மருத்துவத் தொழில்நுட்பங்கள் வளர வளர...
ஒரே குழந்தையை இரண்டு தாய்மார்கள் உரிமை கொண்டாடும்போது யார் உண்மையான தாய் என்று தீர்ப்பளிக்கும் சங்கடம் பண்டைக்காலத்து அரசன் சாலமனுக்கு ஏற்பட்டது. மரபணுப் பரிசோதனையை வைத்துத் தாய் யார் என்று கண்டறியும் தொழில்நுட்பம் தெரியாத காலம் அது. அப்போது அந்தச் சிக்கலைத் தன் அறிவுக் கூர்மையால் தீர்த்து வைத்துப் புகழ் பெற்றார் சாலமன். அந்த சாலமனையும் திக்குமுக்காட வைக்கக் கூடிய சிக்கல் டெர்ரி ஷைவோ வழக்கு.

கோமா நிலையில் இருக்கும் ஒரு நோயாளிப் பெண். அவளைக் கோமா நிலையில் தள்ளியதற்காக 1 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி வென்ற கணவர், பிறகு வேறு பெண்ணோடு வாழ்ந்து குழந்தை பெற்ற பின், உணர்வற்று வாழும் தன் மனைவிக்கு குழாய் வழியாக உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தார். கொதித்தெழுந்தார்கள் நோயாளியின் பெற்றோரும் உடன்பிறந்தோரும். தாங்கள் அன்புடன் அழைக்கும்போது அசைகிறாள் தங்கள் மகள் என்று நம்பிய பெற்றோர், உணவளிப்பதை நிறுத்துவது அவளைக் கொலை செய்வதற்கு இணையாகும் என்று வழக்குத் தொடுத்தார்கள்.

உணர்வற்ற நிலையில் தனக்காகப் பேச முடியாமல் இருக்கும் பெண்ணுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்க எந்த நீதிபதிதான் முன் வருவார்? நோயாளிக்குக் குழாய் வழியாக உணவு அளிக்கலாமா கூடாதா என்ற முடிவை எடுக்க வேண்டியவர்கள் அவரை நன்றாகத் தெரிந்தவர்கள்தாம், நீதிமன்றம் அல்ல. சட்டப்படி அந்த உரிமை அவரது கணவனுக்குத்தான் என்றது நீதிமன்றம்.

வெள்ளரிக்காய் போல் வெறுமே படுத்துக் கிடப்பதை விட ஒரேயடியாய்ப் போய்விடவே தன் மனைவி விரும்பினார் என்றார் கணவர். சுயநலத்துக்காகத் தன் மனைவியைக் கொல்ல நினைக்கிறார் அவர் என்று குற்றம் சாட்டியவர்கள் பலர். நீதிமன்றம் நியமித்த மருத்துவரோ உணர்வற்ற நிலையில் 15 ஆண்டுகளாகப் படுக்கையில் இருக்கும் இந்தப் பெண் மீண்டும் உணர்வு பெற்று மனித வாழ்க்கை வாழச் சாத்தியமில்லை என்றார். ஆனால், என்றாவது ஒரு நாள் அவள் உணர்வு பெற்றெழுவாள் என்று நம்பினார்கள் பெற்றோர்.

உயிரைப் போற்றும் மதக் கொள்கைகளின் அடிப்படையில் கருக்கலைப்பு, கருணைக் கொலையை எதிர்ப்பவர்கள் இதுவும் ஓர் அறப்போர் என்றே கருதுகிறார்கள். அதே நேரத்தில் இவர்களில் பலர் சட்டம், ஒழுங்கு அடிப்படையில் மரணதண்டனையை ஆத ரிக்கும் முரண்பாட்டையும் காண்கிறோம். கருணைக்கொலை, கருக்கலைப்பு இவற்றைத் தனி மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் வேறு பலர். மதச்சார்பற்ற நிலையில் இதை அணுகவேண்டும் என் கிறார்கள் இவர்கள். இரண்டு பக்கங்களிலும் முரண்பாடுகள் இல்லாமல் இல்லை.

சாலமனும் நுழையத் தயங்கும் இந்தக் குடும்பப் பிணக்கில் மூக்கை நுழைத்தனர் அரசியல் வாதிகள். இது உயிர்காக்கும் தொண்டு என்றனர். டெர்ரி ஷைவோ என்ற தனி மனிதரைக் காப்பாற்றச் சட்டங்கள் இயற்றினர். இவை எல்லாமே செல்லாதவை என்று தள்ளிவிட்டன நீதிமன்றங்கள்.

இந்த வழக்கை வெளியே இருந்து எட்டிப் பார்க்கும் நமக்கு இரண்டு பேர் நிலையும் புரியாமல் இல்லை. வரதட்சணைக்காக மனைவியைக் கொளுத்திப் போடவும் தயங்காதவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். மணமான பின்னர் வாழ்வோ சாவோ அந்தப் பெண்ணின் விதி அவள் கணவன் கையில் என்ற நிலை சரிதானா என்ற ஐயம் எழுவது இயல்பு. உணர்வற்ற நிலையில் தன் மனைவி இருக்கும்போது வேறு பெண்ணோடு வாழ்க்கை நடத்திக் குழந்தை பெற்றுக் கொண்டவன் கணவன் என்று அறியும் போது இந்த ஐயம் வலுவாகிறது.

பெண்ணின் பெற்றோர் உணர்ச்சிகளைச் சற்றும் மதிக்காமல் தன் மனைவியின் விருப்பத்தையே நிறைவேற்றுகிறேன் என்று அவர் சொன்னதை நம்பாதோர் பலர். கடைசியில், சரியோ தவறோ, இருக்கும் சட்டங்களை மதித்து, கணவர் விருப்பப்படியே டெர்ரி ஷைவோவுக்குக் குழாய்வழி உணவு நிறுத்தப்பட்டது. உணவும் நீரும் இல்லாமல் ஒரு வாரம் அந்த உணர்வற்ற உடல் போராடி உயிர் நீத்தபோது அவரை அறியாதவர்களும் கண் கலங்கினார்கள்.

இந்த வழக்கில் டெர்ரி ஷைவோவின் கணவர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார் என்பது தெளிவு. கடைசிவரை தன் உரிமைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, டெர்ரியின் பிறந்த வீட்டார் உணர்வுகளைப் புறக்கணித்திருக்கிறார். பல ஆண்டுகள் வழக்குமன்றத்தில் டெர்ரியின் பெற்றோர்களின் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சந்தித்ததனால் எழுந்த கசப்பு உணர்வின் தொடர்ச்சியால் இவர் இவ்வாறு நடந்திருக்கலாம். எது எப்படியோ, வெள்ளரிக்காய் நிலைக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும் என்று டெர்ரியின் விருப்பம் தெரியாதபோது, கணவரின் முடிவின் மீது சந்தேகம் எழக்கூடிய சூழ்நிலையில், டெர்ரியின் பெற்றோருக்கு அவரைக் காப்பாற்றச் சட்டம் உரிமை கொடுத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை சரிதான். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படைவாதக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் சிலர், டெர்ரியின் பெற்றோர் மட்டுமல்ல, டெர்ரிக்குத் தொடர்பே இல்லாதவர்களுக்கும் அவரைக் காப்பாற்றச் சட்டம் உரிமை கொடுத்திருக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். வாக்குவாதம் தொடர்கிறது.

மருத்துவத் தொழில்நுட்பங்கள் வளர வளர இது போன்ற சிக்கல்கள் தொடரும். முழுதும் உருப்பெறாமல் அரைகுறையாகப் பிறக்கும் மகவுகளையும் பிற்காலத் தொழில்நுட்பங்களால் சரிப்படுத்த முடியும் என்று நம்புவோர் அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடுவார்கள். தொழில்நுட்ப வசதி இல்லாத நாடுகளில் டெர்ரி ஷைவோ போன்றவர்களை 15 வருடம் உயிரோடு வைத்திருக்க முடியாது. அந்த வசதி உள்ள நாடுகளில் மட்டுமல்ல எங்கும், இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு நாமே வகுத்துக் கொண்ட விதிகளைப் பின் பற்றுவதுதான். நம்மில் பெரும்பான்மை யோருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதையே சரி என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

ஏப்ரல் 15ம் தேதி பலத்த விளம்பரங்களுடன் திமுக தலைவர் கருணாநிதியும், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், பல தமிழ் மென்பொருள்கள், எழுத்துருக்கள் கொண்ட ஒரு குறுந்தட்டை வெளியிட்டார்கள். அதில் கூட்டியது, கழித்தது பற்றிக் கணினித் தமிழ் ஆர்வலர்கள் பரபரப்பாகக் கருத்துப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் முதன் முறையாகத் தமிழில் மின்னஞ்சல் அனுப்ப வழி வகுக்கிறது என்று தவறான செய்தி பரவியிருக்கிறது. கணினியில் பத்தாண்டுகளுக்கு முன்னரே தமிழ்.நெட் என்ற மின்னஞ்சல் குழுவில் முதலில் முரசு இணைமதியிலும், பின்னர் தமிழ்க் குறியீட்டுத் தரம் (த.கு.தரம்/TSCII) எழுத்துருக்களிலும் மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொண்டு வந்திருக்கும் நமக்கு இந்தச் செய்தியின் பின்னிருக்கும் அறியாமை குறித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இன்றும் பல ஆயிரக்கணக்கான தமிழ் மின்னஞ்சல்கள் திஸ்கி குறியீட்டில் எழுதப்பட்டு வருகின்றன. இருந்தாலும், இந்திய மத்திய அரசோ, தமிழ்நாடு மாநில அரசோ திஸ்கியைக் கண்டுகொள்வதில்லை.

தமிழுக்குத் தொண்டு புரிய வருபவர்கள், உலகத்தமிழர்கள் பலரை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு அரசையும் புறக்கணித்திருக்கக் கூடாது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து, தமிழ் என்று வரும்போது மாநில அரசோடு சேர்ந்து இந்த வெளியீட்டு விழாவை நடத்தியிருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ள பல நல்ல மென்பொருள்களையும் சேர்த்துக் கொடுத்திருந்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும். யூனிகோடு தமிழ்க் குறியீட்டில் இருக்கும் சிக்கல்களைக் களைய இரண்டு அரசுகளும் ஒன்றாக இணைந்து செயலாற்றியிருக்கலாம். கணித்தமிழ் வளர்ச்சியைப் பல மடங்கு உயர்த்திருக்கக் கூடிய வாய்ப்பை மீண்டும் தவற விட்டிருக்கிறோம்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com