காலறிவும் அரையறிவும் முழுஅறிவும்
நன்னூல் என்பது தமிழ்மொழி இலக்கண நூல் என்பது நன்கு தெரிந்ததே. அதனை இயற்றிய காலம் தோராயமாகத் தொள்ளாயிரம் ஆண்டுகள் முன்பு (கி.பி. 12-ம் நூற்றாண்டு). அதை இயற்றியவர் பவணந்தி என்பவர்; அவர் ஊர் அரக்கோணத்தின் அருகில் உள்ள சனகாபுரமா அல்லது மைசூர் நரசிபுரத்தின் அருகே உள்ள சனகாபுரமா என்று ஐயம் நிலவுகிறது. அதன் பொதுப்பாயிரத்தில் (பொது முன்னுரை) சில மிக அரிய கல்வி நெறிகள் சொல்லப்படுவது நம் பேறாகும்.

மாணவர்களாகச் சேர்ப்பவர்கள் வகை:
தன்மகன், ஆசான் மகனே, மன்மகன்,
பொருள்நனி கொடுப்போன், வழிபடுவோனே,
உரைகோளா ளற்கு உரைப்பது நூலே
(நன்னூல்: 37)

[மன் = மன்னன்; நனி = நன்கு, மிக]

தன் மகன், தன் ஆசிரியன் மகன், மன்னன் மகன், பொருள்மிகக் கொடுப்பவன், தன்னை வழிபடுவோன், உரைப்பதைச் சட்டென்று உள்ளத்தில் கொள்பவன் என்று இவர்களுக்குக் கல்வி உரைப்பத் தகுதியாகும் என்கிறது.

இதை இக்காலக் கல்லூரி நோக்கில் பார்க்கலாம்: ஆர்வார்டு, யேல் போன்ற அதிதரப் பல்கலையாக இருந்தாலும் உயர்தரமான மாணவர்கள் (உரைகோளாளர்) உதவித்தொகை கட்டணச் சலுகை போன்றவற்றைப் பெற்றுச் செலவின்றிப் படிப்பார்கள்; ஆனால் அந்த அதிகட்டணத்தையும் தாமே முழுதும் கட்ட ஆயத்தமாக இருக்கும் செல்வந்தர்களையும் சேர்த்துக் கொள்வதுபோலவே பொருள்நனி கொடுப்போனைச் சேர்ப்பதாகும்!

ஆயினும் கட்டணங் கட்டப் பணமூட்டையோடு இருப்பதால் மட்டும், குறைந்த அளவேனும் தரமில்லாதவனை எந்த மதிப்புள்ள கல்லூரியும் மாணவனாக ஏலாது. மாணவனாகச் சேரவோ தொடரவோ தகுதியில்லாதவர்கள் யார்?

மாணவனாகச் சேர்க்கத் தகுதியில்லார்:

களி,மடி, மானி, காமி, கள்வன்,
பிணியன், ஏழை, பிணக்கன், சினத்தன்,
துயில்வோன், மந்தன், தொன்னூற்கு அஞ்சித்
தடுமாறு உளத்தன், தறுகணன், பாவி,
படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே
(நன்னூல்:39)

[ஏழை = முட்டாள்; தறுகண் = கொடூரம்]

கள்குடியன், சோம்பேறி, பொருந்தாத மானம் செருக்கு உடையவன், காமுகன், களவாணி, நோயாளி, முட்டாள், சண்டைக்காரன், கோபக்காரன், தூங்குமூஞ்சி, மந்தமூளையன், பழைய நூல்களைக் கற்க அஞ்சி மனந்தடுமாறுபவன், கொடூரமானவன், பாவி, பொய்யன் என்றவர்களுக்குப் பாடம் பகரமாட்டார்கள் என்கிறது நன்னூல்.

இங்கே களி என்பதைப் பொதுவாகப் போதைமருந்துக்காரனையும் அடக்கப் பொருள் கொள்ள வேண்டும்; காமுகன் என்பதில் கல்லூரிச் சகமாணவிகளிடம் சீண்டல் (eve teasing) போன்றவற்றைச் செய்து தவறாக நடப்பவனையும் ஆபாசங்ளைச் செய்ய முயல்பவனையும் சேர்க்கவேண்டும்.

அது சரி, ஆசிரியனாக இருக்கக்கூடாதவர் யார்?

மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
அழுக்காறு, அவா, வஞ்சம், அச்சம் ஆடலும்,
கழற்குடம் மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே
(நன்னூல்: 31)

[ஆடல் = பேசுதல்; கழல் = ஒருவகைக்கொட்டை; குண்டிகை = குடுக்கை]

“பாடத்தை மொழிவதற்குரிய குணமின்மையும், இழிவான இயல்பும், பொறாமை, பொருள்மேல் பேராசை, வஞ்சகம், மாணவர்கள் அஞ்சுமாறு பேசுதலும் ஆகிய குறைகளை உடையவர்களும்;

தன்னுள்ளே காய்களைப் போட்ட முறையல்லாமல் எடுக்கும்பொழுது மாறித்தரும் கழற்காய்ப்பானை போலத் தான் கற்றதைப் பிறழ்ந்து கற்பிக்கும் தன்மையும், தானே தன் பழத்தைக் கொடுத்தாலன்றி தன்னை நெருங்கிப் பெறமுடியாத அளவு அரம்போலும் கருக்கு மடலுடைய பனைமரம் போல நெருங்கமுடியாத தன்மையும்,

தன்னிடம் பஞ்சு திணிக்கும் பொழுது சிறிது சிறிதே அடைக்க விட்டுப் பஞ்சை எடுக்கும்பொழுதும் விரல்நுனியளவே கொடுத்துப் பாடுபடுத்தும் பருத்திக் குடுக்கை; அது போலத் தான் கற்கும் பொழுது மகாப் பாடுபட்டுக் கொஞ்சங்கொஞ்சமாகச் சேர்த்துக் கற்றுத் தான் பிறர்க்குக் கற்பிக்கும் பொழுதும் சிறிது சிறிதாகப் பிடுங்கிப் பிடுங்கிப் பெறவேண்டுமாறு மாணவர்களைப் பாடுபடுத்திக் கற்பிக்கும் தன்மையும், தன்னை அரும்பாடுபட்டு வளர்த்தவன் நிலத்தில் வளர்ந்து யாரோ ஒருவனுக்குக் காய்கொடுக்கும் கோணலான தென்னைமரம் ஆகியவை போன்று மாறுபட்ட சிந்தனையும் உடையவர்கள் ஆசிரியர் ஆகுதல் இல்லை”!

மேலே காணும் சொற்கள் இன்றும் நல்ல கல்லூரியோ பள்ளியோ நடத்த விரும்புவோர்க்கு வழிகாட்டுவதைக் காண்கிறோம்.

பாடங்கேட்கும் முறை:

கோடல் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி அவன்குறிப்பின் சார்ந்து
இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவிவாய் ஆக நெஞ்சு களனாகக்
கேட்டவை கேட்டவை விடாது உளத்தமைத்துப்
போவெனப் போதல் என்மனார் புலவர்
(நன்னூல்:40)

பாடங்கொள்ளும் நெறியைக் கூறும்பொழுது: வகுப்பிற்கு ஆசிரியர் குறித்த பொழுதிற்குச் சென்று ஆசிரியனை வணங்க வெறுக்காமல் நல்ல குணத்தோடு பழகி, ஆசிரியன் குறிப்பை அறிந்து, ஆசிரியன் “பாடங்கேட்க இரு” என்றால் இருந்து, வாய்திறந்து பேசு என்றால் பேசி, அள்ளிப் பருகுபவன்போல ஆர்வத்தோடு இருந்து, சித்திரப் பாவைபோல அமைதியாக அடங்கி இருந்து, காது வாயாக, நெஞ்சம் விதைக்கும் வயலாகத் தான் கேட்டவையெல்லாம் விடாமல் உள்ளத்தே பொருத்திப் போவென்றால் போவதே முறையாகும் என்பார்கள் அறிஞர்கள்!

நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல்,
பாடம் போற்றல், கேட்டவை நினைத்தல்,
சாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல்,
அம்மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல், வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்
(நன்னூல்: 41)

[நுவலின் = சொன்னால்; போற்றல் = கவனித்தல்; இகக்கும் = நீங்கும்]

நூல் பயிலும் இயல்பைச் சொல்லப்போனால்: நூல் வழக்கு நடைமுறை வழக்கம் இரண்டையும் அறிதல் (theory and practice), பாடத்தைக் கவனித்தல், கேட்டதை மீண்டும் மீண்டும் நினைத்தல், ஆசானைச் சார்ந்திருந்து ஐயம் தெளியக் கேட்டல், அதே மாண்போடு உடைய சகமாணவர்களோடு பயிலுதல், கேள்வி கேட்டல், கேட்ட கேள்விக்கு விடை விடுத்தல் என்று இவற்றைக் கற்கும் கடமையாகக் கொண்டால் அறியாமை மிகவும் நீங்கும்!

மூன்று முறை பாடம்படி!

தெளிவாக ஐயம் திரிபறக் கற்கும் முறை என்னவென்று பவணந்தியார் சொல்வது போற்றத்தக்கதாகும்:
ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்

பெருக நூலிற் பிழைபாடு இலனே
(நன்னூல்: 42)

[குறி = நூல்; கால் = பொழுது]

ஒரு பாடம் கேட்பவன் இரண்டு தடவை கேட்டால் தன் நூற்கல்வியில் பெரும்பாலான பிழைகள் இல்லாமல் இருப்பான்.

முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும்
(நன்னூல்:43)

அதே பாடத்தை மூன்று முறை கேட்டால் ஆசிரியன் கற்ற மாதிரியே தானும் அறிந்து சொல்லும் தெளிவை அடைவான்!

காலும் காலும் அரையும்!
சான் உரைத்தது அமைவரக் கொளினும்
காற்கூறு அல்லது பற்றிலன் ஆகும்
(நன்னூல்:44)

ஆசிரியன் உரைத்ததை நிரம்பக் கேட்டுக்கொண்டாலும் முழுப்புலமையில் காற்பங்கு அல்லது அதற்குமேலே பற்றியவன் ஆகான் ஒரு மாணவன்!

அதற்கு மேலும் புலமை பெற என்ன செய்வது?
அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்!
(நன்னூல்:45)

தன்போலவே அந்தக் கடமையில் ஈடுபட்டுள்ள சகமாணவர்களோடு பழக இன்னும் காற்பங்குப் புலமை கிட்டும்! அப்பொழுதும் பாதிப் புலமைதானே! இன்னும் பாதிக்கு என்ன செய்வது?!

செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மையறு புலமை மாண்புஉடைத்து ஆகும்!
(நன்னூல்:45)

[மை = குற்றம்]

தான் கற்றதைத் திருத்தமாகப் பிறருக்குச் சொல்ல மீதி இரண்டுகாற் பங்கும் குற்றமற்ற முறையிலே புலமை நிரம்பும்!

இவ்வாறு இக்காலத்திலும் எல்லாத் துறைக்கும் பொருந்துமாறு சீரிய கல்விமுறையைச் செந்தமிழ்மொழி இலக்கணநூல் காட்டியுள்ளதைக் காண்கிறோம்; அதை நாமும் உணர்ந்து பின்பற்றினால் பெருத்த வெற்றி உறுதி!


உதவி: “நன்னூல் காண்டிகையுரை”, புலவர் இரா.இளங்குமரனார் உரை,
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1998

பெரியண்ணன் சந்திரசேகரன்
அட்லாண்டா

© TamilOnline.com