கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' காவல்துறையினரின் பாதுகாப்புடன் தமிழ்ப் புத்தாண்டு அன்று திரையிடப்பட்டது. முதன்முறையாக டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்குத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து பலத்த பாதுகாப்பிற்கிடையில் படம் திரையிடப்பட்டது. ஆயினும் சில இடங்களில் திரை கிழிப்பது போன்ற வன்முறை நடவாமல் இல்லை. வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையில் கமல் தன் அடுத்த படத்திற்கான தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் 'வேட்டையாடு விளையாடு' என்ற புதிய படத்திற்கான அறிமுக விழா அண்மையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
"இப்போதைக்கு தமிழ்த் திரைப்படத்திற்கு ஆங்கிலப் பெயர் வைப்பதை எதிர்க்கும் வேலையைக் கைவிடப் போகிறோம். அதைவிட முக்கியமான பணிகள் எங்களுக்கு இருக்கின்றன" என்று பா.ம.க. அறிவித்துவிட்டது.
''நான் தனி ஆள் என்று நினைத்துக் கொண்டு ஆளாளுக்கு மிரட்டுவார்கள்; நான் தனி ஆள் அல்ல என் பின்னால் திரையுலகம் இருக்கிறது'' என்று விழாவில் கமல்ஹாசன் பேசியது முக்கியமான அம்சம். சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் விஜயகாந்த், சூர்யா, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கவுதம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் கதாநாயகி ஜோதிகா.
தொகுப்பு: கேடிஸ்ரீ |