ரோபாட் ரகளையின் ரகசியம் - பாகம் 4
முன் கதை:

சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத் துப்பறிவாளர் சூர்யாவின் நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆராய்ச்சி சாலையில் ஒரு முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அவரது உதவியை நாடுகிறார். சூர்யாவும் கிரணும் சுமிடோமோவைச் சந்திக்க அவரது ஆராய்ச்சிசாலைக்குச் செல்கின்றனர். அங்கு ஆங்கிலேய பட்லரைப் போலவே நடந்து கொண்ட ஜீவ்ஸ் என்ற ஒரு ரோபாட்டைப் பார்த்து கிரண் ஏமாந்தே போனான். பிறகு சுமிடோமோவின் கூட்டாளி ராபர்ட்டைப் பார்த்து அவரும் ஒரு ரோபாட் என்று ஏமாந்து போனான். சுமிடோமோவும், ராபர்ட்டும் ரோபாட்கள் முன்னேறிய சரித்திரத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தனர்...

செக் நாட்டவரான சாபக் என்னும் நாடக ஆசிரியர்தான் ரோபாட் என்ற வார்த்தையையே முதலில் பயன்படுத்தியதாகவும், ஐஸக் அஸிமாவ் அதன் பிறகு நான்கு ரோபாட் சட்டங்களை உருவாக்கியதாகவும் சுமிடோமோ கூறவே சூர்யாவும் கிரணும் மிகவும் ஆர்வத்துடன் அஸிமாவின் சட்டங்களைப் பற்றி மேலும் விவரிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதற்குள் ஜீவ்ஸ் கிரண் கேட்ட கோலாவை ஒரு தட்டின் மேல் சுண்டு விரலால் சற்றும் ஆடாமல், கிருஷ்ண பரமாத்மா கோவர்த்தன கிரியைக் கையில் ஏந்தியது போல் கொண்டு வந்தான். அதைக் கண்ட கிரணின் ஆச்சர்யத்தை கவனித்த ராபர்ட் முறுவலுடன், "ஆமாம் கிரண், ஜீவ்ஸோட கை விரல்களில் மிகச் சக்தி வாய்ந்த ஸர்வோ மோட்டர்கள் இருக்கு. தட்டு எந்தப் பக்கமும் சாயாமல் பேலன்ஸ் செய்ய முடியும்" என்று கூறிவிட்டு, ஜீவ்ஸைச் செல்லமாகக் கடிந்து கொண்டார். "போதும் ஜீவ்ஸ். ரொம்ப அலட்டிக்க வேண்டாம்னு எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன்" என்றார்.

ஆனாலும் ஜீவ்ஸ் ரஜினி பாணியில் லாகவமாக ஒரு கையால் தட்டைக் கீழே இழுத்துக் கொண்டு மற்றக் கையால் கோலாக் கோப்பையை சற்றும் திரவம் சிந்தாமல் பிடித்து கிரணுக்குக் கொடுத்து விட்டு பவ்யமாகக் குனிந்து வணங்கினான்.

சுமிடோமோ முறுவலுடன், "ராபர்ட், ஜீவ்ஸை ரொம்பவே காட்டிக்கறா மாதிரி செஞ்சுட்டீங்க. பர்ஸனாலிட்டி மீட்டரைக் கொஞ்சம் குறைக்கணும்." என்று கூறிவிட்டு சூர்யாவிடம் "சமூகத்தில் மனிதர்களாகப் பழக ரோபாட்களுக்கும் குணாதிசயங்களைக் கொடுக்க முயற்சிக்கிறோம். அதன் பலன் தான் இது" என்று விளக்கினார். பிறகு திடீரென ஞாபகம் வரவே ராபர்ட்டிடம், "ஜீவ்ஸ் ஜப்பானிய முறையில் வணங்குகிறான் என்று சூர்யா கவனித்துவிட்டார். என் தவறுதான். அதை ஆங்கில முறையாக மாற்றிவிடுங்கள்." என்று சொல்லிவிட்டு, ரோபாட் சரித்திரத்தைத் தொடர்ந்தார்.

கிரண் சூர்யாவின் முகத்தில் ஒரு விதமான ஒளி ஒரு கணம் தோன்றி மறைந்ததைக் கவனித்து வினாவுவது போல் ஒரு புருவத்தை உயர்த்தினான். ஆனால் சூர்யா "இப்போது வேண்டாம் என்று சற்றே தலையசைத்து விட்டு சுமிடோமோவின் வர்ணனையில் கவனம் செலுத்தினார்.

சுமிடோமோ தொடர்ந்தார். "என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்? ஓ, அஸிமாவின் ரோபாட் சட்டங்கள். அஸிமாவ் ரோபாட்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கார். அவரோட முக்கியத்துவம் என்னன்னா அவர்தான் முதல் முறையா ரோபாட்களை எப்படி மனிதர்கள் நல்ல விதத்துல பயன்படுத்தலாம்னு யோசிச்சு எழுதினவர். அவருக்கு முன்னாடி எல்லாரும் ஒரே மாதிரி விஞ்ஞானி ரோபாட் செஞ்சார், ரோபாட் பயங்கரமா மாறி படைச்ச விஞ்ஞானியையும் மற்ற மனுஷங்களையும் அழிச்சு ரோபாட் படைகளை உருவாக்கிடுச்சுன்னுதான் அரைச்ச மாவையே வெவ்வேறு விதத்துல அரைச்சுக்கிட்டிருந்தாங்க. ஆனா அஸிமாவ் ரோபாட்களை எப்படிச் செய்து ஆபத்தில்லாம பயன்படுத்தலாம்னு எழுதினார்."

கிரண் புகுந்து, "ரோபாட்டை எப்படிச் செய்யலாம்னு எழுதினாரா? அப்படின்னா நானும் அதைப் பாத்து செய்யலாமா?" என்றான்.

ராபர்ட் சிரித்து விட்டு விளக்கினார். "அப்படியில்லை கிரண். அதுவும் அஸிமாவின் கற்பனைதான். ரோபாட்களுக்கு ப்ளாட்டினம்-இரிடியம் பாஸிட்ரான் மூளை இருப்பதாகவும் அதில் தன் ரோபாட் சட்டங்களைப் பதிவு செய்து விட்டால் ரோபாட்களால் மனிதர்களுக்கு அபாயம் வராமல் பயன்படுத்தலாம் என்றும் எழுதினார்."

சுமிடோமோ தலையாட்டி ஆமோதித்துத் தொடர்ந்தார். "அந்தச் சட்டங்கள் அஸிமா வோட 'ரன் அரவுன்ட்' என்கிற சிறுகதையில முதல்ல வெளி வந்தது. அதுல மூன்று சட்டங்களை பதிச்சிருந்தார்:

முதல் சட்டம்: ரோபாட்கள் ஒரு மனிதருக்கும் ஆபத்து தரக்கூடாது; மேலும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம், ஒரு மனிதருக்கும் வேறு ஆபத்து வரவிடக் கூடாது.

இரண்டாம் சட்டம்: ரோபாட்கள் மானிடர் இடும் கட்டளைக்கு அடிபணிந்து நடந்தே ஆக வேண்டும். முதல் சட்டத்துக்கு மாறாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த சட்டத்துக்கு மாறாக நடந்து கொள்ளலாம்.

மூன்றாம் சட்டம்: முதல், இரண்டாம் சட்டங்களுக்கு மாறாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர, வேறு எத்தருணத்திலும் ரோபாட்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அப்புறம் இன்னொரு சட்டத்தையும் சேர்த்தார். அது எல்லாவற்றுக்கும் அடிப்படையான பூஜ்ய சட்டம்: ரோபாட்கள் மானிட இனத்துக்கு ஆபத்து தரக்கூடாது. மேலும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் மானிட இனத்துக்கு ஆபத்து வரவிடக் கூடாது. ஒரு மானிடருக்காக ரோபாட்களால் மனித இனத்துக்கே தீங்கு விளைந்து விடக் கூடாது என்பதற்காக இந்தச் சட்டம்."

மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போன சுமிடோமோ ஒரு கணம் நிறுத்தவும், கிரண் புகுந்து, "நான் கூட அதைப் படிச்சிருக்கேன். ஆனா இந்த சட்டங்கள் பலருடைய கதைகளில வந்திருக்கு போலிருக்கே" என்றான்.

சுமிடோமோ ஒரு அறிந்த புன்னகையுடன் தொடர்ந்தார். "ஆமாம் கிரண். ஆனா அதெல்லாம் அஸிமாவ் எழுதின அப்புறந்தான். பல எழுத்தாளர்கள் அஸிமாவின் சட்டங்களை வெளிப்படையாகவோ, அல்லது அவற்றை உள்ளிட்டோ எழுதியிருக்காங்க. அஸிமாவ் நிஜ வாழ்க்கை ரோபாட்களுக்கும் முன்னோடி. முதன் முதலாக யூனிமேட் என்னும் ஒரு தொழிற் சாலை ரோபாட்டை உருவாக்கிய எங்கல் பர்கர் என்னும் விஞ்ஞானி கூட அஸிமா வின் 'ஐ, ரோபாட்' என்னும் கதையால்தான் தனக்கு ரோபாட்டிக்ஸின் மேல் ஆர்வம் பிறந்ததாகக் கூறியுள்ளார்."

சூர்யா, "அப்போ சாபக் வேலையாளன் என்கிற செக் வார்த்தையிலிருந்து ரோபாட்னு பேர் வச்சார். ஆனா பயங்கர தீய விளைவுகள் இல்லாமல், பயனுள்ள வேலையாளா அஸிமாவ் தன் சட்டங்களின் மூலம் மாற்றினார்ங்கறீங்களா?" என வினவினார்.

ராபர்ட் சூர்யாவின் கருவை உணரும் திறனை மெச்சினார். "வெரி குட் மிஸ்டர் சூர்யா! அதுதான் விஷயம்."

சுமிடோமோவும் தலையாட்டி ஆமோதித்து விட்டு தன் ரோபாட் சரித்திரத்தைத் தொடர்ந்தார். "எங்கல்பர்கருக்கு அப்புறம் பல விதமான ரோபாட்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் பட்டன. ஜப்பானில் கார் உற்பத்திக்கும் சிலிகான் சிப் உற்பத்திக்கும் மிக அதிக அளவில் கம்ப்யூட்டரால் நடத்தப்படும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பிறகு அவை அமெரிக்காவிலும் பயன்படுத்தப்பட்டன."

கிரண் ஆட்சேபித்தான். "கம்ப்யூட்டர் நடத்தும் இயந்திரங்களை ரோபாட் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்போது தானே இயங்கும் துணி துவைக்கும் இயந்திரம் கூட ரோபாட் என்று சொல்லலாமே?"

சுமிடோமோ புன்னகைத்தார். "இது பொதுவான ஆட்சேபணைதான். ஆனால் எது ரோபாட், எது கம்ப்யூட்டர் நடத்தும் இயந்திரம் என்று பிரித்துப் பார்ப்பது வரவரக் கடினம் ஆகிக் கொண்டிருக்கிறது. துணி துவைப்பது வெறும் இயந்திரம், காருக்கு வர்ணம் அடிப்பது வெறும் இயந்திரம், சரி. ஆனால் இப்போது மார்ஸ் கிரகத்தில் தாங்களே சுற்றி ஆராய்ந்துக் கொண்டிருக்கும் ரோவர்கள்? இயந்திரமா ரோபாட்டா? நகர்ந்தால் ரோபாட், இருக்கும் இடத்தில் வேலை செய்தால் இயந்திரமா? அப்போது வீட்டில் தானே ஓடி வேக்குவம் செய்யும் தட்டு போல இருக்கும் ரூம்பாவை ரோபாட் என்று ஒத்துக் கொள்ளலாமா? அதுவும் தானியங்கி இயந்திரம்தானே?"

கிரண் குழப்பமடைந்தான். "அது... வந்து... ரொம்ப சாதாரண வேலை செஞ்சா இயந்திரம், ரொம்ப கஷ்டமா மனிதர்கள் மாதிரி..."

ராபர்ட் இடைமறித்தார். "சரிதான் கிரண். ரொம்ப காலமாவே பொது மக்கள் ரோபாட்னா மனிதர்கள் உருவத்துல இருக்கணும். மனிதர்கள் நடுவிலேயே நடக்கணும்னு நினைச்சிருக்காங்க. ஆனா செய்ய வேண்டிய வேலைக்கேற்றபடி ரோபாட்களை நாம் எப்படி வேணும்னா உருவம் அமைச்சுக்கலாம். நீ சொல்ற ஒரு விஷயம் சரிதான். ரொம்ப சுலபமான ஒரே மாதிரியான வேலைகளைச் செய்யறது இயந்திரங்கள், கொஞ்சம் மனிதர்கள் மாதிரிப் பல விஷயங்களை ஆராய்ஞ்சு யோசிச்சு, முடிவெடுக்கறதும் அத்துடன் தாங்களே நகர்ந்து வேலை செய்யக் கூடியவை ரோபாட்கள்னு பொதுவா பிரிக்கப்படுது. அதுவும் கொஞ்சம் மனித உருவம் மாதிரி தலை, கண், கை போலக் கொஞ்சமாவது தெரியற அங்கங்கள் இருந்துட்டா, ஸ்டார் வார்ஸ் படத்துல வற 3-CPO அல்லது ஷார்ட் சர்க்யூட் படத்துல வர ஜானி-5 போல மீதியெல்லாம் இயந்திரம் மாதிரியே இருந்தாலும் ரோபாட்னு ஏத்துக்கறாங்க."

சுமிடோமோ தலையாட்டி ஆமோதித்து விட்டு தொடர்ந்தார். "அதுனால தான் ரொம்பக் காலமா மனிதர்கள் மாதிரி இருக்கற ரோபாட்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வராங்க. ஆனா ரோபாட் மூளைக்கான கம்ப்யூட்டர் சக்தி, அதில் ஓடும் ப்ரோக்ராம்களின் புத்திசாலித்தனம், ரோபாட்களின் மனிதத் தோற்றம், தானே நடப்பதற்கும், கை, கண் போன்ற அங்கங்களுக்கும் தேவையான இயந்திர பாகங்கள் எல்லாமே மிகக் குறைச்சலா இருந்ததுனால மனித நடப்பு ரோபாட்கள் ரொம்ப மெல்லத்தான் முன்னேறி வந்தன."

இது வரை மெளனமாக இருந்த சூர்யா, "அந்த மாதிரி ரோபாட்கள் எப்படி இருந்தது, இப்ப உங்க ஆராய்ச்சியைத் தவிர எந்த நிலைக்கு வந்திருக்குன்னு கொஞ்சம் விவரியுங்களேன்" என்றார்

சுமிடோமோ விளக்கினார். "ரொம்ப காலமா பல இடங்களில இந்த முயற்சி நடக்குது. அது எல்லாத்தையும் விவரிக்க ரொம்ப நேரமாகும். அதுல ஒண்ணைப் பத்தி மட்டும் சொல்றேன். ஜப்பானின் ஹாண்டா நிறுவனம் மனிதர்களுடன் பழகி அவர்களுக்கு உதவும் ரோபாட்களை உருவாக்க முயற்சித்து வருது."

கிரண் இடை மறித்து கிண்டலாக, "ஹாண்டாவா? அப்ப அதுக்கு நாலு சக்கரமும் ஸ்டீயரிங் வீலும் இருக்குமா?" என்றான்.

சுமிடோமோ சற்றே சூடாக, "அப்படி இல்லை கிரண். அவங்களோட ஆராய்ச்சி மிகவும் உயர்ந்தது. நான் கூட அங்க சில வருஷங்கள் ஆராய்ச்சி செய்ததுனால தான் எனக்கும் பல அடிப்படையான மனித உருவ ரோபாடிக்ஸின் கோட்பாடுகள் புரிஞ்சுது. 1980-லிருந்து அந்த ஆராய்ச்சி நடந்துக்கிட்டிருக்கு. அதுல மிக முக்கியமானது, சக்கரங்கள்மேல நகராம மனிதர்களைப் போல இரண்டு கால்களில நடக்கறது."

"ஏன் அப்படி?" என்றார் சூர்யா.

சுமிடோமோ விளக்கினார். "கால்களால நடந்தாத்தான் வீடுகளில இருக்கற மேஜை போன்ற பல தடங்கல்களையும் சுலபமாக சுற்றித் தாண்டிப் போக முடியும். மேலும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வேலை செய்யணும்னா கால்கள் இருந்தாத்தான் முடியும். அது தவிரச் சமமில்லாத, ஏற்ற இறக்கமான தரைகளிலும் நடக்க முடியும்."

கிரண், "சரி, ஆனா ஏன் இரண்டு கால்கள்? எட்டுக் கால் பூச்சி மாதிரி இருந்தா இன்னும் சுலபமா இருக்கும் இல்லையா?" என்றான்.

ராபர்ட் பதிலளித்தார். "இது ரொம்ப நல்ல கேள்வி. பல விஞ்ஞானிகள் அப்படித்தான் நினைச்சு ஆராய்ச்சி செய்தாங்க. அது இயந்திரமாவே நடந்துக்கற ரோபாட்டுக்கு நல்லதாத்தான் இருக்கும். நீ சொல்ற மாதிரி, விழாம நடக்க சுலபமும் கூட. சோனியோட அய்போ ரோபாட் நாய்கூட நாலு கால் உதாரணம்னு சொல்லலாம். ஆனா, ஹாண்டாவுக்கும், எங்களுக்கும் குறிக்கோள் என்னன்னா மனிதர்கள் மத்தியில மனிதர் களைப் போலவே நடந்து பழகற ரோபாட் உருவாக்கணும்னு. அது மிகமிகக் கஷ்டம். இருந்தாலும் சாதிச்சிருக்கோம்- இந்த ஜீவ்ஸ் ஒரு நல்ல உதாரணம்." அவர் முகத்தில் சாதனையின் பெருமிதம் ஒளிர்ந்தது.

சுமிடோமோ தொடர்ந்தார். "ஆமாம். ஹாண்டா இருபது வருடமாக ஆராய்ச்சி செஞ்சு டிசம்பர் 1996-ல தானே நடந்து படிக்கட்டு ஏறி இறங்கக் கூடிய P2-ங்கற ரோபாட்டைப் பொதுமக்கள் மத்தியில உலவவிட்டு பரபரப்பேற்படுத்தினாங்க. அது மனித உருவம் மாதிரி கொஞ்சம் இருந்தாலும் அளவில் ரொம்பப் பெரிசு. இப்போ..." கிரண் குதித்தான். "ஓ! எனக்கு இப்பத் தான் ஞாபகம் வருது, அஸிமோ!" சுமிடோமோ புன்னகைத்தார். "ஆமாம்! ASIMO என்பது பெயரில்லை, அது Advanced Step in Innovative MObility என்பதன் சுருக்கம் என்று வெளிப்படையாக ஹாண்டா சொல்கிறது. ஆனால் ரோபாடிக்ஸ் சட்டம் இயற்றிய எழுத்தாளர் ஐஸக் அஸிமாவின் பெயரை வைத்துத் தான் விஞ்ஞானிகள் விளையாட்டாக இந்தச் சுருக்கத்தை உண்டாக்கியுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன். அஸிமோ, தானே நடக்கக் கூடிய, மனித அளவில் உள்ள ரோபாட்."

சூர்யா, "அஸிமோவில் அப்படி என்ன தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்கு?" என்று கேட்டார்.

சுமிடோமோ தன் ஜப்பானிய பூர்வீகத்தின் பெருமிதத்துடன் விவரித்தார். "அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், ரோபாட்களால் செய்யக் கடினம் என்று கருதியிருந்த பல காரியங்களை அஸிமோவால் செய்ய முடிகிறது. தன் தலையிலுள்ள காமிராவில் தெரியும் காட்சியிலிருந்து தனித்தனி பொருட்களைத் தெரிந்து கொண்டு அவற்றின் தூரத்தையும் அசைவுகளையும் அறிந்து கொள்கிறது. மனிதர்களின் பேச்சுக் கட்டளைகளை மட்டுமில்லாமல் சைகைக் கட்டளைகளையும் கூடப் புரிந்து கொள்கிறது."

கிரண் இடைபுகுந்து "அப்ப அஸிமோ வோட சைகை பாஷைலயே பேசலாமா?" என்றான்.

ராபர்ட் சிரித்தார். "அவ்வளவு முன்னேற்ற மில்லை. ஆனா அதுக்கான ஆராய்ச்சி நடந்துகிட்டுதான் இருக்கு. இங்கேகூட."

சுமிடோமோ தொடர்ந்தார். "அஸிமோ படிக்கட்டுகள் மேல் எளிதாக ஏறி இறங்க முடியும். எதிரில் திடீரென வரும் இடைஞ்சல்களை அறிந்துகொண்டு தன் போக்கை மாற்றிக் கொள்ள முடியும். மனிதர்களின் முகத்தை ஞாபகம் வைத்துக் கொண்டு அவர்களை அப்புறம் யாரென்று அறிந்து கொள்ள முடியும். மின்வலைக்குத் தொடர்பு கொண்டு, செய்திகள் போன்ற விவரங்களை மனிதர்களுக்குத் தெரிவிக்க முடியும்!"

சூர்யா பிரமிப்புடன் வினவினார். "அஸிமோ ரோபாடிக்ஸ் ரொம்பவே முன்னேறியிருக்குங்கறதுக்கு உதாரணம்னு தெரியுது. அப்ப அதுக்கும் மேல உங்க ஆராய்ச்சி என்ன? உங்க தொழில் நுட்பக் குறிக்கோள்தான் என்ன?" சுமிடோமோ தன் கனவை விவரித்தார். "நீங்கதான் ஜீவ்ஸைப் பார்த்திருக்கீங்களே. அவன்தான் இப்போதைக்கு எங்க ஆராய்ச்சியின் உன்னத விளைவு. அஸிமோ என்னதான் மிக உயர்ந்த தொழில் நுட்பம் வாய்த்திருந்தாலும், இன்னும் பார்க்க ரோபாட்டாகவே உள்ளது. மிகப் பெரிய பேட்டரிப் பையை சுமந்து கொண்டு, பெரிய உருண்டைக் கண்ணாடி முகத்துடன் விண்வெளி வீரன் போலத்தான் தோன்றுகிறதே ஒழிய ஒரு சராசரி மனிதனைப் போலத் தோன்றவில்லை. மனிதர்களுடன் பழகி அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்றால் ரோபாட்கள் மனிதர் களைப் போலவே இருந்து அவர்களைப் போலவே இயற்கையாகப் பழக வேண்டும் என்பது எனக்கும் ராபர்ட்டுக்கும் குறிக்கோள்." ராபர்ட் மேலும் விளக்கினார். "மனிதத் தோற்றத்தில் மட்டுமில்லை. அதற்கு மேலாக ரோபாட்கள் மனிதர்களைப் போல என்னவெல்லாம் காரியம் செய்ய முடியும் என்பதிலும் கூட. அஸிமோ மிகவும் பிரமிப்புத் தரக் கூடிய சாதனைதான். இருந்தாலும் அது செய்யக் கூடிய காரியங்கள் மிகவும் குறைவு. எங்கள் குறிக்கோள் அதற்கு மேல் மிக அதிகம். மனிதர்கள் நடுவில் வாழ்ந்து, அவர்கள் செய்யக் கூடிய பல வேலைகளையும் அவர்களுக்குப் பதிலாகச் செய்து உதவ வேண்டும் என்பது. அதில் நாங்கள் பெரும் முன்னேற்றமும் அடைந்திருக்கிறோம்." சூர்யா மேலும் கேட்டார். "சரி, அது எனக்குப் புரிகிறது. மனிதர்கள் போல் வேலை செய்யும்படியான ரோபாட்களை உருவாக்கியதும் அவைகளை என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் நோக்கம் வெறும் ஆராய்ச்சியா, இல்லை அதை அடிப்படையாக வைத்து செய்யப் போகும் வணிகமா, அல்லது..." ராபர்ட் தலையாட்டினார். "சூர்யா, இது மிக நல்ல, முக்கியமான கேள்வி. வெறும் அடிப்படை ஆராய்ச்சி முக்கியமானதுதான். ஆனால் அது மட்டும் செய்தால் துறை வேகமாக முன்னேறுவதில்லை. அதனால், குறிப்பிட்ட வணிக நோக்கத்துக்காக ஆராய்ச்சி செய்வது நல்லது என்று நினைத்துத்தான் செயல்படுகிறோம்."

சுமிடோமோ மேலும் விளக்கினார். "ஆனால் வெறும் வணிக நோக்கம் மட்டும் கூட இல்லை, சூர்யா. அப்படி இருந்தால் ராணுவத்துக்காகப் போரிடும் ரோபாட்களோ, அல்லது வேறு தொழிற்சாலைகளுக்குத் தேவையான ரோபாட்களோ உருவாக்கியிருப்போம். அப்படிச் செய்திருந்தால் இவ்வேளைக்கு முடித்து பெரும் செல்வமும் அடைந்திருப்போம்."

சூர்யாவின் மனத்தில் ஒரு எண்ணம் பளிச்சென்று தோன்றி ஒரு மூலையில் சேமித்து வைக்கப்பட்டது.

"சரி, எந்தத் துறைக்காகச் செய்கிறீர்கள், மேலே சொல்லுங்கள்." என்றார்.

சுமிடோமோ தொடர்ந்தார். "மானிட இனத்தின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் தேவையான துறைக்காக செய்கிறோம். உலகத்தின் ஜனத் தொகை மிக விரைவாக வயதில் முதிர்ந்து கொண்டு வருகிறது. மக்களின் சராசரி வாழ்நாள் (average life expectancy) அதிகரித்துக் கொண்டு வருகிறது. அது என்னவோ நல்லது தான். ஆனால் அத்துடன் சேர்ந்து அவர்களின் உடல் நலம் மற்றும் சமூக, கலாச்சார சம்பந்தப்பட்ட இன்னல்களும் அதிகரிக்கின்றன..."

கிரண் குறுக்கிட்டான். "என்ன? ரொம்ப நாள் உயிரோட இருந்தா கஷ்டமா? நான் செஞ்சுரிக்கும் மேலா இருக்கலாம்னு இருக்கேன்?"

சுமிடோமோ முறுவலித்தார். "கவலைப் படாதே கிரண், அதுக்கும் மேல இருக்கலாம்! ஆனா வசதியா இருக்கணும் இல்லையா? அதுக்குத்தான் எங்க முயற்சி. அப்படி ரொம்ப வயசானவங்களுக்கு தங்களைத் தாங்களே கவனிச்சுக்க முடியறதில்லை. வீட்டு வேலைகளைச் செய்ய முடியறதில்லை. சமைக்கிறது கஷ்டம். சிலருக்குத் தங்களை சுத்தமா வச்சுக்கறது கூடக் கஷ்டம். இன்னும் சிலருக்கு நடமாடறதே கஷ்டம். உடல் நலம் சரியில்லாம போயிட்டா மருந்து மாத்திரை வேளாவேளைக்குச் சரியா சாப்பிடக்கூட முடியாம போயிடுது."

கிரண் புகுந்து, "அதனாலென்ன? பாத்துக்கறத்துக்கு அவங்க குடும்பஸ்தர்கள் இல்லையா? அப்படி இல்லைன்னா, பணம் குடுத்து உதவியாளங்களை வச்சுக்கலாம். இல்லைன்னா வயசானவங்க இருக்கற நர்ஸிங் ஹோமுக்குப் போயிடலாமே?" என்றான்.

ராபர்ட் முறுவலுடன் கிரண் முதுகில் தட்டிக் கொடுத்தார். "சரியான பாயின்ட் புடிச்சே கிரண். அங்கதான் பிரச்சனையே! அதுக்கு நிவாரணம் தரத்தான் எங்க ஆராய்ச்சி" என்று சொல்லிவிட்டு மேலும் விளக்கினார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com