பூமணி
நவீன தமிழ்ச் சிறுகதை வரலாறு ஒவ்வொரு தலைமுறைப் படைப்பாளிகளாலும், கதை சொல்லல் முறையாலும், படைப்பு நுட்பத் தாலும், கதைக்களங்களாலும் புதிது புதிதாய்ப் பரிமாணம் பெறுகிறது. சமகாலச் சவால்களுக்கு முகங்கொடுத்து ஆளுமையுடன் படைப்பவர்கள் அதிகம் பேசப்படுகிறார்கள்.

தமிழில் புதுமைப்பித்தன் தலைமுறையை அடுத்து ஜெயகாந்தன் தலைமுறை முக்கியமானது. இதனை விட 'கரிசல் இலக்கியம்', 'வட்டார இலக்கியம்' என முனைப்புற்ற போக்குகளும் தமிழின் பன்முக ஊடாட்டத்தை, வாழ்வியல் அனுபவங்களைத் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்தன. வண்ணநிலவன், வண்ணதாசன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட தலைமுறையினரில் முக்கியமானவர் எழுத்தாளர் பூமணி.

கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட ஆளுமையாளர். இருப்பினும் அதிகம் அலட்டிக் கொள்ளாதவர். அவரது படைப்புகளும் தொடர்ந்த முயற்சிகளும் அவரது தகுதியை அடையாளப்படுத்துபவை.

பூ. மாணிக்கவாசகம் என்ற இயற்பெயருக்குச் சொந்தக்காரரான பூமணி கரிசல் பூமியின் கடலோடிக் கிராமம் எனும் ஆண்டிப்பட்டியில் 1947-ல் பிறந்து, கோவில்பட்டியில் நிலையாகக் குடியேறியவர். அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர். தற்போது ஒய்வு பெற்றுத் தனது ஊருக்குச் சென்று வாழ்ந்து வருகிறார். 'வெள்ளாவி' என்ற சலவைத் தொழிலாளர்கள் வாழ்வைக் குறித்த நாவலைத் தற்போது எழுதிக் கொண்டிருக்கிறார்.

இதுவரை வயிறுகள், ரீதி, நொறுங்கல் உள்ளிட்ட சிறுகதைத் தொகுதிகளையும், வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வண்டல் உள்ளிட்ட நாவல்களையும் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. மக்கள் வாழ்க்கையை அதன் இயல்பிலேயே உள்வாங்கி வெளிப்படுத்துவதில் லாவகமான ஓர் எழுத்தாளர். முற்போக்கு இடதுசாரி மரபிலும் பூமணி ஓர் புதிய வித்து என்றே கூறலாம்.

'நகரம் அவருக்குள் பதிவாகவில்லை. அவருக்குள் கிராமந்தான் இன்னும் சப்பணமிட்டு அட்டணைக்கால் போட்டு உட்கார்ந்திருக்கிறது. எந்த இடத்திலிருந்து முளைத்து வந்தாரோ அந்த வட்டாரமும் எந்தக் காலத்தில் அவர் உதயமாகிப் பதியமானோரோ அந்த வரலாறும் தான் பூமணியின் படைப்புகளாக வருகின்றன. பெருவாரிக் கதைகள் அங்கிருந்து எடுத்து மலத்திப் போட்டவை. அவர் பிறந்த பிரதேசம் வளர்ந்த காலம் இன்றைக்கு எப்படி இருக்கிறதோ அப்படி நவீன யதார்த்தத்தின் சிறகுகள் சமகால வரலாறாய் பதியமாகி வட்டமிடுகின்றன' என்று எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் 'பூமணி கதைகள்' என்னும் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஒர் சக எழுத்தாளனின் இன்னொரு எழுத்தாளனைப் பற்றிய கணிப்பு அது. 'மண்ணின் தொப்புள் கொடியிலிருந்து' பூமணியின் கதை மாந்தர்கள் உயிர்ப்பான வாழ் வனுபவத்தை வாசக அனுபவத்தின் முன்னே நிறுத்துகிறார். வாசகர்களின் சுயமான தரிசனத்துடன் பூமணியின் உலகம் தன் மயமாகிறது.

நெஞ்சை அழுத்திப் பிழியும் சோகமானாலும், குத்தலான கேலியானாலும், மெல்லிய நகைச்சுவையானலும் அலட்டிக் கொள்ளாமல் வெளிக் கொணரும் ஆற்றல் பூமணியினுடையது. இவரது கதைகள் வட்டார வழக்கு நடையில் ஒரு புதிய உலகுக்கு அழைத்துச் செல்பவை. வித்தியாசமான மனித அனுபவங்களின், உறவுகளின் இயல்புத்தன்மை கெடாமல் முரண்கள், பிரச்னைகள் யாவும் மனித உந்துதலின் தார்மீகக் கோபத்துக்கு உள்ளாகும் பொழுது ஏற்படும் உணர்வுத் திரட்சியின் படைப்புகளாகவே உள்ளன.

பூமணியின் 'பிறகு', 'வெக்கை' ஆகியவை தமிழ் நாவல் இலக்கியத்தில் தனித்துவமான படைப்புகள். மொழிதல் சார் பின்புலத்திலும் தனித்து அடையாளப்படுத்தக் கூடியவை. இதைவிடக் கரிசல் காட்டு மக்கள் பற்றி 'கருவேலம்பூக்கள்' எனும் திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டுள்ளார். பூமணியின் இந்த முயற்சி திரைப்பட வெளியிலும் நவீன படைப்பாளிகள் இயங்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. 'வெக்கை' நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு உள்ளார்.

பூமணியின் தற்போதைய மனப்பாங்கு சிறுகதைப் பரப்பில் இயங்குவதற்கான நிலையைக் கொடுக்கவில்லை. சமீபத்திய தீராநதி நேர்காணலில் அவரே இதைக் கூறுகிறார். 'சர்க்கஸ் யானை முக்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பது மாதிரிதான் சிறுகதை எழுதுவது. சிறிய பரப்புக்குள் அனைத்தையும் சொல்லியாக வேண்டும். அது என்னால் இப்போது முடிவதில்லை. மேலும் அனுபவங்களின் குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும்தான் சிறுகதையில் சொல்ல முடிகிறது. பல்வேறு பாத்திரங்களை இயல்பாக நடமாடவிட்டு, பன்முகப்பட்ட அனுபவங்களைச் சித்தரிப்பதற்கு நாவல் வடிவம்தான் தோதாக இருக்கிறது' என்று அவர் குறிப்பிடுகிறார்.

இதன் மூலம் அவரது இலக்கிய உணர் திறன் எவ்வாறு இயக்கம் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எந்தவொரு படைப்பாளிக்கும் தனது படைப்பு மனோநிலை பற்றிய புரிதலும், தன்முன்னே உள்ள சவால்கள் பற்றிய தெளிந்த பார்வையும் வேண்டும். அப்பொழுதுதான் படைப்பாளியால் தனித்துவத்துடன் இயங்க முடியும். பூமணி அந்த ரகம்தான்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com