தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கணையாழியில் ஒரு சிறுகதை வெளியானது. 'தீ' என்ற தலைப்பைக் கொண்ட அந்தக் கதை அந்த மாதத்துக்கான இலக்கிய சிந்தனைப் பரிசைப் பெற்றது. பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று டெல்லியில் நடந்த கலவரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. டெல்லியைச் சேர்ந்த சு. கணபதி என்பவர் எழுதியிருந்தார். என்றும் விடிவதைப் போலவே அன்றும் விடிந்த பொழுது, சட்டென்று திசை மாறி, பத்து வயது சர்தார்ஜி குடும்பத்துப் பையனுடைய கழுத்தில் வண்டிச் சக்கரம் மாட்டப்பட்டு, பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கப்படும் காட்சியோடு முடிவடைகின்ற அன்றைய தினத்தை, சற்றும் மிகையில்லாமல், உணர்ச்சிகளைத் தூண்டித்தான் தீருவேன், கண்ணீரை வரவழைத்த பின்னரே ஓய்வேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்காமல் இயல்பாகச் சொல்லியிருந்தது அந்தக் கதை. பின்னர் நெடுநாள் பேசப்பட்டது.
அதற்கு ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் 'கொம்பை ஊதுங்கள்; மேளம் முழக்குங்கள்' என்றவாறு, முப்பத்து முக்கோடி தேவர்களின் வரிசையில் சேரப் போகும் 'சதிமாதாவுக்கு' ஆங்கிலக் கவிதை பிரிட்டிஷ் கவுன்சிலால் இந்திய அளவில் - சுமார் ஆறாயிரம் கவிதைகளில் - சிறந்த நான்கு கவிதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு பெற்றது. சட்டங்களை அலட்சியம் செய்து உடன்கட்டை ஏற்ற வைக்கும் 'சதி' தீயைச் சுற்றியே பின்னப்பட்டிருந்த கவிதை. எழுதியவர், எஸ். கணபதி. டெல்லியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலையில் 'தீ' வடிவில் நின்றான் இறைவன். அருணாசலம் ஓர் அக்னித் தலம். அவனுடைய முடியைத் தேடியவாறு பிரமனும், அடியைத் தேடியவாறு திருமாலும் சென்றனர். 'பிடித்தே தீருவேன்' என்று பிடிவாதமாகக் கிளம்பியவர்களுக்குச் சிக்காத இறைவன், 'நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன்,' என்று தொடங்கிய முதல் வாசகத்தில் 'நானாகவும், எனதாகவும்' தன்னை உணர்ந்து, அடுத்த வாசகத்திலேயே 'இது நல்ல காரியத்தில்தான் பிரவேசித்திருக்கிறது' என்று தன்னை 'இது'வாகக் கண்ட சிறுவனிடத்தில் எளிதாகச் சிக்கினான்.
பெற்றோரால் வெங்கடராமன் என்று பெயர் சூட்டப்பட்ட அந்தச் சிறுவன் தன்னுள் நிறைந்த தன்னைக் கண்டு, தந்தையின் அழைப்பை உள்ளே உணர்ந்து, வீட்டை விட்டுத் திருவண்ணாமலைக்குக் கிளம்பிய போது எழுதிய கடிதத்திலும் சரி, கடைசி கடைசியாக அவனைச் சுற்றி ஓர் ஆசிரமம் எழுந்து, அந்த ஆசிரமத்துக்கென சில அசையாச் சொத்துகளும் சேர்ந்த பிறகு நிர்வாகக் காரணங்களுக்காகத் தயாரிக்கப் பட்ட உயிலில் கையொப்பமிடக் கோரி பத்திரத்தை அவன் முன் நீட்டிய போதும் சரி, தன் கையெழுத்தாக இட்டது ஒரே ஒரு கோடு மட்டுமே. தன் வரையில் தனக்கென்று ஒரு பெயரில்லாத, பெயரையும் துறந்த வனாகவே வாழ்ந்து, பரிபூரண ஞானத்தைச் சிறிய வயதிலேயே அடைந்து, பின்னாளில் காவ்யகண்ட கணபதி முனிகளால் 'பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி' என்று பெயர் சூட்டப்பட்ட மகான் ரமணர், இந்திய தேசத்தின் ஞானியர்க்கெல்லாம் ஞானி.
'நான் யார்' என்று உன்னை நீயே கேட்டுக் கொள். எல்லா வகையான ஞானத்துக்கும் அந்தக் கேள்வியே திறவுகோல்,' என்ற மிக எளிமையான உபதேசத்தையே தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் வழங்கியவர். சகலவிதமான சித்திகளையும் அடைந்திருந்த போதிலும், ஒன்றையேனும் வெளிக் காட்டாமல் தன்னை முற்றிலும் மறைத்துக் கொண்டவர்.
அவ்வப்போது, சில அவசியமான காரணங்களுக்காக மட்டுமே அவர் மிகச் சில அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். ஞான பாரம்பரியம் மிக்க இந்தியாவில், சித்த புருஷர்கள் ஏராளமாக இருந்திருக்கின்றனர். ஆயின், பெற்ற சித்தியை வெளிக்காட்டாமல், அவசியத்துக்காக - அதுவும் அடுத்தவர் நலத்துக்காக - பயன்படுத்தியவர்கள் வெகு சிலரே.
அவர்களுள் இருவர் முக்கியமானவர்கள். வடக்கே ஒரு ராமகிருஷ்ண பகவான். தெற்கே ஒரு ரமண பகவான். ரமணருடைய வாழ்வையும் வாக்கையும் பல்வேறுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து இந்தியாவை நாடி வந்த பால் பிரன்டன், ஆர்தர் ஆஸ்பர்ன் தொடங்கி, தேவராஜ முதலியார், ஹம்·ப்ரீஸ், சாட்விக் என்று அவரோடு பலகாலம் வாழும் பேறுபெற்ற பலர் பல சம்பவங்களை விவரித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வோர் அம்சத்தைத் தொட்டுத் துலக்கியிருக்கிறார்கள். சென்னை கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான 'ரமண சரிதம்' அண்மையில் இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது. எழுதியவர் மதுரபாரதி. சென்னையைச் சேர்ந்தவர்.
ரமணருடைய வாழ்க்கையைப் பதிவு செய்த மற்றவர்களுக்கு இல்லாத, பால் பிரன்டனுக்கு இருந்த ஒரு தனித் தகுதி மதுரபாரதிக்கும் இருக்கிறது. பால் பிரன்டனும் நாத்திகனாக இருந்தவர். மதுரபாரதியும் நாத்திகக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். 'இருபதாண்டுகளுக்கு மேல் கடவுள் நம்பிக்கையற்று இருந்தவன்' என்று தன்னைப் பற்றி அவரே முன்னுரையில் சொல்கிறார். அவருடைய 'நம்பிக்கை மறுப்பு'க் கருத்துகளை ஒரு கட்டத்தில் தகர்த்துப் பொடிப்பொடியாக்கியது பால் பிரன்டன் எழுதிய A Search in Secret India என்ற புத்தகம்.
அதைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்து, கொஞ்ச கொஞ்சமாகத் தன்னை ரமணரில் இழந்தவராக முதிர்ந்திருக்கிறார் மதுரபாரதி.
'இப்படிப்பட்ட பக்தர்கள் எழுதுகின்ற புத்தகம்னாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. அவர்கள் எழுத்திலிருக்கும் பக்திப் பரவசத்தைத் தனியாகப் பிரித்து எடுத்த பிறகுதான் புத்தகம் ஒரு வடிவத்துக்கு வரும். அந்தக் காரியத்தைச் செய்து முடிக்க ஒரு மாத காலமாகும் என்று எதிர்பார்த்தேன்,' என்று குறிப்பிட்டார் இந்நூலின் பதிப்பாசிரியர் பா. ராகவன்.
ஆனால், எந்தவிதமான மாறுதலும் தேவைப்படாமல் புத்தகத்தின் கணிப் பிரதி - கையெழுத்துப் பிரதிதான் இந்நாளில் காணாமல் போய்விட்டதே! - நேரடியாக அச்சு வாகனம் ஏறியது. புத்தகம் எதிர் பார்த்ததைக் காட்டிலும் ஒரு மாத காலம் முன்னதாகவே வெளிவந்துவிட்டது. அவ்வளவு நேர்த்தியான விவரிப்பு. நம்பிக்கையின்மை தகர்ந்து ஆத்திகனானவனுடைய தெளிவும், நேர்மையும், உண்மையும் தொடக்க முதல் கடைசிப் பக்கம் வரை தெரிகின்றன.
ரமணரைப் பற்றி எழுதப்பட்ட எழுத்துகளைப் புரிந்துகொண்டாலும், ரமணருடைய எழுத்துகளைப் புரிந்துகொள்வது சற்றுக் கடினமான ஒன்றுதான். எட்டாம் வகுப்பைத் தாண்டாத வெங்கட்ராமனாகத் திருவண்ணாமலைக்கு வந்தவர், மிக எளிய அருணாசல அக்ஷரமண மாலை தொடங்கி, கருத்தாலும் சரி, எழுத்தாலும் சரி, உடைத்துப் பார்க்கவே போராட வேண்டிய வெண்பாக்களால் ஆன 'உள்ளது நாற்பது' வரை பல நூல்களை இயற்றினார். 'எழுத வேண்டும் என்ற அவசியமெல்லாம் எப்போதும் தோன்றுவதில்லை. எப்போதாவது இப்படி ஒன்று தோன்றும்,' என்று ரமணர் இவற்றைப் பற்றிச் சொல்வார். சாதாரண பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காத ஒருவரால் எப்படி இப்படிப்பட்ட நடையில் எழுத முடிந்தது என்று கற்றவர்களே சற்றுத் தடுமாறித்தான் போக வேண்டியிருக்கும். உள்ளது நாற்பதின் தொடக்கமான
உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்பொரு ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா - லுள்ளமெனு முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி யுள்ளதே யுள்ள லுணர்
என்ற அவருடைய வெண்பாவை வாய் விட்டுப் படிக்கவே கொஞ்சம் முயற்சி தேவைப்படும்.
இயல்பிலேயே கவிஞராகவும் கம்பராமாயணம் போன்ற காவியங்களைக் கற்றவராகவும் விளங்கும் மதுரபாரதிக்கு ரமணருடைய வாழ்வும் சரி, எழுத்தும் சரி மிக இயல்பாகப் பிடிபட்டிருக்கிறது. மிகச் சரளமான நடையில், நெருங்கிய நண்பனோடு ஒரு மாலைப்போதில் அமர்ந்து உரையாடும் எளிமையில் இந்த ரமண சித்திரத்தைத் தீட்டியிருக்கிறார். பதினேழு வயதில் வெங்கட்ராமன் தனக்கு ஏற்படுத்திக் கொண்ட மரண அனுபவம் தொடங்கி, சிவத்தைத் தன் தந்தையாகக் கண்டு, அருணாசலத்தில் பாதாள லிங்க சன்னதியில் தன்னை இழந்த நிலையில் தியானத்தில் கலந்து, திருவண்ணாமலை தொடங்கி, அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு போன்ற வெளிநாடுகள் வரை பரவிய ரமண கீர்த்தி, முழுமையில் முழுமையாகக் கலந்தது வரை ஒன்று விடாமல் மிக எளிய நடையில் விவரித்திருக்கிறார் மதுரபாரதி. ரமணரால் ஈர்க்கப்பட்டு பாதை மாறியவராதலாலே அவருடைய உள்ளார்ந்த அனுபவமும் புத்தகத்தின் ஊடே மென்மையாக விரவிக் கிடக்கிறது.
ரமணரின் போதனைகளைத் தனியாகப் பிரித்துவிடாமல் அவரது வாழ்க்கையோடு ஒன்றிப் பார்த்திருப்பதும் இந்நூலின் மற்றொரு சிறப்பு. எங்கே போதனை, எங்கே வாழ்க்கை என்று பிரிக்கவே முடியாது. ஆனால் ரமணரின் மிக எளிய தத்துவம் நமக்குள்ளே புகுந்துகொண்டுவிடுகிறது.
கிழக்கு பதிப்பகம் இந்த நூலை அருமையாகத் தயாரித்திருக்கிறது. இருநூறு பக்கங்கள் உள்ள ஒரு தமிழ்ப் புத்தகத்தில் அச்சுப்பிழை ஏறத்தாழ இல்லவே இல்லை என்ற நிலையில் வெளிவந்திருப்பதே நல்ல அறிகுறி. அருமையான தோற்றம்; அருமையான அச்சு; அருமையான தாள்; அருமையான நடை. கடைசியாக ஆர்தர் ஆஸ்பர்னைப் படித்த போது ஏற்பட்ட ரமணானுபவம், மதுரபாரதியின் 'ரமண சரிதம்' நூலிலும் ஏற்பட்டது. ஒன்று சொல்ல வேண்டும், கடைசியாக. டெல்லியில் குடியிருந்த சு. கணபதிக்கும் நெருப்புக்கும் ஏதோ ஒருவிதத்தில் எப்போதும் தொடர்பிருந்திருக்கிறது. அவர் டெல்லிவாசியான கணபதியாக இருந்து எழுதிய 'தீ' சிறுகதையும் சரி; உடன்கட்டை ஏற்றப்படும் 'சதி' நெருப்பைப் பற்றிய கவிதையும் சரி; அருணாசல ஜோதியோடு ஒன்றிக் கலந்த ரமணாக்னியைப் பற்றி சென்னை மதுரபாரதியாக மாறி எழுதியிருக்கும் இந்த நூலும் சரி. அவருக்குப் பெருமை சேர்ப்பனவே. முதலிரண்டு படைப்புகளும் சேர்த்துவிட்டன. இது சேர்த்துக்கொண்டிருக்கிறது.
நூல்: ரமண சரிதம்
ஆசிரியர்: மதுரபாரதி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், எண் 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை 600004.
வலைத்தளம்: www.newhorizonmedia.co.in
இணையம் மூலம் வாங்க: www.kamadenu.com
கரியவன் |