எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது கிடைத்தது தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஏன் எல்லாத் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் செய்தி. சிலர் காலங்கடந்து நடந்ததாகக் குறை கூறினாலும் ஜெயகாந்தனின் தனித்துவம் மீண்டும் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இதில் ஒரு தற்செயலான ஒற்றுமை, அலுவல் காரணமாக பாரிசுக்குச் செல்ல நேர்ந்தது. அப்பயணம் பற்றித் தெரிய வந்ததும் எனக்கு ஜெயகாந்தனுடைய பாரிசுக்குப் போ நாவல் நினைவுக்கு வந்தது அதை மீண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வேளையில் சென்னையில் தமிழ் மையம் அமைப்பு ஜெயகாந்தனுக்குப் பாராட்டு விழா நடத்தியது. ஞானபீட விருது அறிவிப்பும் வந்தது. பாரிசுக்குப் போய் வந்தாயிற்று. நான் புத்தகம் வாங்குவது தான் நடக்கவில்லை.
இந்திய - பாகிஸ்தான் உறவு பல வருடங்களுக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டுவந்தது. F-16 போர் விமானம் வாங்குவதில் இவ்வுறவுநிலை சீர்கெடக்கூடும். பிரிவினைக்குக் காரணமாகிய மதமும், அரசியலும், பிரிவைப் போராக்கிய மதத்தையும் அரசியல்வாதிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு இரு நாடுகளும் தமது பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்கப் போர்த் தரகர்களை நமக்குள் கலகம் மூட்ட விடக்கூடாது.
குஜராத் முதல்வர் மோடியின் விவகாரம் ஒரு முக்கிய உண்மையை வலியுறுத்தியிருக்கிறது. ஒத்த கருத்துடையோர் ஆர்ப்பாட்டமின்றி ஒற்றுமையுடன் முயன்றால் மக்களாட்சியின் மூலம் பெரிய உண்மையாக்கலாம். பா.ஜ.க.வினர் இதை இந்திய நாட்டின் மானப் பிரச்சனையாக்க நினைப்பது சரியல்ல. ஒரு நாட்டின் நுழைவு உரிமை அந்த நாட்டின் விருப்பம். பல ஆண்டுகளுக்கு முன் இசைமேதை ஜூபின் மேத்தாவுக்கு இந்தியாவில் நுழைவு மறுக்கப்பட்டது. காரணம் அவர் இஸ்ரேல் நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தினார் என்பதே. நாடுகள் தங்களது அன்றைய கொள்கைக் கேற்ப நுழைவு உரிமையைக் கட்டுப்படுத்துவது நடைமுறை. இதற்கு அரசியல் சாயம் பூசி ஆதாயம் பார்க்க நினைப்பது அரசியல் வாதிகளின் அணுகுமுறை; அவ்வளவுதான்.
வாசகர்களுக்குத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம் பி. அசோகன் ஏப்ரல் 2005 |