அரசுசார் அமைப்புகளால் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இது ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ. முத்துசாமி, ராஜ் கௌதமன், கவிஞர் அபி, சுரேஷ்குமார இந்திரஜித் போன்றோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். 2021ம் ஆண்டுக்கான விருதைப் பெறுகிறார் கவிஞர் விக்ரமாதித்யன்.
நம்பிராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட விக்ரமாதித்யன், தமிழின் மூத்த கவிஞர்களுள் ஒருவர். செப்டம்பர் 25, 1947ல் நெல்லையில் பிறந்தவர். பத்திரிகையாளர் உள்பட பல்வேறு பணிகளைச் செய்து பின் முழுமையாகவே கவிதைக்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்கிறார். 40 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருபவர். 'ஊரும் காலம்', 'உள்வாங்கும் உலகம்', 'எழுத்து சொல் பொருள்', 'திருஉத்தரகோசமங்கை', 'பாதி இருட்டு பாதி வெளிச்சம்', 'ஆதி', 'கல் தூங்கும் நேரம்', 'வீடுதிரும்புதல்', 'தேவதைகள்-பெருந்தேவி-மோகினிப்பிசாசு' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த கவிதைத் தொகுப்புகளாகும். சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.
விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், கேடயமும், கொண்டது. பரிசு பெறுபவர் பற்றிய விரிவான ஆவணப் படத்துடன் அவரது வாழ்க்கை, படைப்பு பற்றிய புத்தகங்களும் வெளியிடப்படுவது இந்த விருதின் சிறப்பு. |