ஒரு கிராமத்தில் கிழவி ஒருத்தி இருந்தாள். தனக்குச் சொந்தமான சிறிய நிலத்தை விற்று, அந்தப் பணத்தில், கைக்கு இரண்டு என்பதாக நான்கு தங்க வளையல்கள் வாங்கினாள். அவற்றை மிகவும் சந்தோஷமாக அணிந்துகொண்டு, புது நகையின் பெருமிதத்தோடு அவள் தெருக்களில் சுற்றிச் சுற்றி வந்தாள். யாருமே அந்த வளையல்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை என்று ஏமாற்றமடைந்தாள். அவள் அவற்றைப் போட்டுக்கொள்ளாமலே இருந்திருக்கலாம், ஏனென்றால் கிராமத்தினர் அவளிடம் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. தனது வளையல்களைப் பார்க்கவைக்க அவள் என்னென்னவோ செய்தும் பயனில்லை. இந்த அலட்சியப் போக்கு அவளுக்கு மிகவும் துயரம் தந்ததால் இரவெல்லாம் அவளால் தூங்கவே முடியவில்லை. அவளுக்கு அற்புதமான எண்ணம் ஒன்று உதித்தது, அது வெற்றி பெற்றே தீருமென அவள் முடிவு செய்தாள். கிராமத்தினர் கவனத்தை அவளது வளையல்களை நோக்கி இழுத்தாகவேண்டும்.
மறுநாள் காலை, சூரியோதயம் ஆனதும், அவள் தன் வீட்டுக்குத் தீ வைத்தாள். தீ கொழுந்துவிட்டு எரியவும், அல்லோல கல்லோலம் ஆனது; எரிகின்ற வீட்டின்முன் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த அவளைப் பார்த்து கிராமத்தினர் ஓடிவந்தனர். பயந்து போயிருந்த அவர்களின் முகத்துக்கு எதிரே தன் கைகளை உயர்த்திப் பரிதாபமாக அசைத்தாள். சிவந்து எரியும் தீயின் ஒளியில் வளையல்கள் பளிச்சிட்டுக்கொண்டு கலகல என ஒலித்தன. "ஐயோ! என் வீடு எரிகிறதே. என் விதியை என்ன சொல்வது! கடவுளே என் கஷ்டத்தை நீ பார்க்கவில்லையா?" என்று அவள் கதறினாள். ஒவ்வொரு வாக்கியத்தைச் சொல்லிக் கதறும்போதும் அவள் யாராவது ஒருவரின் முகத்தின் முன்னால், தன் வளையல்களை அவர் பார்த்தே ஆகும்படியாகக் கைகளை வேகமாக ஆட்டினாள்.
என்ன பரிதாபம்! அவளுக்குத் தன் வளையலை ஊராருக்குக் காண்பிக்க எத்தனை ஆசையென்றால், தன் வீட்டைப் பற்றிக்கூட அவள் கவலைப்படவில்லை. வீடு பற்றி எரிந்துகொண்டிருந்தது, ஆனால் அவளுக்கோ ஊரார் தன் வளையலைப் பார்த்ததில் சந்தோஷம். தமது புத்திசாலித்தனத்தில் மயங்கிப்போன பண்டிதர்களின் முட்டாள்தனமும் இந்தக் கிழவியுடையதைப் போன்றதுதான்.
நன்றி: சனாதன சாரதி, ஏப்ரல் 2021
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |