முட்டுச்சுவர்
எத்தனை தடவ சொன்னாலும் அந்த முட்டாளுக்குப் புரிய மாட்டேங்குது. கிரகம் புடிச்சவன். வாசல்ல கோலம் போட முடியல..சே!" காலையிலேயே வசைபாடிக் கொண்டிருந்தாள் சரளா.

"பல்லு விளக்கினதும் காலைல அவனை ரெண்டு திட்டு திட்டலைன்னா உனக்குப் பொழுது விடியாதே" என்றேன் கடுப்பாக.

"நான் மட்டுமா திட்டுறேன்? தெருவே அவனை கரிச்சுக் கொட்டுது. முந்தாநாள் பாண்டியன் வாத்தியார் சட்டையைப் பிடிச்சு, பொம்பளைங்க நடமாடுற இடத்துல வந்து இப்படி சரசரன்னு ஒண்ணுக்குப் போறியே, உனக்கு வெக்கமா இல்லயான்னு நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்டாரு. முட்டுச் செவத்துலதானே போறேன். வேணம்னா சொல்லு, டெய்லி உன் வீட்டுக்கு வந்து போறேன்னு திமிராப் பேசுறான் எருமைமாடு."

"ஏய் பாவம்டி அவன் அவசரத்துக்கு எங்க போவான். யாராச்சும் வீட்டுக்குள்ள விடுவிங்களா?"

"இவ்ளோ பெரிய தெருவுல அவனுக்கு எடமா இல்ல. வேணும்னு பண்றான் மண்டைக்கனம் பிடிச்சவன்" என்றாள்.

அவள் சொல்வதும் சரிதான்.இவ்வளவு பிரச்சனை பண்ணியும் அந்த ஆள் இந்த இடத்தை விட்டுத்தொலைக்க மாட்டேன் என்கிறான். தெரு முக்கில் பெட்டிக்கடை வைத்திருக்கிறான் அவன். இந்தப் பஞ்சாயத்து காரணமாக தெருவாசிகள் யாரும் அவனிடம் பொருள் வாங்குவதில்லை.

இன்றைக்கு இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று பலமாக யோசித்தேன்.

முடிவாக, எங்கள் வீட்டு நாய் கெவினை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். அவன் கடைவாசலில் இருந்த கம்பத்தில் கெவினை அதன் இயற்கை உபாதைகளை கழிக்கச் செய்தேன். "சார் சார் ஆள் வந்து போற இடம். கூட்டிட்டுப் போங்க" என்றான் எரிச்சலாக.

மறுநாளும் கெவின் பழக்க தோஷத்தில் அதே இடத்தில் சென்று சிறுநீர் கழித்தது. அவன் திட்ட வாயைத் திறக்கும் முன்னரே, "அறிவுகெட்ட ஜென்மம். ஆளுங்க நடமாடுற எடம்னு நேத்தே சொன்னேன்ல? கம்பப் பாத்தா காலத் தூக்கிடுது. மானம்கெட்ட நாய்!" என்றபடி கெவினை லேசாக ஒரு போடு போட்டேன்.

ஒரு வாரம் கழித்து, "ஏங்க என்னனு தெரியல அந்த ஆளு இப்பல்லாம் முட்டுச் செவத்து பக்கம் வர்றதே இல்ல" என்றாள்.

நான் லேசாகச் சிரித்தபடி கெவினை பார்த்தேன். அவனும் புரிந்ததுபோல வாலட்டினான்.

விஷ்வசாந்தி சரவணகுமார்,
இர்விங், டெக்சஸ்

© TamilOnline.com