தமிழில் முற்போக்கு இடதுசாரிக் கருத்துநிலை சார்ந்த இலக்கிய உருவாக்கத்தில் 1950-களின் நடுப்பகுதியில் ஒரு வேகம் ஏற்பட்டது. கதைமரபில், கதைக்களத்தில், வெவ்வாறான மனிதஅனுபவங்கள், வாழ்நிலைகள், முரண்கள், மனிதர்கள் யாவும் விரிவாகப் பேசப்பட்டன. இலக்கிய உலகம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் பேசின. எதார்த்தம் கூர்மைப்படுத்தப்பட்டது.
இவ்வாறு எழுதத் தொடங்கிய எழுத்தாளர் அணியில் குறிப்பிடத்தக்க ஒருவர் தான் டி. செல்வராஜ். இவர் திருநெல்வேலி அருகே மாவடி என்ற கிராமத்தில் 1935இல் பிறந்தார்.
இவர் தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டக் குடியிருப்புக்கு நெல்லை மாவட்டக் கிராமங்களில் இருந்து குடிபெயர்ந்த ஒரு கங்காணிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
டி. செல்வராஜ் அந்தத் தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஆங்கிலப் பாட சாலையில் பத்தாவது வரை படித்தார். பின்னர் இவர் மேல்படிப்புக்காக மதுரை சென்றார். மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த இவருக்கு மதுரை புதிய அனுபவமாக இருந்தது. கல்லூரி நூலகம் இவரது பார்வைக்கும் தேடலுக்கும் புதிய சாளரங்களைத் திறந்துவிட்டது.
கல்லூரியில் இவரது சகமாணவர்களாக இருந்த சேதுராமன், திருவரங்கன், நம்பி ஆகியோருடன் ஒவியர் இசக்கி போன்றவர்களின் நட்பு ஏற்பட்டது. இதன் மூலம் கலை இலக்கியம் பற்றிய அக்கறையும் தேடலும் முனைப்புற்றது. அப்போது நெல்லையில் ஆரம்பிக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதில் உறுப்பினராகவும் சேர்ந்தார். டி. செல்வராஜ் முற்போக்கு இடதுசாரி இலக்கியத்துடன் தன்னைக் கரைத்துக் கொள்ளத் தொடங்கினார்.
அண்ணாச்சி சண்முகம்பிள்ளை, தி.க. சிவசங்கரன், தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை ஆகியவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இது செல்வராஜின் சிந்தனை யில் மிகுந்த தாக்கம் செலுத்தியது. இலக்கியம் பற்றிய சர்ச்சைகளிலும் விவாதங்களிலும் கலந்து கொண்டு தனது பார்வையை விரித்துக் கொண்டார். குறிப்பிட்ட இலக்கியங்களையும் தத்துவப் புத்தகங்களையும் படிக்கும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் செல்வராஜ் சிறுகதை எழுதுவதில் ஈடுபட்டார். இவரது முதல் சிறுகதையைத் தி.க.சி. சரிபார்த்து 'ஜனசக்தி' வாரமலருக்கு அனுப்பினார். கதையும் பிரசுரமானது.
இக்கதை அப்போது நெல்லை மாவட்டத் தில் நடைபெற்ற ஆசிரியர்கள் போராட் டத்தைக் கருவாகக் கொண்டது. இரண்டா வது கதையும் ஜனசக்தியில் பிரசுரமாயிற்று. இதுவும் விவசாயிகள் வெள்ளைக்காரர் களை எதிர்த்துப் போரிட்டது பற்றியது. ஆக செல்வராஜின் படைப்புலகம் தொழிலாள விவசாயிகளின் போராட்ட அனுபவங்களை, நிமிர்வு கொண்ட மக்களது துணிச்சலைப் படைப்பாக்குவதில் தெளிவாகப் பயணித்தது.
இக்கதை அப்போது நெல்லை மாவட்டத் தில் நடைபெற்ற ஆசிரியர்கள் போராட் டத்தைக் கருவாகக் கொண்டது. இரண்டா வது கதையும் ஜனசக்தியில் பிரசுரமாயிற்று. இதுவும் விவசாயிகள் வெள்ளைக்காரர் களை எதிர்த்துப் போரிட்டது பற்றியது. ஆக செல்வராஜின் படைப்புலகம் தொழிலாள விவசாயிகளின் போராட்ட அனுபவங்களை, நிமிர்வு கொண்ட மக்களது துணிச்சலைப் படைப்பாக்குவதில் தெளிவாகப் பயணித்தது.
தொடர்ந்து பல்வேறு இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாயின. பலரது கவன யீர்ப்புக்கும் உரிய எழுத்தாளராகவும் வளர்ந்து வந்தார். மேலும் இவர் நெல்லையில் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு சட்டப்படிப்புக்காகச் சென்னை சென்றார். அங்கே தலைவர் ப. ஜீவானந்தம் மற்றும் இதர முற்போக்கு முகாமைச் சார்ந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகி வந்தார். 'சரஸ்வதி'யில் பல சிறுகதைகள் எழுதும் வாய்ப்புப் பெற்றார்.
எழுத்தை மட்டும் நம்பி வாழ முடியாது என்பதால் பிழைப்புக்காக வக்கீல் தொழிலைத் தேர்ந்தெடுத்தார். "எழுத்து மூலம் நான் சம்பாதித்தது மிகக்குறைவு இன்றுவரை இலக்கியத்துக்கு எனது முழு நேரத்தையும் செலவு செய்ய முடியவில்லை. அதன் காரணமாக அவ்வப்போது எழுதிப் போட்ட கதைகள் நாவல்கள் பூர்த்தி செய்யப்படாமல் பதிப்பகத்துக்குப் போகாமல் குறைப்பிரசவங்களாகக் கிடக்கின்றன" என்று ஒரு முறை பேச்சில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவர் பற்றிய மதிப்பீடு இன்னும் முழுமை பெறாமலேயே உள்ளது.
தொ.மு.சி. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்' என்ற முற்போக்கு நாவலுக்குப் பின் செல்வராஜ் எழுதிய 'மலரும் சருகும்' என்ற படைப்பு அதிகம் பேசப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளின் 'முத்திரை மரக்கால்' போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட படைப்பு. 'தேனீர்' இது போல் இவரது தேயிலைத் தோட்டத்தில் எழுந்த தன்னெழுச்சியான ஒரு போராட்டத்தைச் சித்தரித்தது. "எனது படைப்புகளைப் பொறுத்தமட்டில் சிறுகதையானாலும் நாடகமானாலும் நாவலானாலும் ஒவ்வொரு படைப்புக்கும் ஆழமான சமுதாயப் பின்னணி இருப்பதைப் பார்க்க முடியும். கதாபாத்திரங்களும் சமுதாயத்திலிருந்து எடுக்கப்பட்டுப் பொதுமைப்படுத்தப்பட்டவை. சமுதாய இயங்கியல் விதிகளுக்குட்பட்டு கதையும் கதாபாத்திரங்களும் படைக்கப்படுவதால் கதைகளானாலும் சரி, கதாபாத்திரங்களானாலும் சரி அவற்றைப் பார்க்க முடியும். இந்தப் பின்னணியிலேயே எனது படைப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று செல்வராஜ் குறிப்பிட்டிருந்தாலும் அவை முறையாக நடைபெறவில்லை. முற்போக்கு விமரிசகர்கள் எனக் கூறிக் கொண்டவர்கள் கூட ஒரு குறித்த தனித்த படைப்பாளியின் மொத்தப் படைப்புகளை மையமாக வைத்து விமர்சனம், ஆய்வு செய்யவில்லை. இதனால் முற்போக்கு இலக்கியத்தின் படைப்பாளுமை நபர்கள் சார்ந்து பார்க்கப்படாமல் போய் விட்டது. அல்லது வெறும் புகழ்ச்சி மட்டுமே ஓங்கியுள்ளது.
செல்வராஜின் மலரும் சருகும், தேனீர், மூலதனம், அக்னிகுண்டம் போன்ற நாவல்களும் அவரது சிறுகதைகளும் நாடகங்களும் மீள்வாசிப்புக்கு உட்பட வேண்டும். அப்பொழுது தான் அவரது படைப்பாளுமையின் தனித்தன்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தெ. மதுசூதனன் |