அரங்கேற்றம்: மாயா கன்வர்
ஆகஸ்ட் 7, 2021 அன்று ஃபிலடெல்ஃபியா, நியூட்டன் மிடில் ஸ்கூலில் குமாரி மாயா கன்வரின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

ஹம்ஸத்வனி ராகத்தில் "வாரண முகவா" என்ற பாடலில் தொடங்கி, பின்னர் ஆரபி ராகத்தில் "ஓங்கி உலகளந்த" என்ற ஆண்டாள் பாசுரத்தைப் பாடினார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருப்பினும் தமது தாய்மொழியாம் தமிழை வெகு அழகாக உச்சரித்தார் மாயா. பிறகு முறையே சமஸ்கிருதம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் சிறப்பாகப் பாடினார். கச்சேரிகளில் அதிகம் பாடப்படாத குமுதக்ரியா என்ற ராகத்தில் "அர்த்தநாரீஸ்வரம்" என்ற சமஸ்க்ருதப் பாடலை நேர்த்தியாகக் கையாண்டார்.



விழாவை ஒருங்கிணைத்த குமாரி. சஞ்சனா கன்வர் மற்றும் குமாரி. அக்ஷரா ஸம்ஸ்க்ருதி ஐயர் ஒவ்வொரு பாடலுக்கும் முன்னர் பாடலைப் பற்றிய செறிவான வர்ணனையை வழங்கினர்.



மாயா கன்வர் தமது பள்ளிப் படிப்பை முடித்துத் தற்போது கார்னெல் பல்கலைக் கழகத்தில் குளோபல் ஹெல்த் துறையில் இளநிலைப் படிப்பைத் துவக்க இருக்கிறார்.

குரு திருமதி. கிரணாவல்லி வித்யாசங்கர் இளவயது முதலே கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றுக் கச்சேரிகள் செய்து வருவதுடன், இளையோருக்கும் பயில்விக்கிறார். ஃபிலடெல்ஃபியாவின் பல்கலைக்கழகங்களில் இசை வல்லமைக்கு வரவேற்பும் பாராட்டுகளும் பெற்றுள்ளார். மிச்சிகன்வாழ் மிருதங்க வித்வான் திரு. வினோத் சீதாராமன், பக்குவமான கம்பீர நடையில் தாள வாத்தியத்தில் உறுதுணையாக இருந்தார். இளங்கலைஞர் திரு. பார்கவ தும்குரு வயலினில் சேர்ந்து மிளிர்ந்தார். இருவரின் தனி ஆவர்த்தனங்களும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.



மாயா கன்வர் பத்மஸ்ரீ கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கொள்ளுப் பேத்தி என்பது சிறப்புச் செய்தி.

திருமதி. காந்தி சுந்தர்,
மிச்சிகன்

© TamilOnline.com