பெப்ருவரி 26, 2005 அன்று மாலை ஒரு தரமான, இசைமயமான மேடை நாடகத்தை க்ரியா குழுவினர் மேடையேற்றினர். ஆனந்த் ராகவ் எழுதிய அருமையான கதை மற்றும் வசனங்களும், தீபா ராமனு ஜத்தின் திறமையான இயக்கமும், நடிகர் களின் இயல்பான நடிப்பும், மேடை, ஒப்பனை அமைப்புக்களும், கதையின் உயிர் நாடியான இசையும் சேர்ந்து மேடையில் ஒரு புதிய உலகைக் கண்முன் விரித்தது. ஆனந்தின் கதை சொல்லும் பாணியும், கதை ஓட்டத்தினூடே இயல்பாக இழைந்த நகைச்சுவையும் வெகு சிறப்பு.
சிந்து பைரவி, சங்கராபரணம் போன்ற கர்நாடக இசைப் பின்னணியில் அமைந்த படங்களை ரசித்திருக்கிறோம். அதே போன்ற ஒரு இசைச் சூழலில் அமைந்த கதையை வெற்றிகரமான மேடை நாடகமாக அளிக்க முடியும் என நிரூபித்திருக்கின்றது ஆனந்த் ராகவ், தீபா கூட்டணி.
பிரபல கர்நாடக இசை மேதை இளையாங்குடி பஞ்சாபகேசனுக்கு, ராகங்களின் மீது உள்ள பிரேமைக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது பெண்களிடம் கொண்ட ரசனை. விளைவு, கல்யாணி என்ற மனைவியல்லாத துணையும் அவளுக்கு ஒரு பெண் குழந்தையும். தன் அம்மாவுக்கு அதிகாரபூர்வமாக மனைவி என்ற ஸ்தானத்தைக் கொடுக்க இயலாத அப்பாவின் மீது ஏற்படும் கோபமும் அவமானமும் கடும் துவேஷமாக மாறி விடுகிறது மகளுக்கு.
செல்லும் இடமெல்லாம் அப்பாவின் பெயர் துரத்துகிறது. கேலியிலிருந்தும் அவமானங்களில் இருந்தும் விலக முடிவதில்லை. எந்தச் சங்கீதமும், அதனால் வந்த புகழும், தங்களுக்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்காமல் போகக் காரணமாக இருந்தனவோ, அதே சங்கீதத்தால் தன் தந்தையைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறி மகளை அசுர சாதகம் செய்ய வைக்கிறது. புகழின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது.
அப்பாவின் வாயாலேயே தனது மகள் என்று பெருமையுடன் சொல்ல வைக்க வேண்டும் என்ற அவளது நோக்கம் நிறைவேறியதா? துவேஷமும், கலையும் இணைய முடியுமா?
சங்கீதத்திற்கு நோக்கம் உண்டா, வெற்றி உண்டா என்பனவற்றை ஆனந்தின் அற்புதமான வசனங்கள் அலசுகின்றன.
பல இடங்களில் வரும் கூர்மையான வசனங்கள், வசனகர்த்தா யார் என்று இடைவேளை வெளிச்சத்தில் நாடக இதழில் தேட வைத்தன.
நாடக மேடை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, காட்சிகள் மாறிமாறிக் காண்பிக்கப்பட்ட உத்தி அருமையாக இருந்தது. கதை ஐம்பது வருட நினைவோடையைக் கொணர்வதால், கால ஓட்டத்தின் தடங்களை நேர்த்தியான ஒப்பனை, நடிகர்களின் உடல் மொழி ஆகியவற்றால் இயக்குனர் அற்புதமாகக் கொணர்ந்திருந்தார். வீட்டில் உள்ள சாமான்களான டி.வி. பெட்டி, தொலைபேசி, ஆடைகள் என்று ஒவ்வொரு சிறு விஷயத்திலும் உன்னிப்பாகக் கால வித்தியாசத்தைப் பதிவு செய்திருந்த இயக்குனர் தீபாவைப் பாராட்டியே ஆகவேண்டும்.
பெண்ணிற்கு அப்பாவின் மீது ஏற்படும் வெறுப்பும், கசப்பும் முதல் கட்டத்தில் பல காட்சிகளில் சித்தரிக்கப்படுகின்றன. மேடையில் ஒரு இடத்தில் பெண்ணிடம் அப்பா பெயரை நினைவுபடுத்தும் காட்சி வருகிறது. தொடர்ந்து மேடையின் மறுபுறம் மேடைக் கச்சேரி தொடர்கிறது. அத்தகைய காட்சிகளின் தொய்வைக் கச்சேரிக் காட்சிகள் மறக்க வைத்தன. பாடல்களுக்கு நடிகர் ராஜீவ் கொடுத்த பாவமும், போடும் தாளமும், வாயசைப்பும், அவர்தான் கச்சேரி செய்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்தின. மிகத் திறமையான நடிகர்.
இயக்குனர் தன் அனுபவ முத்திரையைப் பல காட்சிகளில் பதிவு செய்திருந்தார். மேடையில் மூன்று காட்சிகளை அமைத்து, பெண்ணிற்குத் தன் தவறை உணர்ந்து அப்பாவின் மேன்மையை உணர்த்தும் இடம் அற்புதமாக அமைக்கப்பட்டிருந்தது. கோவில் வாசலில் பாகவதரின் நண்பர் பேசும் வசனங்கள் குறிப்பிடத்தக் கவை. அந்தப் பாத்திர அமைப்பும் வசனமும் நாடகத்தின் நோக்கத்தைத் தெளிவாகக் கொண்டு செல்ல உதவின.
இயக்குனராக தீபா பலத்த கைதட்டல் வாங்கிய காட்சி அது.
பல இடங்களில் ஏதோ சினிமா ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்று பிரமிக்கும் வண்ணம் காட்சிகள் மேடையின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்து.
ஒளியமைப்பும் பிரமாதமாக இருந்தது. முதல் காட்சியில் மின்சாரம் போன இருட்டறையில் இருந்து மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டு வரும் பொழுது மெதுவாக ஒளி வருகிறது.
வித்வானாக நடித்த ராஜீவ், அவரது மகள் நித்யாவாக நடித்த தீபா ராமானுஜம், வித்வானின் உதவியாளர் அம்பியாக நடித்த நவீன் நாதன் மூவரும் பிரமாதமாகச் செய்திருந்தனர். எப்படி வித்வானின் முதல் கச்சேரியின்போது கும்பகோணம் வயலின் வித்வான் ராஜமாணிக்கம் பிள்ளை புதுப் பாடகரை மதியாமல் தான் பிரதானமாக அமர்ந்து கொண்டு, பக்க வாத்திய இடத்தில் பாடகரை உட்காரவைத்தார் என்றும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகப் பாடகரின் திறமையை மதித்து இடம் மாறிக் கொண்டார் என்றும் அம்பி நடித்துக் காட்டும் இடம் மிக அருமை. நிஜமாக ஆனந்த் அனுபவித்து எழுதியிருக்க வேண்டும், அதை நடிகர்களும் பூர்ணமாக உணர்ந்து நடித்தனர்.
சிறிய வயது நித்யாவாக நடித்தவர் அக்ஷயா ராமானுஜம். இயக்குனர் தீபா ராமானுஜத்தின் மகள். பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து செய்திருந்தார். நித்யாவின் அம்மாவாக நடித்த கல்யாணி தனது நடிப்பு மற்றும் நடனம் வழியே பாத்திரத்திற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்தார்.
நாடகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் குறைவின்றிச் செய்திருந்தனர். பக்கத்து வீட்டு மாமி, கொலுவுக்கு வரும் மாமிகள், சபா செயலாளர், டிராவல் ஏஜன்ஸி நடத்துபவர், ஆ·பீஸர் என்று நாடகத்தைப் பல பாத்திரங்கள் அருமையாக நகர்த்திச் சென்றனர்.
பாடல்கள் எல்லாம் அற்புதமாக இருந்தன. பாடல்களைப் பாடியவர்கள், ஆஷா ரமேஷ், பரமேஷ் கோபி. இவர்களுக்குப் பக்க வாத்தியம் வாசித்தவர்கள் சாந்தி நாராயணன் மற்றும் நாராயணன்.
பிரபல பாடகியாக ஆவதற்கு முன்பு நித்யா வேலை தேடிச் செல்லும் இடங்களில் அப்பாவின் பெயரால் நினைவு கூறப்படும் காட்சி நாடகத்தின் கருவுக்குத் தேவையானதாக இருந்தாலும் கூடச் சற்றுத் தொய்வை ஏற்படுத்தியது. அது போல நித்யா தீடீரெனப் பிரபலமாகி விடுவதும் நாடகத்தனமாகத் தோன்றினாலும் கதைக்குத் தேவையாகவே இருந்தது.
தீபா ராமனுஜத்தின் க்ரியா குழுவினர் வளைகுடாப் பகுதி மக்களுக்கு மற்றுமொரு அருமையான நாடக விருந்து அளித்திருந்தனர். பார்வையாளர்களின் தொடர்ந்த கைதட்டல்கள் நாடகத்தின் வெற்றியைக் கூறின.
ச.திருமலை |