"புத்தகங்களோடு புதிய விடியல்" தொடர் கண்காட்சி
அட்லாண்டா
ஜூலை 24, 2021 ஜியார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா மாநகரப் புறநகர்ப் பகுதியான கம்மிங் நகரில் அமைந்திருக்கும் பௌலர் பார்க்கில் ஒரு சிறப்பான தமிழ் நூல் கண்காட்சி நடைபெற்றது.

"பாதங்களை நகர்த்தாமல் உலகெங்கும் பயணப்பட வைப்பவை", என்று அமெரிக்க எழுத்தாளர் ஜூம்பா லஹிரி சொல்லும் நூல்கள், மேசைகளில் என்னை வாங்கி வாசியுங்கள் என்பது போல அழைத்துக் கொண்டிருந்தன. இந்தியா, இலங்கை, சுவீடன், கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, என்று பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள்! அமெரிக்காவில் (முதன்முறையாக!) தமிழ் நூல் கண்காட்சி அட்லாண்டாவில். வல்லினச் சிறகுகள் மின்னிதழ்; உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா; ஒருதுளிக்கவிதை, புதுச்சேரி; இவர்களுடன் இணைந்து அட்லாண்டா தமிழ் நூலகம் இந்த நூல் கண்காட்சியைச் சிறப்பாக நடத்தியது.

முனைவர் திருமிகு அமிர்தகணேசன் அவர்களின் முன்னெடுப்பு மற்றும் வழிநடத்துதலில், திருமிகு ராஜி ராமச்சந்திரன் அவர்களின் திட்டமிடலில், கண்காட்சிப் பணிகள் அருமையாகச் செய்யப்பட்டன. இந்தியாவில் இருந்து நூல்களைப் பெற்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்ததில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் கவிஞர் மஞ்சு முக்கியப் பங்காற்றினார். அட்லாண்டா தமிழ் நூலக நிறுவனர் திருமிகு பொன்னி சின்னமுத்து, வல்லினச் சிறகுகள் மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவையின் ராஜி ராமச்சந்திரன் மற்றும் கிரேஸ் பிரதிபா, தமிழ் நூலகத் தன்னார்வலர்கள் விஜயப்ரியா, ஐஸ்வர்யா, நதியா, வளர், கிருபா, பாரதி, கார்த்திகா மற்றும் மாணவர்கள் நிலா, வெண்பா, நிக்கில், நிதிலன், திபேஷ் என்று அனைவரும் இணைந்து ஒரு குழு முயற்சியாக நூல்களை அழகாகப் பிரித்து அடுக்கினர். சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை, சிறுவர் இலக்கியம், சிறுவர்க்கான காட்சி அட்டைகள், வரலாற்று நூல்கள், என்று பல வகையான நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுடைய நூல்கள் ஒரு மேசை முழுவதும் இடம்பெற்றிருந்தன.

கண்காட்சி நடைபெற்ற அன்று காலையில் சிறப்பு விருந்தினர்கள் திருவாளர்கள் முனைவர் உதயகுமார், குமரேஷ், பெரியண்ணன் சந்திரசேகரன், இராம்மோகன், செல்வகுமார் மற்றும் கண்ணப்பன் ரிப்பன் வெட்டிக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். திருமிகு. அமிர்தகணேசன் சிறப்புரையாற்றினார். தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சியில் நூல் கண்காட்சியில் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி குறித்த ஒரு கலந்துரையாடல் தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒரு வாரம் முன்பாகவே நடத்தப்பட்டது. கண்காட்சிக் குழுவினருடன் திருமிகு. ஜெயா மாறன் அதனைச் சிறப்பாக நடத்தியிருந்தார்.



வட கரோலினா
அடுத்து வட கரோலினா தமிழ்ச்சங்கம், தமிழ் கலாச்சார சங்கம், கேரி வாசகர் வட்டம், கேரி தமிழ்ப்பள்ளி ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன், கேரி, வட கரோலினாவில் ஜூலை 31, 2021 அன்று தாமஸ் ப்ரூக்ஸ் பூங்காவில் நடைபெற்றது. திருமிகு. நவீன் பாஸ்கரனின் வரவேற்புரை மற்றும் திருமிகு. பொன்னியின் சிறப்புரையுடன் கண்காட்சி தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற திருவாளர்கள் மணிவண்ணன், மோகன் வைரக்கண்ணு, பாலா, ஜெயந்தி ராஜகோபாலன், சரயு முரளிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தன்னார்வலர்கள் இல்லாமல் இந்நிகழ்ச்சியில்லை: பிரவீன், ப்ரித்வி, கிருபா, ஜீவா, ஜெயகண்ணன், ரமேஷ், சேத்தன், தீபிகா, செந்தில், லாவண்யா ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கக் கரம்கொடுத்தனர்.

இவ்விரு இடங்களிலும், தமிழ்ப் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று பலரும் வந்து நூல்களை வாங்கினர். வாசகர்களின் விருப்ப நூல்களும் ஒரு பதிவேட்டில் பதியச் சொல்லிப் பெறப்பட்டன. குலுக்கல் முறையில் பரிசாக நூல்கள் வழங்கப்பட்டன. நூல் விற்பனையின் ஒரு பகுதி கொரோனா நிதிக்காக அளிக்கப்படும் என்று தெரிகிறது.

கேரியைத் தொடர்ந்து, ஆகஸ்டு 14ஆம் நாள், வட கரோலினா சார்லட்டில் நூல் கண்காட்சி நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன. திருமிகு.ரம்யா ரவீந்திரன் அவர்கள் இதனை ஒருங்கிணைத்து வருகிறார். வல்லினச் சிறகுகள் நடத்திய மரு. அம்பிகாதேவி நினைவு போட்டியில் வெற்றிபெற்ற கவிதைத் தொகுப்புகளும் வெற்றிப்பரிசாக, அச்சு நூல்களாக இக்கண்காட்சியில் வெளியிடப்பட இருக்கின்றன.

"மிகுதியாக வாசிக்க வாசிக்க மிகுதியாக அறிந்து கொள்வீர்கள். மிகுதியாகக் கற்கக் கற்க மிகுதியான இடங்களுக்குச் செல்வீர்கள்." – Dr. சியூஸ், குழந்தைகள் மனங்களைக் கொள்ளைகொண்ட அமெரிக்க எழுத்தாளர்.

வி. கிரேஸ் பிரதிபா,
அட்லாண்டா, அமெரிக்கா

© TamilOnline.com