பாலாஜி வேத மையம்: பங்குனி உத்திரத் திருவிழா
மார்ச் 25, 2005 அன்று மிச்சிகன் டெட்ராய்ட் நகரில் உள்ள பாலாஜி வேத மையத்தின் சார்பில் மகாலட்சுமியின் அவதார தினமான பங்குனி உத்திரத் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுப்ரபாதம் மற்றும் திருப்பாவையைத் தொடர்ந்து வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவித் தாயார்களுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மாலை 6:00 மணிக்குச் சடகோபன் திருவேங்கடாச்சாரி அவர்கள் வெங்கடேச திருக்கல்யாண உற்சவத்தைப் பாரம்பரிய முறையில் விமர்சையாக நடத்தினார்.

ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திர தினத்தன்று பெருமாளும் தாயாரும் சேர்ந்து தரிசனம் தருவார்கள் என்றும், இந்நன்னாளில்தான் ராமானுஜ ஆச்சாரியாருக்கு பெருமாளின் பரிபூரண அருளாசி கிடைத்தது என்றும் ஐதிகம். திருக்கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து 7:30 மணிக்கு மதுரை சுந்தர் (பாட்டு) கல்பனா வெங்கட் (வயலின்) மற்றும் வினோத் சீதாராமன் (மிருதங்கம்) வழங்கிய கர்னாடக இசைக் கச்சேரியில் தியாகராஜர் கீர்த்தனைகள், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலியன இடம்பெற்றன. இறுதியாக ஸ்ரீராமானுஜ சரணாகதி காத்யம், மந்திரபுஷ்பம், சாத்துமுறை மற்றும் ஆரத்தி மந்திரங்களோடு வைபவம் நிறைவு பெற்றது.

கல்பனா ஹரிஹரன்

© TamilOnline.com