'நிருத்யோல்லாஸா' நாட்டிய நிறுவனத்தில் பயின்ற மாணவி ரம்யா வைத்தியநாதனின் அரங்கேற்றம் மார்ச் 5, 2005 அன்று சான்ஹொசே நகரின் எவர்கிரீன் வேல்லி உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் நடந்தேறியது. இதே பள்ளியின் இறுதியாண்டு மாணவி ரம்யா. இவரது அரங்கேற்ற நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துப் பேசிய பள்ளித் தலைவர், இந்நடனத்தின் மூலம் இந்திய கலாசாரம் பற்றி அறிந்து கொள்ளத் தனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
'புஷ்பாஞ்சலி'யில் தொடங்கித் 'தில்லானா' முடியும் வரை முகத்தில் மலர்ச்சி மாறாமல் ரம்யா நடனமாடியது பாராட்டுக்குரியது. நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே தமிழ்ப் பாடல்களாக அமைந்தது மற்றோர் சிறப்பு. குறிப்பாக மதுரை முரளிதரன் அவர்களின் 'அற்புத நடனம்' என்ற விநாயகரைப் போற்றும் பாடல், 'லதாங்கி' ராகத்தில் அமைந்த வர்ணம், 'குழலூதி மனமெல்லாம்' என்ற ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் பாடல் ஆகியவை செவியில் இனித்தன என்றால், அவற்றிற்கு ரம்யா ஆடின நடனம் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. ரம்யாவின் நடனம் அபிநயத்தில் அவர் கொண்ட தேர்ச்சியை நன்கு வெளிக்காட்டியது. 'நேற்றந்தி நேரத்திலே' என்ற பதத்திற்கு ஆடும் போது, நாயகி நீரில் திளைத்து விளையாடி மகிழ்வதை கண்முன் அப்படியே படம் பிடித்துக் காட்டினார்.
இந்தச் சிறப்பான தேர்ச்சிக்குப் பின்புலமாக இருக்கும் குரு இந்துமதி கணேஷ் அவர் களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆஷா ரமேஷ் (குரலிசை), சாந்தி நாராயணன் (வயலின்), கோபி சுந்தரம் (புல்லாங்குழல்), நாராயணன் (மிருதங்கம்), மகாதேவன் (மோர்சிங்), இந்துமதி கணேஷ் (நட்டுவாங்கம்) ஆகியவை நிகழ்ச்சியைச் சோபிக்க வைத்தன. நிகழ்ச்சியின் இறுதியில் ரம்யா வழங்கிய நன்றியுரை அவரை ஒரு நல்ல மேடைப் பேச்சாளர் என்றும் நிரூபித்தது.
அருணா |