சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவ மனையின் டாக்டர் எஸ். பாஸ்கரன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் சங்கரராமன் கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளிலிருந்து தான் விலகலாமா என்று யோசிப்பதாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரமட பக்தரான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் டாக்டர் பாஸ்கரன் ஜெயேந்திரர் மீதான வழக்குகளுக்கான செலவுக்காக பக்தர்கள் நிதி உதவி தரலாம் என்று கேட்டு www.kanchi-satya.orgஎன்ற இணைய தளத்தில் கோரிக்கைவிடுத்தார்.
இது தொடர்பாக டாக்டர் பாஸ்கரனை மார்ச் 17-ம் தேதி விசாரணைக்கு வரும்படி காஞ்சி தனிப்படைப் போலீஸ் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, அந்தச் சம்மனை ரத்துசெய்யக் கோரி டாக்டர் பாஸ்கரன் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இம்மனு மீதான விசாரணை நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் முன்னிலையில் நடை பெற்றது. வழக்கின் விசாரணை முடி வடைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு டாக்டர் பாஸ்கரை விசாரணைக்கு வருமாறு தனிப்படை சம்மன் அனுப்பியது எந்தவிதத்தில் சரியானது என்றும், சென்னையில் இருக்கும் தனக்கு சம்மன் அனுப்புவதற்குக் காஞ்சிபுரம் தனிப்படைக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் கருத்து களை எடுத்துரைத்தார். நன்கொடை வசூலிப்பதோ கேட்பதோ தவறாகாது என்றும் கூறிய அவர் டாக்டரின் மீதான சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
சங்கரராமன் கொலைவழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதைவிட வழக்குக்கு நேரடித் தொடர்பில்லாத விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதாகவே காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளில் தெரிகிறது என்று பல்வேறு முனைகளிலிருந்தும் கருத்துகள் கூறப்பட்டது. இதையே நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியமும் கூறினார். இத்தகைய விசாரணைகள் வழக்கின் போக்கைத் திசை திருப்பத்தான் உதவும் என்று கூறிய அவர், ''சங்கரமடம் தொடர்பான வழக்குகளில் இருந்து வெளியே வந்துவிடலாமா என்று நினைக்கிறேன். இல்லையென்றால் மடம் தொடர்பான வழக்குகளில் அரசுக்குச் சாதகமாக நான் தீர்ப்பு அளிக்கவில்லை என்று பின்னாளில் என்னைக் குறை கூற வாய்ப்புள்ளது...'' என்று அச்சம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினாலும், தர்மபுரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கல்லூரி மாணவிகள் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்ட வழக்கிற்கு வேண்டிய ஆவணங்களை வழங்குவதில் தமிழக அரசு தாமதம் செய்வதும், ஆனால் அதே நேரத்தில் காஞ்சி மடம் மற்றும் சங்கராச்சாரியர்கள் விஷயத்தில் சட்டத்தை நிலை நிறுத்த அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொள்வதையும் பார்க்கும் போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற வாதம் அந்தந்த வழக்கு, அது சார்ந்த நபர்களை பொறுத்ததுதான் போலும்" என்று பா.ஜ.க. மற்றும் சகோதர அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
தொகுப்பு: கேடிஸ்ரீ |