தமிழ்நாட்டில் சேவை செய்து வரும் 'உதவும் கரங்கள்' இயக்கத்தின் சான் ·ப்ரான் சிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் இந்த வருடம் தன் வசந்த விழாவான 'கலாட்டா-2005' கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகர் மாதவன் கலந்து கொள்கிறார்.
இந்த வருட விழாவில் திரட்டப்படும் நிதி, உதவும் கரங்களின் சுனாமி நிவாரண முயற்சிகளுக்கு அளிக்கப்படும்.
மே 7, 2005 அன்று தேதி ஹேவர்டு Chabot College-இல் நடக்கப் போகும் கலாட்டா-2005 நிகழ்ச்சி சென்ற ஆண்டைப் போலவே முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறும். புல்வெளியில் கலைப் பொருள் சந்தை, மருதாணியிடுவது, முக ஒவியம் வரைவது போன்ற உல்லாசங்கள் உண்டு. அவற்றின் நடுவே அறிவியல் கலாட்டா, குறுநாடகம் போன்ற சிறு காட்சிகளும், சிறு வயதினருக்கான ஓட்டப் பந்தயங்களும் உண்டு. தவிர, அரங்கின் உள்ளே பட்டிமன்றம், பாட்டுக்குப் பாட்டு, சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்ச்சி கள், கர்நாடக இசை, தெருக் கூத்து, நாடகம் போன்ற பலப்பல குதூகலமளிக்கும் உருப்படிகளும் நடக்க உள்ளன. உச்ச கட்டமாக மாலையில் விரிகுடாவின் பிரபல 'பல்லவி' குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.
கலாட்டா 2005-க்கே முத்தாய்ப்பு வைத்தது போல், அலை பாயுதே, ஆய்த எழுத்து, ரன், அன்பே சிவம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ள மாதவன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போகிறார்! அவர் பல மணி நேரம் தன் விசிறிகளுடன் பழகி, கையொப்பம் அளிப்பது மட்டுமில்லாமல், நாகரிக ஆடைக் காட்சி, 'மனம் திறக்கிறார் மாதவன்' என்னும் கேள்வி-பதில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவற்றிலும் பங்கேற்கிறார்.
போதாதென்றால், மாதவனுடன் இன்னும் நெருங்கிப் பழக வாய்ப்பாக ஒரு கால்·ப் போட்டியும், பெரும் விருந்தையும் ஏற்பாடு செய்து வருகிறது உதவும் கரங்கள்.
இத்தகைய சிறப்பு நிகழ்ச்சியான கலாட்டா-2005, raaga.com, indiaglitz.com மற்றும் பல புரவலர்களின் நன்கொடையால் சாத்தியமாகிறது. புரவலர் நிலை அளவில் நன்கொடை வழங்குவதின் பலன்களையும், வழங்கும் முறையைப் பற்றியும் மேலும் அறிய கீழ்க் குறிப்பிடப்பட்டிருக்கும் மின்வலைத் தளங்களில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, உதவும் கரங்கள் விரிகுடாப் பகுதி இயக்கத்தினரை அணுகுங்கள்.
உதவும் கரங்களின் சேவையைப் பற்றி ஒரு சிறு குறிப்பு:
தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஏழைமை, எயிட்ஸ், மனநோய், ஆதர வின்மை போன்ற பல காரணங்களால் பல்லாயிரக் கணக்கானோர் உயிர் இழக்கிறார்கள், தவிக்க விடப் படுகிறார்கள். 22 வருடங்களாக உதவும் கரங்கள் அத்தகையவர்களுக்குக் கை கொடுத்து, இருப்பிடமும் உண்ண உணவும் அளிக்கிறது. அண்மையில் சுனாமியால் பாதிக்கப் பட்டுப் பரிதவிக்கும் பல்லாயிரக் கணக்கானோருக்கு நிவாரணம் அளித்து வருகிறது.
வித்யாகர் என்பவர் 1983-ம் ஆண்டு உதவும் கரங்கள் இயக்கத்தை நிறுவினார். அவர், தானே அனாதையாக இருக்கையில் பராமரிக்கப்பட்டதால் சமூகத்துக்கு நன்றி கூறும் வகையில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கையின் ஒரே லட்சியம் இந்த இயக்கம்தான்.
உதவும் கரங்களின் சான் ·ப்ரான் ஸிஸ்கோ விரிகுடா வட்டம் 2003-ஆம் ஆண்டு நிறுவப் பட்டது. செய்யும் பணி கள்பற்றிய விழிப்புணர்ச்சியை வளர்க்கவும், அதற்கான நிதி திரட்டவும், அதன் 150-க்கும் மேலான தொண்டர்கள் உற்சாகத்துடன் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்கள். அவற்றில் சில: கலாட்டா-2004, எஸ்.வி.சேகர் குழு மற்றும் க்ரேஸி மோஹன் குழுவினரின் நாடகங்கள், நாடக் குழுவின் 'ரகசிய சினேகிதியே' நாடகம், க்ரியா குழுவின் 'மாயா' நாடகம் போன்றவை. கலாட்டா-2005-வின் நிதிக் குறிக்கோள் 50,000 டாலருக்கும் மேல் திரட்டுவது.
கலாட்டா-2005 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், உதவும் கரங்களுக்காகப் பணி புரியவும், நிதி அளிக்கவும் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
இணைய தளங்கள்: http://www.ukdavumkarangal-sfba.org, http://www.galaata.org
மின்னஞ்சல்: info@galaata.org
கதிரவன் எழில்மன்னன் |