பழைய சூடு
அன்புள்ள சிநேகிதியே...

நான் உங்களுக்கு எழுதி இரண்டு வருடங்களுக்கு மேலே இருக்கும். என் கணவர் வேலையை இழந்து, மிகவும் சோம்பேறியாக வேறு வேலை தேட விரும்பாமல், மணிக்கணக்கில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார். எதைக் கேட்டாலும் என் மீது எரிந்து, எரிந்து விழுவார். மனம் வெதும்பி விவகாரத்து வரை போய்விட்டேன். அதைப் பற்றி இந்தப் பகுதிக்கு அனுப்பியிருந்தேன். நீங்கள் அப்போது
'விவகாரத்தைப் பற்றி சிந்திப்பதை சிறிது தள்ளி போடவும். வேலை போய்விட்ட காரணத்தால் அவர் depression-ல் இருந்து இப்படி நடந்து கொள்கிறார். கொஞ்சம் அவரை புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து பாருங்கள்' என்பது போல அறிவுரைக் கொடுத்திருந்தீர்கள். நானும் என் papers withdraw செய்துவிட்டு, கொஞ்சம் சகிப்புத்தன்மையோடு, நரகமாக நாட்களை நடத்திக் கொண்டிருந்தேன்.

ஆறு மாதங்களுக்கு முன்பு அவருக்கு பிடித்த வேலை ஒன்று கிடைத்து, அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் வேறு state. மூன்று மணி நேர விமானப்பயணம். மாதம் ஒருமுறை வர முயற்சி செய்கிறார். எனக்கும் நிம்மதியாக இருக்கிறது. எங்கள் உறவில் சிறிது முன்னேற்றம் தெரிகிறது. நாங்கள் காதலித்த தினங்களைப் போல இருக்கிறது. தினமும் போன் செய்து கொள்ளுவோம். என் பெண்ணை (6 வயது) பற்றி அக்கறையாக விசாரிக்கிறார். முன்பெல்லாம் குழந்தையைத் திட்டிக் கொண்டிருப்பார். இப்போது அப்பாவும், பெண்ணும் நண்பர்கள்.

போன வாரம் இங்கே வந்த போது, ''எனக்குத்தான் நல்ல வேலை கிடைத்து விட்டதே. உன் வேலையை 'ராஜினாமா' செய்துவிட்டு இந்த சம்மர்ல அங்கே வந்துவிடு'' என்று சொன்னார். குழந்தையை ரொம்ப 'மிஸ்' செய்கிறார். தனியாக இருப்பதும் பிடிக்கவில்லை. சாதாரணமாக இதுதான் முறை. ஆனால் 'நான் சூடு பட்டுக் கொண்டிருக்கிறேனே'. அதனால் உடனே பதில் சொல்லவில்லை. 'யோசித்து முடிவெடுக்கலாம்' என்று சொல்லி வைத்தேன். நான் அவர் அளவு படித்தவள் அல்ல. சாதாரண வேலையில் நிரந்தரமாக இருக்கிறேன். அவர் வேலையில்லாத சமயத்தில்கூட எப்படியோ வீட்டுக்கு mortgage கட்டி எப்படியோ சமாளித்து செய்துவிட்டேன். இப்போது அவருக்கு என்னைவிட மூன்று மடங்கு சம்பளம். ஆறு மாதமாக குறை சொல்லாமல் இருக்கிறார். திருந்தி விட்டார் என்று தோன்றுகிறது. எனக்கும் இந்த வேலை போரடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒருமுறை ஏன் 'ரிஸ்க்' எடுக்கக் கூடாது என்று தோன்றுகிறது. உடனே மனது 'பழைய சூட்டை' நினைக்க ஆரம்பிக்கிறது. அவரும் தினமும் தொலைபேசியில் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்படிக்கு
......................

அன்புள்ள சிநேகிதியே,

சாதாரண வேலை. சாதாரண சம்பளம். ஆனால் நிரந்தரம். அது உங்களுக்கு பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் ஒரு பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது. அதே பாதுகாப்பு உங்களுக்கு தன் காலில் நிற்கக்கூடிய தன்னம்பிக்கையையும், சகிப்புத்தன்மையையும் கொடுத்திருக்கிறது. உங்கள் சகிப்புத்தன்மை உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறது.

இப்போது உங்களுக்கு அடிப்படையில் என்ன பொருளாதார வசதி இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. (உதாரணம்: வீடு, கார், லோன் முடியும் நிலையில் இருக்கிறதா) ஒரு முறை சூடுபட்ட நிலையில் அந்த எச்சரிக்கை உணர்வு உங்களுக்கு இருந்து கொண்டே இருப்பது நியாயமே. பண விஷயத்தில் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நீங்கள் இனி கணவரை நம்பியிருக்க முடியுமா? உங்கள் அனுபவத்திற்கேற்ற வேலை வாய்ப்புகள் அங்கே இருக்கிறதா என்றெல்லாம் நீங்கள் ஆராய்ந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

வெயில் பிரதேசத்திலிருந்து குளிர் பிரதேசத்திற்கு போகிறீர்களா..? இல்லை குளிரிலிருந்து வெயிலா? நண்பர்கள் நிறைய இருந்த இடத்திலிருந்து ஒரு remote பகுதிக்கு போகிறீர்களா? இதெல்லாம் கூட நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் எந்த சங்கட நிலையும் தொடர்ந்து இருந்தால், அது மனவேதனையாகி மன அழுத்தத்தில் போய் கொண்டுவிடும். வேலையை விடாமல் அங்கே போய் அடிக்கடி இருந்து வருவது தற்போதைக்கு இருவருக்கும் நல்லது என்று நினைக்கிறேன். இது வெறும் ஆலோசனை. ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனென்றால் உங்கள் மனம் என்ன விழைகிறது என்று நீங்களே யோசிக்க வேண்டும். அந்த மனதிற்கு இசைந்து செயல்படும் போது ஆதாயங்களைத் தான் மனம் கடகடவென்று கணக்கு போடும். நியாயமாக எதிர்விளைவுகளையும் கணக்கு போட்டு எதிர்பார்த்து தயாராக இருக்கும் போது முன்பு பட்ட சூட்டின் வெப்பம் தணிந்து தெரியும்.

வாழ்த்துக்கள்
இப்படிக்கு
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com