சிறுவர் கதை: புத்தக மாமாவின் கடை
சாந்தி டி.வி. செய்திகளைப் பார்ப்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது: மிஸ். ரோஹிணி வழங்கும் குழந்தைகளுக்கான அந்த வார முக்கியச் செய்தித் தொகுப்பைப் பார்க்கத்தான். மற்றக் குழந்தைகள் சினிமா நட்சத்திரங்களை எவ்வளவு ஆவலோடு பார்ப்பார்களோ, அவ்வளவு ஆவலோடு சாந்தி மிஸ். ரோஹிணியைப் பார்ப்பாள். சாந்தியிடம் எதெல்லாம் இல்லையோ அதெல்லாம் ரோஹிணியிடம் இருந்தது. அவள் கெட்டிக்காரி, அழகானவள். அவளுக்குக் கராத்தே, யோகா இரண்டுமே தெரிந்திருந்தது. எல்லா முக்கியஸ்தர் களையும் அவள் அறிந்திருந்தாள். சாந்திக்கு இதில் பொறாமைதான் என்றாலும், அதில் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையும் கலக்காமல் இல்லை. சில சமயம் மிஸ். ரோஹிணி குழந்தைகள் தொகுப்பின்போது "பள்ளியில் உழைத்துப் படியுங்கள். ஒருநாள் நீங்களும் என்னைப் போலச் சேவை செய்யலாம்" என்று சொல்வதுண்டு.

சாந்தியும் மிஸ். ரோஹிணியைப் போல மக்களுக்குச் சேவை செய்ய விரும்பினாள். ஆமாம், மிகவும் கடினமாக உழைத்தால், ஒருநாள் நானும் அவளைப்போல ஆகலாம்-ரொம்பச் சாமர்த்தியமாக, ரொம்பப் பொறுப்புள்ளவளாக.

ஆகவே சாந்தி பள்ளியில் மிகக் கடினமாக உழைத்தாள். எப்போதும் படிப்பாள். ஏன் தெரியுமா? ஒருமுறை மிஸ். ரோஹிணி "நல்ல மனத்தின் திறவுகோல் நல்ல புத்தகம்" என்று சொல்லியிருக்கிறாரே, அதனால்தான். சாந்தி தனக்கு நல்ல மனம் வேண்டும் என்று விரும்பினாள்.

"மின்விளக்கை எரியவிடு. இருட்டிலே படித்தால் உன் கண் கெட்டுப் போகும்" என்று சொன்னார் அப்பா.

"சரி அப்பா," என்று சொன்னாள் சாந்தி.

சில சமயங்களில் சாந்தி கராத்தே உதை மற்றும் கைவீச்சைப் பழகுவாள். ஏனென்றால் மிஸ். ரோஹிணி "செடிக்கு வேர் எப்படியோ, மனதுக்கு உடல் அப்படி" என்று சொல்லியிருக்கிறார்.

"நீ நாற்காலியை உடைக்கப் போகிறாய்," என்றார் அம்மா.

"மாட்டேன் அம்மா," என்றாள் சாந்தி.

மிஸ். ரோஹிணி சொன்னதில் இன்னொரு முக்கிய விஷயம், "உன் கருத்தைச் சொல்ல பயப்படாதே" என்பது. ஆனால் சாந்தியிடம் ஒரு ரகசியம் இருந்தது. அதை அவள் தன் அப்பா, அம்மாவிடம் சொன்னதில்லை. ஒரு வேளை அவர்கள் சம்மதிக்காமல் போகலாமோ என்று அவள் நினைத்தாள். விஷயம் இதுதான்: தினமும் பள்ளிக்குப் போகும் வழியில் அவள் புத்தக மாமாவின் கடைக்குப் போவாள். இரண்டு பெரிய பலகைகளை நடைமேடையில் வைத்து அதிலே அவர் நிறையப் புத்தகங்களை வைத்திருப்பார். அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் அவருடைய குட்டி வீடு இருந்தது. தினமும் காலையில் குருவிகள் எழுந்திருக்கும் முன்னாலேயே அவர் விழித்துவிடுவார். தனது குட்டி வீட்டிலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து நடைமேடையில் அடுக்குவார். பின்னர் குழந்தைகள் வருவதற்காகக் காத்திருப்பார். ஒருவராகவும் இருவராகவும் குழந்தைகள் நாள்முழுவதும் அவரிடம் வந்தவண்ணம் இருப்பார்கள்.

புத்தக மாமா அவர்களுக்குப் படிக்கச் சொல்லிக் கொடுத்துப் புத்தகமும் கொடுப்பார். காலையிலும் மாலையிலும் சாந்தியைப் போன்ற பள்ளிக் குழந்தைகளின் சின்னக் கூட்டம் ஒன்று அவரிடம் வரும்.

அடடா! எத்தனை புத்தகங்கள் அவரிடம். சிரிப்புப் புத்தகங்கள், அழுகைப் புத்தகங்கள், பெரிய புத்தகங்கள், சின்னப் புத்தகங்கள், கனமான புத்தகங்கள், ஒல்லியானவை, பழைய புத்தகங்கள், புத்தம் புதியவை, படம் போட்டவை, படம் இல்லாதவை என்று! தான் படித்து முடித்ததைக் கொண்டுபோய்த் தினமும் சாந்தி கொடுப்பாள். அவளுக்கு உடனே இன்னொரு புத்தகம் கிடைக்கும். பள்ளிக்குப் போகும் வழியிலும் திரும்பும் போதும் அவள் புத்தகத்தைப் படிப்பாள்.

புத்தக மாமா தனக்குப் பிடித்த புத்தகங்களை அவளுக்கும் கொடுப்பார். "இந்தா, இது ரொம்பத் தமாஷாக இருக்கும்" என்றோ, அல்லது "இதில் நல்ல பாட்டுக்கள் உள்ளன. உரக்கச் சொல்லிப் பார்க்கலாம்" என்றோ சொல்வார்.

எப்போதாவது மிஸ். ரோஹிணி புத்தக மாமாவின் கடைக்கு வந்திருப்பாரா என்று சாந்தி யோசித்தாள்.

வழக்கமான வாராந்திரத் தொகுப்பின் போது ஒருநாள் மிஸ். ரோஹிணி "மிக முக்கியமான நபர் ஒருவர் இந்த வாரம் நமது நகரத்துக்கு வருகிறார்" என்று அறிவித்தார். அதோடு "நம் நகரத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். அப்போது அவருக்கு நம் ஊர் பிடித்துப் போய்விடும். நாம் எவ்வளவு அழகிய ஊரில் வாழ்கிறோம் என்பதை அவர் பார்க்க வேண்டும்" என்றும் கூறினார்.

மறுநாளே சாந்தி தான் பார்த்த இடங்களில் கிடந்த குப்பைகளை எல்லாம் எடுத்து அகற்றினாள். தன் வீட்டுப் படியிலிருந்து வாசல் நடைமேடை வரை ஒரு துடைப் பத்தை எடுத்துப் பெருக்கினாள். இஸ்திரி போடும் பெண் இருந்த தெருவின் மூலை வரை சுத்தம் செய்தாள். வீட்டின் சுற்றுச் சுவர் கூடப் பளபளப்பாகி விட்டது.

அடுத்த சில நாட்களில் மிக முக்கியமான நபரின் வருகைக்காகத் தன் நகரம் தயாராவதைச் சாந்தி கவனித்தாள். அவர் ஓர் அரசியல் முக்கியஸ்தர், எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது. தெருவெல்லாம் சுத்தமானது. மரங்கள் நடப்பட்டன. நடை மேடையில் இருந்த பிளவுகளைப் பூசி மூடினார்கள்.

ஒருநாள் காலையில் வழக்கம்போல சாந்தி தனது பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கினாள். அவளது கையில் 'அந்தமான் மர்மம்' புத்தகம் இருந்தது. அவளையொத்த இரண்டு குழந்தைகள் ஒரு மர்மத்தைக் கண்டுபிடித்து, ஒரு பிணைக்கைதியைத் தப்பிக்கச் செய்து, எதிரிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கும் விறுவிறுப்பான கதை. இப்போது வேறு புத்தகம் வாங்கவேண்டும். 'ஒரு நாடகம் படிக்கலாம். இல்லையென்றால் வாழ்க்கை வரலாறு. ஏன், இங்கே வரும் மிக முக்கிய நபரின் வாழ்க்கை வரலாறாகவே இருக்கலாமே' என்று சாந்தி நினைத்தாள். இந்தக் கற்பனைக்கு நடுவே ஏதோ தவறாக இருப்பதாகச் சாந்திக்குத் தோன்றியது.

அங்கே புத்தக மாமாவின் கடையைக் காணோம்! பெயர்ப் பலகை கீழே கிடந்தது. புத்தகங்களோ இல்லவே இல்லை. முகத்தில் ஏமாற்றத்துடன் சில குழந்தைகள் அங்கிருந்து போய்க்கொண்டிருந்தார்கள். குறுகிய தோளுடனும், வருத்தமான முகத்துடனும் புத்தக மாமா அங்கே நின்று கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் சாந்திக்கு அழலாம் போல இருந்தது.

"என்ன ஆச்சு?" சாந்தி கேட்டாள். "என்ன விஷயம், புத்தக மாமா?"

"வணக்கம் சாந்திக் கண்ணு," வழக்கம் போலத்தான் புத்தக மாமா அவளை வரவேற்றார். ஆனால் அவரது தலை தொங்கிப் போயிருந்தது, முகத்தில் இயல்பான புன்னகை இல்லை. "என் கடையை மூட வேண்டியதுதான் போல இருக்கிறது" என்று சொன்னார்.

"எதுக்காக?" சாந்தி கூவினாள். அது எப்படி நடக்கும்? சாந்திக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. இனிமேல் தினமும் இங்கே வந்து தனக்குப் பிடித்த புத்தகங்களை எடுக்கவே முடியாதா? எனக்கே இப்படியென்றால், புத்தக மாமாவுக்கு எவ்வளவு துக்கமாக இருக்கும் என்று யோசித்தாள் சாந்தி.

"நீங்க என்ன செய்வீங்க?" என்று அவரிடம் கேட்டாள்.

"இனிமேல் இந்தப் புத்தகம் வேண்டாங் கிறவங்க கிட்டே இருந்து நான் பல வருஷமா வாங்கிச் சேகரித்து வைத்திருக்கிறேன். வேலையிலே இருந்து ஓய்வு பெற்ற பின்னாலே, இவற்றைக் குழந்தைகள் கூடச் சேர்ந்து அனுபவிக்கணும்னு என்னுடைய ஆசை," புத்தக மாமா தன் தோளைக் குலுக்கினார். "இப்ப நான் இதையெல்லாம் என்ன செய்வேன்? என் வீட்டிலே வைத்துக் கொள்ள முடியாது. அதிலே என்ன சந்தோஷம் இருக்கு?" அவருடைய குரல் நடுங்கியது. "என் புத்தகமெல்லாம் வெறும் குப்பையாம்! மறுபடியும் நடைமேடையிலே என் புத்தகங்களைப் பார்த்தால் தூக்கிப் பழைய பேப்பர்க்காரனுக்குப் போட்டுடு வாங்களாம்."

"கூடாது," சாந்தி சொன்னாள். "ஒரு நிமிஷம்," அவள் மனதில் ஒரு பிரமாதமான திட்டம் தோன்றியது. "நமக்கு ஒருவர் உதவ முடியும்."

மிஸ். ரோஹிணி இதற்கு உதவுவார் என்று சாந்தியின் மனது சொன்னது. புத்தகங்கள் படிப்பதைப் பற்றி எத்தனை அழகான விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார்! அது மட்டுமா, "நினைத்ததைச் சொல்லத் தயங்காதே" என்றும் சொன்னாரே.

பள்ளிக் கூடத்துக்குப் போவதற்குப் பதிலாகச் சாந்தி நேரே ஒரு பஸ்ஸைப் பிடித்து தொலைக்காட்சி நிலையத்துக்குப் போனாள். மிகுந்த நம்பிக்கையோடு உள்ளே போனாள். அங்கே பெரிய மீசையுடன் ஒரு கடுமையான முகம் இருந்தது.

"நா...நான் மிஸ். ரோஹிணியிடம் பேச வேண்டும்" என்றாள்.

அந்தக் காவலாளிக்கு அவளைப் போல ஒரு மகள் இருந்தாளோ என்னவோ. அல்லது அவரது இதயம் மென்மையானது போலும். "ஏய் சுண்டெலி, ஓடு இங்கே இருந்து" என்று அவர் அவளை விரட்ட வில்லை. "ஓ இளம்பெண்ணே, நிகழ்ச்சி வழங்குகிறவரிடம் நீ என்ன சொல்லப் போகிறாய்?" என்று சிரித்தபடியே அவர் கேட்டார்.

இதையெல்லாம் பஸ்ஸில் ஒத்திகை பார்த்தபடியேதான் வந்திருந்தாள். "புத்தக மாமா தனது நூலகத்தை மருத்துவ நிலையத்தின் அருகில் வைக்க அனுமதி கொடுப்பது பற்றிப் பேசவேண்டும். நகர நிர்வாகம் அதை மூடிவிடக் கூடாது" என்றாள்.

அவளை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுக் காவலாளி உள்ளே சென்றார்.

விரைவிலேயே திரும்பி வந்தார் அவர். "அவங்களாலே உங்களைப் பாக்க முடியாதாம். மன்னிக்கணும் அம்மா" என்றார்.

சாந்திக்குப் பேச்சே எழவில்லை. "இருக்க முடியாது. நீங்க ஏதோ தப்பாச் சொல்றீங்க. 'நல்ல புத்தகம்தான் நல்ல மனத்துக்குத் திறவுகோல்'னு அவங்க எப்பவும் தன் நிகழ்ச்சியிலே சொல்றாங்க. ரொம்ப முக்கியம்னு சொல்லுங்க" என்றாள்.

கருணையோடு சிரித்த காவலாளி "இந்தப் பெரிய மனுஷங்ககிட்ட சின்ன ஆளுங்களுக்கு ஒதுக்க நேரம் இல்லை" என்றார்.

சாந்தியின் கண்களை நீர் மறைத்தது. "அவங்க என்ன சொன்னாங்க. அப்படியே சொல்லுங்க" என்றாள்.

கொஞ்சம் தயங்கினார். பின்னர் "அவங்க 'இங்கே வர்ற ஒவ்வொரு குட்டிக் குரங்கு கூடயும் பேச எனக்கு நேரம் கிடையாது' அப்படீன்னு சொன்னார்" என்றார். "மன்னிச்சுக்கோ குழந்தை" என்று சொல்லி முடித்தார் காவலாளி.

தொண்டையில் ஏதோ பெரிதாக அடைத்துக் கொண்டதுபோல் இருந்தது சாந்திக்கு. அங்கேயே அழுதுவிடுமோ என்ற பயத்தில் கண்களைச் சிலமுறை சிமிட்டிக் கொண்டாள்.

பேருந்தில் ஏறி புத்தக மாமாவின் இடத்துக்குப் போகும் போது, இன்றைக்குப் பள்ளிக்குப் போகததற்கு அப்பா, அம்மா என்ன சொல்லப் போகிறார்களோ என்று வேறு தோன்றியது. தடுக்க முடியாமல் கண்ணீர் கன்னத்தில் இரண்டு தடங்களைப் பதித்தபடி இறங்கியது.

சாந்தியின் வருத்தம் தோய்ந்த முகத்தைப் பார்த்துப் புத்தக மாமா, "கவலைப் படாதே. நீ முயற்சி செய்ததே பெரிய விஷயம்" என்றார்.

பள்ளி முதல்வரிடமிருந்து சாந்தியின் பெற்றோருக்குத் தொலைபேசியில் தகவல் போய்விட்டது. சாந்தி வீட்டை அடையும் போது அவர்கள் மிகவும் தவித்துப் போயிருந்தார்கள். "எங்கே போய்ட்டே?" என்று கேட்டார்கள். "எங்களுக்கு ரொம்பக் கவலையாகி விட்டது" என்று சொன்னார்கள். சாந்தி தனது கதையை வருத்தத்தோடு விவரித்தாள்.

"அடடா! எத்தனை சோகம்" என்று மட்டுமே அவர்கள் சொன்னார்கள். சாந்தியின் பேரில் அவர்கள் கோபிக்கவில்லை. பள்ளிக்கு ஒரு விடுப்புக் கடிதம் அனுப்பிவிட்டார்கள்.

"அவர் புத்தகத்தை எல்லோருக்கும் கொடுப்பதில் என்ன தவறு?" என்று கேட்டதற்கு, "வழிநடையில் வைத்திருக்கிறாரே" என்றுதான் அவர்கள் சொன்னார்கள். அது அவளுக்குத் திருப்தி தரவில்லை.

"ஒரு கடை போடலாமே" என்று அம்மா சொன்னாள்.

"அவர் புத்தகம் விற்கவில்லையே. எல்லோருக்கும் படிக்கக் கொடுக்கிறார், அவ்வளவு தான்" என்றாள் சாந்தி.

"ரொம்பச் சரி. அதிலிருந்து வருமானம் இல்லாவிட்டால் அவர் எப்படி வாடகை கொடுப்பார்?" என்றார் அப்பா.

புத்தக மாமாவைப் பார்க்கப் பெற்றோரை அழைத்துச் சென்றாள் சாந்தி. அப்பாவுக்கும் அவருக்கும் உடனடியாகச் சிநேகம் ஆகி விட்டது. புத்தக மாமாவின் குவியலில் அப்பா சிறுவயதில் தான் ரசித்துப் படித்த பல புத்தகங்களைக் கண்டுபிடித்தார். ஏதோ ஒரு கிராமத்துக் கல்லறையைப் பற்றி இங்கிலாந்துக் கவிஞர் எழுதிய கவிதை ஒன்றைப் பற்றி இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"என்னுடைய திட்டத்தைக் கைவிட வேண்டியதுதான்" என்றார் புத்தக மாமா.

"இந்த முக்கியமான ஆள் வராருங்கறதுக்காக இப்படிச் செய்யறது நியாயமே இல்லை" என்றார் அம்மா.

"மிக முக்கியமான நபர்" என்று திருத்தினாள் சாந்தி. சொல்லும்போதே அவளுக்கு ஒரு அற்புதமான எண்ணம் தோன்றியது. அவளே அதன் சிறப்பை எண்ணி வியந்து போனாள். "அவரிடமே கேட்கிறேன். மிக முக்கியமான நபரிடமே கேட்கிறேன்" என்று சொல்லிக்கொண்டாள்.

வீட்டுக்குப் போன சாந்தி, மீதி நேரமெல்லாம் ஒரு நீளமான கடிதம் எழுதுவதிலேயே செலவழித்தாள். மிக நல்ல ஒரு பென்சிலால் தனது மிகச் சிறந்த கையெழுத்தில் அதை எழுதினாள். அதைப் பிரதி செய்து பிழைகள் இல்லாமல் திருத்தினாள்.

அன்றைக்கு மாலை மிக முக்கியமான நபர் வந்தார். தொலைக்காட்சி நிலையத்திற்குள்ளே மிஸ். ரோஹிணியுடன் நேர் காணலுக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மாலை போட்டபோது கீழே ஒரு மடிந்த காகிதம் கிடந்ததைப் பார்த்தார். அதை மிதிக்காமல் தவிர்க்க அவர் நகரவேண்டி இருந்தது.

"இது என்ன தாள்? நிகழ்ச்சி நிரலில் இது கிடையாதே" என்று நிலைய நிர்வாகி சொன்னார்.

மிக முக்கியமான நபர் அந்தத் தாளைக் கையில் எடுத்துக் கொண்டார். அதைப் பிரித்துப் பார்த்துவிட்டுப் புன்னகைத்தார். இரண்டு முறைகள் அதைப் படித்தார். பிறகு நேர்காணலுக்காக உள்ளே போனார்.

அன்றிரவு தன் பெற்றோருடன் சாந்தி தொலைக்காட்சி பார்த்தாள். பிரபலமான அந்த நபரை மிஸ். ரோஹிணி அறிமுகப்படுத்தினார். அவருடன் பேசும்போது 'கொள்கை', 'முக்கியத்துவம்' போன்ற கடினமான சொற்கள் சாந்தியின் காதில் விழுந்தன. இறுதியாக "எங்கள் நகருக்கு உங்களுடைய விஜயம் மகிழ்ச்சியானதாக இருக்கிறது என நம்புகிறேன்" என்று மிஸ். ரோஹிணி கூறினார்.

சாந்திக்கு மூச்சே நின்று போனது. எதிர்பார்ப்பில் அவள் நெளிந்தாள்.

"உங்களுடைய நகரம் ரொம்ப அழகானது தான். நாளைக்கு நான் மருத்துவமனைக்கு விஜயம் செய்வேன். அது மட்டுமல்ல. இங்கு எல்லோரும் 'புத்தக மாமா' என்று அழைக்கும் அந்த மனிதரையும் பார்க்க நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று தொடங்கினார் அவர்.

மிஸ். ரோஹிணியின் வாய் பிளந்தது.

அவர் மேலும் தொடர்ந்தார், "புத்தக மாமா அற்புதமான தன்னார்வப் பணியைச் செய்துவருகிறார். மருத்துவமனைக்கு அருகில்தான். குழந்தைகளுக்குப் புத்தகங்கள் கொடுக்கிறாராம். இதைவிட நல்ல வேலை வேறு என்ன இருக்க முடியும்?"

தனது குரலைக் கண்டுபிடிக்கச் சிரமப்பட்ட மிஸ். ரோஹிணி "எதுவும் இருக்க முடியாது" என்றார்.

"எனக்கு ரொம்பப் பிடித்துப்போய்விட்டது. இந்த நகரத்தின் முதியோர், குழந்தைகள், கல்வி ஆகியவற்றின் பெருமைக்குரிய சின்னம் அவர்," என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தினார். தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். அவருக்குச் சந்தோஷமாயிற்று.

சாந்தியும் கை தட்டினாள். மறுநாள் முக்கிய நபர் அங்கே போவதற்குள் நகர நிர்வாகிகள் புத்தக மாமாவைக் கடைவிரிக்கச் சொல்வார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

மற்றொரு விஷயத்துக்காகவும் சாந்தி கை தட்டினாள். மிஸ். ரோஹிணி "சில சமயம் அச்சமாக இருந்தாலும், சொல்ல வேண்டியதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்" என்று சொன்னாரே, அதற்காகவும் தான்.

ஆங்கிலத்தில்: உமா கிருஷ்ணஸ்வாமி
தமிழில்: மதுரபாரதி

© TamilOnline.com