SIFA-அபிநயா வழங்கிய கீத கோவிந்தம்
தென்னிந்திய நுண்கலைகள் (South India Fine Arts-SIFA) மற்றும் அபிநயா நடனக் குழுமம் இணைந்து பத்மபூஷண் கலாநிதி நாராயணன் அவர்களின் கீத கோவிந்தம் நாட்டியப் படைப்பிலிருந்து சில பகுதிகளை வழங்கினார்கள். ஏப்ரல் 18, 2005 அன்று இந்த நிகழ்ச்சி வளைகுடாப் பகுதியின் சான் ஓசேயில் நடைபெற்றது.

தெய்வீகக் காதலர்களான ராதை-கண்ணனின் பிரிவாற்றாமையையும் பின்னர் அவர்கள் இணையும் போது ஏற்படும் பெருமகிழ்ச்சியையும் கருவாகக் கொண்டிருந்தது இந்நிகழ்ச்சி.

நிருத்தம் இல்லாத அபிநயம் மட்டும் கொண்ட நிகழ்ச்சிகள் மிக அரிதே. அபிநயத்துக்குப் பெயர்போன கலாநிதி நாராயணன் இந்த சீரிய நாடகத்தைச் சிறப்பாக அமைத்திருந்தது பலருக்கும் ஒப்பரிய அனுபவமாக இருந்தது.

தசாவதார மஹிமையைத் துதித்துத் தொடங்கியது நிகழ்ச்சி. தனிமையில் வாடும் ராதையைச் சித்தரித்த கலாநிதி, சிருங்கார ரசத்தைத் துணிவோடு கையாளத் தயங்க வில்லை. அதே நேரத்தில் ஏக்கம், பரபரப்பு, விரகம், கோபம், சரசம் என்று பல பரிமாணங்களையும் திறம்பட வெளிப்படுத்துவதிலும் வெற்றி கண்டார்.

நாயகியாக வந்த பிரியதர்ஷினி கோவிந்த் பிரமிக்க வைத்தார். அவரே ராதையாக மாறினார் என்றால் மிகையல்ல. கலாநிதியின் சிஷ்யையான கோவிந்த் அபிநயத்தை நன்கு கிரகித்துச் சுவையாகப் பிழிந்து தருவதில் வெற்றிகண்டார்.

ராதைக்கும் கண்ணனுக்கும் இடையே தூது போய், இருவரையும் இணைத்து வைக்கும் சக்தியாகப் பாத்திரமேற்ற இந்திரா காடம்பி, தன் நேர்த்தியான சித்தரிப்பால் மிகப் பரிமளித்தார். கிருஷ்ணனாக வந்த சங்கீதா ஈஸ்வரன் துல்லியமாய் அடக்கி வாசித்து நம்மைக் கவர்ந்தார்.

ஒவ்வொரு உருப்படிக்கு முன்னும் கொடுத்த அறிமுகம் அவற்றின் பாவத்தைப் புரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது.

ஆங்கிலத்தில்: சாரதா போஸ்
தமிழாக்கம்: மதுரபாரதி

© TamilOnline.com