளிரையும் கண்ட மன்னர் தமது அரியாசனத்தில் அமர்ந்திருந்தார். இருபத்தைந்து பிராயம்கூட நிரம்பாத சாம்பமூர்த்தி மன்னரெதிரே பவ்யமாக நின்று கொண்டிருந்தான்.

ஒருமுறை தம்மைப் பார்த்துக் கொண்ட மன்னர், இளைஞனான சாம்பமூர்த்தியின் மீது கண்ணோட்டம் விட்டார். பழுத்து உதிரப்போகும் இலைக்கெதிரே பல்லவத் துளிர் நிற்பதாகக் கண்டாரா? வாடி வதங்கி விழுந்து மண்ணோடு மண்ணாகப் போகும் மலருக்கெதிரே முகை விரித்து மணம் பரப்பப்போகும் மொட்டென மதித்தாரா? மலைவாயில் விழப் போகும் மாலைக் கதிரவனுக்குப் போட்டியாகப் பதினாறு கலைகளையும் காட்டிக்கொண்டு பிரகாசிக்கப் போகும் சரத்காலச் சந்திரன் என்று எண்ணமிட்டாரா? அல்லது வாழ்க்கையின் தலைவாசலை மிதித்திருக்கும் இந்த இளைஞனா இத்தனை அருங்கலைத் திறன் பெற்றிருப்பான்! எத்தனையோ அருங்கலைஞர்களிடம் இல்லாத ஆற்றல் இவனிடம் இயல்பாகவே வந்திருக்குமா? - நம்பிக்கைக் குறைவின் காரணமாக இப்படிக் குறைவாக மதிப்புப் போட்டாரா? அவர் மனத்தில் ஓடிய உணர்ச்சிப் பெருக்கை யார் கண்டார்கள்?

பிராயம் முதிர்ந்த மன்னரின் உதடுகளிலே இலேசாக இளநகை ஓடியது. "ஏன் ஸ்தபதியாரே! கலைக்கூடத்திலே கண்ட விநாயகர், ராமர், நடராசர் முதலியவர்களது சுந்தர விக்கிரகங்களையெல்லாம் வார்த்தது நீர்தானா?" என்று கேட்டார்.

"மன்னரின் மனத்திலே இப்படி ஓர் ஐயம் முளைக்கக் காரணம்..."

"ஐயமா? இல்லை, இல்லை. எழில் பிம்பமாக வடித்திருக்கிறாயே நடராஜ மூர்த்தியை! மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறாய். ஆனால், என் ஐயன் சிற்றம்பலக் கூத்தனை மனித ஆகிருதியில் செய்வித்துக் கண்குளிரக் காணவேண்டும் என்று எனக்கு வெகுநாட்களாக ஆசை. அது உன் கைத்திறன் மூலம்தான் நிறைவேற வேண்டும். உன்னால் சாத்தியமா?" என்று கேட்டார் மன்னர்.

"மன்னர் மன்னவா! சாத்தியக்கூறைப் பற்றி ஆராயத் தேவையில்லை. ஒருமித்த உள்ளத்துடன் வழிபட்டு அருவமான ஆண்டவனையே அடைந்துள்ளார்கள் நமது மாமுனிவர்கள். ஆண்டவன்மீது அரும்பக்தி பூண்டு அவனே நினைவாய், அருவத்துக்கு உருவம் கொடுக்கும் பேற்றைக் கலைஞர் பெருமக்கள் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வழிவழி வந்த நான், என்னால் ஆன முயற்சியை, திருப்பணியைச் செய்யக் கடமைப்பட்டவன்" என்றான் சாம்பமூர்த்தி.

கலைஞன் இளைஞனாயிருந்தாலும், முதிர்ச்சிபெற்ற மனத்தினன் என்பதைப் பேரரசர் அறிந்துகொண்டார். "காலம்கடந்த கலைப் பொருளுக்குக் காலவரையறை ஏற்படுத்துவது உசிதமில்லைதான். ஆயினும் என் பிராயமும் ஆசையும், கண் மூடுவதற்கு முன்னால் கலைத் தெய்வத்தைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற அவாவைக் கிளறி விட்டுள்ளன. அடுத்த ஆனித் திருமஞ்சனத்துக்குள் முடித்துத் தர இயலும் அல்லவா?" என்று கேட்டார்.

"ஆண்டவன் அருளும், அரசர் சித்தமும் பக்கத் துணையிருந்து உதவுமெனில் முடித்துத் தருவது ஒரு சிரமமா?" என்றான் ஸ்தபதி சாம்பமூர்த்தி.

அவனுக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்து தருமாறு அமைச்சர்களுக்கு ஆணையிட்டு விட்டு அரியாசனத்திலிருந்து எழுந்தார் அரசர் மலயசிம்மர்.

★★★★★


அந்தக் காலத்தில் ஸ்தபதி சிவாச்சாரியரின் புகழ் எட்டுத் திக்கும் பரவியிருந்தது. அவர் விக்கிரகங்கள் வார்ப்பதிலே தன் நிகரற்றவர். சிறந்த பக்திமான். அருவமான ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து உலகோரை வழிபடச் செய்யும் அற்புதமான ஸ்தாபத்யக் கலையினை ஆர்வமுடன் முறையோடு பயின்றவர். உலோகக் கலவையில் தேர்ந்தவர். எந்த உலோகத்தை எந்தக் கணக்கில் கலந்தால், விக்கிரகத்துக்கு என்ன நிறம் வரும் என்பதெல்லாம் அவருக்குத் தண்ணீர் பட்டபாடு. விக்கிரகங்கள் வார்ப்பதற்கான சாமுத்ரிகா லட்சணங்களில் அதி நிபுணர் அவர்.

அவருக்கு ஒரே மகள். மகன் இல்லை. தமக்கு ஆண் வாரிசு இல்லாததனால், வழி வழி வந்த விக்கிரக வார்ப்புக்கலை தம்மோடு அஸ்தமித்துவிடப்போகிறதே என்று ஏங்கினார். மகளுக்குக் கிடைக்கப் போகும் மணாளனாவது இந்தக் கலையில் தேர்ந்தவனாக இருந்தால் சிறிது சமாதானம் பெறலாம் என்று எண்ணினார், அவரது ஏக்கத்தைத் தவிர்க்கவென்பதற்கேபோல், சாம்பமூர்த்தி அவரிடம் அக்கலையைப் பயிலும் சீடனாக வந்து சேர்ந்தான். அவனது ஒழுக்கம், அவனது அறிவாற்றல், அவனது பக்தி எல்லாமாகச் சேர்ந்து அவரை ஆட்கொண்டன. முழுமனம் வைத்துத் தாம் அறிந்த விக்கிரக வார்ப்புக் கலையைக் கற்பித்தார், ஸ்தபதி சிவாச்சாரியார். அவர் புகழைப் பன்மடங்கு உயர்த்திப் போற்றிப் பாதுகாக்கும் சீடனாகவும், அவரது ஒரே மகளின் மணாளனாகவும் ஆனான் ஸ்தபதி சாம்ப மூர்த்தி. தமது மகள் இன்பகரமான இல்லற வாழ்க்கை நடத்துவதையும், தமது சீடன் தமக்கு ஏற்ற வாரிசாக அமைந்து புகழ்க்கொடி நாட்டிப் பிரகாசிப்பதையும் கண்ணாறக் கண்டு களித்த பின்னரே சிவாச்சாரியார் கண்களை மூடினார்.

இளந்தம்பதிகள் இன்ப வாழ்க்கை நடத்தியவாறே கலை வளர்ச்சியிலும் ஈடுபட்டிருந்த காலத்தில்தான், மன்னர் மலயசிம்மர், நடராஜப் பெருமானின் திருவுருவத்தைச் சகல கலையழகும் ததும்பும்படி மனிதனைப் போன்ற பேருருவில் வார்க்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

கலையுள்ளம் படைத்த ஸ்தபதிக்கு ஏற்பட்டுவிட்ட ஆனந்தத்தை என்னவென்று சொல்வது? இரவு, பகல் என்று பாராமல் உழைத்தான். நாளடைவில் உணவை மறந்தான்; உறக்கத்தை மறந்தான்; இளம் மனையாளை மறந்தான். ஏன், தன்னையேகூட மறந்தான். ஆனந்த நடராஜனின் நினைவைத் தவிர வேறு நினைவில்லை அவனுக்கு. தில்லைக்கூத்தன் மனித ஆகிருதியில் மனத்தில் இடம்பெற்று அவன் மனத்தையே நிறைத்துவிட்டான். இதய அரங்கத்திலே வைத்து மனம் எண்ணியபடியெல்லாம் அவனைச் சிங்காரிப்பதையே தன் வாழ்வாகக் கொண்டுவிட்டான் ஸ்தபதி. இளம் மனைவியின் உள்ளத்திலே எத்தனை இன்ப நினைவுகள் எழுந்தென்ன, ஏக்கப் பெருமூச்சுகள் பிறந்தென்ன? பேரின்பத்திலே லயித்துவிட்ட அவன் அதன் மூர்த்திகரத்திலேயே ஒன்றிவிட்டான்.

அவன் வார்க்கவிருக்கும் விக்கிரகத்துக்குத் தெய்வ சாந்நித்தியம் வர வேண்டுமானால், என்ன என்ன ஆசார நியமங்களை எப்படி எப்படியெல்லாம் அநுஷ்டிக்க வேண்டுமோ, அப்படி அப்படியெல்லாம் இம்மிகூடத் தவறாமல், அநுஷ்டித்தான். விக்கிரகம் வார்ப்பதற்குரிய அச்சைப் பலமுறை நுணுக்கமாக ஆராய்ந்து தட்டிக்கொட்டிச் சமைத்துக் கொண்டான். அப்புறம் ஐம்பொன்களை உருக்கி அளவோடு கலந்து 'மழு' கொதிக்க வைத்தான். அச்சிலே மழுவை ஊற்றி விக்கிரகம் வார்த்தான். மழு ஆறி விக்கிரகமாகச் சமைவதற்கு எத்தனை நாட்கள் தேவையோ, அத்தனை நாட்கள் ஆண்டவனின் நினைவாகவே வாளாவிருந்து அச்சிலிருந்து விக்கிரகத்தை அப்புறப்படுத்தினான். அவன் மனத்திலே ஆனந்த நர்த்தனம் புரிந்த நடராஜன் அப்படியே சிலை வடிவில் இறங்கி வந்திருப்பதாக அவனுக்குப் படவில்லை. எங்கோ ஏதோ குறையிருப்பதாகவே தோன்றியது. மீண்டும் மீண்டும் வார்த்தான்; மீண்டும் மீண்டும் குறையையே கண்டான்.

அப்படியும் அந்தக் கலைஞன் உள்ளம் சோரவில்லை; மனம் தளரவில்லை. அசையாத நம்பிக்கையுடன் ஆனந்தக் கூத்தனின் அற்புத வடிவத்தைச் சமைப்பதிலேயே முனைந்தான். தோல்வியுறத் தோல்வியுற அவன் நெஞ்சம் உறுதிப்பட்டது: விக்கிரகத்தை வார்த்தே தீருவது என்ற திட நம்பிக்கை வலுப்பெற்றது.

★★★★★


சின்னஞ்சிறு உருவத்தில் தில்லை நடராஜனது உருவத்தைப் பார்த்த நாள் முதல் மன்னருக்கும் ஒரே நினைவு. மனித ஆகிருதியில் அம்பலத்தரசனைக் கண்டு களித்துவிட வேண்டும் என்ற ஒரே ஆசை. ஒரே ஆத்திரம். அதனால் தினமும் பொழுது விடிந்தால், பொழுது போனால் ஸ்தபதியின் வேலை எம்மட்டில் இருக்கிறது என்று விசாரித்து வந்தார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குறை ஏற்பட்டு வருவதாகவே அவர் காதுகளுக்குச் செய்தி எட்டியது.

என்னதான் பொறுமைசாலியாக இருந்தாலும், வயது ஏற ஏறப் பொறுமை குன்றிவிடுகிறது. நினைத்த காரியம் நிறைவேறவில்லை என்றால் ஆத்திரம் மூளுகிறது. இந்த மானிட இயல்புக்கு மன்னரும் தப்பவில்லை. அதோடு அவர் மனத்திலே அந்தச் சந்தேகமும் முளைத்து வளர்ந்தது. 'மன்னரின் மனத்திலே இப்படி ஓர் ஐயம் முளைக்கக் காரணம்....?' என்று அன்று ஸ்தபதி சாம்பமூர்த்தி கேட்டானே, உண்மையில் அவனுக்குத்தானே முதலில் அத்தகைய சந்தேகம் வந்தது? அதனால் அவன் திறமையற்றவன் தானோ? சிறந்த ஸ்தபதியே இல்லையோ? பிரசித்தி பெற்ற சிவாச்சாரியாரின் கைத்திறனைத் தன் கைத்திறன் என்று பொய்யுரைத்து, தான் பெரியவனாகப் பார்க்கிறானோ!

நாளுக்கு நாள் அவன் சமைத்து வரும் விக்கிரகத்திலே ஏற்படும் குறைகளைக் கேட்கக் கேட்க அவருடைய சந்தேகம் வலுத்து விசுவரூபம் எடுத்தது. அருவமான ஆண்டவன் உருவம் பெற்று விகவரூபம் எடுத்ததுபோல் சந்தேகமும் பொறுமையின்மையும் சேர்ந்து தயாள சித்தம் படைத்த அவரைக் கல் நெஞ்சக்காரராக்கி விட்டன. 'இன்னும் ஒரு மாதத்துக்குள், தாம் கூறியதுபோல் நடராஜ விக்கிரகம் வார்க்கப்படவில்லையென்றால், ஸ்தபதிக்குச் சிரசாக்ஞை' என்று நெஞ்சை வைரமாக்கிக் கொண்டு கடுந்தண்டனை விதித்து விட்டார்.

கருமமே கண்ணாயிருந்த ஸ்தபதிக்கு அரசரின் இந்த ஆணையைப் பொருட்படுத்திச் சிந்திக்கவே நேரம் இல்லை. பார்க்கப்போனால் உண்மையில் அவன் மன்னருக்காகவா அந்தச் சிலையை வார்க்க ஒப்புக் கொண்டான்? அரசரது சொற்கள் அவனைக் கலைப்படைப்பில் இறங்க ஊக்கினவே ஒழிய வேறு என்ன செய்தன? அவன் 'தன்கடன் பணிசெய்து கிடப்பது' என்றல்லவா கலைத்தெய்வத்தைப் படைக்க முயன்று கொண்டிருந்தான்!

ஆனால், அவனது இளம் மனைவியோ... அரசரது ஆணையைக் கேட்டு அப்படியே நிலை குலைந்துவிட்டாள். 'இந்தக் கல் நெஞ்சக்காரரையா மக்கள் கருணையே வடிவானவர், நீதியே உருவானவர் என்றெல்லாம் புகழ்கிறார்கள்? அவருக்குப் பிடித்த ஒரு காரியத்தை ஒருவனால் செய்ய முடியவில்லையென்றால், அதற்கு அவன் உயிரையா பிணை வைப்பது? இது எந்த ஊர் நியாயம்? இந்தக் கொடுங்கோலர் ஒழிய மாட்டாரா?' என்றே எண்ணினாள், பிறருக்குத் தீங்கு நினைத்தே அறியாத அவள் நெஞ்சம் கணவனுக்கு வந்த கஷ்டத்தை நினைத்தபொழுது இப்படிப் பொருமியது. தன் கணவனிடம் சென்று, "போதும் நீங்கள் விக்கிரகம் வார்த்தது. புறப்படுங்கள். இந்தக் கொடுங்கோலரின் நாட்டைவிட்டே நாம் வெளியேறி விடுவோம்" என்றாள்.

"சிவகாமி! நான் மன்னருக்காகவா விக்கிரகம் வார்க்கும் இந்தத் தெய்வக் கலையைக் கற்றேன்? அல்லது எனக்காகச் சுயநலநோக்கம் கொண்டு கற்றேனா? 'கலை, கலைக்காக; கலைஞனுக்காக! வாழ்வுக்காக: மன்னருக்காக, மக்களுக்காக' என்றெல்லாம் வரையறுத்துக் கூறுகிறார்களே, அறிவறிந்த மக்கள் எனப்படுவோர். என்னைக் கேட்டால், 'கலை இவை எல்லாவற்றுக்கும் மேம்பட்டது. காலத்துக்கும் கோளத்துக்கும் அப்பாற்பட்டது. மனிதனுக்கும், தெய்வத்துக்கும் இடையே உள்ள மடுவைத் தூர்த்து மனிதனையே சிரஞ்சீவியாக்கித் தெய்வமெனப் புகழ்படைத்து வாழச் செய்வது! என்பேன். என் தலையே போவதாயிருந்தாலும், என் கலைச்செயலைப் புரிந்தவாறே கடைசி மூச்சை விடுவேன். கவலைப்படாதே! என் இந்த மண்ணுடம்பு அழிந்தாலும், புகழ் உடம்பு அழியாது!" என்று கலை வேதாந்தம் பேசினான் சாம்பமூர்த்தி.

இதையெல்லாம் அவளது பேதைமனம் புரிந்துகொண்டால் தானே? அஞ்ஞானம் அவள் வாயை எப்படியெல்லாமோ கிளறிக்கொட்டி மூடியது.

மன்னர் வைத்த கெடு நெருங்கி விட்டது. அன்று மாலைக்குள் மன்னர் கூறியபடி நடராஜ விக்கிரகம் உருவாகவில்லையென்றால், மறுதாள் சூரியோதயத்தைக் காணச் சாம்பமூர்த்தியின் உயிர் இவ்வுலகில் இராது. தலை தரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும். .

சாம்பமூர்த்தியின் கலைச் சாலையிலே ஒருபுறம் அச்சிலே வார்க்கப்பட்ட சிலை ஆறிக் கொண்டிருந்தது. இன்னொரு புறம் தகதகவென்று எரிந்து கொண்டிருந்த அடுப்பிலே பெரும் பாத்திரத்தில் மழு தளதளவென்று கொதித்துக் கொண்டிருந்தது. நம்பிக்கையே மூச்சாகக்கொண்ட கலைஞன் கொலைக்கு அஞ்சுவானா? உயிர்போகும் தருணத்திலும் அழகியதொரு நடராஜ விக்கிரகத்தைச் சமைக்க முயல்வது என்று, தான் முன்பே தயாரித்து வைத்திருந்த புது அச்சின் கலை நுணுக்கங்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தான். 'ஆறிக் கொண்டிருந்த விக்கிரகம் சரியாக உருப்பெற்றால் சரி, இல்லாவிட்டால் இன்னொரு புதிய விக்கிரகம்' என்ற முனைப்பு, பணியாற்றிக் கொண்டிருந்த அவனிடம் காணப்பட்டது.

அவன் மனைவி சிவகாமிக்கோ ஒரே கவலை. தன் கணவன் சிரசாக்ஞைக்கு உட்படாமல் உயிர் தப்பிப் பிழைத்தால் போதும் என்ற ஒரே சிந்தனை. அரசர் வைத்த கெடு நெருங்க ஊண் உறக்கம் இன்றிக் கணவனின் கலைச் சாலையே கதியென்று இருந்தாள். மாலை மஞ்சள் வெய்யில் மறைய மறைய அவள் மனநிலை தடுமாறிவிட்டது.

மேற்றிசையிலே படர்ந்த செக்கர் வானத்தைக் கண்ட அவளுடைய மனத்திரையிலே, எமகிங்கரர் போலக் கொலைகாரர்கள் கையில் சுருக்கு நிறைந்த கொலை வாள் ஏந்திய வண்ணம் வரும் காட்சி தெரிந்தது. அடுத்த கணமே தன் கணவனின் செங்குருதி பூமியில் பாய்ந்தோடிச் செக்கர் வானத்தோடு போட்டியிடுவதாகத் தோன்றியது. அவள் வாய் கூச்சலிடக்கூடச் சக்தியற்றுப் போய், அடைத்துவிட்டது. அவள் தன் நிலை மறந்து மயங்கிவிட்டாள்.

"அம்மா , தாயே!" யாரோ கூப்பிடும் குரல் கேட்டுத் துணுக்குற்றுக் கண் விழித்தாள். கொட்டு கொட்டெனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். எதிரே பழுத்த கிழவரும் கிழவியும் நின்றுகொண்டிருந்தார்கள். கிழவரின் கால்களோ தரையில் பாவவில்லை; வெடவெடவென்று நடனமாடிக் கொண்டிருந்தன. தலை மயிரோ மட்டை நாரெனப் பரட்டையாகப் பரந்து விரிந்திருந்தது. கண்களில் மட்டும் அசாத்தியப் பேரொளி!

"அம்மா, தாயே"

அவள் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவனோ தன்னுடைய காரியத்திலேயே கண்ணாயிருந்தான். கிழவர் - கிழவியைத் தலை உயர்த்திக்கூடப் பார்க்கவில்லை.

"என்ன?"

அவள் வாய் திறந்து கேட்கவில்லை; முகம் மட்டும் கேள்விக்குறியை எழுப்பியது.

"நெடுந்தூரத்திலிருந்து நாங்கள் வருகிறோம், அம்மா!"

"அதற்கென்ன!"

வாய் கேள்வியை உதிர்க்கவில்லை; விழிகளே உதிர்த்தன.

"தாகம் தாங்க முடியவில்லை. நாவறட்சி உயிர் போகிறது. கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் தரமுடியுமா?"

அப்பொழுது அவளுக்கு இருந்த மனநிலை எழுந்து சென்று நீர் எடுத்துவர இசையவில்லை. கணவனது உயிர் ஊசலாடுகிறது. அவனோடு தன்னுயிரையும் மாய்த்துக்கொள்வதென்று தீர்மானித்துவிட்ட அவளுக்கு, யார் உயிர் போனால் என்ன? இருந்தால் என்ன? உலகமே வெறுத்துவிட்ட பின் அவள் யாரை லட்சியம் செய்ய வேண்டும்?

"இங்கே எங்கள் உயிரும்தான் போகிறது. இது தண்ணீர்ப் பந்தலோ தர்ம சத்திரமோ இல்லை. வழியில் போகிறவர்களுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருப்பதற்கு! போங்கள், போங்கள்" என்று உள்ளத்தோடு சேர்ந்து வாயும் வெறுப்பை உமிழ்ந்தது.

"சிவகாம சுந்தரியாகத் திகழும் நீ இப்படி அலுத்துக் கொள்ளலாமா? ஆத்திரப்படலாமா? குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடு, அம்மா! கோடிப் புண்ணியமுண்டு" என்று கிழவி கெஞ்சினாள். .

"புண்ணியமும் ஆயிற்று. பாவமும் ஆயிற்று! இங்கு விட்டுப் போகிறீர்களா, இல்லையா?" எரிந்து விழுந்தாள் சிவகாமி,

"ஆண் பிள்ளை பிறக்கும், அம்மா!" கிழவர் கிடைக்கப்போகும் தண்ணீருக்காக முன்கூட்டியே ஆசீர்வதித்தார்.

"நாளை பொழுது விடிவதற்கு முன்பாக உயிர் போகப்போகிறது. ஆண் பிள்ளைக் குழந்தை பிறக்குமாம்! ஆசீர்வாதத்தைப் பார், ஆசீர்வாதத்தை! இன்னமும் நின்று கொண்டிருந்தீர்களானால், மழுவை எடுத்து ஊற்றுவேன்"

"மழுவா? அது என்ன அம்மா?"

"அதோ உலையில் கொதித்துக் கொண்டிருக்கிறது பாருங்கள், அதுதான்! தரட்டுமா இரண்டு கரண்டி!" ஆத்திரம் குமுறச் சீறினாள் சிவகாமி.

"கொடேன்! எதுவாயிருந்தால் என்ன? தாகம் தணித்தால் சரி" என்றாள் கிழவி.

சிவகாமிக்கு வந்த ஆத்திரத்தில் முன்னும் யோசிக்கவில்லை, பின்னும் யோசிக்கவில்லை. மடமடவென்று அகப்பை அகப்பையாக மொண்டு கிழவர், கிழவியின் கைகளில் ஊற்றினாள், "இன்னும் வேண்டுமா? இன்னும் வேண்டுமா?" என்று வெறி பிடித்தவள் போலக் கேட்டாள். கொதிக்கும் மழுவைக் கிழவரும் கிழவியும் எப்படித்தான் பருகுவார்கள்? இந்த நினைப்பே அவளுக்கு எழவில்லை. ஆசை தீரப் பருகட்டும் என்று ஆத்திரம் தீரக் கொட்டினாள்.

"அட! இதென்ன இது? மழுவைக் குடித்த கிழவரும் கிழவியும் விக்கிரகமாக மாறுகிறார்களே! அதோ, கிழவரது பரட்டைத்தலை விரித்த செஞ்சடையாக மாறி விட்டதே! தரையில் கால் பாவாமல் நர்த்தனம் புரிந்து கொண்டிருந்த காலோடு தோன்றிய கிழவர், நர்த்தன சுந்தர நடராஜனாக உருப்பெற்று விட்டாரே! கிழவி...? சிவகாமசுந்தரியாகச் சமைந்து விட்டாளே!"

சிவகாமி காண்பது என்ன, கனவா?

"சிவகாமி! சிவகாமி!"

மகிழ்ச்சி பொங்கும் குரலில் சாம்பமூர்த்தி உரக்கக் கூவுவதைக் கேட்ட சிவகாமி கண்களைக் கசக்கிக்கொண்டு திறந்து பார்த்தாள்.

எதிரே மனித ஆகிருதியில் சிவகாமிப் பிரிய நடராஜன் கலைக்கூத்தனாக நர்த்தனமாடிக் கொண்டிருந்தான். அருகில் அடக்கமே உருவாகச் சிவகாம சுந்தரி நின்று கொண்டிருந்தாள்.

அவள் மழுவூற்றித் தாகவிடாய் தீர்த்து வைத்த கிழவரும் கிழவியும் எங்கே? சுற்றுமுற்றும் பார்த்தவளின் பார்வை மீண்டும் விக்கிரகங்களில் லயித்தது. இரண்டு உயிர்கள் அவற்றுள் புகுந்து விக்கிரகச் சிலைகளை உயிர்ச் சிலைகளாக ஆக்குவதைக் கண்டாள். மறுகணமே, தன் மணாளனின் பக்கம் திரும்பி, "போங்கள், போங்கள்! உடனே ஓடிப் போய் உங்களைத் துன்புறுத்தினாரே, அந்த மன்னரை அழைத்து வந்து உயிர்ச் சிலைகளாகத் திகழும் இந்த நடராஜர், சிவகாமியின் விக்கிரகங்களைக் காட்டுங்கள். கண்டு களிக்கட்டும்!" என்று துரிதப்படுத்தினாள்.

அந்தியும் சந்தியும் கூடும் அந்தப் பிரதோஷ வேளையிலே மன்னருக்கு மகிழ்ச்சிகரமான செய்தியைத் தெரிவிப்பதற்காக ஓடினான் சாம்பமூர்த்தி ஸ்தபதி.

மன்னர் அப்பொழுதுதான் நெற்றியிலே விபூதி அணிந்து, தமது பட்டமகிஷியுடன் ஆண்டவன் தரிசனத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இரண்டடி எடுத்து வைத்தவர் ஏதோ மார்பை வலிக்கிறது என்று கூறி மஞ்சத்தில் அமர்ந்தார். அதே சமயம், சாம்பமூர்த்தி ஸ்தபதி தம்மைக் காண வந்திருக்கிறான் என்னும் செய்தி அவருக்குப் போயிற்று. உடல் கோளாறு ஏற்பட்டிருந்த அந்த வேளையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அவனைத் தம் அறைக்கு வர அனுமதித்தார் மன்னர். சிவகாமியின் விக்கிரகமும், நடராஜனின் விக்கிரகமும் அழகுறச் சமைந்து கலைத் தெய்வமாகத் திகழ்வதை வர்ணித்தான் சாம்பமூர்த்தி. தரிசனத்துக்குத் தன்னோடு உடனே வருமாறும் வேண்டினான்.

அவன் வர்ணிக்கும் அந்த வேளையிலேயே மன்னரின் மன அரங்கிலே சித் சபை உருவாகியது. ஆனந்த நர்த்தனம் புரியும் ஐயன், அபிராம சுந்தரியான சிவகாமசுந்தரியோடு கலைஞன் உருவாக்கிய வண்ணமே மனித ஆகிருதியில் காட்சியளித்தான். மன்னர் இறுகக் கண்களைப் பொத்திக்கொண்டு அந்தக் காட்சியை அப்படியே மனத்தில் பதித்துக் கொள்ள முயன்றார். அப்புறம் அவரது மூடிய கண்கள் திறக்கவே இல்லை. தில்லை வெளியில் கலந்து கொண்டால் அவர் திரும்பியும் வருவாரோ?

உண்மைக் கலைஞனின் உயிர்ப்படைப்பு கலைச் சிகரத்தின் உச்சத்தை அடைந்துவிட்டால், அத்துடன் தெய்வத்தையும், தெய்வத்தின் செயலையும் இணைத்துக் கூறுவது பாரதத்தின் பண்டைய காலத்துக் கலைமரபு. உண்மையில், உயர்ந்த கற்பனையைச் சிறப்பான சுலைப்பொருளாகக் கலைஞன் படைத்துவிட்டால், அவனே தெய்வமாகி விடுகிறான். தெய்வமே அவனாக, அவனது கலைப்பொருளாகப் பரிணமித்து விடுகிறது. கலைஞனுக்கும், கலைஞன் படைத்த தெய்வத்துக்கும், தெய்வம் படைத்த கலைஞனுக்கும் அப்புறம் வேற்றுமை இருப்பதில்லை.

'ஸ்வாயம்புவ மூர்த்தி' அதாவது தாமாகவே உற்பத்தியானவர் என்று கூறப்படும் கலைஞனின் உயர் கற்பனையான இந்த நடராஜப் பெருமான், மனித ஆகிருதியில் இன்றும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோனேரிராஜபுரத்தில் காட்சி தருகிறார், தெய்வக் கலைஞனின் கலைத்திறனுக்கு அத்தாட்சியாக; தெய்வமாக்கிய தெய்வமாக.

ரா. வீழிநாதன்

© TamilOnline.com