ஜென்-Z காதல்
ரோச்செஸ்டர் , மினசோட்டா. விடியற்காலை ஐந்தே முக்காலுக்கே கதிரவன் ஒய்யாரமாக வெளியே வந்தான். வானதி சீனிவாசன் சர் சர் என்று படுக்கையறை திரைச்சீலைகளை விலக்கினாள். கடந்த செப்டம்பரில்தான் அரை சதத்தைக் கடந்திருந்தாள். மாநிறம், ஒடிசலான தேகம். அந்த வயதிலும் நீண்ட அடர்த்தியான கூந்தல். அவளது அம்மா, கல்லூரிப் பருவத்தில், "குட்டி ஜெயப்பிரதா" என்று அவளைக் கூப்பிடுவாள்.

சீனிவாசன் முகத்தில் சுரீர் என்று பட்ட சூரியக் கதிர்களைக் கைகளால் மறைத்தபடி "ஏய், என்ன செய்யறே?" எனக் கேட்டார். இந்த இணையருக்குத் திருமணமாகி முப்பது வருடங்கள் பறந்துவிட்டன. அவரது வயதை வழுக்கைத் தலையும் தொப்பையும் எளிதாகக் காட்டிக்கொடுத்தன. அவரை 'குட்டி கமல்ஹாசன்' என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அவர் பார்க்க தசாவதாரம் 'பல்ராம் நாயுடு' கமல்ஹாசன் போலத்தான் இருந்தார்!

"ஏங்க, பன்னிரண்டு மணிக்கு மினியாபோலிஸ் ஏர்போர்ட்ல ஃப்ளைட். ஒன்பது மணிக்கு இந்த இடத்தை விட்டுக் கிளம்பணும்."

"சரி, பத்து நிமிஷம் கொடு. என்ன, புது ஷாம்பு போல... வாசனையா இருக்க! என் பக்கத்துல வா"

"உங்க புத்தி தெரியாதா, நான் போய்ப் பசங்களை எழுப்பணும்."

"சும்மா கூப்பிட்டா... ரொம்ப நினைப்புதான்" என்று சொன்னாலும், மனதிற்குள் அவள் அழகை ரசித்தபடியே ஒரு குட்டித் தூக்கத்துக்கு தயாரானார்.

அவள் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள். இரண்டு பசங்க. ராகவ், ரஞ்சித். பெரியவன் நியூ யார்க்கில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி. நல்ல வேலை, நல்ல சம்பளம். சின்னவன் கனெக்டிகட்டில் மாஸ்டர்ஸ் படிக்கிறான். இது கோடை விடுமுறை, ஜூலை முதல் வாரம் வேறு.

சீனிவாசன் மேயோ மருத்துவமனையில் மிகப்பெரிய இதய நிபுணர். எப்போது வீட்டுக்கு வருவார் என அவருக்கே தெரியாது. வாரத்தில் குறைந்தபட்சம் நான்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சைகள். வாஷிங் மெஷினில் போட்டு வெளியே வந்த சலவைத் துணி போலத்தான் வீட்டுக்குத் திரும்பி வருவார்!

பசங்களின் அறைகளுக்குச் சென்று, ஒரு குரல் கொடுத்துவிட்டு கீழே சென்றாள். பூஜை அறையில் விளக்கு ஏற்றிவிட்டு, கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில் சமையலறைக்கு வந்தாள். காரமான 'யலபெனோ' கிரீம் சீஸ் தடவிய பேகல், சூடான 'டங்கின் டோனட்ஸ்', காஃபியோடு டைனிங் டேபிளில் உட்காரும் பொழுது, இரண்டு பசங்களும் வந்தனர்.

"அம்மா, தோசை, மிளகாய்ப்பொடி, காஃபி காம்பினேஷன் இல்ல இந்த யலபெனோ கிரீம் சீஸ் தடவின பேகல், காஃபி காம்பினேஷன். இத உடமாட்ட போல!" என்றான் ரஞ்சித்.

"காரமா ஏதாவது ஒண்ணோட, காஃபி சாப்பிட்டா அது ஒரு தனி ருசி. பூண்டு காராசேவ்வோட டீ, அதுவும் நல்ல பொருத்தம்" என்று சொல்லிக்கொண்டே பேகலை ஒரு கடி கடித்து, காஃபியையும் கொஞ்சம் குடித்தாள். அவர்கள் குளிக்க மேலே சென்றதும், பேக்கிங் செய்யத் தயாரானாள்.

ராகவ் மற்றும் ரஞ்சித்திற்குத் தங்கள் பெற்றோரின் திருமண வாழ்க்கைபற்றி மிகநல்ல அபிப்பிராயம். அப்பா, எப்படி அம்மாவை மதிக்கிறார், ஒருவருக்கொருவர் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும். வேடிக்கையாக அவர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதைப் பார்க்க சுவாரசியம். பசங்களின் திருமண வாழ்க்கைக்கு பெற்றோர்கள்தான் முன்மாதிரி.

ஒரு மணி நேரத்தில் வெள்ளைநிற 'டெஸ்லா மாடல் ஒய்' முழு மின்சாரக் காரில் கிளம்பினர். உயரமான இருக்கை நிலை, அசத்தலான உட்புறம், 15 அங்குலத் தொடுதிரை, அதிவேக ஒலி அமைப்பு மற்றும் விரிவான கண்ணாடிக் கூரையோடு, டெஸ்லா கார் ராஜா தேசிங்கின் குதிரைபோல கம்பீரமாக காட்சி அளித்தது.

சிறிது நேரத்தில், நெடுஞ்சாலை 55-ஐப் பிடித்தார். வானதி "ஏங்க, போலீஸ் மாமா நிக்கறாரு, தெரியுதா? இதோட மூணு டிக்கெட் வாங்கிட்டீங்க, கவனமா ஓட்டுங்க. எண்பதுல ஓட்றீங்க."

"சரி, நான் பாத்துக்கிறேன்."

"உச்சத்துல 155 மைல் போகக்கூடிய கார். இந்த ரோட்டுல அப்படி போகமுடியுமா? அதனாலதான் ஒரு சாதாரண காரை வாங்கச் சொன்னேன்."

"அம்மா. நீ ஒரு விஷயத்தை வச்சுத் தீர்மானிக்காதே. இந்த வண்டி அஞ்சே நொடியில 50 மைல் வேகத்தைத் தொடும்" என்றான் ராகவ்.

"இது என் அதிர்ஷ்டமான நாள். யார் முகத்தில் முழிச்சேன்? என் பசங்க என் பக்கம் பேசறாங்க!" என்றார் சீனிவாசன்.

★★★★★


டாக்டர் சீனிவாசன், டாக்டர் செந்தில் இருவரும் மேயோ கிளினிக்கில் ஒன்றாகப் பணிபுரிந்து வந்தனர். நல்ல நண்பர்கள்கூட. அத்தோடு, ஒரே தெருவிலும் வசித்தனர். டாக்டர் செந்திலுக்கும் இரண்டு ஒத்த வயதுக் குழந்தைகள். ஆனால் அவருக்கு மூத்தது பெண் குழந்தை. பெயர் வர்ஷா, இளையவன் பையன்.

வர்ஷாவும், ராகவும் ஒரே வயது. ஒரே பள்ளியில் படித்தார்கள். அடிக்கடி சண்டை போடுவார்கள். இருவருக்கும் அவ்வளவாக ஒத்துப்போகாது. கிட்டத்தட்ட பத்து வருடத்திற்க்கு முன், செந்திலுக்கு சியாட்டிலில் ஒரு பெரிய வேலை கிடைத்தது. குடும்பத்துடன் கிளம்பிவிட்டார். அவர்கள் தொடர்பில் இருந்தாலும், நேரில் பார்த்துக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை .

சீனிவாசனுக்கும், வானதிக்கும், எங்கே ராகவ் ஒரு வெள்ளைக்காரியை மருமகளாகக் கூட்டி வந்து விடுவானோ என்று ஒரு பயம் எப்பொழுதும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு, அவர்கள் வர்ஷாவை வாட்ஸப்பில் பார்த்தார்கள். அவளைப் பிடித்துப்போனதால் நேரில் பார்க்க ஆசைப்பட்டனர். அதன் பிறகு, ராகவிடம் பலதடவை பேசிய பிறகு ஒரு வழியாக அவன் வரச் சம்மதித்தான்.

"அம்மா , நான் சொன்னதை, நீங்கள் மறக்கவில்லை என்று நம்புகிறேன். நான் அவர்களின் குடும்பத்தை பார்க்கத்தான் போகிறேன், அந்தப் பொண்ணோட டேட்டிங் செய்யப் போகலை."

"சரிடா, இதைச் சொல்றது நூறாவது முறை" என்றாள் அம்மா.

"அந்தப் பொண்ணு ரொம்ப ராங்கிக்காரி, அற்ப புத்தி."

"டேய், அவங்க முன்னாடி இப்படியெல்லாம் பேசிடாதே, அவ்வளவுதான், செந்திலுக்கு பொண்ணுமேல ரொம்பப் பாசம். அப்புறம் கதகளி ஆடிருவான் பாத்துக்க!" என்றார் சீனிவாசன். பேசிக்கொண்டே எம்.எஸ்.பி. விமான நிலையத்தை அடைந்தனர்.

★★★★★


சியாட்டில், டாக்டர் செந்தில் வீடு.

செந்தில் மனைவி மேகலாவைப் பார்த்து, "சீனிவாசன்கிட்ட இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் வந்தது. ஃப்ளைட் ஏறிட்டாங்களாம். எப்படியும் வர அஞ்சு மணி ஆகும்" என்றார்.

"ஓகே, இன்னும் ஒரு மணி நேரத்துல டின்னர் செய்ய ஆரம்பிக்கிறேன்."

"நீ வர்ஷாகிட்ட பேசினியா?"

"ஒரு மாசமா அம்மா இதைப்பத்திதான் பேசறாங்க" என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்த வர்ஷா, அங்கு இருந்த மசாலா நன்கு தடவி ஊறவைத்த பன்னீர் துண்டுகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.

மேகலா கோபமாக "ஏய் கழுதை, எத்தனை தடவை சொல்லி இருக்கேன். கெஸ்ட் சாப்பாட்டிலே கையை வைக்காதேன்னு!" என்றாள்.

"சாரி அம்மா, கணக்கு வச்சுக்கல."

"என்ன கிண்டலா, என்ன டிரஸ் போடப் போறே?"

"இதேதான்" கசங்கிய டி ஷர்ட்டும், கந்தல் ஜீன்ஸும் அணிந்து இருந்தாள்.

செந்தில், "ஏய், உங்க அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்டீ" என்றார்.

சிரித்துக்கொண்டே வர்ஷா "அம்மா, அந்தப் பையன் திமிரு, தலைக்கனம் பிடிச்சவன். அவனுக்கு தான் பெரிய அதிபுத்திசாலின்னு நினைப்பு."

"ஏய், இதை மட்டும் அவனோட அம்மா கேட்டா, நீ தொலைஞ்ச. சாமி ஆடிடுவா!" என்று சிரித்துகொண்டே சொன்னார் செந்தில்.

"நீங்க இப்படி சிரிச்சுகிட்டே சொன்னா, அவ எப்படி திருந்துவா?" என்றாள் மேகலா.

"அடப் போம்மா. அப்பா, வானதி ஆன்ட்டி சாமி ஆடறதை நெனைச்சு சிரிச்சாரு."

"ஏண்டி, சேம் சைடு கோல் போடுற!"

பக்கோடாவுக்கு வைத்திருந்த கலவையில் இருந்த முந்திரியை எடுக்கும்போது, பட்டென்று அவள் கையில் அடித்தாள் மேகலா.

"நீ முதல்ல மாடிக்கு போ."

"வலிக்குதம்மா!" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்

"ஏய், டிரஸ் விஷயத்தை மறக்காதே"

"அந்தப் பையனுக்கு இது போதும்" என்று மாடிப்படி ஏறியவாறே சொன்னாள்.

"ரொம்ப வற்புறுத்தாதே, அவள் செய்வாள்" என்று சொன்னபடியே அவர் ஃப்ரூட் சாலடில் கை வைத்தபோது, மேகலா "இப்பவே கண்ணைக் கட்டுதே!" என்று கத்தியவாறே அவர் கையைத் தட்டிவிட்டாள்.

★★★★★மாலை நான்கு மணி. செந்தில் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார். மேகலா டீ, பக்கோடா போடுவதில் பிஸியாக இருந்தாள். தனக்குப் பின்னால் அடித்த வாசனை திரவியத்தை வைத்து வர்ஷா நிற்பதைக் கண்டுபிடித்தாள்.

"ஏய், ஹெல்ப் பண்ணுடி. இந்த டீயை ஃப்ளாஸ்கில கொட்டு, இல்ல பக்கோடா போட கொஞ்சம் ஹெல்ப் பண்ணு."

"போம்மா , இப்பத்தான் டிரஸ் பண்ணிக்கிட்டு வந்தேன். அதெல்லாம் முடியாது."

அவளைத் திரும்பிப் பார்த்த மேகலா சற்று ஆடிப்போனாள்! வர்ஷா மாநிறம்தான், ஆனால் நல்ல லட்சணம். அவளை வேகமாகக் கடந்து சென்றாலும், ஒருமுறை நின்று ரசித்து பார்க்கத் தோன்றும் முகக்கட்டு. சற்றுப் பூசினாற்போல உடல். ஆனாலும், அவளது உயரம் அதைக் காட்டிக் கொடுக்காது. ஹன்சிகாவைப் போல் சிரித்தால் கன்னத்தில் குழி! சுருள் முடி. அழகான சிறு வண்ணப் பூப்போட்ட மூன்றடுக்குப் பாவாடை அணிந்து இருந்தாள். இடுப்பைச் சுற்றி வெள்ளை நிறத்தில் துணிவகை பெல்ட். சட்டையின் கை சற்று நீண்டு இருந்தது. அது முடியும் இடத்தில் பலூன்போல் உப்பி இருந்தது. அந்த பூக்களுக்கு ஏற்றாற்போல காதில் பழுப்புநிறத் தோடு.

"என்னடி கலக்குற! என் கண்ணு, செல்லக்குட்டி, லட்டு" என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

"அம்மா, நகரு, இப்பதான் முகத்தைக் கழுவி மேக்கப் போட்டேன். அம்மா நான் ஒண்ணும் அவங்களுக்காக இந்த டிரெஸ்ஸும் மேக்கப்பும் போடலை. இன்று ஜெஃப் பிறந்த நாள். டின்னருக்குப் பிறகு அவனைப் பாக்கப் போகணும்" என்றாள்.

"சரிடீ , ரொம்ப சீன் விடாதே"

சிறிது நேரத்தில் சீனிவாசன் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர் . எல்லோரும் இரவு உணவிற்கு இரண்டு மணி நேரத்தில் கூடினர். புல்கா சப்பாத்தி, கிரேவி, மசாலா பன்னீர் கிரேவி, பிரியாணி, ஃப்ரூட் சாலட் என அமர்க்களப்படுத்தி இருந்தாள் மேகலா.

"டேய், நம்ப பசங்களா இவுங்க. சின்னப் பசங்களா நம்பளை சுத்திச் சுத்தி வருவாங்க. காலம் ஓடுதுடா. நான் இப்பதான் ரோசெஸ்ட்டரை விட்டுக் கிளம்பின மாதிரி இருக்கு" என்றார் செந்தில்

"பத்து வருஷம் ஓடியே போயிருச்சு. சூப்பர் சாப்பாடு மேகலா! கலக்கிட்ட போ! புல்கா பண்றதுல உன்னை அடிச்சுக்க ஆளே இல்லை. டேய் செந்தில், காலம் ஓடினாலும்,உன் தொப்பை அப்படியேதான் இருக்கு" என்று கிண்டலடித்தார் சீனிவாசன்.

பசங்களுக்குள் அவ்வளவாகப் பேச்சு இல்லை. அடிக்கடி அவர்கள் படிப்பு, வேலை பற்றி மாறி மாறிக் கேள்வி கேட்டனர். அவர்களும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அமைதியாகச் சாப்பிட்டனர். பழைய அயலவர்கள், நண்பர்கள் பற்றிப் பெற்றோர் உரையாடலைத் தொடர்ந்தனர். பசங்கள் எதிலும் ஆர்வம் காட்டவில்லை.

இரவு உணவிற்குப் பிறகு, வர்ஷா ஜெஃப் வீட்டுக்குப் போவதாகச் சொன்னாள் . வர்ஷாவின் தம்பியும், ரஞ்சித்தும் கிட்டத்தட்ட ஒரே வயது, அவர்கள் 'எக்ஸ்பாக்ஸ்' விளையாட மாடிக்குச் சென்றனர். ராகவ் தனியாகத்தான் இருந்தான்.

"யாருடி ஜெஃப்?" எனக் கேட்டாள் வானதி .

"ரொம்ப பயப்படாதே. அவனுக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா. இவளோட காலேஜ் மேட்" என்றாள் மேகலா.

சற்றுப் பெருமூச்சு விட்டாள் வானதி.

வர்ஷா செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே போகும் சமயத்தில் மேகலா அவளை உற்றுப் பார்த்தாள். முகத்தைச் சற்று சுளித்தவாறே "ஹாய் ராகவ், ஜெஃப்பைச் சந்திக்க என்னோட வரியா?" எனக் கேட்டாள்.

"கொஞ்சம் சோர்வா இருக்கு" என்று அவன் சொல்லும்பொழுதே வானதி தனது காலால் அவனது காலைச் சற்று அழுத்தினாள். "ஷ்யூர்" என்று சொல்லிக் கிளம்பினான்.

அங்கு என்ன நடந்தது என்பதை பெற்றோர்கள் உணர ஒரு நிமிடம் பிடித்தது. திருமணமே நடந்ததைப் போல சந்தோஷப் பட்டார்கள். அடுத்த சில நாள்களில் ராகவையும் வர்ஷாவையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளத்தான் இல்லை. எப்படியோ வெளியே அனுப்பி வைத்தனர். ஒருநாள் நால்வரும் பௌலிங் போனார்கள். மறுநாள் சினிமா. மற்றொரு நாள் இருவர் மட்டும் மாலுக்குச் சென்றனர். தினமும் வீட்டுக்கு வந்தவுடனே சிறு குழந்தைகள்போல, ஒருவரை பற்றி மற்றொருவர் ஒரே புகார்!

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் விமானத்தைப் பிடிக்கவேண்டும். காலை உணவை முடித்தபின், முன் அறையில் சற்றுக் கவலையாக அமர்ந்திருந்தனர்.

"டேய், சீனிவாசா, எனக்கு என்னோமோ இது செட் ஆகுமான்னு சந்தேகம்தான்" என்றார் செந்தில்.

"டேய், காலையில பல் துலக்கினியா, ஏண்டா காலங்காத்தால எதிர்மறையா சொல்லறே!"

வானதி சேர்ந்துகொண்டாள், "அவர் சொல்றது கரெக்ட்தான். ஒரே கம்பளெய்ன்ட் ரெண்டு பேரும். அதேதான் மேகலாவும் சொல்றா."

மேகலா "சின்னப் பசங்க போல சண்டை போட்டுக்கறாங்க. ஆனா நீங்க சொன்ன ஒரு விஷயம் கரெக்ட். இவர் பல் துலக்கினாலும் அப்படித்தான் இருப்பாரு."

"சைக்கிள் கேப்புல கோல் போடுற, பீ சீரியஸ். பசங்க எங்க?" எனக் கேட்டார் செந்தில்.

"தம்பிக்கு அடுத்த சண்டே பிறந்த நாள். அதுக்கு ஏதோ கிஃப்ட் வாங்க நாலு பேரும் வெளியே போயிருக்காங்க."

"செந்தில், சரி பசங்க வீட்டுல இல்லை, கொஞ்சம் பேசலாம். நானும், வானதியும் இதைப்பற்றி நேத்து பேசினோம். கொஞ்சம் இதை நிறுத்தி வைக்கிறதுதான் சரின்னு படுது."

"என்னடா என்னைச் சொல்லிட்டு நீ நெகட்டிவா பேசற. நீ இவ்வளவு சொன்னபிறகு, நானும் ஒரு விஷயம் சொல்றேன். நாங்களும் அப்படித்தான் நினைக்கிறோம். எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தோம்."

"ஆனால் ஒரு விஷயம்டா, இது சம்பந்தமா அவங்களுக்கு நிறைய அழுத்தம் கொடுத்திருக்கிறோம். இப்ப கொஞ்சம் இடைவெளி கொடுக்கலாமுன்னு சொன்னால், அவங்க நம்பளை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டாங்க. நமக்குப் பாடம் நடத்துவாங்க!"

வானதி "அதுவும் என் பொண்ணு கேட்கவே வேணாம். என் தலையில ஏறி உட்காந்துக்குவா!" என்றாள்.

"சரிடா, அப்புறம் எப்படிதான் இதைச் சொல்லணும்?"

சீனிவாசன் அவர்களைப் பார்த்து "லீவ் இட் டு த எக்ஸ்பர்ட்! நான் எப்படிக் கையாளுகிறேன் என்று மட்டும் பாருங்க. நான் முதல்ல அவர்களின் முடிவை அவர்களிடமே கேட்பேன். அவர்கள் கட்டயாம் வேண்டாம்பாங்க . நாம அவங்களை சம்மதிக்க வைக்கற மாதிரி நடிப்போம். சிறிது நேரம் கழித்து, ஒரு வருடம் இடைவெளி தரோம் என்று பிடிக்காத மாதிரி சொல்லுவோம். சரியா?"

வானதி "எனக்கு இது சரியான ஐடியாவா தெரியல" என்றாள்.

"உன்கிட்ட ஏதாவது வேற நல்ல ஐடியா இருக்கா, சும்மா இரு."

இரண்டு மணி நேரத்தில் பசங்க வந்தனர். மற்ற இருவரையும் மாடிக்கு அனுப்பிவிட்டு, ராகவ் மற்றும் வர்ஷாவை உட்காரச் சொன்னார்கள். சாதாரணமாகச் சில நிமிடங்கள் பேசிய பிறகு...

"அப்புறம் நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க? நம்ம பிளைட் பிடிக்க இன்னும் 5 மணி நேரம்தான் இருக்கு" எனக் கேட்டார் சீனிவாசன்.

"அப்பா, நாங்க இரண்டு பேரும் ரொம்ப யோசிச்சோம். தப்பா நினைச்சுக்காதீங்க. தயவுசெய்து எங்களை மன்னியுங்கள்" என்றான் ராகவ் நாடகப் பாங்கில்.

"நாங்களும் ரொம்ப ஆசைப்பட்டோம், ஆனா..." என்று சீனிவாசன் ஏதோ சொல்லி முடிப்பதற்குள்...

வர்ஷா "சாரி அங்கிள், நானே எதிர்பாக்கலை. உங்க பையன் இன்னிக்கு ப்ரொபோஸ் செய்து இந்த மோதிரத்தை எனக்குக் கொடுத்தார். கேட்டா இரண்டு வருஷம் வெயிட் பண்ணிட்டேன், போதும், அப்படின்னு சொல்றாரு" என்று சொல்லிக்கொண்டே தன் கையிலிருந்த ஜொலிக்கும் வைர மோதிரத்தை காண்பித்தாள்.

நான்கு பேருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

"ஏய், என்னடி சொல்ற, இரண்டு வருஷமா காத்திருந்தானா?" வானதி குழப்பத்துடன் கேட்டாள்.

"இதுக்கு மேல மறைச்சா நல்லா இருக்காது. அம்மா, நானும் வர்ஷாவும் இன்ஸ்டாகிராம்ல ரொம்ப நாளா தொடர்புலதான் இருக்கோம். நீங்க நாலு பேரும் இன்ஸ்டாகிராம்ல இல்லை. நீங்க எங்களிடம் கேட்டப்ப, கொஞ்சம் உங்களோட விளையாடலாமுன்னு நினைச்சோம். சாரி" என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ராகவ்.

"டேய் உங்களை என்ன பண்றேன் பாரு" என்று இருவரின் காதுகளைத் திருகப் போனாள் வானதி .

"கவுண்டமணி சொல்ற மாதிரி, அடேங்கப்பா, இது உலக மகா நடிப்புடா சாமி. இவ செப்பல் போடறப்ப, அவனை அப்படியே பிடிக்காத மாதிரி கூப்பிடறதும், அவன் ஏன்தான் இவள் கூப்பிடறாளோன்னு போனதும். யப்பா! இதுக்கு மேல என்னால இங்க உட்கார முடியாது" என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார் சீனிவாசன்.

நான்கு பசங்களும் ஹை-ஃபைவ் கொடுத்துக் கொண்டனர்.

இதுதான் ஜென்-Z காதல்!

மருங்கர்,
லேக்வில், மினசோட்டா

© TamilOnline.com