தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்
நம் முன்னோர்கள் எத்துணை ஆற்றலும் வீரமும் ஆண்மையும் உடையவர்களாயிருந்தனர் என்பதை நீங்கள் நன்கு உணர்தல் வேண்டும். அவ்வுணர்ச்சியொன்றே உங்கட்கும் புதியதோர் ஊக்கத்தை உண்டு பண்ணும் என்பது திண்ணம். நம் முன்னோரது சரித்திரமே தமிழ் நாட்டின் பழைய சரித்திரமாகும். சரித்திரம் வீணுக்கு எற்பட்டதன்று. அது பள்ளிக்கூடங்களில் படித்தல், பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுதல் என்பவற்றுக்கு மாத்திரம் ஏற்பட்டதன்று. முன்னோரின் நிலைகளை நன்குணர்ந்து இடையிற் புகுந்துள்ள குறைபாடுகளை நீக்கிப் பழைய நிலைக்குத்தகப் பெருமை குன்றாது ஒழுங்குபட்ட வாழ்வு நடத்த வழிகோலிக் கொள்வதற்குச் சரித்திரம் ஏற்பட்டதாகும். ஆகவே சரித்திரம் செய்யும் பேருதவியை கூர்ந்து நோக்கின், அத்தகைய அரிய உதவியை எவரிடத்தும் எதிர்பாக்க இயலாது எனலாம். ஆதலால் ஒவ்வொருவரும் தம்தம் முன்னோரது வரலாறுகளை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்."

இவ்வாறு இச்சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வரலாற்றின் தேவையை அறிந்திருப்பது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து செயற்பட்டவர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். அவர் எழுதிய நூல்கள், ஒவ்வொருவரும் வரலாற்றுணர்வுடன், தமிழ் தமிழர் பற்றிய பிரக்ஞையுடன் வாழ்வதற்கான தடயங்களைத் தருகின்றன.

தமிழக வரலாற்றிஞர்கள் என்ற மகுடத்தில் தி.வை சதாசிவப்பண்டாரத்தார் பெயரும் இடம் பெறுவது, அவரது சிந்தனை உழைப்பால் மட்டுமே உள்ளது. இன்று வளர்ந்துள்ள ஆராய்ச்சி மரபுகள் பண்டாரத்தாரின் ஆய்வு முடிவுகளை மறுக்கலாம். ஆனால் இத்துறைசார் ஆராய்ச்சி பெருகி வளம் பெறுவதற்கு அவரது ஆய்வுத் திண்ணமும் காரணமாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பண்டாரத்தார் கும்பகோணம் மாவட்டத்திலுள்ள திருப்புறம்பயம் எனும் ஊரில் ஆகஸ்டு 15, 1892-ல் பிறந்தார். 1910-ல் பள்ளிப் படிப்பை முடித்தார். தொடர்ந்து தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைத் தமது ஆசிரியரான பாலசுப்பிரமணியப் பிள்ளையிடம் பயின்றார். தமிழ்க் கல்வியில் பெருவிருப்பம் கொண்டு தமிழ்நூல்களைத் தாமே தேடிப் படித்து வந்தார். விரைந்து கவிதை பாடும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார்.

பாபநாசம் வட்டாட்சி அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுகாலம் எழுத்தராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் தாம் பயின்ற குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாதகாலம் மட்டும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1917 முதல் 1942 வரை குடந்தை பாணாதுறை உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் பணிபுரிந்தார். அதன் பின்னர் 1942 முதல் 1953 வரையிலும், மீண்டும் 1955 முதல் 1960 வரையிலும் அண்ணாமலைப் பல்கலையில் தமிழாராய்ச்சித் துறையில் தம் பணியை மேற் கொண்டார். தம் இறுதிக்காலம் வரை (ஜனவரி 2, 1960) அப்பல்கலைக் கழகத்திலேயே பணியாற்றினார்.

இவர் ஒரு தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினாலும் அவரது கற்றல், கற்பித்தல் பணி ஆராய்ச்சி, தேடல் சார்ந்து பயணப்பட்டது. ஆய்வுலகில் தனது சிந்தனைகளால் பலரது கவன ஈர்ப்புக்கு உரியவராக வளர்ந்தார். 1956-ம் ஆண்டில் மதுரை திருவள்ளுவர் கழகம் இவருக்கு 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' எனும் பட்டம் வழங்கி கௌரவித்தது. அவரது கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவரத் தொடங்கின; பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

பண்டாரத்தாரின் கல்வெட்டு ஆய்வுகளுக்கு அவரது ஆசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தூண்டுகோலாக இருந்திருக்கிறார். வகுப்புகளில் கல்வெட்டுகள் பற்றி அவர் கூறிய செய்திகளே அத்துறையில் இவரைச் சிந்திக்கத் தூண்டின. அதன் பயனாகத் திருப்புறம்பயக் கல்வெட்டுகளை ஆராயத் தொடங்கினார். இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டுகள் இவரது ஆய்வுக்கு அடிப்படையாக அமைந்தன. தொடர்ந்து கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளை எல்லாம் நேரில் சென்று கள ஆய்வு செய்தார். கல்வெட்டு ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கினார்.

இவரிடம் இயல்பாக இருந்த தமிழ் இலக்கிய இலக்கணப் பயிற்சி, அவர் செய்த கல்வெட்டாராய்ச்சிக்கு முழுமையாகப் பயன்பட்டது. இலக்கியப் புலமையும் கல்வெட்டு அறிவும் ஒருங்கே பெற்றிருந்தமையால் பல ஆய்வுகளில் தனிக்கவனம் செலுத்த முடிந்தது. பண்டாரத்தார் தமது ஆசிரியரான வலம்புரி அ. பாலசுப்பிரமணியம் பிள்ளை என்பவரோடு இணைந்து எழுதிய 'சைவ சிகாமணிகள் இருவர்' என்பதே அவரது முதல் நூலாகும். பின்னர் 1930-ல் 'முதற் குலோத்துங்க சோழன்' என்ற நூலைத் தனித்து எழுதினார்.

தொடர்ந்து 'பாண்டியர் வரலாறு', 'திருப்புறம் பயத் தலவரலாறு', 'பிற்காலச் சோழர் சரித்திரம்' (3பாகங்கள்), 'காவிரிப்பூம் பட்டினம்', 'செம்பியன் மாதேவித் தல வரலாறு', 'தமிழ் இலக்கிய வரலாறு' (கி.பி 250-600)', 'தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15, ஆம் நூற்றாண்டுகள்)', 'தொல்காப்பியர் பொதுப்பாயிரம் மூலமும் உரையும்', ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

ஏறத்தாழ எண்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் எழுதியுள்ளார். சில கட்டுரைகள் 'கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள்', 'இலக்கியமும் கல்வெட்டுக்களும்' எனும் தலைப்புகளில் நூல் வடிவம் பெற்றுள்ளன. இன்னும் பல கட்டுரைகள் நூல் வடிவம் பெறாமலே உள்ளன.

பண்டாரத்தார் தனது நூல்களில் சான்றுகளாக சங்க இலக்கியம், ஐம்பெரும் காப்பியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சைவத் திருமுறை நூல்கள், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், தொல்காப்பியம், நன்னூல் யாப்பருங்கலக்காரிகை, இறையனார் களவியல், சிற்றிலக்கியங்கள் முதலான பல்வேறு இலக்கிய இலக்கண நூல்களையும், மேனாட்டார் எழுதிய கடிதங்கள் போன்றவற்றையும் மற்றும் கல்வெட்டுகள் வரலாறு, கலை, இலக்கியம் தொடர்பான ஆங்கில நூல்களையும் தக்க இடங்களில் பயன்படுத்தி உள்ளார்.

பண்டாரத்தாருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் பலராவர். பெரியார் ஈ. வெ. ரா. திரு. வி. கலியாணசுந்தரனார், மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், உ. வே. சாமிநாதையர், வையாபுரிப்பிள்ளை, தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் என இந்தப் பட்டியல் நீண்டது. நீதிக் கட்சியின் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அக்கட்சி நடத்திய ஒவ்வொரு மாநாட்டிலும் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறார். வெறுமனே ஆராய்ச்சி என்ற நிலையில் மட்டும் அவர் நிற்கவில்லை. சமூக அரசியல் சார்ந்த விடயங்களிலும் அக்கறையுள்ளவராக இருந்துள்ளார். நாள்தோறும் செய்தித் தாள்களைப் படிக்கும் இயல்பினை உடையவர். அரசியல் வரலாறுகளை கேட்டோர் வியக்கும் வண்ணம் கூறும் இயல்புடையவர் என்று அவரைப் பற்றி அறிந்தோர் குறிப்பிடுவர்.

அழுத்தமான சமூக சீர்த்திருத்த உணர்வும், ஆழ்ந்த தமிழ்ப்பற்றும், இன உணர்வும் ஒருங்கே நிரம்பப் பெற்றவராகவும் அக்கால கட்டத்தின் சிறந்த பிரதிநிதியாகவும் வாழ்ந்துள்ளார். இதனால் தமிழ், தமிழர் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட இயக்கங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவாராக விளங்கினார். இதனையே அவர் உறவு கொண்டிருந்த நண்பர் வட்டமும் சுட்டுகிறது.

பண்டாரத்தார் கல்வெட்டுகளை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி, அவற்றின் துணை கொண்டு தமிழக வரலாற்றை எழுதவும் தவறவில்லை. வரலாற்றை எழுதுவதானது முன்னோரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் பின்னோரை நல்வழிப்படுத்தவும் உதவும் என்ற கருத்துடையவராக வாழ்ந்துள்ளார். அவர் எழுதிய நூல்கள் இந்தக் கருத்துக்கள் அமையவே உள்ளன.

தமிழில் முறையாக எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் குறைவு. இருந்த ஒரு சிலவும் ஆங்கிலத்திலேயே காணப்பட்டன. அக் குறையை நீக்கும் முயற்சியை மேற்கொண்டார். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அந்நாட்டின் உண்மைச் சரித்திரம் தாய்மொழியில் வெளிவருதல் பெருந் துணையாகும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். 'வடஇந்தியாவின் வரலாறே இந்தியா வின் வரலாறாகக் கொண்டு தென்னாட்டின் சரித்திர உண்மைகளைக் கைவிட்ட நாளிலே தமிழர்களின் வரலாறு ஆராய்வாரின்றி மறைந்து கிடந்த வேளையிலே, சிலர் கல்வெட்டுக்களின் துணைகொண்டு வரலாறுகளை எழுதத் தொடங்கினார்கள். அவ்வாறு எழுந்த நீண்ட வழியிலே சதாசிவப்பண்டாரத்தார் சென்றார்' என்ற அறிஞர் மு. அண்ணாமலையின் கூற்றுக் கிணங்கத் தமிழக வரலாற்றை எழுதியுள்ளார்.

வரலாற்று நோக்கோடு பண்டாரத்தார் ஆய்ந்து கண்ட முடிவுகள் ஏராளம். ஆய்வாளர்கள் சுந்தரர் காலத்தை ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று கூறி வந்தனர். ஆனால் பண்டாரத்தார் சுந்தரர் காலத்தை ஏழாம் நூற்றாண்டின் இறுதியும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனக் காட்டினார். அதனைப் போன்றே நம்பியாண்டார் நம்பியை முதல் இராசராசன் காலமெனவும், சேக்கிழாரை இரண்டாம் குலோத்துங்கன் காலமெனவும் பிற ஆய்வாளர்கள் கூறி வந்தனர். ஆனால் பண்டாரத்தார் நம்பியாண்டார் நம்பியின் காலம் ஆதித்தன் காலமெனவும் சேக்கிழார் காலம் மூன்றாம் குலோத்துங்கன் காலமெனவும் கூறியுள்ளார்.

பண்டாரத்தாருக்கு முன்பு சோழர் வரலாறு பற்றி கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி செய்த ஆய்வு பண்டாரத்தாருக்குப் பெரிதும் உதவியாக அமைந்தது. அதனை நன்றி யுணர்வோடு பண்டாரத்தார் சுட்டுகிறார். ஆயினும் சாஸ்திரியார் போன்ற சில ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முன்பு வரலாற்றில் செய்த சில இருட்டடிப்புகளையும் வெளிப்படுத்திய பெருமைக்குரியவர் பண்டாரத்தார் என்று சுட்ட வேண்டியுள்ளது.

சாஸ்திரியார் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளினின்று பல இடங்களில் பண்டாரத்தார் வேறுபட்டுள்ளார். இராசராச சோழனின் சகோதரரான ஆதித்த கரிகாலன் சிலரால் கொலை செய்யப்பட்டு இறந்தான். அவன் உத்தம சோழனின் சூழ்ச்சியால் இறந்தான் என்று சாஸ்திரியார் குறிப்பிடுகிறார். ஆயினும் காட்டு மன்னார் கோயிலுக்கருகில் உள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டினைச் சான்றாகக் காட்டி ஆதித்த கரிகாலனைக் கொன்றது சில பிராமண அதிகாரிகள் எனப் பண்டாரத்தார் கூறுகின்றார்.

அதனைப் போன்றே ஒரு சோழன் தனது தந்தையார் கட்டிய கோயிலுக்கு விழா எடுக்கும் போது ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியமை பற்றி சாஸ்திரியார் எழுதும் செய்தி இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது அந்த ஆயிரம் பேரும் பிராமணர் என்று குறிப்பிடுகிறார் சாஸ்திரியார். ஆயினும் அவ்வாயிரம் பேரில் ஐநூறு பேர் பல சமயத்தார், முந்நூறு பேர் சிவனடியார்கள், இருநூறு பேர் பிராமணர்கள் என்ற பாகுபாட்டை எடுத்துரைக்கிறார் பண்டாரத்தார் என்று மு. அண்ணாமலை கூறுவார். இவர் சதாசிவப் பண்டாரத்தாரைக் குறித்து விரிவான தகவல்களை முன்வைத்துள்ளார் (பொன்னி மலர்ந்த இதழ் 15-ல் விரிவான பேட்டிக் கட்டுரை உள்ளது.)

வரலாற்றறிஞர், கல்வெட்டறிஞர், இலக்கிய அறிஞர், சமயப்பணியாளர், கால ஆராய்ச்சி யாளர், ஊர்ப் பெயராய்வு, கள ஆய்வு எனப் பல்வேறு தடங்களில் அவரது கவனம் விரிந்தது. அவர் எழுதிய கட்டுரைகள் மேற்குறித்த அடையாளங்களில் வைத்து நோக்குவதற்கான, புரிந்து கொள்வதற்கான திறன்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். பண்டாரத்தார் வழிவரும் ஆராய்ச்சி நெறிமுறை அறிவியல் கண்ணோட்டத்துக்கு உட்பட்டது.

எடுத்துக்காட்டாகத் தாம் எழுதிய நூல்கள், கட்டுரைகளில் அடிக்குறிப்பிடும் மரபை அக்காலத்திலேயே கையாண்டுள்ளார். பெரும்பாலான இடங்களில் கல்வெட்டு, செப்பேடுகளில் காணப்படும் தொடர்களையே பயன்படுத்துகின்றார். மேலும் அவற்றில் காணப்படும் பல பெயர்களுக்குப் பெயர்க்காரணம் யாது என்பதையும் கூறுகின்றார். சிலவற்றில் தற்காலத்தில் அப்பெயருக்கு இணையாக ஏதேனும் இருப்பின் அவற்றையும் குறிப்பிடுகின்றார். அதே போன்று அரிய பல கல்வெட்டுச் சொற்களுக்குப் பல இலக்கிய, இலக்கண மேற்கோள் காட்டிப் பொருள் கூறுவார்.

"இதனை அறிஞர்கள் ஆய்ந்து விளக்குவார்களாக", "இ·து ஆராய்தற்குரிய ஒன்றாகும்" என்று ஆய்வைத் தூண்டுகின்ற வகையில் பலவிடங்களில் கூறியுள்ளார்.

நூல்களின் பின்னிணைப்பில் வரை படங்கள் நிழற்படங்கள் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், போன்றவற்றைச் சேர்த்துள்ளார். 'பாண்டியர் வரலாறு' நூல் பல பலபதிப்பு களாக வெளிவந்துள்ளது. அவர் உயிருடன் இருக்கையில் மூன்று பதிப்புகள் வெளி வந்தன. ஒவ்வொரு பதிப்பின் முன்னுரையிலும் இப்பதிப்பில் இன்ன பகுதி புதிதாகப் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்
.
இன்று வளர்ந்துள்ள ஆய்வுக் கண்ணோட்டங்கள் பண்டாரத்தாரின் முடிவுகளை மறுத்து விரித்து மேலும் நுண்ணியதான முடிவுகளை நோக்கி நகர்த்தும்.

1965-களுக்குப் பிறகு கல்வெட்டு ஆராய்ச்சித் துறையில் புதிய வேகம் ஏற்பட்டுள்ளது. பல புதிய கண்டுபிடிப்புகள் முன்னைய ஆய்வு முடிவுகளை மறத்து வருகின்றன. குறிப்பாகச் சமீபத்தில் வெளிவந்த ஐராவதம் மகாதேவன் நூல் முன்வைக்கும் புதிய முடிவுகளைத் தவிர்க்க முடியாது. இருப்பினும் சதாசிவபண்டாரத்தார் போன்றோரின் செயல்பாடுகள், ஆய்வுகள் சார்ந்து இயங்கிய கருத்துநிலைத் தளம் தமிழக வரலாற்றின் தவிர்க்க முடியாத கூறுதான். அது விமரிசன நோக்குக்கு உட்பட்டாலும் கூட கவனிப்புக்குரியது தான்.

பண்டாரத்தார் தமது இறுதிக்காலத்திலும் அயராத ஆய்வுப்பணியிலிருந்து ஒதுங்கி விடவில்லை. "தமிழ்நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியன நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை" என்று அவர் தமது இறுதிக் காலத்தில் குறிப்பிட்டார். இதுதான் இன்றைய தலைமுறை யினருக்கு முன்னையோர் விடுத்துள்ள செய்தியும் ஆகும்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com