பன்முகம் கொண்ட வ.உ.சிதம்பரனார்
தமிழகத்தில் தேச பக்தி, தேச விடுதலை, சுதந்திரப் போராட்டம் என்று சிந்திக்கும் பொழுது வ.உ.சி.யின் பெயர் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது. ஆம்! சுப்பிர மணியசிவா, பாரதியார், திலகர், காந்தி, என்றெல்லாம் அந்தச் சிந்தனை விரிவு பெறும். ஆனாலும் சிலரது நினைவுகளும் பணிகளும் சிந்தனைகளும் வாழ்வும் வித்தியாசமானவை, தனித்துவமானவை. அந்தகையவர்களுள் ஒருவர் வ.உ.சி.

இன்று தமிழகத்தில் இலக்கியவாதிகள் பலர் அரசியல் தளத்திற்குச் சென்றுள்ளனர். அதேநேரம் அரசியல்வாதிகள் பலருக்கு இலக்கிய உலகு தளம் விரிந்துள்ளது. இவ்விரண்டும் வெகு இயல்பாக நிகழ்ந்து வருபவை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் அப்படியல்ல. வ.உ.சி. பிரிட்டிஷ் ஆதிபத்தியத்தை எதிர்த்த வேளையிலும் இலக்கியம் அரசியல், சமூகம் போன்றவற்றிலும் தனது முழுக் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார்.

வ.உ.சி. 1872 செப்டம்பர் 5-ம் நாள் ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் பிறந்தார். இளமையிலேயே தமிழும் ஆங்கிலமும் கற்று மொழிப் புலமை மிக்கவராக விளங்கினார். இவரது பாட்டனார் சிதம்பரக் கவிராயர் புலமை மிக்கவர். இதனால் தமிழ்ப்புலமை மரபுவழியாகத் இவருக்குக் கிடைத்த வளமாகும். 1894-ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு பெற்றார்.

1900-ல் தொழில் நிமித்தமாகத் தூத்துக்குடிக்குக் குடிபெயர்ந்தார். 'விவேகபானு'வில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். சுதேசிக் கப்பல் பற்றிய நீண்ட கட்டுரையும் இதே இதழில் எழுதினார். 1905 ஆகஸ்ட் 7-ம் தேதி சுதேசியக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். 1906-ல் இக்குழுமம் பதிவு செய்யப்பட்டது. 1907-ல் நடந்த சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்களுடன் கலந்து கொண்டார்.

1908-ல் தூத்துக்குடி கோரல் ஆலை தொழிலாளர் போராட்டத்துக்குத் தலைமை ஏற்றார். இந்தியாவில் நடந்த முதல் தொழிலாளர் போராட்டம் இது. அப்பொழுது சுப்பிரமணியசிவா வ.உ.சி.யுடன் தங்கியிருந்தார். இந்தப் போராட்டத்தை அரவிந்தர் பாராட்டினார். தொடர்ந்து விபின் சந்திரபால் விடுதலைக்குக் கூட்டம் நடத்தினார். மார்ச் 12-ல் சுப்பிரமணிய சிவா, வ.உ.சி. உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மார்ச் 13 அன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக் குடியில் கலவரம் மூண்டது.

கோவை சிறைவாசத்தின் பொழுது 1909 ஜூலை 7-ல் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்து. 1912 டிசம்பர் 12 அன்று கண்ணனூர்ச் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியில் வந்தார். அப்போது மாறிவரும் அரசியல் போக்கின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வ.உ.சிக்கு ஏற்பட்டது.

சிறைவாசத்தின் பொழுது வ.உ.சி. செக்கிழுத்த நிகழ்ச்சி பலரையும் பேச வைத்தது. அதனைக் குறித்துப் பாடவந்த பாரதியார் 'மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ' எனப் பாடினார். சுதந்திர வேட்கை மிகுந்த செயலாற்றலில் நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்த வ.உ.சி.யின் வாழ்க்கையில் சிறைவாசம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சிறைவாழ்வு ஒரு பெரும் மாற்றத்தினை அவர் உள்ளத்தில் ஏற்படுத்தியது. அதன் நெருக்கடிகள், வலிகள், தனிமை யாவற்றிலிருந்தும் விடுபடத் தமிழ் அவருக்குக் கை கொடுத்தது. ஆழ்ந்த, வாசிப்பு, தேடல், சிந்தனை, ஆராய்ச்சி என்ற மனநிலையில் செயல்படக் கூடிய பக்குவத்தை அவருக்குக் கொடுத்தது.

வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலை பெற்றபின் தமிழே அவருக்கு வாழ்வாயிற்று. வ.உ.சி.யின் கவனம், பணிகள்யாவும் மொழி மற்றும் இலக்கியம் சார்ந்து மையம் கொண்டது.

வ.உ.சி.யின் அரசியல் செயல்பாடுகள் நினைவு கூறப்படுகின்ற அளவுக்கு அவர்தம் தமிழ்ப் பணி மக்களால் அறியப்படாமல் உள்ளன. வ.உ.சி.யின் தமிழ்ப் பணிகளுக்கான காரணங்களாகக் கீழ்வருவனவற்றை முறைப்படுத்துவார் கலாநிதி க.ப. அறவாணன்:

1. அரசியலிலும் பொதுப்பணியிலும் தமிழரிடம் இருந்த செய்ந்நன்றி கொல்லும் செயல்பாட்டுத் துயரினின்றும் விலகி இருக்க விழைந்தவர், அவ்வருத்தத்தைப் போக்கி ஆற்றிக் கொள்ளும் துறையாக இலக்கியத் துறையைப் போற்றினார்.

2. ஆங்கிலேயருக்கு இணையாக இலக்கியத் துறையிலும் இந்தியர்கள்- தமிழர்கள் -சிறப்புக் கொண்டவர்கள் என நிலை நாட்ட விரும்பினார்.

3. தமிழின் இலக்கியப் பழமையையும் வளமையையும் பதிப்புத் துறையின் மூலம் எடுத்துக்காட்டி ஆங்கிலேயரினும் தமிழர் மேம்பட்டவர் என்ற உணர்வை தமிழருக்கு ஊட்ட வேண்டும் என்று வ.உ.சி. எண்ணி இருந்தல் கூடும்.

வ.உ.சி.யின் தமிழ்ப்பணி முனைப்புடன் செயல்பட்ட காலம் அவர் சிறையில் இருந்த 1908-12 வரையிலான காலகட்டம். சிறையிலிருந்து விடுதலை பெற்றபின், 1920 இல் நடைபெற்ற கல்கத்தா காங்கிரசிற்குப் பின், அவரது அரசியல் வாழ்வு நிறைவு அடைந்தது. அவரது தமிழ் வாழ்வு முழு வீச்சுடன் தொடங்கி 1936-ல் அவர் மறையும் வரை தொடர்ந்தது.

வ.உ.சி. எழுதிய நூல்கள், மொழிபெயர்த்த நூல்கள், உரை எழுதிய நூல்கள், பதிப்பித்த நூல்கள், நடத்திய ஏடுகள், அரசியல் சொற்பொழிவு என்று பன்முகம் கொண்டதாக இருந்தது. அவரது பணிகளின் சிறப்பைத் தலைவர் ப. ஜீவானந்தம் மொழியில் புரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும்.

"வங்கத்தில் சுதேசிக் கிளர்ச்சி மலர்ந்து கிளர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் பாட்டாளி மக்களின் படை திரட்டினார் வ.உ.சி. தமிழகத்தை உயர்த்த 'தரும சங்க நெசவுசாலை', 'சுதேசி நாவாய்ச் சங்கம்', 'சுதேசியப் பண்டகசாலை' ஆகிய ஸ்தாபனங்களை நிறுவினார். தூத்துக்குடிக்கும், சிங்களத் திற்கும் கப்பலோட்டிக் கொழுத்த வெள்ளைக் கம்பெனியார், 'ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல் ஓட்டினாய்' என்று வாய்விட்டலறச் சுதந்திரக் கப்பலை ஓட்டி, சுதேசிக் கொடியை உயர்த்திப் பிடித்தார் வ.உ.சி."

"தமிழ்ப் பண்பாட்டின் சிகரத்தில் வாழ்வு நடத்திய வ.உ.சி. 'இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லை'. வள்ளுவன் தெள்ளறி வில் வாழ்ந்து, தமிழ் வளர்த்தார் வ.உ.சி. பழைய இலக்கியங்களைப் புதிய முறையில் அச்சிட்டு, உரை எழுதித் தமிழனுக்கு வழங்கினார். புதுக்கருத்துக்கள் கொண்ட புது நூல்கள் தந்தார். 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்த' முயற்சியிலும் அவருக்குப் பங்குண்டு. சென்ற தலைமுறை யைச் சேர்ந்தவர் வ.உ.சி. - நமக்கு முன்னோடி".

வ.உ.சி. 1910-ல் சிறையில் இருந்தபடித் தொல்காப்பியத்தைக் கற்கத் தொடங்கினார். அதுவரை வெளிவந்த உரைகளின் கடுமையை உணர்ந்தார். தாமே எளிய உரை காண வேண்டும் என்று எழுதவும் தொடங்கினார். ஆனால் விடுதலைக்குப் பின்னர் 1868 இல் கன்னியப்ப முதலியாரால் வெளியிடப்பட்ட தொல்காப்பியம், எழுத்து, இளம்பூரணம் காண நேர்ந்தது. அதன் எளிமையையும் தெளிவையையும் கண்டு உரை எழுதுவதை நிறுத்திவிட்டார். ஆனால் இளம் பூரணத்தை முழுமையாகப் பதிப்பிக்கும் பாரிய பணியைத் தொடங்கினார்.

வ.உ.சி. எழுத்து மற்றும் பொருளாதிகாரம் முழுவதுமாகப் பதிப்பித்தார். ஆனால் சொல்லதிகாரத்தை ஏனோ பதிப்பிக்கவில்லை ஆயினும் அவரது பதிப்புப் போக்குகள் பாராட்டத் தக்கனவாக அமைகின்றன. பல ஆய்வாளர்களும் வ.உ.சி.யின் பதிப்பு நுட்பம் பற்றிய மதிப்பீட்டை முன்வைத்துள்ளனர்.

வ.உ.சி. தனது பதிப்புக் கொள்கையை எழுத்ததிகாரப் பதிப்பு முன்னுரையில், 'கற்போர் எளிதில் உணருமாறு பொருட்டொடர்பு நோக்கிச் சூத்திரச் சொற்களையும் அவற்றின் பொருட்சொற்களையும் பிரித்தும் நிறுத்திப் படித்தற்குரிய அடையாளங்களிட்டும் பதிப்பித்துள்ளேன். ஒவ்வோரிடத்தில் பாடவேறுபாடும், உரைவேறுபாடும் சேர்த்துள்ளேன். எனது சேர்ப்பிற்கு முன்னும் பின்னும் முறையே [ ] இக்குறிகள் இட்டுள்ளேன்' என்று குறித்துள்ளார்.

'இளம் பூரணரே முதல் உரையாசிரியர். அவர் 'உரையாசிரியர்' எனவே யாவராலும் வழங்கப்படும் பெருமை வாய்ந்தவர். அவர் மூன்று அதிகார உரைகளுள்ளும் எழுத்ததி காரவுரை 'எழுத்திற்கு இளம்பூரணம்' என்று யாவராலும் புகழப் பெற்றது' என்று வ.உ.சி. பதிப்புரையில் குறிப்பிட்டு இளம் பூரணர் பெற்ற சிறப்பைப் பாராட்டும் திறன் அவரது புலமைக்குச் சான்று.

இவர் எஸ். வையாபுரிப்பிள்ளையின் பங்கை மனதாரப் பாராட்டும் பாங்கு இன்றைய ஆய்வாளர்களுக்கு இல்லாத ஒன்று. 'ஏழு இயல்களுக்கும் பெயரளவில் பதிப்பாசிரியர் யான். உண்மையில் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்களே. அவர்கள் செய்த நன்றி என்னால் என்றும் உன்னற் பாலது' என்று வெளிப்படையாகக் கூறுகின்றார்.

மேலும் வ. உ. சி யின் உரைத்திறன் பற்றிய கணிப்பு முக்கியம். இதில் திருக்குறளுக்கு உரை விளக்கம் கண்ட சிறப்பு முக்கியம் வ.உ.சி யின் குறள் பற்று சிலசமயங்களில் வெறியாகவும் மாறி உரை மாறுபாடுகள் கண்டு தகும் உரை வகுக்கும் அளவில் நின்று விடாது குறளையே திருத்தும் நிலைக்கும் சென்றுவிடும் என்பதை பி.ஸ்ரீ நினைவு கூர்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருக்குறள் அறப்பாலுக்கு வ.உ.சி. செய்திருக்கும் உரைவிளக்கம் மிகச் சிறந்த ஒன்றாகும். அறப்பாலில் நாற்பத்து நான்கு புதிய மூல பாடங்களை அவர் கண்டுபிடித்துள்ளார். ஏறத்தாழ எழுபத்தாறு குறட்பாக்களுக்குப் பரிமேலழகர் உரையினின்று முற்றிலும் வேறுபட்டுப் பொருள் உரைக்கின்றார் எனவும் சில ஆய்வாளர் கள் கருத்துரைக்கின்றார்கள்.

திருக்குறள், சிவஞானபோதம், இன்னிலை போன்ற நூல்களுக்கு எழுதிய உரைகள் மூலம் வ.உ.சி.யின் ஆழந்த புலமையை இனங்கண்டு கொள்ளலாம். பதிப்பாசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர் என பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதைவிட, மொழி பற்றிய அறிவியல் கண்ணோட்டமும் வாய்க்கப் பெற்றிருந்தார்.

ஞானபானு (29.10.1915) இதழில் அவர் எழுதிய மொழி பற்றிய சிந்தனை இவ்விடத்து நோக்கத்தக்கது. 'காலத்துக்கேற்ற கருத்து வளர்ச்சியினை ஏற்படுத்தும் சொற்களை உருவாக்க வேண்டியது நம் தேவை. 'தமிழ்ப்பதங்கள் கிடையா' என்று வேற்றுச் சொற்களைக் கலவாமல் தமிழிலேயே ஆக்கிக் கொள்ள வேண்டும். நாம் இவ்வாறு செய்தால்தான் நம் தமிழ் பாஷைக்கும் நம் தமிழ் மக்களுக்கும் ஒரு பெரிய நன்மை செய்தவர்களாவோம்'. இவ்வாறு மொழி, இலக்கியம் குறித்த சிந்தனைகளை ஆங்காங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

கப்பல், சிறைவாசம் செக்கிழுப்பு என்ற சொற்களுக்குள்ளேயே அவரது பன்முகத் தன்மை புதைக்கப்பட்டுவிட்டது. இந்த வரலாற்றுப் பிறழ்ச்சியில் இருந்து வ.உ.சி.யை மீட்டு அவரது முழு ஆளுமையைப் புரிந்து கொள்வது நாம் அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடன்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com