மெய்நிகர் மாயத்தின் மர்மம் பாகம் - 9
கதிரவன் எழில்மன்னன்
முன் கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீகமாகக் காதலித்தாலும், அவர் தன் கடந்த கால சோகத்தை மறந்து தன்னை வெளிப் படையாக நெருங்கக் காத்திருக்கிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
சிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் என்பவர் தன் மெய்நிகர் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சூர்யாவை அழைத்தார். நாகுவும், அவரது தலைமை விஞ்ஞானி ரிச்சர்டும், தங்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டுமானால், மெய்நிகர் உலகையும் அதிலேயே பெரும் சக்தி வாய்ந்த உணர்வுத் தூண்டலையும் சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் தாங்களே உணர வேண்டும் என்றனர். அதற்கான சாதனத்தை அவர்கள் அணிந்தவுடன் ரிச்சர்ட் கிரணுக்குக் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருப்பது போல் காட்டி, எடையின்மை (weightlessness) உணர்வைத் தூண்டி வியப்பளித்தார். ஆனால் அது கிரணுக்குத் தாங்க முடியாத தலைவலி அளித்து பெரும் அபாயத்துக்குள்ளாக்கிவிட்டது. சூர்யா அதைப் பற்றி ஆழமாக விசாரிக்க ஆரம்பித்தார். ஜேம்ஸ் என்னும் உப ஆராய்ச்சியாளரின் புள்ளி விவர அலசலின் மூலம் இந்தப் பிரச்சனை வெளி டெமோக்களின் போது மட்டுமே ஏற்படுகிறது என்று தெரிய வந்தது. நிறுவனத்திலிருந்து விடுமுறையில் இருக்கையில் இறந்து விட்ட ரஷ்ய விஞ்ஞானி மோட்யஷேவ்தான் உணர்வுத் தூண்டல் தொழில் நுட்பத்துக்கே மூலம் என்று ஏற்கனவே ரிச்சர்ட் கூறியிருந்ததால், சூர்யா அவரது அறையைச் சோதனையிட விரும்பினார். அங்கு...
பலப் பலக் காகித மலைகளாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த களேபரத்துடன் காட்சியளித்த மோட்யஷேவின் அறையைக் கண்டு வியப்புற்ற சூர்யா அவர் கம்ப்யூட்டரைப் பயன் படுத்துவதே இல்லையா என்று வினாவினவுடன், பயன் படுத்துவார், ஆனால் அதை முழுவதும் நம்பாமல் எல்லாக் குறிப்புகளையும் காகிதப் பிரதி எடுத்துக் கொள்வார் என்று ரிச்சர்ட் விளக்கியதும் சூர்யாவுக்கு பளிச்சென ஒரு எண்ணம் உதித்தது!
மோட்யஷேவ் முக்கியமாக எதையாவது குறித்திருந்தாரா என்பதை, அங்கு குவிந்து கிடந்தக் காகித மலைகளைக் குடைந்துக் கண்டெடுப்பது பல மாதக் காரியமாகிவிடும் என்று சூர்யா உணர்ந்தார். அதனால், வேறுவிதமாக அணுக நினைத்து வினாவினார். 'ரிச்சர்ட், ஜேம்ஸ் உங்க ரெண்டு பேருக்கும் மோட்யஷேவ் மிக முக்கியக் குறிப்புக்களை மட்டுமே எழுதி வைத்திருக்கக் கூடிய கம்ப்யூட்டர் கோப்பு (file) அல்லது காகிதத்திலான ஆராய்ச்சிக் குறிப்பேடு (lab notebook) பற்றி எதாவது தெரியுமா?'
ரிச்சர்ட், ஜேம்ஸ் இருவருமே ஆமாமெனத் தலையாட்டினார். ஜேம்ஸ் முந்திக் கொண்டு, 'ரொம்ப சரியான கேள்விதான் சூர்யா! மோட்யஷேவ் இறந்துட்டதா செய்தி கிடைச்சதும் நாங்க கூட அதைத் தான் முதல்ல தேடினோம். கம்ப்யூட்டர்ல ஒண்ணும் அந்த மாதிரி சுருக்கக் குறிப்புக் கோப்பு (summary notes file) இருக்கறா மாதிரி தெரியலை. ஆனா நீங்கக் கேட்டா மாதிரியே ஒரு லேப் குறிப்பேடு எழுதிக்கிட்டிருந்தார். இதோ அவர் மேஜைக்குள்ளதான் வச்சிருக்கணும்.' என்று கூறி விட்டுக் குனிந்து அந்த மேஜையின் உள்ளறையைத் திறந்துப் பார்த்தார்.
உள்ளேத் தேடிப் பார்த்தவர் நிமிர்ந்து குழப்பத்துடன் தலையைச் சொறிந்தார்! 'ஹாங்! ரொம்ப ஆச்சர்யமா இருக்கே! இங்கதானே இருந்தது! எங்க போச்சு?!'
ரிச்சர்டும் குழம்பினார். 'ஹூம்!... அங்கதான் இருந்தா மாதிரி இருந்தது?...' என்று சில நொடிகள் யோசித்தவர், திடீரென எதோ எண்ணம் தோன்றவே, 'ஹா!' என்று கூவி விட்டு, கையைச் சொடுக்கினார். 'ஜேம்ஸ், ஒரு வேளை மோட்யஷேவுடைய தனிப்பட்ட உடைமைகளோட அனுப்பிச் சுட்டமோ? ஞாபகம் இருக்கா? சில நாட்கள் முன்னாடி யூரின்னு அவரோட உறவினன் வந்து வாங்கிக் கிட்டுப் போனானே?'
ஜேம்ஸின் முகத்திலிருந்து குழப்பம் நீங்கியது. ''! ஆமாமாம். அப்படியே கூட இருக்கலாம். எனக்கு அது மறந்தே போச்சு. நல்ல வேளையா அதை சொன்னீங்க. இல்லைன்னா இதைப் பத்தி மனசுக்குள்ள உழந்துக்கிட்டே கிடந்திருப்பேன்!' என்று கூறி விட்டு, அந்தப் பிரச்சினை தீர்ந்த ஆனந்தத்துடன், 'சரி நான் அவசரமா ஒரு வேலை செய்யணும் வரேன்.' என்று அந்த அறையிலிருந்து வெளியேறினார்.
ஆனால், வெளியேறிய வேகத்தை விடப் பல மடங்கு அதிக வேகத்துடன் புயலாகத் திரும்பி வந்தார்! அவர் முகத்தில் இன்னும் பெரும் குழப்பம் தாண்டவமாடியது! 'ரிச்சர்ட்! அந்தக் குறிப்பேடுப் பிரச்சனை இன்னும் தீரலை! உங்க ஞாபகம் கொஞ்சம் முன்னுக்குப் பின்னா இருக்குன்னு நினைக்கறேன். அந்த யூரி, மோட்யஷேவ் இறந்ததா தகவல் வந்தப்புறம் ரெண்டு மூணு நாளுக்குள்ளயே வந்து வாங்கிக்கிட்டுப் போயிட்டானே?! ஆனா அதுக்கப்புறம் கூட நாம அந்தக் குறிப்பேடைப் பார்த்தோமே? அப்ப இந்த டெமோ தகராறு ஆரம்பிச்சில்லை. அப்புறந்தான் பிரச்சனை ஆரம்பிச்சது. அதுக்குப் பிறகு நான் அந்தக் குறிப்பேடைப் பார்க்கலை.' என்றார்.
ரிச்சர்ட் தலையைச் சொறிந்தார். 'அப்படியா சொல்றீங்க? அப்ப ஒருவேளை இங்கிருந்து எடுத்து நாம கலந்தாலோசிக்கற இடத்துல மறந்து போய் எங்கயாவது வச்சுட்டமோ என்னமோ, அப்புறம் தேடிப் பார்க்கலாம். நீங்க இப்போ எதோ அவசரம்னீங்களே அந்த வேலையைக் கவனியுங்க. அப்படி என்ன அவசரமான வேலை?' என்றார்.
ஜேம்ஸின் முகத்தில் ஒரு விதமான வெட்கப் புன்னகை தோன்றியது. நாணிக் கோணிக்கொண்டு, 'அது... வந்து... கொஞ்சம் அவசரம்...' என்று இழுக்கவே, கிரண் தாவிக் குதித்து முந்திக் கொண்டான்! ''! '! '! எனக்குப் புரிஞ்சுடுச்சு! ஜேம்ஸ் ரெஸ்ட் ரூமுக்குப் போகணுங்கறார்! அதானே?!' என்றான்.
ஜேம்ஸின் முகம், இன்னும் அதிகரித்த வெட்கத்தால் சிகப்பாகி விட்டது! 'அ... அ... ஆமாம், அதான்!' என்று விட்டு மற்றவர்கள் முகத்தை நேராகப் பார்க்காமல் அவசர அவசரமாக நடையைக் கட்டினார்!
மற்றவர்கள் உரக்க சிரித்தனர்! சூர்யா, 'ஜேம்ஸோட யோசனை ரொம்ப நல்லதுதான்.
நானும் அவரோட சேர்ந்துக்கறேன்!' என்றதும், கிரண் கிண்டினான். 'என்ன, நீங்க காலையில குடிச்ச காஃபியை வாபஸ் பண்ணணுமா?!' அது மற்றவர்களின் சிரிப்பை இன்னும் பலமாக்கியது. ஷாலினி கிரணை மீண்டும் மண்டையில் தட்டி செல்லமாகக் கண்டித்தாள். 'சீ கிரண், எங்கே என்ன பேசறதுன்னு விவஸ்தையே இல்லையே?!' என்றாள்.
சூர்யா முறுவலுடன் வெளியேறவும், ரிச்சர்ட் கூட்டத்தை தற்காலிகமாகக் கலைத்தார்.
'ரெண்டு முக்கிய அங்கத்தினர்கள் போயிட்டாங்க. நாம வேற அவசர வேலைகளைப் பாத்துட்டு, ஒரு அஞ்சு பத்து நிமிஷம் கழிச்சு திரும்ப சேர்ந்துட்டு அப்புறம் தொடரலாம்.'
கிரண் விடாமல், 'அவசர வேலைன்னா?! ஜேம்ஸ் சூர்யாவோட நீங்களும் சேர்ந்துக் கணுமா?!' என்றான். ரிச்சர்டும் நாகுவும் தலையசைத்துக் கொண்டு மீண்டும் உரக்க சிரித்து விட்டு வெளியேறினர்.
ஷாலினி கிரணை மீண்டும் கடிந்து கொண்டள். 'சே! சுத்த ஒன் ட்ராக் மூளைடா உனக்கு! இந்த அசிங்கப் பேச்சை விட்டு வேற எதாவது ஜோக் அடியேன்!' என்றாள்.
கிரண் முகத்தைக் கோணி அவளைப் பழித்துக் காட்டி விட்டு, அதற்குள் தன் PDA-வில் வந்து குவிந்திருந்த மின்னஞ்சல்களைப் படித்து பதில் அனுப்ப ஆரம்பித்தான். ஷாலினி மோட்யஷேவின் அறையை இன்னும் கவனமாக சுற்றிப் பார்த்து விட்டு எதோ ஒரு விஞ்ஞானக் கட்டுரை படிப்பதில் மும்முரமானாள்.
ஆனால், திடீரென வெளியில் ஏற்பட்டக் கலவரம் அவர்களின் கவனத்தைக் கலைத்து அறையிலிருந்து வெளியில் 'டச் செய்தது! ஜேம்ஸும் சூர்யாவும் சென்றிருந்த கழிவறைப் புறத்திலிருந்து 'ஆ...ஆ...ஆ!' என்ற ஒரு நீண்ட அலறல் சப்தமும் பிறகு ''வ்!' என்ற குறுகிய சப்தமும் கேட்டன. பிறகு யாரோ வலியுடன் முனகுவது போல் தெரிந்தது.
ஷாலினி, கிரண் இருவரும் ஆராய்ச்சி யறையிலிருந்து சப்தம் வந்த இடத்துக்கு ஓடினர்.
ரிச்சர்ட், நாகு இருவரும் கூட தங்கள் அலுவலகத்திலிருந்து விரைந்தோடி வந்தனர். அங்கு அவர்கள் கண்முன் தோன்றிய காட்சியோ விபரீதமாக இருந்தது!
ஒரு புறம் ஜேம்ஸ் அலங்கோலமாக மயக்கமாக விழுந்து கிடந்தார். இன்னொரு புறம் சூர்யா சுவர் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு தலையின் பின் கையை வைத்து அழுத்தி தடவிக் கொண்டு மெல்ல முனகிக் கொண்டிருந்தார். ரிச்சர்ட் சூர்யாவைத் தாண்டி நேராக ஜேம்ஸ் விழுந்திருந்த இடத்துக்கு ஓடினார்.
ஜேம்ஸ் மயக்கமாக விழுந்திருந்தாலும், சூர்யா தளர்ந்து அமர்ந்திருந்த கோலம் மட்டுமே ஷாலினியின் விழிகளுக்குத் தோன்றியது! அதைக் கண்டு அவளுக்கு பகீரென்றது. இதயம் தொண்டைக்குள் தாவி அடைத்துக் கொண்டு படேல் படேலென பலமாக அடித்துக் கொண்டது! பதறிக் கொண்டு அவசரமாக இழுத்துக் கொண்ட ஒரே மூச்சுடன் கொண்டு ஓடி சூர்யாவின் அருகில் அமர்ந்து 'சூர்யா, சூர்யா! என்ன ஆச்சு?! ஏன் இப்படி உக்காந்துக்கிட்டிருக்கீங்க?! கழுத்துல என்ன? அடிபட்டுதா? எப்படி? வலிக்கிறதா? வாங்க இப்படி படுத்துக்குங்க, பாக்கறேன்!' என்று குமுறித் தள்ளிக் கொண்டே, சூர்யாவை இழுத்து தன் மடி மேல் தாங்கிக் கொண்டு தீவிரமாகப் பரிசீலிக்கலானாள். கிரணும் ஓடி வந்து, அருகில் உட்கார்ந்து, என்ன செய்வது என்று விளங்காமல், ஆனால் சூர்யாவுக்கு எதோ ஆபத்து என்பதால் ஏற்பட்ட பதற்றத்துடன் பரிதவித்துக் கொண்டு, குனிந்து ஷாலினியின் பரிசீலனையைக் கவனிப்பதில் மூழ்கிப் போனான். கழுத்தில் பட்ட அடியின் வலியின் வேதனை ஷாலினியின் சிசுரூஷையின் கதகதப்பால் குறைந்து அதில் ஆழ்ந்திருந்தாலும், எதையும் தவற விடாத சூர்யாவின் கண்கள், சுற்றுப் புறத்தில் என்ன நடக்கிறது என்று கவனித்த வண்ணமே இருந்தன!
சூர்யாவுக்கு ஏற்பட்ட ஆபத்து மனதைக் குலை நடுங்க வைத்திருந்தாலும், தன் மருத்துவப் பரிசீலனையால் அவருக்கு தீவிரமான பாதிப்பு ஒன்றும் இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டதாலும், அதே ஆபத்து அவரை முதன் முறையாக நெருங்கி அரவணைத்து சிசுரூஷை அளிக்கும் பாக்கியத்தையும் கொடுத்து, தங்கள் நேசப் பிணைப்பை இன்னும் ஒரு மடங்கு பலப் படுத்தியிருப்பதை ஷாலினி உணர்ந்தாள். அதனால், தன் சூர்யாவைத் தாக்கியவர்களை ஒழித்து விடும் பத்ரகாளியாகவே அவதாரமெடுக்க முதலில் முனைந்த ஷாலினி, மெள்ள மெள்ளத் தணிந்து, ஒரு விதத்தில் அவர்களை மன்னித்து, நன்றி கூறி வாழ்த்தும் மனப்பான்மைக்குக் கூட வந்துவிட்டாள்!
அதற்குள் ரிச்சர்ட் ஜேம்ஸின் அருகில் அமர்ந்து அவரை மயக்கத்திலிருந்துத் தெளிவிக்கும் முயற்சியில் ஆழ்ந்தார். அவர் முகத்தையும், நாகுவின் முகத்தையும் பெரும் பதற்றமும் கவலையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. ரிச்சர்ட் தான் கையோடு எடுத்து வந்திருந்த முதலுதவிப் பெட்டியைத் திறந்து ஜேம்ஸின் முகத்தை ஒரு ஈர டிஷ்யூவால் துடைத்து மயக்கத்தைப் போக்கினார். ஜேம்ஸ் விழித்துக் கொண்டு எழுந்து கொள்ள முயற்சித்தார்.
ரிச்சர்ட் அவரைத் தடுத்து, அழுத்தி மீண்டும் படுக்க வைத்தார். 'வேண்டாம், வேண்டாம். அவசரமா எழுந்துக்காதீங்க. தலைக்குப் பின்னாடி ரொம்ப அடி பட்டிருக்கு போலிருக்கு. மயக்கமாவே விழுந்திருக்கீங்க. ரொம்ப மோசமான தழும்பு வீக்கத்தோட, ரத்தக் கசிவு வேற இருக்கு. அப்படியே கொஞ்சம் படுத்துக்கிட்டிருங்க. ஆம்புலன்ஸுக் குக் கூட அவசரமாக் கூப்பிட்டாச்சு. இதோ வந்துடும். ஷாலினி கூட உங்க கூடவே அடிபட்ட சூர்யாவைக் கவனிச்சுக் கிட்டிருக்காங்க. வந்து பாத்துடட்டும். அப்புறம் எழுந்துக்கறதா இல்லையான்னு பார்க்கலாம். ஷாலினி, சூர்யா எப்படி இருக்கார்? இங்க கொஞ்சம் வந்து ஜேம்ஸை சோதிக்க முடியுமா?'
சூர்யாவின் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது போல் ஒரு சிறு மேலான வீக்கத்துடன் மட்டும் போய்விட்டது என்று திருப்தியடைந்திருந்தாலும், சூர்யாவின் நெருக்கத்தை விட்டு வர மனம் வரா விட்டாலும், தான் எடுத்துக் கொண்டிருந்த மருத்துவத் துறையின் ஹிப்பாக்ரடிக் ஆணையின் படி ஜேம்ஸைக் கவனிக்க வேண்டியது தன் கடமை என்று உணர்ந்த ஷாலினி ஒரு பெருமூச்சுடன் சூர்யாவைத் தன் மடியிலிருந்து எழுப்பி சுவர் மேல் சாய்த்து அமர்த்திவிட்டு அருகில் விழுந்திருந்த ஜேம்ஸ் அருகில் விரைந்தாள். சூர்யா தன் கழுத்தை அழுத்தி ஒத்தடம் கொடுத்துக் கொண்டு நடப்பதை மேலும் கவனிக்கலானார்.
ஆம்புலன்ஸ் ஒன்று தனக்கே உரித்தான உச்சஸ்தாயி ஒலியில் ஏற்ற இறக்கத்துடன் வீரிட்டுக் கொண்டு வேகமாக வந்து ஸ்க்ரீச் என்று வாசலில் நின்றது. வெள்ளையுடை அணிந்த மருத்துவப் பணியாளர்கள் இருவர் ஸ்ட்ரெட்சரை பிடித்துக் கொண்டு விரைந்தோடி வந்தனர். அவர்களுடன் அவசர மற்றும் அபாய மருத்துவத்துக்குத் (emergency and trauma care) தேவையான பெட்டியுடன் ஒரு மருத்துவர் ஓடி வந்தார்.
ரிச்சர்ட் ஓடிப் போய் அவர்களை அழைத்து வந்து ஜேம்ஸைக் காட்டினார். 'இவர்தான். இவருக்குத் தான் தலைக்குப் பின்னாடி ரத்த காயம் பட்டிருக்கு. சீக்கிரம் பாருங்க' என்று துரிதப்படுத்தினார். மருத்துவரும் காயத்தைப் பார்த்து, துடைத்து விட்டு கட்டுப் போட்டார்.
ஜேம்ஸ், 'எனக்கு இப்பப் பரவாயில்லை. ஆம்புலன்ஸ், ஸ்ட்ரெட்சர் எல்லாம் எதுக்கு?' என்று மறுக்க முயன்றார். ஷாலினியும், 'ஆமாம், நான் பார்த்த வரைக்கும் அப்படி ஒண்ணும் ரொம்பப் பயப்பட்டு ஆம்புலன்ஸ்ல எடுத்துக்கிட்டுப் போறா மாதிரி இருக்கறதா தெரியலை. இப்படியே விட்டுடலாமே...' என்றாள்.
ஆனால் ரிச்சர்ட் படபடத்தார். 'ஐயையோ, அப்படி விட்டுடறத்துக்கு எனக்கு மனசு வரலை. சூர்யாவுக்கு வேணா பெரிசா ஒண்ணுமில்லை போலிருக்கு, பரவாயில்லை, விட்டுடலாம். ஆனா ஜேம்ஸோட காயத்துல வர ரத்தத்தையும், வீக்கத்தையும் பாத்தா எனக்குக் கதி கலங்குது. ரெண்டு நாளாவது மருத்துவ மனையிலேயே இருந்து அவங்க கவனிப்புல இருந்து அப்புறம் அவங்க நிச்சயமா ஒண்ணும் இல்லைன்னா வரட்டும். இல்லைன்னா ஒண்ணு கிடக்க ஒண்ணு எதாவது ஆகி கோர்ட்டு, கேஸுன்னு வந்துட்டா இந்தக் நிறுவனத்துக்கே இப்ப இருக்கறதை விட இன்னும் பெரிய ஆபத்தாயிடும். இப்பவே இது எப்படி ஆச்சுன்னு பெரிய அல்லோல கல்லோலப் படப் போகுது... ஜேம்ஸோட தனிப்பட்ட நிலைமையையாவது சந்தேகத்துக்கிடமில்லாம வச்சுக்கிட்டா நல்லதுதான்.' என்றார்.
ரிச்சர்ட் கோர்ட், கேஸ் என்று கூறியதும் நாகுவுக்கும் அடி வயிற்றில் புளியைக் கரைக்கவே, அவரும் சேர்ந்து கோரஸ் பாடினார்! 'ஐயையோ! ஆமாமாம், ரிச்சர்ட் சொல்றது ரொம்பவே சரிதான். இப்ப ஒண்ணும் இல்லைன்னு தோணினாலும் பரவாயில்லை. போய் எக்ஸ்-ரே, கேட்-ஸ்கேன் எல்லாம் பண்ணி உள்ள ஒண்ணும் இல்லையான்னு முழுக்க சோதனை பண்ணிடலாம். அழைச்சுக்கிட்டுப் போங்க.' என்றார்.
கிரண் ஷாலினியிடம், 'கோர்ட் கேஸ்னு பயந்து இந்த மாதிரி வீணா செய்யற துனாலதான் அமெரிக்காவில மருத்துவ செலவு ராக்கெட் மாதிரி ஏறிக்கிட்டே போகுது' என்று முணுமுணுத்தான். ஷாலினியும் பெருமூச்சுடன் தலையாட்டி ஆமோதித்தாள்.
மருத்துவப் பணியாளர்கள் ஜேம்ஸை ஸ்ட்ரெட்சர் மேல் படுக்க வைத்து, பெல்ட் போட்டு அதிராத படி பிணைத்தனர். அவர்கள் தூக்கும் முன்பு சூர்யா தடுத்து, 'ஒரு ஸெகண்ட் இருங்க. நான் ஒரே ஒரு கேள்வி கேட்கணும்.' என்று கூறி விட்டு, 'ஜேம்ஸ், நல்லா யோசிச்சுப் பாருங்க. நமக்கு எப்படித் தலை பின்னாடி அடி விழுந்ததுன்னு எதாவது கவனிச்சீங்களா? யார் செஞ்சிருப்பாங்க, அது நடக்கறத்துக்கு முன்னால எதாவது விபரீதமா தோணுச்சா, எந்த சின்ன விஷயமானாலும் பரவாயில்லை, சொல்லுங்க.' என்றார்.
ஜேம்ஸ் கண்ணை மூடிக் கொண்டு யோசித்துப் பார்த்து விட்டு, இல்லை என்று மெல்லத் தலையசைத்து மறுத்தார். 'ஸாரி சூர்யா. ஒண்ணும் ஞாபகம் வரலை. நீங்க எனக்குப் பின்னால கை உலர்த்திக் கிட்டிருந்தீங்க. நான் முதல்ல கழிவறையி லேந்து வெளியில வந்து இடப் பக்கமா இங்க வரத்துக்குத் திரும்பினேன். அவ்வளவுதான் தெரியும். பட்டுன்னு தலை பின்னால அடி விழுந்தது. உடனே கண்ணெல்லாம் இருண்டு மயங்கி விழுந்துட்டேன் அவ்வளவுதான்.' என்றார்.
சூர்யா எந்த வித ஏமாற்றமும் இல்லாமல், 'அப்படித்தான் இருக்கும்னு நான் நினைச்சேன். சரி அழைச்சுக்கிட்டுப் போங்க.' என்றார்.
மருத்துவப் பணியாளர்களும் ஜேம்ஸுக்கு அதிராத படி ஸ்ட்ரெட்சரை ஜாக்கிரதையாகத் தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸுக்கு எடுத்துச் சென்றனர். ரிச்சர்டும், 'நான் கூடவே போய் ஜேம்ஸை சரியான படி மருத்துவ மனைக்கு சரியா அனுமதிச்சு கவனிக்கறாங்களான்னு பாக்கறேன்.' என்று அவர்கள் பின்னால் விரைந்தார். ஷாலினியும், 'சரி, நானும் எமர்ஜென்ஸி வார்டைக் கூப்பிட்டு தயாரா இருக்க சொல்றேன்' என்று தன் ஸெல் தொலைபேசியில் மருத்துவ மனையோடு தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தாள். ஆம்புலன்ஸ் வீரிட்ட படி, ரிச்சர்ட் தன் வண்டியில் பின் தொடர, ஸ்டேன்போர்ட் மருத்துவ மனைக்கு விரைந்தது.
இவற்றையல்லாம் வாயைப் பிளந்த படி கவனித்துக் கொண்டு ஒரு புறமாக நின்று கொண்டிருந்த கிரண் ஆம்புலன்ஸ் கலாட்டா எல்லாம் ஓய்ந்த பிறகு வியப்பால் விளைந்த பெருமூச்சு விட்டான். 'வாவ்! நான் சூர்யாவோட சேர்ந்து கவனிச்ச இவ்வளவு கேஸ்களில இது வரைக்கும் இந்த மாதிரி பார்க்கலைப்பா! யாருக்கும் அடிபட்டதில்லை. அது மட்டுமில்லாம, சூர்யாவுக்கே அடி! எனக்கும் கூட பெருத்த தலைவலி. ரொம்ப அபாயமான கேஸாத்தான் இருக்கும் போலிருக்கு. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? சூர்யா, போலீஸைக் கூப்பிட வேண்டியதுதான் போலிருக்கு?!' என்றான்
சூர்யா தலையாட்டி மறுத்தார். 'இல்லை கிரண்! இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னா, இந்த அத்தியாயத்துக்கு முற்றுப் புள்ளி அருகில வந்தாச்சுங்கறதுதான்! போலீஸுக்கு அவசியம் இல்லை. ஆபத்தும் இனிமே ஒண்ணும் இருக்காது.'
நாகு வியப்பு கலந்த ஆக்ரோஷத்துடன் பாய்ந்தார். 'என்ன பினாத்தறே சூர்யா? ரெண்டு பேர் தாக்கப் பட்டிருக்கீங்க? யார் செஞ்சாங்கன்னு தெரியலை. அவங்க இன்னும் வெளியில சுத்திக்கிட்டிருக்காங்க... இன்னும் யாரை அடிக்கப் போறாங்களோ? என்னைக் கூட? ரிச்சர்டையும்?' என்று தன் தலை பின்னால் பயத்துடன் தடவி விட்டுக் கொண்டு மேலும் தன் புலம்பலைத் தொடர்ந்தார். 'எந்த குருட்டு நம்பிக்கைல நீ இனிமே ஆபத்து இருக்காதுங்கறே?!'
சூர்யா தொடர்ந்தார். 'குருட்டு நம்பிக்கை யில்லை நாகு, துளிர் விடற யூகம்னு கூட சொல்ல மாட்டேன்... பலப் பல அறிகுறி களையும் தடயங்களையும் சேர்த்து தீவிரமா யோசிச்சுப் பார்த்துத்தான் சொல்றேன். பிரச்சனையின் தீர்வை நாங்க ரொம்ப நெருங்கிட்டோ ங்கிறதனால தான் இந்த விபரீதமே இப்ப நடந்திருக்கு. போலீஸை வரவழைச்சு இன்னொரு பரிமாணத்துக்குக் கொண்டு போகாம, நமக்குள்ளயே இதை நாம சீக்கிரமே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துட முடியும்னுதான் நான் பரிபூர்ண நிச்சயத்துக்கு வந்திருக்கேன். இதுக்கெல்லாம் மூலகாரணம் யாருன்னு எனக்கு இப்ப நல்லா விளங்கிடுச்சு!'
நாகு அதிர்ச்சியுடன் கூடிய நம்பிக்கையுடன் பரபரப்புத் தாளாமல் உரக்கக் கூவினார். 'என்ன?!! யாரு அது? உடனே சொல்லு. என்னுடைய வாழ்க்கைக் குறிக்கோளையே நசுக்கப் பார்த்த அந்த அயோக்யன் யாரு? எனக்கு உடனே தெரிஞ்சாகணும். இந்தப் பிரச்சனையைத் தீர்த்தாகணும்.' என்று தன் கையை நெறித்தார்.
சூர்யா தலையசைத்து மறுத்து, நாகுவை சாந்தப் படுத்தினார். 'இல்லை நாகு. இது கொஞ்சம் காம்ப்ளெக்ஸான விஷயம். படால்னு போட்டு உடைக்கறா மாதிரி இல்லை. இன்னும் ஒண்ணு ரெண்டு விவரங்கள் தெரிஞ்சு அந்தப் பகுதிகளை வச்சு இணைச்சாத்தான் இந்த ஜிக்ஸா புதிரை முடிக்க முடியும். வா, நாம ரெண்டு பேரும் மருத்துவ மனைக்குப் போய், ஜேம்ஸுக்கு எல்லாம் சரியா கவனிக்கறாங் களான்னு பார்க்கலாம். கிரண், இங்க வா. ஒரு வேலை சொல்றேன். அதை செஞ்சுட்டு நீயும் மருத்துவ மனைக்கு ஜேம்ஸ் அறைக்கு வா.' என்றார்.
கிரண், 'ஜேம்ஸ் அறைக்கா? அவரை இன்டென்ஸிவ் கேர் அறையில வச்சு கவனிப்பாங்க இல்லையா? யாரையும் உள்ள விட மாட்டாங்களே?!' என்று ஆட்சேபித்தான்.
சூர்யா மறுத்தார். 'இல்லை கிரண்! நிச்சயமா அவருக்கு ஒரு தனி சாதாரண ரூம்தான் இருக்கும், எனக்குத் தெரியும். நீ வேணும்னா பாரேன்!' என்று அழுத்தி சொல்லவும், கிரண் இன்னும் நீங்காத அவநம்பிக்கையுடன் சூர்யாவின் அருகில் சென்றான். அவர் அவன் காதில் எதோ முணுமுணுக்கவும், அவன் முகத்தில் பெரும் வியப்புப் படர்ந்தது. எதோ சொல்ல முயன்ற அவனை, 'உஷ்!' என்று விரலைத் தன் உதட்டின் மேல் வைத்து மௌனமாக்கிய சூர்யா, 'சரி, நான் சொன்னதை நிறைவேத்திட்டு மருத்துவ மனைக்கு வா! நாகு நாம போகலாம், சீக்கிரம் வாங்க' என்று நாகுவை இழுத்துக் கொண்டு விரைந்தார்.
இன்னும் வியப்பால் மலைத்து அவர்கள் போன வழியையே பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்த கிரண், சூர்யா தனக்களித்த வேலையை நிறைவேற்ற நகர்ந்தான்.
அடுத்து, மருத்துவமனையில் மெய்நிகர் மாயத்தின் மர்ம முடிச்சு அவிழ ஆரம்பித்தது!
கதிரவன் எழில்மன்னன்
(தொடரும்) |