எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் திறம்படச் செயல்பட்டவர் ரா. வீழிநாதன். 1920 மே 15 அன்று தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகில் விஷ்ணுபுரத்தில் பிறந்தார். அருகிலுள்ள புகழ்வாய்ந்த தலம் திருவீழிமிழலை. அத்தலத்து இறைவன் பெயரான வீழிநாதன் என்ற பெயரை பெற்றோர் இவருக்குச் சூட்டினர். தமிழோடு இளவயதிலேயே ஹிந்தி, சம்ஸ்கிருதம் இரண்டும் நன்கு கற்றுத் தேர்ந்தார். ஹிந்தி ராஷ்டிரபாஷா தேர்வில் தென்னாட்டிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்றார். இளவயதிலேயே அக்காள் மகள் தவளாம்பாளுடன் திருமணம் நடந்தது. ஹிந்தி பிரசார சபையில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின் வீழிநாதன் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, நேஷனல் கல்லூரி, ஹோலிகிராஸ் கல்லூரி ஆகியவற்றில் ஹிந்தி விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
காந்தியக் கொள்கைகள் இவரை ஈர்த்தன. கதர் மட்டுமே அணிவதைத் தனது வழக்கமாகக் கொண்டார். ஓய்வுநேரத்தில் வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கி.வா.ஜ., கல்கி, ராஜாஜி ஆகியோர் இவரது மனங்கவர்ந்த எழுத்தாளர்கள். இவரது பன்மொழிப் புலமையும் தொடர்வாசிப்பும் இவரை எழுதத் தூண்டின. முதல் சிறுகதை 'ரயில் பிரயாணம்' 1942ல் 'கலைமகள்' இதழில் வெளியானது. இவரது ஆதர்ச எழுத்தாளரான கல்கி நடத்திவந்த 'கல்கி' இதழுக்குச் சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பினார். கல்கி இவரது சிறுகதையைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். தொடர்ந்து 'கல்கி', 'காவேரி', 'சுதேசமித்திரன்', 'பிரசண்ட விகடன்', 'நவசக்தி', 'சிவாஜி', 'ஹிந்துஸ்தான்', 'தமிழ்நாடு', 'சாவி', 'மஞ்சரி', 'ஆனந்த விகடன்', 'தினமணி கதிர்' போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின. ஹிந்தி பிரசார சபை நடத்தி வந்த 'ஹிந்தி பத்ரிகா' இதழில் இவர் தனது பங்களிப்பைத் தொடர்ந்தார். சென்னையில் நடந்த இந்தி பிரசார சபா வெள்ளிவிழாவுக்கு காந்திஜி வருகைதந்து சிறப்பித்தார். வெள்ளிவிழா மலரை வெளியிட்டு வாழ்த்தினார். இவரது திறமையை அறிந்த கல்கி கிருஷ்ணமூர்த்தி, 'கல்கி' இதழில் இவரைத் துணையாசிரியராகச் சேர்த்துக் கொண்டார். வீழிநாதனின் வாழ்வில் அது ஒரு திருப்புமுனை. அவருக்கு ஹிந்தி நன்கு தெரியும் என்பதால், எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்து ஹிந்தியில் தயாரான 'மீரா' படத்திற்கு வசன மேற்பார்வைப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. கூடவே எம்.எஸ். அம்மாவுக்கு ஹிந்தி வசனம் மற்றும் உச்சரிப்பைச் சொல்லிக்கொடுக்கும் பணியும் அளிக்கப்பட்டது.
கல்கியே இவரது மொழிபெயர்ப்புப் பணிக்குத் தூண்டுகோலாக இருந்தார். இவரது பன்மொழிப் புலமையை அறிந்த அவர், புகழ்பெற்ற ஹிந்தி மற்றும் பிறமொழிப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ஊக்குவித்தார். அவற்றை வாரந்தோறும் கல்கியில் வெளியிட்டார். இதுபற்றி வீழிநாதன், "'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்னும் நந்தமிழ் நாட்டு மகாகவி பாரதியின் இவ்வருள் வாக்கைப் பின்பற்றி நடக்கும் பேறு எனக்கு இளம்பிராயம் முதற்கொண்டே கிடைத்தது. இத்துறையில் உற்சாகமும் ஊக்கமும் ஊட்டி என்னை இறங்கப் பணித்தவர் பேராசிரியர் கல்கி. ஆனால் எனக்கு ஒரு குறை. நம்மைச் சொந்தமாக எழுதவிடாமல் இப்படி மொழிபெயர்க்கப் பணிக்கிறாரே என்று. என் அகத்தின் கருத்தை ஒருநாள் என் முகமே அவரெதிரே எடுத்துக்காட்டிவிட்டது. அன்பு கலந்த முறுவலுடன் அவர் மகாகவி பாரதியின் வாக்கை மேற்கோளாகச் சுட்டிக்காட்டிச் சொன்னார். 'பாரதியின் இந்த வாக்கை நிறைவேற்றப் பல அன்பர்கள் முன்வந்தால்தானே நம் தமிழ் இலக்கியம் வளமுறும்? அறிஞர் வெ. சாமிநாத சர்மா, த.நா. குமாரசாமி போன்றவர்கள், பேரறிஞர்களின் சாத்திரங்களைத் தமிழில் தரவில்லையா? மொழிபெயர்ப்பு என்பது ஓர் அருங்கலை. அதைக் குறைவாக எண்ணாதே. நிறைவாக எண்ணி இப்பணியில் இறங்கு. அவையே உனக்குப் பெரும்புகழ் தேடித்தரும். வெவ்வேறு ஆசிரியர்களின் கருத்தைப் புரிந்துகொண்டு, நடையைப் புரிந்து கொண்டு அவற்றுக்கேற்பத் தமிழ்ப்படுத்துவதில் உள்ள சிரமத்தை நான் நன்கு உணர்வேன். இக்காரியத்தில் நீ வெற்றி கண்டு விட்டாயானால் நீ சொந்தமாக எழுதும்போது, அவ்வாசிரியர்கள் அனைவரும் படைப்புலகில் நின்றுகொண்டு உனக்குக் கைகொடுத்து உதவுவார்கள். உனது எழுத்தும் மெருகு ஏறிச் சோபையுறும், உன் நலனில் அக்கறை கொண்டே இதை நான் சொல்கிறேன்.' அவரது இந்த அருமையான உபதேசமே பல நவீனங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பை எனக்கு அளித்தது" என்கிறார்.
ஆர்வத்தால் உருது, குஜராத்தி, கன்னடம், பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார் வீழிநாதன். அவை இவரது மொழிபெயர்ப்புப் பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. கமல் ஜோஷி, பிரேம்சந்த், சுதர்சன், காளிந்திசரண் பாணிக்ராஹி, தாராசங்கர் பானர்ஜி, விமல்மித்ரா, கே.ஏம். முன்ஷி, விபூதிபூஷண் முகோபாத்யாயா, பரசுராம், நரேந்திரநாத் மித்ரா, பீதாந்த பட்டேல், பகவதி சரண் ஷர்மா, ராம்லால், குல்ஷன் நந்தா, வசந்தலால் தேசாய் போன்ற புகழ்பெற்ற இந்தி, வங்காளி, குஜராத்தி, ஒரிய மொழிப் படைப்பாளிகளின் படைப்புகளைத் தமிழில் தந்துள்ளார் வீழிநாதன். 'கதா பஞ்சாப்' என்ற நூல் 'பஞ்சாபிக் கதைகள்' என்ற பெயரிலும் 'உர்து கஹானியான்' என்ற சிறுகதைத் தொகுப்பு 'உர்தூக் கதைகள்' என்ற தலைப்பிலும் வீழிநாதன் மொழிபெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக வெளிவந்துள்ளன.
ரா. வீழிநாதன் படைப்புகள் சிறுகதைகள்: ரயில் பிரயாணம், சோலைக்கிளி, ஒண்டிக்குடித்தனம், சம்மதந்தானா, விராலிமலை வீரப்பன், கொம்புவானம், எதிர்பாராத உதவி, சியாமளாவின் சந்தேகம், மௌனவிரதம், திரும்பி வருமா, மாஜி கைதி, அன்பின் அலைகள், புதுக்கணக்கு, பிறவி நடிகர், நிபந்தனை, தலைவலிக்கொரு மாத்திரை, ரஞ்சிதத்தின் ராசி, ஆத்ம திருப்தி, அவள் தெய்வம், சிலை சொல்லாத கதை, சிதம்பர ரகசியம், கண்டியூர் கந்தசாமி, கல் இழைத்த மோதிரம் என இருநூற்றுக்கும் மேல். மொழிபெயர்ப்புகள் (ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் இருந்து): இரு நண்பர்கள் (சுதர்சன்), சித்ரலேகா (சுதர்சன்), மண்பொம்மை (காளிந்திசரண் பாணிக்ராஹி), குலப்பெருமை (கே.எம். முன்ஷி) கற்பனையும் காரிகையும், நிழலும் வெயிலும், உள்ளத்தரசி, நர்ஸ் நிர்மலா, ஓடும் ரயிலில், நாலாம்பிறை, இடைக்கால மனைவி, ஸ்டேஷன் மாஸ்டர், வினோத விருந்து, சுதந்திரக்கோயில், தோல்வியில் வெற்றி, பழைய வேலைக்காரன், உயிர்ப்பிச்சை, பிரமன் படைப்பிலே, ஆயிரத்தொரு கவிஞர்கள், ஊர்வலம், உள்ளம் கவர்ந்தவள், மூன்று குடும்பங்கள், மூன்று முடிச்சுகள், இழந்த நாணயம், மூன்றாவது ஆட்டம், அந்தரங்கக் காரியதரிசி, ஜன்னல், பயங்கர ஆயுதம், கல்லும் கனியும், மனைவி, கல் கரைந்தது, முள்ளும் மலையும், பழையனூர்ப்பித்தன் எனப் பல. மொழிபெயர்ப்புகள் (தமிழிலிருந்து ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளுக்கு): சோலைமலை கி ராஜகுமாரி (கல்கியின் 'சோலை மலை இளவரசி'), பார்த்திவ் கா சப்னா (கல்கியின் 'பார்த்திபன் கனவு'), லஹரோன் கி அவாஜ் (கல்கியின் 'அலையோசை'), பாஹர் கா ஆத்மி (ஜெகசிற்பியனின் ஜீவகீதம்), ஹிருதய நாத் (என். சிதம்பர சுப்பிரமணியனின் 'இதயகீதம்'), 'கசோட்டி' (பி.எஸ். ராமையாவின் 'பதச்சோறு'), 'ய கலி பிகாவ் நஹீன்' (நா. பார்த்தசாரதியின் 'சமுதாய வீதி'), 'ஜெய ஜெய சங்கர' (ஜெயகாந்தன்), 'பஜகோவிந்தம்' (ராஜாஜி), 'வடிவேலு வாத்தியார்' (தி. ஜானகிராமன்) எனப் பல நூல்கள். கட்டுரை நூல்கள்: 'காசி யாத்திரை', 'சுலப இந்தி போதினி', 'வாணி இந்தி போதினி', 'இந்தி கற்றுக்கொள்ளுங்கள்' மற்றும் பல.
அதுபோலவே தமிழிலிருந்தும் ஹிந்திக்குப் பல சிறுகதைகளை மொழிபெயர்த்துள்ளார். கல்கி, புதுமைப்பித்தன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், அசோகமித்திரன், கி.வா.ஜ., கி.ரா., எம்.வி. வெங்கட்ராம், பி.எஸ். ராமையா போன்றோரின் சிறுகதைகள் வீழிநாதனால் ஹிந்திக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. அவை, 'ராஷ்ட்டி பாரதி', 'தர்மயுக்', 'ஆஜ்', 'ஆஜ்கல்', 'நவபாரத் டைம்ஸ்', 'சப்தாஹிக் இந்துஸ்தான்', 'நவநீத்', 'சாரிகா', 'சரிதா' 'காதம்பரி', 'கல்பனா' போன்ற இதழ்களில் வெளியாகின. 'இரு நண்பர்கள்', 'பாதுஷாவின் காதல்', 'அருவிக்கரை ஆஸ்ரமம்', 'சித்ரலேகா', 'மனோரமா', 'கோகிலா', 'சந்திரஹாரம்' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகளாகும். விஸ்வம்பரநாத் ஷர்மா கௌசிக்கின், 'பிகாரிணி' என்ற நாவல், இவரால் மொழிபெயர்க்கப்பட்டு, 1968ல் சாண்டில்யன் முன்னுரையுடன் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தால் 'யசோதரா; என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
காசித் தலத்தின் பெருமையை, சிறப்பை, மாண்பை மிக விரிவாக விளக்கி இவர் எழுதியிருக்கும் 'காசி யாத்திரை' நூல் இவரது மேதைமைக்குச் சான்று. குழந்தைகளுக்காகவும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். அவை கோகுலம், பூந்தளிர், மஞ்சரி, தினமணி கதிர் எனப் பல இதழ்களில் வெளியாகியுள்ளன. சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், தொடர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார் வீழிநாதன்.
மொழிபெயர்ப்பில் மிக மிகத் தேர்ந்தவர் வீழிநாதன். இவரது மேதைமையை அறிந்த 'சாஹித்ய அகாதமி', 'நேஷனல் புக் டிரஸ்ட்' போன்ற நிறுவனங்கள் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டன. தமிழ் - ஹிந்தி, ஹிந்தி - தமிழ் என இருவழி இணைப்புப் பாலமாக இவர் திகழ்ந்தார். மொழிபெயர்ப்புப் பற்றி இவர், "மொழிபெயர்ப்பாளன் இரு மொழிகளிலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். சொல்வளம் கொண்டவனாக இருக்கவேண்டும். அதோடு சொற்களின் உயிர்நாடியை உணர்ந்திருப்பவனாகவும் இருக்க வேண்டும். மூல ஆசிரியன் தன் சக்திக்கு ஏற்ப அறிவாற்றலைக் காட்டுகிறான். கற்பனைச் சிறகு கட்டிக்கொண்டு பறக்கிறான். மொழிபெயர்ப்பாளன் மூல நூலாசிரியனுக்கும் ஒரு படி மேலே நின்றால்தான் வெற்றிபெற முடிகிறது. இப்படி இரட்டிப்புப் பொறுப்புக் கொண்ட அவன், கலையுலகில் இரண்டாந்தரக் குடிமகனாகவே கருதப்படுகிறான்" என்கிறார்.
வீழிநாதனின் மொழிபெயர்ப்புத் திறமை பற்றி வெ. சாமிநாத சர்மா, "சிலர் நினைக்கிறார்கள், மொழிபெயர்ப்பென்பது சுலபமான காரியமென்று. இல்லவே இல்லை. அது கடினமான சாதனை. இந்தக் கடினமான சாதனையில் ஸ்ரீ ரா. வீழிநாதன் வெற்றி பெற்றிருக்கிறார். ஸ்ரீ வீழிநாதன் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் புலமை நிறைந்தவர். இந்தப் புலமையை தமிழுக்கும் பிறமொழிகளுக்குமிடையே ஒரு பாலமாக அவர் அமைத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இதற்காக அவரைப் பாராட்டுகிறேன். இலக்கிய உலகத்தில் அவர் அமரவாழ்வு பெற வேண்டும் என்று சொல்லி என் மனமார வாழ்த்துகிறேன்" என்கிறார்.
அக்ஷயம், ராவீ, கிருத்திவாஸ், விஷ்ணு, குறும்பன், மாரீசன், ராமயோகி, ராமகுமார் போன்ற பல புனைபெயர்களிலும் நிறைய கதை, கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சென்னை, டில்லி, லக்னோ, நாக்பூர் போன்ற அகில இந்திய வானொலி நிலையங்களில் பல்வேறு இலக்கிய உரைகளை நிகழ்த்திய ஒரே தமிழ் எழுத்தாளர் வீழிநாதன்தான். இவருக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 1962ல் தங்கப்பதக்கம் வழங்கியது. கல்கியின் 'அலை ஓசை' நாவலை ஹிந்தியில் தந்தமைக்காக, சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதினை, இந்திய அரசின் கல்வி மற்றும் சமூகநலத் துறை வழங்கிச் சிறப்பித்தது. வித்வான் சுந்தர கிருஷ்ணமாச்சார்யா அறக்கட்டளைப் பரிசு, சென்னை ஹிந்திப் பிரச்சாரச் சங்கம் வழங்கிய 'சன்மான்' பரிசு உள்பட பல பரிசுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். உத்திரப்பிரதேச ஹிந்தி சம்ஸ்தான் விழாவில் ரூ. 10,000 பரிசும், 'சௌஹர்தா சம்மான்' விருதும் வழங்கி இவர் சிறப்பிக்கப்பட்டார்.
கல்கியில் 31 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர். காஞ்சிப் பெரியவரின் கட்டளையை ஏற்று, அவர் ஆசீர்வதித்த 'அமரபாரதி' மாத இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. சுமார் 12 வருடங்கள் அவ்விதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும்கூட அவரது இந்தப் பணி தொடர்ந்தது. 75வது வயதில் காலமானார் வீழிநாதன்.
2020ம் ஆண்டு அவரது நூற்றாண்டு. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப்பணி புரிந்த வீழிநாதன், இலக்கிய வாசகர்கள் என்றும் நினைவில் வைக்க வேண்டிய ஒரு முன்னோடி எழுத்தாளர்.
அரவிந்த் |