மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (77) உடல்நலக் குறைவால் காலமானார். மதுரையின் மிகப் பாரம்பரியமான இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் 291வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 'இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும்' என்ற நூலை எழுதிப் பரவலாக அறியப்பட்டவர். தனக்கு அடுத்த பீடாதிபதியாக யாரை நியமிப்பது என்று அவர் தேடிக் கொண்டிருந்தபோது அருணகிரியைப் பற்றி அறிந்தார்.
அருணகிரி இளவயதிலேயே திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அரசியல், இலக்கியம், வரலாறு, சமய நூல்களைத் தொடர்ந்து வாசித்து தனது சிந்தனைகளை மேம்படுத்திக் கொண்டார். இவரது தந்தை இராம குருசாமி, மகன் அருணகிரி சைவநெறியில் சிறந்து விளங்கவேண்டும் என்று விரும்பினார். அதன்படி திருவாவடுதுறை ஆதீன மடத்தில் சமயக்கல்வி பயில அருணகிரியை அனுப்பி வைத்தார். சைவ சித்தாந்தம் தொடங்கி சைவ மரபு முழுமையும் நன்கு கற்றுத்தேர்ந்தார் அருணகிரி. அப்போது அவரைப்பற்றிக் கேள்வியுற்ற மதுரை ஆதீனம் சோமசுந்தர தேசிகர் மதுரைக்கு அவரை வரவழைத்தார். மதுரை ஆதீன மடத்தில் அடியாராக அருணகிரி இணைந்தார். மடத்தின் சம்பிரதாயங்களில் முறையான பயிற்சிகளுக்குப் பின் மே 27, 1975ல் இளைய ஆதீனமாக அருணகிரி நியமிக்கப்பட்டார்.
குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் காலமான பின், 292வது ஆதீனகர்த்தராக மார்ச் 14, 1980ல் பொறுப்பேற்றுக் கொண்டார் அருணகிரி. சம்பிரதாயத்தின் படி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்று அவர் அழைக்கப்பட்டார்.
இறைவனுக்கு மட்டுமல்லாமல் பக்தர்களுக்கும் சேவை செய்வதே உண்மையான ஆன்மீகம் என்ற கொள்கையை உடையவராக இருந்தார். சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து சைவத்தைப் பரப்பினார். பல கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நடத்தினார். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். யாரிடமும் விரோதம் பாராட்டாமல் அன்புடன் பழகினார். பல சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
நித்யானந்தவை இளைய ஆதீனமாக அவர் அறிவித்தது அவரது ஆன்மீக வாழ்வின் மிகப்பெரிய சறுக்கலாக அமைந்தது. மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தது. பின் அந்த அறிவிப்பை ரத்து செய்தார். 1980ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சுமார் 41 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பில் இருந்த சுவாமிகள், உடல் நலிவுற்று இறையடி சேர்ந்தார். |