அத்தியாயம் - 9 மறுநாள் காலையிலேயே ஹோர்ஷியானாவின் வக்கீல்கள் இருவர் சாராவின் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அவர்கள் கையில் சில சட்டக் காகிதங்கள் இருந்தன. அன்று வாரவிடுமுறை ஆனதால் சாராவின் அப்பாவும் அம்மாவும் வீட்டில் இருந்தனர். வந்தவர்கள் பலமாக வீட்டுக்கதவைத் தட்டினர். சாராவின் அப்பா எரிச்சலோடு கதவைத் திறந்தார்.
அவருக்கு வந்தவர்களைப் பார்த்ததும் யாரென்று புரிந்துவிட்டது. ஒன்றும் சொல்லாமல் உள்ளே வருமாறு அழைத்தார்.
"சாரா, அம்மாவைக் கொஞ்சம் வரச் சொல்லம்மா" என்றார். "அப்படியே, கண்ணம்மா நீ மேலே உன் ரூமுக்குப் போய் இருந்துக்கோ, சரியா?"
சாரா ஒன்றும் பேசாமல் அம்மாவை அழைக்க உள்ளே சென்றாள். சில வினாடிகள் கழித்து சூஸன் உள்ளிருந்து வந்தார். "சார், நீங்க எதுனாச்சும் குடிக்கறீங்களா?" என்று அப்பா கேட்டார். சூஸனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. கணவரைப் பார்த்து ஒரு முறை முறைத்தார்.
"இல்ல சார், பரவால்ல. ஒண்ணும் வேண்டாம்" என்று வந்தவர்கள் கூறினர்.
வந்தவர்களில் வயது முதிர்ந்த வக்கீல் ஒரு கற்றைக் காகிதத்தை பீட்டரிடம் காண்பித்தார். பீட்டர் மெதுவாக அதைப் படித்தார். சூஸனும் ஒரு சில காகிதங்களை வாங்கிப் படித்தார்.
"மிஸ்டர் மற்றும் மிஸர்ஸ் ஃப்ளவர்ஸ், இது எங்க நிறுவனம் ஆலோசித்து எடுத்த முடிவு. நாங்க இதுல சொன்ன மாதிரி நஷ்ட ஈடு கேக்கறோம்" என்றார் பெரியவர்.
சூஸனுக்கு அடக்கி வைத்திருந்த கோபம் எரிமலையாக வெடித்தது.
"என்ன சார் நினைச்சிட்டு இருக்கீங்க நீங்கெல்லாம்? சும்மா நாங்க ஒண்ணும் தெரியாதவங்கன்னு நினைச்சீங்களா? எங்களுக்கும் சட்டம் தெரியும்? யாருக்கு நாங்க நஷ்ட ஈடு கொடுக்கணும்? எதுக்குக் கொடுக்கணும்? அதெல்லாம் முடியாது" சூஸன் பொரிந்து தள்ளினார்.
"சூஸன், கொஞ்சம் பொறுமையா இரேன்" என்று பீட்டர் அமைதியாகச் சொன்னார்.
வக்கீல்களில் மூத்தவர் பேசாமல் இருக்க, மற்றொருவர் இளக்காரமாகப் பேசினார். "சட்டம் தெரியுமில்ல மேடம். நாங்க எல்லா ஆதாரங்களோடதான் வந்திருக்கோம். காச்சு மூச்சுன்னு கத்தமா ஒழுங்கா நஷ்ட ஈட்டுத் தொகைய கொடுத்திட்டுப் போங்க. ரொம்ப திமிராப் பேசாதீங்க. அப்புறம் தொகையை ஏத்திடுவோம், ஜாக்கிரதை."
"என்ன சார், என் மனைவியை மிரட்டுறீங்களா? பெண்கள்னா என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைச்சீங்களா?" என்று பீட்டர் சூஸனுக்கு துணையாகப் பேசினார்.
"கேளுங்க நல்லாக் கேளுங்க" என்றார் சூஸன். "நாம ஒரு தப்பும் பண்ணல. செடி நம்ம வீட்டுல அதுவா வந்திருக்கு. நாம திருடல."
மூத்த வக்கீல் பேச ஆரம்பித்தார். "இந்த ஊரு சட்டப்படி எங்களோட காப்புரிமம் செய்யப்பட்ட மரபணு மாற்றிய விதைகள் எங்களுக்குச் சொந்தனமானவை. அது எப்படி வந்ததுன்னு சட்டம் பாக்கிறது கிடையாது. அந்தப் பொருள் யார்கிட்ட இருக்கு, அவங்க அதை அனுமதியோட வச்சிருக்காங்களான்னு தான் பாக்குது. உங்ககிட்ட எங்களோட காப்புரிமம் செய்யப்பட்ட விதையோட செடி ஒண்ணு எப்படியோ வந்திருக்கு. ஆனா, உங்ககிட்ட அதுக்கான அனுமதி இல்லை. சட்டம் அதைத் தப்புன்னு சொல்லுது. அதுக்குத்தான் சட்டமே நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லுது."
இளைய வக்கீலின் முகத்தில் ஏளனம் இன்னும் அதிகமானது. ஒரு குத்து முகத்தில் விடலாம் என்று சூஸனுக்குத் தோன்றியது. அடக்கிக்கொண்டார். பீட்டர் கண் ஜாடையாக பொறுமை காக்கச் சொன்னார்.
மூத்த வக்கீல் தொடர்ந்தார். "அம்மா, சார்! உங்களுக்கு ஆத்திரமாவும் ஆச்சரியமாவும் இருக்கலாம். இதுதான் சட்டம். காப்புரிமச் சட்டம் மிகவும் கண்டிப்பானது. யாரும் விதிவிலக்கே இல்லை. நீங்க நீதிபதி கிட்ட போனாலும், அவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகணும்."
பீட்டர் எழுந்து நின்றார். எதுக்காக தன் கணவர் நிற்கிறார் என்று சூஸன் சந்தேகமாகப் பார்த்தார். பீட்டர் உள்ளே சென்று சில நிமிடங்கள் கழித்து கையில் தண்ணீர் பாட்டிலோடு வந்தார். அதைத் திறந்து கொஞ்சம் நீர் குடித்தார். "அப்ப, நாங்க உங்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்துத்தான் ஆகணும், இல்லையா?"
"இவ்வளவு நேரமா நாங்க என்ன ராமாயணமா சொன்னோம்?" என்று இளைய வக்கீல் நக்கலாகக் கேட்டார்.
"சார், நாங்க எங்க வக்கீலோட கலந்து ஆலோசிக்கணும். அவர் கொடுக்கிற அறிவுரைப்படிதான் நாங்க நடப்போம். நீங்க இரண்டு பேரும் கிளம்பலாம்" என்று பீட்டர் திடமாகச் சொன்னார்.
மூத்த வக்கீல் அறிவுரை கூறினார். "மிஸ்டர் ஃப்ளவர்ஸ் நீங்க கோர்ட்டு கேஸுன்னு போனீங்கன்னா ரொம்ப சிக்கலாயிடும். எங்க நிறுவனத்துகிட்ட பணபலம் இருக்கு. அதையும் மீறி பக்கபலமும் இருக்கு. மாசக்கணக்குல கேஸ் கோர்ட்டுல போச்சுன்னா உங்களால ஆஜராக முடியுமா? வேலைக்குப் போகவேண்டாமா? கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருங்க."
இளைய வக்கீலும் தூபம் போட்டார், "அப்பறம் எங்க நிறுவனம் இன்னும் கடுமையா வேற ஏதாவது நடவடிக்கை எடுத்தாங்கன்னா வருத்தப்படாதீங்க பின்னாலே."
இரு வக்கீல்களும் விடைபெற்றுப் போயினர். வந்தவர்கள் போனதுதான் தாமதம், சாரா தபதபவென்று மாடிப்படியில் இறங்கி ஓடி வந்தாள். அவள் கண்களில் நீர் வழிந்தது. அம்மாவை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
சூஸன் மெதுவாக அவள் தலையை வருடினார். "ஒண்ணும் பயப்படாதே கண்ணா, எல்லாம் சரியாயிடும். வக்கீல் ஐயாகிட்ட நாங்க பேசிட்டுதான் இருக்கோம். அவர் எப்படியாவது இந்தக் கேஸை வாபஸ் வாங்க வச்சிருவாரு. அதுவும் இல்லாம, நீதான் அருணோட அம்மாகிட்டையும் பேசினயே. இதெல்லாம் சும்மா ஒரு மிரட்டல், அவ்வளவுதான். பணம் சம்பாதிக்க ஒரு திருட்டு வழி. நாம எந்தத் தப்பும் பண்ணாதபோது எதுக்கும் பயப்படவே கூடாது."
பீட்டரும் சாராவை செல்லமாகத் தட்டினார். சாரா கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். "நீ போடா கண்ணா. போய் வீட்டுப் பாடம் செய். வேணும்னா அருண் வீட்டுக்குப் போய்ட்டு வா. கொஞ்சம் மாறுதல் தேவை உனக்கு."
"சூஸன், நாம வக்கீல்கிட்ட இப்பவே பேசணும். அவருக்கு ஒரு ஃபோன் அடி."
"இதோ" என்று சொல்லி, சூஸன் கையில் செல்பேசியை எடுத்தார்.
(தொடரும்)
ராஜேஷ் |