சிறுமை கண்டு பொங்குவாய்...
சாலைகளில் ஆட்டோக்கள் பத்துப் பன்னிரண்டு குழந்தைகளுடன் செல்வதைப் பார்க்கும்போதெல்லாம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாதுகாப்பற்ற முறையில், சாலைவிதிகளை மதிக்காத இந்த வாகனங்கள் தமது குழந்தைகளுக்கு ஆபத்து என்று பெற்றோர்கள் உணர்வதில்லையா? இது நாம் அனைவரும் கூட்டாக நடத்தும் ஒரு குற்றம். கும்பகோணம் தீ விபத்து போன்ற சோகங்களுக்கு மூல காரணம் நமது அசட்டையும், வேறென்னதான் செய்வது என்ற கையாலாகாத்தனம் தான். இதுபோல் ஏதாவது ஒரு விபத்து நடந்தபின் அந்த விபத்தில் சம்பந்தப் பட்டவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று எழும் கோரிக்கைகளின் சத்தத்திற்கு ஒரு காரணம் நாம் இத்தனை நாள் அசட்டையாக இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வும், இதுபோல் மீண்டும் நடக்கத்தான் போகிறது என்பதை நாம் அறிந்திருப்பதும்தான் என்பது எனது எண்ணம்.

'சிறுமை கண்டு பொங்குவாய்' - இது மிக முக்கியம். ஊழலையும், ஒழுங்கின்மையையும் 'நமக்கு எதற்கு வம்பு' என்று காணாமல் இருப்பதன் மறுபக்கமே, விபத்துக்களைப் பற்றிப் பெரும் குரலெழுப்புவதும், பின்னர் அவற்றை அறவே மறப்பதும்!

இன்றைக்கு உலகெங்கும் மக்களாட்சி மலரச் செய்வதைத் தனக்கு ஆண்டவன் நேரில் இட்ட கட்டளை என்ற அளவில் கிளம்பியிருக்கிறார் அதிபர் புஷ் - இவரது ஆட்சியின் சிறுமைகளைக் கண்டு பொங்குவது நல்லது. இல்லாவிடில், கும்பகோணம் பள்ளி எரிந்ததுபோல் உலகின் பல இடங்களில் எரியும் - நாம் அனைவரும் இதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கவோ அல்லது எதுவும் நடக்காதது போல் நடிக்கவோ வேண்டியிருக்கும்.

'Justice delayed is justice denied' விரைவில் நீதி கிடைக்கவில்லை என்றால் சினிமாக்களில் கதாநாயகர்கள் ஆயுதமேந்தி வில்லன்களை அழிப்பார்கள்; வாழ்க்கையில், மக்கள் நம்பிக்கையிழப்பார்கள் - சிறுமை கண்டு பொங்குவது குறையும்.

பாரதிதாசன் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்று மட்டும் சொல்லவில்லை.

மீண்டும் சந்திப்போம்
பி. அசோகன்
மார்ச் 2005

© TamilOnline.com