இன்றைய இயந்திர வாழ்க்கையில் அவரவர்கள் தங்களைப் பற்றியும், தங்களுடைய குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படுவதற்கே தங்கள் நேரத்தைச் செலவழித்து விடுகிற சூழலில் சமுதாயச் சிந்தனையோடு 22 ஆண்டுகளுக்கு முன் உருவானது 'உரத்த சிந்தனை'. இதை அமைத்து, தொடர்ந்து பணிசெய்து வருகின்றனர் எஸ்.வி. ராஜசேகர் மற்றும் உதயம் ராம் என்கிற இரு தோழர்கள். உரத்த சிந்தனை இன்று ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி, பல அற்புதமான பணிகளைச் செய்து வருகிறது.
உரத்த சிந்தனையின் நிறுவனரும் தலைவருமான எஸ்.வி. ராஜசேகரைச் சந்தித்தபோது, நல்லோர் வங்கி போன்ற வற்றைப் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் கூறினார். அதிலிருந்து... கே : 'உரத்த சிந்தனை' என்கிற அமைப்பு எந்த வருடம் தொடங்கப்பட்டது? இவ்வமைப்பு உருவாவதற்கான அடிப்படை காரணம் என்ன?
1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி உரத்த சிந்தனை உருவானது. இதுவரை தொடர்ந்து தரமான கலை, இலக்கிய, சமூக நிகழ்வுகளை நடத்தி வந்திருக்கிறது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு வெறும் 7 அங்கத்தினர் களுடன் தொடங்கியது உரத்த சிந்தனை.
பத்திரிகைகளில் வாசகர் கடிதங்கள் பகுதியை வாசிக்கும் போது ஒவ்வொரு பத்திரிகையிலும் குறிப்பிட்ட சில வாசகர்களின் கடிதங்கள் அடிக்கடி வருவதைக் கவனித்தேன். தாங்கள் கடிதம் எழுதும் பத்திரிகைகளை முழுமையாக வாசிப்பதும், அதற்காக நேரத்தை ஒதுக்கிப் பல விஷயங்களைத் தெரிவிப்பதும் என்னை யோசிக்க வைத்தது. ஏன் இவர்களை ஒரு குடையின் கீழ் திரட்டி, நல்ல பணிகளைச் செய்யக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் என்னிடம் இருந்த ஏழு பேரின் விலாசத்தை வைத்து அவர்களை உழைப் பாளர் சிலையருகே வரவழைத்தேன். இப்படி ஆரம்பித்த உரத்த சிந்தனை இன்று வளர்ந்து, தமிழகத்தில் மட்டுமல்லாமல், தில்லி, மும்பை போன்ற வட மாநிலங்களிலும் பரவியுள்ளது.
கே : அமைப்பின் முக்கிய நோக்கம் என்ன? எப்படிச் செயல்படுகிறது?
படிப்பவர்களும், படைப்பவர்களுக்கும் பாலமாக இருப்பது 'உரத்த சிந்தனை'. இதன் மூலம் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நாங்கள் அளிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டுவிழாவின் போதும் பல்வேறு விருதுகளை அளிக்கிறோம். சமுதாயப் பணிகளும் செய்கிறோம். 'உரத்த சிந்தனை'யில் சேர்வதற்கு இரண்டு ரூபாய் சந்தாவாகத் தொடங்கியது, தற்போது வருடத்திற்கு 125 ரூபாயாக இருக்கிறது. நல்ல சிந்தனை கொண்டவர்கள், நாட்டின் மீதும் நம் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண் டவர்கள், நல்லவற்றைச் செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள் இவர்களெல்லாம் இதில் அங்கத்தினராகத் தகுதி உள்ளவர்கள்தாம்.
இதுவரை சென்னையில் 300க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். இதில் கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள், நூல்வெளியீடு, பேச்சரங்கம், தனி நடிப்பு இவையெல்லாம் அடக்கம். அது மட்டுமல்லாமல் ஏராளமான இளைஞர்களுக்கு எங்கள் அமைப்பின் மூலம் நாங்கள் மேடையமைத்துக் கொடுக்கிறோம். பல இளைஞர்கள், நல்ல சிந்தனைகளுடன், திறமையுடன் எங்கோ மூலையில் இருக்கின்றனர். அவர்களுடைய திறமைகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. எத்தனை கடிதங்கள் பத்திரிக்கைகளுக்கு எழுதினாலும், யாரைப் போய்ப் பார்த்தாலும் அவர்களது திறமைக்குச் சரியான ஊக்கமோ, மதிப்போ கிடைப்பதில்லை. இப்படிப் பட்ட இளைஞர்களைத் திரட்டி, இவர்களுக்கு நல்ல சிந்தனைகளை ஊட்டி, அதன் மூலம் சமூகத்திற்கு நல்ல விஷயங்களை எடுத்துச் செல்வதுதான் எங்கள் நோக்கம். இது குறித்ததுதான் உரத்த சிந்தனையின் செயல்பாடு.
'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' நிறுவனத்துடன் சேர்ந்து 'பேசித்தீர்ப்போம்' என்கிற நிகழ்ச்சியை நடத்தினோம். அதுபோல் சு.கி. சிவம், எஸ்.வி. சேகர், மதிவண்ணன், எஸ்.பி. முத்துராமன் போன்ற பல பிரபலங்களைக் கொண்டு நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளித்து வருகிறோம்.
கே : இன்று 'சன்' தொலைக்காட்சியில் வெற்றி கரமாகப் போய்க் கொண்டிருக்கும் விசுவின் 'அரட்டை அரங்கம்' உங்கள் உரத்த சிந்தனையுடன் தொடர்பு கொண்டதுபோல் தோன்றுகிறதே...
ஆம், விசுவின் அரட்டை அரங்கத்துக்கும் உரத்த சிந்தனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதன்முதலாக 'அரட்டை அரங்கம்' நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் ஆரம்பிக்க வேண்டும் என்று இயக்குநர் விசு நினைத்தபோது எங்களைத்தான் தொடர்பு கொண்டு பேசினார். விசுவின் முதல் பத்து நிகழ்ச்சிகளுக்கு எல்லா ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து கொடுத்தோம். பல இளைஞர்களை அழைத்து, பொருத்தமான தலைப்புகளை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களைப் பேச வைத்தோம். இன்று அரட்டை அரங்கம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் விசு சார்தான். நாங்கள் எல்லோரும் அவருக்குப் பின்னால் நிற்கிறோம்.
கே : உரத்த சிந்தனையின் முதல் நிகழ்ச்சி எங்கே நடைபெற்றது? வரவேற்பு எப்படி இருந்தது?
எங்கள் முதல் சந்திப்பு கடற்கரையில் இருந்தாலும்கூட, பூங்காக்கள் போன்று நிறைய பேர் சேரக்கூடிய, சூழல் நன்றாக இருக்கும் இடத்தில் சந்திப்பு நடந்தால் நன்றாக இருக்கும், அங்கு நமக்கு எந்த விதமான இடையூறும் இருக்காது என்று நினைத்தோம். பனகல் பூங்காவைத் தேர்வு செய்தோம். வாசகர்கள் பல பத்திரிகைகளில் எழுதினாலும், பெரிய பிரமுகர்களின் பேட்டிகளைப் பத்திரிகைகளில் படித்திருந்தாலும்கூட அவர்களைச் சந்திக்க முடிவதில்லை. அவர்களுடன் நேருக்குநேர் உரையாட வேண்டும் என்கிற ஆவல் வாசகர்கள் மனதில் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்காகக் 'கலந்துரையாடல்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.
மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனுடன், அன்றைய இளம் எழுத்தாளரான சுபாவை சந்திக்க வைத்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். அதுதான் எங்கள் முதல் நிகழ்ச்சி. இதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது. பனகல் பார்க்கிற்கு அன்று வந்த பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, சங்கத்திலும் இணைந்தனர். பின்னர், கவிஞர் மு. மேத்தா, டில்லி கணேஷ், தராசு ஷியாம், ஜெமினி கணேசன் ஆகியோரு டனும் நிகழ்ச்சிகள் நடத்தினோம்.
இச்சமயத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள 'இந்தியா டியூட்டோரியல்' நிறுவனர் எங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, நிகழ்ச்சிகளை நடத்த இடம் தருகிறேன் என்று கூறினார். இந்தியா டியூட்டோரியலைத் தொடர்ந்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.
சினிமா, இலக்கியம், பத்திரிக்கை, விளையாட்டு, நாடகம் என்று பல்வேறு துறைகளில் இருப்பவர்களுடன் சந்திப்புகள் நடத்தியிருக்கிறோம். எஸ்வி. சேகர், கிரேசி மோகன், காத்தாடி ராமமூர்த்தி, வி.எஸ். ராகவன் என்று பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சிகரம் கே. பாலசந்தருடனான சந்திப்பில் கட்டுகடங்காத கூட்டம் வந்தது.
கே : வெறும் சந்திப்புகளாக இருந்த உங்கள் நிகழ்ச்சிகள் எப்போதிலிருந்து பட்டி மன்றம், கவியரங்கம் என்று மற்ற விஷயங்களுக்குள் அடி எடுத்து வைத்தது??
பிரபலங்களை மேடையில் அழைத்து, அவர்களுக்கு நல்ல தலைப்புகளில் பேச வைப்பதுடன், நாமும் அதில் பங்கு கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். எங்கள் உறுப்பினர்களில் பலர் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் எழுதுவது முக்கியமான பணி. அதுபோல் திரைப்படத் துறையிலும் நாடகங்களிலும் எழுதியவர்களும் நடித்தவர்களும் பலர் எங்கள் ஆயுட்கால உறுப்பினர்கள். இவர்களை வைத்து சிந்தனையைத் தூண்டும் கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், விவாதங்கள் என்று நடத்தினோம். இதிலே பல இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைப்ப தால் அவர்களின் திறமைகள் வெளிச்சத்திற்கு வருகிறது. இதன்மூலம் பலர் பெரிய அளவில் முன்னேறியிருக்கிறார்கள்.
கே : 'நல்லோர் வங்கி' என்ற பெயர் சுவாரசியமாக இருக்கிறதே! அது என்ன?
1991ம் ஆண்டு 'உதவும் கரங்கள்' வித்தியாகரின் முன்னிலையில் உதயமானது நல்லோர் வங்கி.
அணில் போல் நம்மால் முடிந்த உதவிகளை இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். சென்னை பூவிருந்தவல்லியிலிருந்து 6 கி.மீ. தொலை வில் உள்ள இருளர்பாளையம் என்கிற கிராமத்தில் மருத்துவமுகாம் ஒன்றைச் சுமார் இரண்டு வருடங்கள் தொடர்ந்து நடத்தி னோம். சுமார் 120 வீடுகளுக்கு மேல் உள்ள அந்தப் பின்தங்கிய கிராமத்தில், மருத்துவப் பரிசோதனை செய்து மருந்துகளை அளித் தது மட்டுமல்லாமல், தொடர்ந்து கவனித்து வருவதற்கும் ஏற்பாடுகள் செய்தோம். இதைத் தொடர்ந்து பல்வேறு கிராமங்களிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தன.
செங்கல்பட்டுக்கு அருகே உள்ள எறையூர் கிராமத்திற்குச் சென்று பல் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினோம். சுமார் 450க்கும் மேற்பட்ட மக்கள் வந்து சிகிச்சை பெற்று சென்றனர். இன்று பிரபலமாக விளங்கும் டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன், ராகவேந் திரன், கார்த்திக் போன்றோர் சிகிச்சை அளித்தனர். டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் அவர்கள் அவருடைய குழுவினருடன் பல இடங்களுக்குச் சென்று பல் மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். பொன்னேரி யில் சோழவரம் பக்கத்தில் சைனாவரம் என்கிற கிராமத்தில் உள்ள தெருவோரப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குச் சாப்பாட்டுத் தட்டுகளை அளித்ததோடு, இரவில் படிக்க விளக்குகளை அமைத்துக் கொடுத்தோம். நூலகக் கட்டிடம் கட்டி, அதற்கு நூல்களை வாங்கிக் கொடுத்தோம். மருத்துவ உதவிகள் அளித்தோம். சென்னை அண்ணா நகரில் உள்ள அப்பாசாமி கண்மருத்துவ மனையினரின் உதவியுடன் கண் மருத்துவ முகாம்கள் அமைத்துச் சேவை செய்கிறோம். ரெட்ஹில்ஸ் அரிமா சங்கமும் எங்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
அங்குள்ள கிராம மக்களுக்குக் கண் பாதுகாப்பு மற்றும் பொரையை எப்படி நீக்குவது போன்றவற்றைப் பற்றி விழிப் புணர்வுக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். இதுவரை சென்னையை ஒட்டிய பகுதிகளிலேயே இத்தகைய பணிகளைச் செய்து வருகிறோம். சமீபத்தில் திருத்தணிக்கு அழைத்திருக்கிறார்கள். அதுபோல் வாலாஜாவில் உள்ள தன்வந்திரி என்கிற மருத்துவக் கோயிலில் இருந்தும், அரக்கோணத்தில் இருந்தும் அழைப்பு வந்திருக்கிறது.
பல ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று நாங்கள் உதவி செய்திருக்கிறோம். விஸ்ராந்தி, சேவாலயா, சிவானந்த குருகுலம், உதவும் கரங்கள் போன்றவைகளுக்குப் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறோம். மூளைவளர்ச்சியற்ற குழந்தைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறோம். நாங்கள் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், யாராவது ஒருவருக்கு அந்த நிகழ்ச்சி மேடையில் உதவி செய்வது என்று வைத்திருக்கிறோம். சமீபத்தில் நடந்த எங்களது 22-வது ஆண்டு விழாவின் போது தங்கள் உடல் உழைப் பினைக் கொடுத்து உதவி செய்யும் எங்கள் உறுப்பினர்களுக்குச் 'செயல்விருது' என்கிற விருதை அளித்தோம். எங்கள் அங்கத்தின ரும் மூத்த பத்திரிகையாளருமான பத்மாமணி என்பவர் விருதைக் கொடுக்கிறார்கள்.
கே : உங்களது அமைப்பு வழங்கும் வேறு விருதுகள் எவை?
விழா வேந்தர் எம்.கே.டி. முத்து அவர்கள் எங்கள் ஆண்டுவிழாவில் 'ஒளி விருது' என்ற விருதை அளிக்கிறார். சிறப்பான சமுதாயப் பணி ஆற்றுகிறவர்களுக்கு ஒளிவிருதை அளிக்கிறோம். தமிழக ஊடகங்களின் சிறந்த படைப்பாளர்களுக்கு 'ஜி.வி. விருது' அளிக்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தகுதிபெற எங்கள் சங்க உறுப்பினர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
இதைத் தவிர 'பெருமைக்குரிய பெண் மணிகள்' என்ற விருதை பாம்பே சகோதரிகள், சாவித்திரி வைத்தி, விமலா ரமணி போன்ற சாதனைப் பெண்களுக்கு வழங்கியிருக்கிறோம். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கு 'ரசா' அமைப்பு நாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறது. அவர்களுக்கு நாட்டியம் ஆடு வதற்கு இம்முறை நாங்கள் வாய்ப்பு அளித்தோம். அதுபோல் இரண்டு காதுகள் இல்லாத குழந்தையின் வைத்தியத்திற்கு சுமார் 5000 ரூபாய் மேடையிலேயே அளித்தோம்.
கே : தமிழ் மாதப் பத்திரிகை ஒன்று உங்கள் சங்கத்தின் மூலம் கடந்த சில வருடங்களாக நடத்தப்படுவதன் நோக்கம் என்ன?
நாங்கள் இப்போது 'நம் உரத்த சிந்தனை' என்ற இதழை நடத்தி வருகிறோம். எங்கள் உறுப்பினர்களில் பலர் படைப்பாளிகளாகவும், படிப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாகவே 'நம் உரத்த சிந்தனை' இதழ் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் காலாண்டிதழாக வந்த இது தற்போது மாத இதழாக வருகிறது.
அரசியல், சினிமா, சாதி, மதம் போன்றவற்றைத் தவிர்த்து, சிந்தனையைத் தூண்டும் நல்ல செய்திகளைச் சேகரித்து வெளியிடுகிறோம். முத்துகுமாரசாமி என்பவர் தான் ஓய்வுபெற்றபின் கிடைத்த நான்கு லட்ச ரூபாயைத் தன் வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளிக் கூடத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். இந்த செய்தியை நாங்கள் எங்கள் பத்திரிகையில் பிரசுரம் செய்தோம். ஒவ்வொரு மாதமும் பயணச் சிறப்பிதழ், கலைச் சிறப்பிதழ் என்று சிறப்பிதழாகக் கொண்டுவருகிறோம்.
கே : உங்கள் 'உரத்த சிந்தனை பதிப்பகம்' பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்...
இது 2004-ல் ஆரம்பிக்கப்பட்டது. டாக்டர் ஜி.வி. ராவ் அவர்களின் மூன்று நூல்களை இது வெளியிட்டது. மேலும் 'சாரல்கள்', 'சிந்தனைச் சிதறல்கள்' போன்ற நூல் களையும் வெளியிட்டது. உறுப்பினர்களில் பலர் நூலாசிரியர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய நூல்களை நியாயமான விலையில் பதிப்பித்து அதன் விற்பனைக்கு உதவுவதற்காக இப்பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.
கே : ஆரம்ப காலங்களில் கடற்கரைப் புத்தகச் சந்தையை நடத்தி வந்த உங்கள் அமைப்பு இப்போது ஏன் அதை நிறுத்திவிட்டது?
பத்து வருடங்களுக்கு முன்பு சென்னை மெரீனா கடற்கரையில் உழைப்பாளர் சிலை புல்வெளியில் முதல் சனி அல்லது ஞாயிறு மாலை 6-லிருந்து 8 மணிவரை உறுப்பினர்களின் நூல்களை வைத்து 'கடற்கரைப் புத்தக சந்தை'யை ஆரம்பித்து, இரண்டு வருடங்கள் நடத்தினோம். நூல் விற்பனைக்கு மறைந்த நடிகர் டணால் தங்கவேலு, மேஜர் சுந்தரராஜன், எஸ்.வி. சேகர், எல்.ஆர். நாராயணன் போன்ற பலர் உதவி இருக்கிறார்கள். இப்படிப் பிரபலங்களை வைத்து புத்தகத்தை விற்பனை செய்த போது நல்ல வரவேற்பு இருந்தது.
சென்னையில் மட்டும் அல்லாது காஞ்சிபுரத்திலும் இதே போன்று ஒரு புத்தக சந்தையை நடத்தினோம். காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் இருவரும் வந்து ஆசி கொடுத்து விற்பனைக்கு உதவி இருக்கிறார்கள். பின்பு பல்வேறு காரணங்களால் இத்தகைய புத்தக விற்பனை நிறுத்தப்பட்டது. முக்கியமாக, பலர் கூடும் பொது இடங்களில் முன் அனுமதியின்றி இத்தகைய கடைகள் வைப்பதற்குப் பிரச்சனைகள் கிளம்பின. எனவே நாங்கள் அதை நிறுத்திவிட்டோம்.
கே : உங்களைப் பற்றிச் சில வார்த்தைகள்...
மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள் கொண்ட பெரிய குடும்பத்தில் நான் மூத்தவன். கேந்திரீய வித்யாலயாவில் 23 வருடங்கள் பணிபுரிந்தபின் விருப்ப ஓய்வு பெற்றேன். தற்போது நிறைய சங்கப் பணிகளிலும், பொதுப் பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். எஸ்.வி. ஆர், ஜெயந்தி சேகர் என்ற புனை பெயர்களில் நிறைய கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய அனுபவமும் எனக்கு உண்டு.
கே : எதிர்காலத் திட்டங்கள் என்ன?
வரும் காலம் இளைஞர்கள் கையில். அவர்களுக்கு நாம் நல்ல பாதை ஒன்று போட்டுக் காட்டியிருக்கிறோம். அந்தப் பாதையில் அவர்கள் தொடரவேண்டும். இளைஞர்களின் சக்தியை ஒன்று திரட்டி நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ஆசை.
சந்திப்பு: கேடிஸ்ரீ தொகுப்பு: மதுரபாரதி
*****
இவர் பார்வையில் உரத்த சிந்தனை
உரத்த, பழுத்த, நரைத்த சிந்தனையை வாழ்த்துவதில் இனிமை மட்டுமல்ல பெருமையும் சேர்ந்து கொண்டது. ஏனெனில் இன்று நானும் அதில் ஒரு அங்கம்.
இயக்குநர் விசு
*****
உரத்த சிந்தனை வெளியீடுகள்
அறிமுக அலைகள் - (கவிதைத் தொகுதி)
இன்னும் வரும் - (கவிதைத் தொகுதி)
ஒவ்வொருத் துளியிலும் (எரிபொருள் சிக்கனம் குறித்த கவிதைத் தொகுதி)
உரத்த சிந்தனை - மாதப் பத்திரிகை
உரத்த சிந்தனை - 100 (சாதனை மலர்)
நட்பெனும் ஞானப்பேழை
ஆனந்த சுதந்திரம் - 50 (சுதந்திர பொன்விழாக் கவிதைகள்) |