எழுத்தாளர் உமா கிருஷ்ணஸ்வாமி அவர்களைச் சந்திக்க விரும்பினால், கற்களுக்கும் புராதன இடிபாடுகளுக்கும் இடையில்தான் நீங்கள் அவரைத் தேட வேண்டும். நியூமெக்சிகோ மாநிலத்தில் வசிக்கும் இவர் 'Aztec Ruins National Monument Park'ஐச் சார்ந்த சரித்திரகால இடிபாடுகள் கொண்ட இடத்தில் பணிபுரிகிறார். இங்கே பல்லாண்டுக் காலமாக 'Pueblo' இந்தியர்கள் வசித்து வந்துள்ளனர். இந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த இடத்தைச் சுற்றிக் காட்டியபின், பள்ளி மாணவர்களுக்குக் கதை எழுதும் கலையை உமா கற்பிக்கிறார். பெப்லோ இந்தியர்களின் வரலாறு, வாழ்முறை இவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளவும், அவற்றைப் பின்னணியாகக் கொண்டு கதைகள் புனைவதற்கும் உமா உதவுகிறார். உமா ஒரு முழுநேர எழுத்தாளரும்கூட. சிறுவர், சிறுமியருக்கான கதைப் புத்தகங்கள் பலவற்றை வெளி யிட்டுள்ளார். உமாவைப் பற்றியும், அவரது கதைப் புத்தகங்களைப் பற்றியும் www.umakrishaswami.comஎன்கிற வலை தளத்தில் பல விவரங்கள் கிடைக்கும். இனி உமாவுடன்... கே : உங்கள் வலைதளத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் வளர்ந்த வீட்டின் படம் ஒன்று தேவதைக் கதைகளில் வரும் காட்டேஜ் போல அழகாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த வீட்டைப் பற்றிய உங்கள் நினைவுகளைச் சொல்லுங்களேன்?
என் அம்மாவின் பிறந்த வீடு அது. நீலகிரி மலையில் வெலிங்டன் நகரில் இருக்கிறது. நான் பிறந்தது புதுடெல்லியில். அடிக்கடி அம்மாவுடன் வெலிங்டனுக்குச் சென்று என் குழந்தைப் பருவத்தைக் கழித்திருக்கிறேன். தேவதைக் கதைகளில் வருவது போன்ற அழகான ஓர் இடம்தான் அது.
கே : நீங்கள் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
எனக்கு ஐந்தாறு வயதிருக்கும் போதே எழுதுவதில் மிகப் பிரியம். என் அப்பா பழையகால 'ரெமிங்டன்' டைப்ரைட்டர் ஒன்று வைத்திருந்தார். சின்ன வயதில் நிறையக் கதைகள் எழுதி, அதிலே தட்டச்சு செய்து, என் எண்ணங்களெல்லாம் எழுத்துக்களாகக் காகிதத்தில் உருவம் பெறுவதைப் பார்ப்பதில் எனக்கு ஒரே சந்தோஷம். பத்து வயதாகும் போது எனது படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்ப ஆரம்பித்தேன். பதின்மூன்றாம் வயதில் எனது முதல் கவிதை 'Children's World' என்ற இந்தியப் பத்திரிகையில் வெளியாயிற்று. கதைகள் எழுதுவதுடன், கதைப் புத்தகங் களைப் படிப்பதிலும் பைத்தியமாக இருந்தேன்.
கே: இந்தியாவில் உங்களது வாழ்க்கையைப் பற்றி யும் எப்போது அமெரிக்காவிற்கு வந்தீர்கள் என்பதைப் பற்றியும் சொல்லுங்கள்...
நான் வளர்ந்தது, படித்தது எல்லாம் இந்தியாவில்தான். அப்பாவிற்கு இரண்டு மூன்று வருஷங்களுக்கு ஒருமுறை வேலை காரணமாக இடமாறுதல் இருந்து கொண்டே இருக்கும். சிம்லா, ஜம்மு, டெல்லி என்று நிறைய இடங்கள் பார்த்திருக்கிறேன். தில்லியில் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியல் விஞ்ஞானத்தில் பி.ஏ. பட்டம் பெற்றேன். பிறகு 'தில்லி ஸ்கூல் ஆ·ப் சோஷியல் ஒர்க்'கில் சேர்ந்து எம்.ஏ. பட்டம் பெற்றேன். 1979-ல் திருமணமான பிறகு அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்திற்கு வந்தேன். மேரிலாந்துப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்குபவராகப் பணி புரிந்தேன்.
கே:குழந்தைகளுக்கான கதைகள் எழுத வேண்டு மென்று ஏன் தோன்றியது? எப்போது?
என் மகனுக்கு இப்போது பதினெட்டு வயது. அவன் வளரும் பருவத்தில் அவனுக்குப் படித்துக் காட்டக் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களைத் தேடும்போதுதான் அவை அதிகம் இல்லாததை உணர்ந்தேன். அதாவது நம் கலாசாரத்தைப் பிரதி பலிப்பதாக அமைந்த குழந்தைக் கதைகள் அவ்வளவாக இல்லை. முதலில் அவனுக்காகத்தான் நாட்டுப்புறக் கதைகள், இந்தியக் கலாசாரம் பற்றிய கதைகள் இவற்றை எழுத ஆரம்பித்தேன். ஏற்கெனவே செவிவழிப் பழக்கத்தில் இருந்த கதைகளை எழுதினேன். பிறகு கற்பனைக் கதைகளும் எழுதத் தொடங்கினேன்.
கே: உங்களது கதைகள் எந்த மொழியில் உள்ளன? எப்போது பிரசுரமாக ஆரம்பித்தன??
எனது கதைகள் எல்லாமே ஆங்கிலத்தில் தான் உள்ளன. முதலில் பிரசுரமான புத்தகம் 'Stories of flood'. 1994-ல் பிரசுரமாயிற்று. முதல் புத்தகம் சுலபமாகப் பிரசுரமாகிவிட்டது. அதற்குப் பிறகு பிரசுரிக்கக் கொஞ்சம் கஷ்டமிருந்தது. இந்தியப் பாரம்பரியக் கதைகள் பலவற்றைத் தொகுத்து எழுதிய புத்தகம் 'The broken tusk, stories of the Hindu God Ganesha'. இதை 1996-ல் 'Linnet books' பதிப்பித்தது. இந்தப் புத்தகம் 1997-ல் 'Scientific American Young Readers' Book' பரிசு பெற்றது. 'Shower of Gold' என்ற புத்தகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன்.
கே: உங்கள் கற்பனைக் கதைகள் பற்றி...
'Chachaji's cup' என்ற புத்தகத்தில் ஒரு சிறுவன் சாச்சாஜி ஏன் எப்பொழுதும் ஒரு பழைய உடைந்து போன கோப்பையிலிருந்தே தேநீர் பருகுகிறார் என்று கேட்கிறான். அங்கு ஆரம்பித்து, அதன் வழியே இந்தியாவில் 1947-ல் நடந்த பிரிவினையின் போது எப்படித் தன் குடும்பம் இடம்விட்டு அலைந்தது என்பதைத் தெரிந்து கொள்கிறான். 'Monsoon' புத்தகத்தில் வட இந்தியாவில் மழை இல்லாமல் வறண்டு கிடக்கும் ஒரு நகரில் மழைக்காக ஒரு சிறுமி ஏங்குவதைப் பற்றி எழுதியிருக்கிறேன். அமெரிக்க மண்ணில் வளர்ந்து வரும் 'மாயா' என்கிற சிறுமியின் கதை 'Naming Maya' என்னும் புத்தகமாகச் சமீபத்தில் வெளிவந்தது. மாயா ஒரு கோடை விடுமுறையில் தன் அம்மாவுடன் சென்னைக்குச் செல்கிறாள். மாயாவுடைய பாட்டியின் வீட்டை அவளது அம்மா விற்க முயற்சி செய்வதால் மாயா சென்னையில் தங்க நேர்கிறது. சென்னையில் மாயாவிற்கு ஏற்படும் அனுபவங்கள், அவற்றின் மூலம் தன் பெற்றோரின் சரித்திரத்தை அவள் அறிந்து கொள்ளும் விதம் இவற்றை இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறேன்.
கே: பொதுவாக உங்கள் கதைகளை யார் படிக்கிறார்கள்? உங்கள் வாசகர்கள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்...
புத்தகங்களைப் பொறுத்து வாசகர்கள். எனக்கு வரும் மின்னஞ்சல்கள் மூலம் வாசகர்களைப் பற்றி அறிந்து கொள்கிறேன். உதாரணமாக, 'Broken tusk' புத்தகம் பொதுவாக இந்திய மற்றும் ஆசியக் குழந்தைகளால் அதிகம் படிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான 'Naming Maya' போன்ற கதைகளை 'Main stream' அமெரிக்கக் குழந்தைகளும் விரும்பிப் படிக்கிறார்கள்.
கே: உங்கள் கதைகள் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஒரு நல்ல கதையில் எப்போதும் ஒரு செய்தி இருக்கிறது. எனது ஒவ்வொரு நாவலிலும் ஒரு கரு இருக்கிறது. பொதுவாக என் கதைகள், இந்தியப் பண்பாடு, வாழ்க்கைமுறை இவை எப்படியிருக்கும் என்பதை இங்கு வளரும் குழந்தைகளுக்குக் காட்டும் சாளரம் போல அமைந்திருக் கின்றன.
கே: தற்போது நீங்கள் எழுதி வரும் புத்தகங்கள் பற்றி....
படங்களுடன் கூடிய குழந்தைப் புத்தகங்கள் இரண்டு 2005-ல் வெளிவர இருக்கின்றன. 'Closet Ghost' என்னும் கதை, ஒரு சிறுவன் ஹனுமானின் உதவியை நாடுவதைப் பற்றிக் கூறுகிறது. 'Yoga Tree' எனும் கதை தான் மரமாக விரும்பும் ஒரு சிறுவனைப் பற்றியது.
கே: உங்கள் கதைகளுக்கு யார் படம் வரைகிறார்கள்? படங்களைப் பற்றி நீங்கள் கருத்துத் தெரிவிப்பதுண்டா?
ரூத் ஜெயவீரன், ஷிராக் பாபா போன்றோர் என் கதைகளுக்கும் படம் வரைகிறார்கள். கதைக்குப் பொருத்தமாக அவர்களே படங்கள் வரைவார்கள். நான் நுணுக்கங்கள் சரியாக இருக்கின்றனவா, அசலாகப் பாத்திரங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பதைப் பற்றிக் கருத்து தெரிவிப்பேன். இப்போது உமா கிருஷ்ணஸ்வாமி ('அவருக்கும் என் பெயர்தான்' என்று சொல்லிச் சிரிக்கிறார்) என் கதைகளுக்குப் படம் வரைகிறார். எனக்கு இவர் நல்ல நண்பராகி விட்டார்.
கே:கதைகள் மூலம் மட்டுமில்லாமல் குழந்தைகளுடன் நேரிடையாகவும் பேசுவதுண்டா? மாநாடு, கருத்தரங்கு இவற்றில் பங்கேற்பதுண்டா?
வருடத்தில் இரண்டு மூன்று முறை பயணம் மேற்கொண்டு பள்ளிகள், நூலகங்கள் இவற்றில் பேசுவதும், மாநாடுகளில் பங்கேற் பதும் உண்டு. பெரியோர், குழந்தைகள் யாவருடனும் கலந்துரையாடுவேன். குழந்தைகள் கதைகளைக் கவனமாகப் படிக்கிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும். 'Naming Maya'வைப் படித்துவிட்டு, மாயாவின் அனுபவங்கள் ஏன் இவ்வளவு சோகமாக இருந்தன என்று சில குழந்தைகள் கேட்டிருக்கிறார்கள். மாயாவின் அனுபவங்கள் தனது அனுபவங்கள் போலவே இருக்கின்றன என ஒரு குழந்தை கூறினாள். இம்மாதிரி உரையாடல்களில் எனக்கு விமர்சனங்கள் நேரிடையாகக் கிடைக்கும்.
கே:கதைகள் எழுதுவதுடன் தொலைக்காட்சி, திரைக்கதை என்று மற்றத் துறைகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உண்டா?
புத்தகங்கள் எழுதுவதற்கும், தொலைக் காட்சி, சினிமா இவற்றிற்குத் திரைக்கதை எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மேலும் தொலைக்காட்சி, சினிமா போன்ற துறைகளில் போட்டி மிக அதிகம். சமயம் கிடைத்தால் முயற்சி செய்யும் எண்ணம் உண்டு. தற்சமயம் கதைகள் எழுதுவதுடன், 'Childrens Literature Comprehensive Database' (CLCD) என்ற நிறுவனத்திற்காகப் புத்தகங்களைப் படித்து விமர்சனம் எழுதி வருகிறேன். இந்தியாவில் என் கதைகள் புத்தகங்களாக வெளிவர வேண்டுமென்ற ஆசை உண்டு. இதற்காக இந்தியப் புத்தக வெளியீட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு முயற்சி செய்து வருகிறேன்.
கே:குழந்தைகளைப் பற்றியும் அவர்கள் வளர்ப்பு பற்றியும் என்ன கூற விரும்புகிறீர்கள்?
நாம் குழந்தைகளுடன் பழகும் போது உண்மையாக இருக்க வேண்டும். வேறுபாடுகள், முரண்பாடுகள், பொய்மை, நடிப்பு இவற்றைக் குழந்தைகள் சட்டென்று கண்டு பிடித்து விடுவார்கள். இப்போது குழந்தைகளை வளர்ப்பதென்பது அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெரிய சவாலாக இருக்கிறது. குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடுப்பதுடன் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துப் பழக வேண்டும். அது அவர்களது தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் அவர்கள் தம் வாழ்வில் நல்ல முடிவுகள் எடுப்பதற்கும் உதவும்
கே:தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...
உங்கள் கனவுகளுக்கு உங்கள் குழந்தைகள் உருவம் கொடுத்து வாழ வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அது அவர்களுக்கும் கஷ்டம், நமக்கும் கஷ்டம். குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர் என்பதை மறவாதீர்கள்.
சந்திப்பு: அருணா |