சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்கலாம் என்றும் அரசல் புரசலாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முதல்வரோ சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த காலத்திற்கு முன்னதாக நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே கூறுகிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கூட்டணியை வருகிற சட்டப்பேரவை தேர்தல் வரை தக்க வைத்துக் கொள்வதற்கான வழிகளைக் கடைப்பிடித்து வருகிறது திமுக கூட்டணி.
'மத்தியில் கூட்டணி ஆட்சி; மாநிலத்தில் தனியாட்சி' என்கிற கொள்கைக்கு மாறு பட்டுப் பேசிய இளங்கோவன் போன்றவர் களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்த தி.மு.க. தலைமை தற்போது மாவட்டந்தோறும் மாநாடுகளை நடத்தி, தங்கள் தொண்டர் களை தேர்தலுக்குத் தயாராக்கி வருகிறது.
மார்ச் 12, 13 தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநாட்டுக்குக் கூட்டணித் தலைவர்களை அழைத்தது மட்டுமல்லாமல் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே கருணாநிதி, 'கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களைப் பகிர்ந்தளிக்கத் தி.மு.க. தயாராக உள்ளது. அனைத்துக் கட்சி தலைவர்களும் இதற்காக அமர்ந்து பேசலாம்' என்று கூறியதிலிருந்து, கூட்டல், கழித்தல் கணக்கில் கூட்டணி கைவிட்டுப் போகக் கூடாது என்பதில் தி.மு.க. தலைமை இம்முறை மிக கவனமாக இருப்பதைக் காட்டுகிறது.
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான வாசன், ராமதாஸ், நல்லகண்ணு, வரத ராஜன், வைகோ என்று இம்மாநாட்டில் ஒட்டுமொத்தக் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றது மட்டுமல்லாமல் ஆளும் அ.தி.மு.க. அரசை வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்றும், அதற்காக இப்போதே பாடுபடுவோம் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு இன்னும் ஒருவருடத்திற்கு மேல் இருக்கும் சூழலில் இந்த கூட்டணிகளின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |