ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18e)
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளேன். ஆரம்பிக்கும் முன்னமே என் யோசனையைப் பற்றி பொது ஆரம்பநிலை அனுபவமும் நிபுணத்துவமும் உடையவர்களிடமும், வருங்கால வாடிக்கையாளர்களிடமும் கலந்தாலோசிப்பது அத்தியாவசியம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படிச் செய்தால் யாராவது என் யோசனையைத் திருடி என்னுடனேயே போட்டிக்கு வந்து விடுவார்கள் என்று நான் தயங்குகிறேன். என் தயக்கம் சரியானதா? அல்லது, அதைத் தள்ளி வைத்துவிட்டுக் கலந்தாலோசிப்பதே நல்லதா? விளக்குங்களேன். (தொடர்கிறது...)

கதிரவனின் பதில்:
கலந்தாலோசித்தே தீர வேண்டும் என்று ஆணித்தரமாகக் பதிலளித்து விளக்க ஆரம்பித்தேன். முதலில், ஏன் அப்படி அடித்துச் சொல்கிறேன் என்பதற்கான காரணங்களை மேலோட்டமாகப் பட்டியலிட்டோம்:
1. ஒரு டாலருக்குப் பத்து யோசனைகள். (முக்கியத்துவம் மிகக் குறைவு)
2. வளர்ச்சியில் (அல்லது தோல்வியில்) நேரும் யோசனை மாற்றங்கள்
3. கரப்பான் பூச்சிகள் (என்னடா இது என்கிறீர்களா, பொறுமை! பின்பு விளக்குகிறேன்!)
4. இறகுபோல் மெல்லிய யோசனை: ஊதினால் பறந்து விடுமோ?

இப்போது மேற்கண்டவற்றை ஒவ்வொன்றாக விவரித்து வருகிறோம். முதலாவதாக, யோசனைகளின் மதிப்பு மலிவு, குழுவின் திறனுக்கும் வலிமைக்குமே அதிக மதிப்பு என்பதை விளக்கினோம். அடுத்து, ஆரம்பநிலை நிறுவனங்கள் பெரும்பாலும் தத்தம் போக்கில் சில யோசனை மாற்றங்களை அனுபவித்த பிறகுதான் வெற்றி அடைகின்றன என்பதைப்பற்றிக் கூறி, அப்படிப்பட்ட மாறக்கூடிய யோசனையைப் பதுக்கத் தேவையில்லை; அதைப்பற்றிக் கலந்தாலோசித்துச் சரியான பாதையைத் தேடுவதே சரி என்றும் கூறினோம்.

மேலும், அவ்வாறு கலந்தாலோசிக்கும் நிபுணர்கள் உங்கள் யோசனையைத் திருடிவிடுவார்களோ என்று கவலைப்படத் தேவையில்லை, அவர்கள் தங்கள் வேலை அல்லது ஆரம்பநிலை நிறுவனங்களில் முனைந்திருப்பதால் உங்கள் யோசனையைத் திருட மாட்டார்கள் என்றும் கூறினேன். (அப்படி யாராவது திருடி எளிதில் தாங்களே நிறைவேற்ற முடியக்கூடிய யோசனை என்றால் அது லாயக்கற்றது என்பதைப் பற்றி நான்காவது காரணத்தில் இப்போது காண்போம்!)

அடுத்து, மூன்றாவது காரணமான கரப்பான் பூச்சிகளைப் பற்றிக் காண்போம்! அது என்ன கரப்பான் பூச்சிக் காரணம் என்று முணுமுணுப்பது கேட்கிறது! விளக்குகிறேன்:

எனக்குத் தெரிந்த ஆரம்பநிலை முதலீட்டாளர் பலர் யோசனைகளை வைத்து மட்டும் முதலிடுவதில்ல என்றும், யோசனையைவிட நிறுவனர் குழுவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்றும் முன்கூட்டியே முதல் காரணத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு இந்தக் கரப்பான் பூச்சி உதாரணமும் ஒரு முக்கிய அம்சம். அதாவது எதாவது ஒரு சரியாகப் பராமரிக்கப்படாத வீட்டிலோ தங்கும் விடுதிகளிலோ ஒரு கரப்பான் பூச்சியை நீங்கள் பார்க்கக்கூடும். ஆனால் ஒரே ஒரு கரப்பான்தானே என்று அலட்சியப் படுத்திவிட முடியாது. ஏனெனில் கண்ணுக்குத் தெரிந்தது ஒரு கரப்பான் பூச்சி என்றால், தரையிலோ சுவரிலோ உள்ள ஓட்டைகளில் மறைந்து இருட்டில் மட்டும் வெளிவரும் கரப்பான் பூச்சிகள் பத்து மடங்காவது இருக்கும்.

அதற்கு இணையாக ஆரம்பநிலை முதலீட்டார் கூறுவது என்னவென்றால், நிறுவனர்கள் தங்கள் யோசனை மிக அபூர்வமானது, மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்றெல்லாம் பெருமிதமாக எங்களிடம் வந்து கூறுவது வழக்கம்; ஆனால், வெகு சகஜமாக குறுகிய காலத்துக்குள் நாங்கள் அதே யோசனையை, சில சிறிய மாற்றங்களுடன் பல நிறுவனக் குழுக்களிடமிருந்து கேட்டு விடுகிறோம். அதனால், தனித்துவம் வாய்ந்த யோசனை என்பது மிக மிக அபூர்வந்தான்.

தனித்துவம் இல்லை என்றால் அந்த யோசனைகள் ஒட்டு மொத்தமாக ஒரே மாதிரி என்று அர்த்தமில்லை. ஆனால் ஒரே பலனை அளிக்கக் கூடியன, ஓரளவுக்கு சில அம்சங்கள் ஒத்து வருகின்றன என்று அர்த்தம். ஒரு வாடிக்கையாளர் அந்தப் பலனுக்காக உங்கள் நிறுவனம் அல்லது அதே பலன் அளிக்கக்கூடிய மற்ற நிறுவனங்கள் எதாவது ஒன்றே ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்து உங்கள் விற்பொருளை வாங்குவார்கள், அல்லது சேவைக்குச் சந்தா செலுத்துவார்கள். அதனால் சில அம்சங்களில் சில வித்தியாசங்கள் இருந்தாலும் அந்த யோசனைகளை ஒரே வகையாகத்தான் மூலதனத்தார் கருதுகிறார்கள்.

ஆனாலும் ஒரே பலனைக் குறி வைக்கும், ஒரே வகையைச் சார்ந்த பல நிறுவனங்களுக்கும் மூலதனம் கிட்டும் வாய்ப்புள்ளது. அதற்குச் சில காரணங்கள் உள்ளன. அந்தப் பலனை அளிக்கும் வணிகச் சந்தை மிகப் பெரியதாக இருக்கலாம். அப்படி இருந்தால் பல நிறுவனங்கள் அந்தப் பெரிய சந்தையைப் பங்குபோட்டுக் கொள்ளக் கூடும் என்ற கணிப்பால் மூலதனமிடுவார்கள். அல்லது, குழுவின் திறனை எடை போட்டு, பல நிறுவனங்கள் ஒரே யோசனையைத் துரத்திக்கொண்டு போனாலும், உங்கள் குழு நன்கு செயல்பட்டு வெற்றிபெறும் நல்ல திறன் வாய்ந்தது என்று மூலதனத்தார் கணிக்கலாம். அல்லது ஒரே ரக யோசனை இருந்தாலும் உங்கள் அணுகுமுறையிலோ அல்லது தொழில்நுட்பத்திலோ ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது என்ற கணிப்பிருக்கலாம்.

சொல்லப் போனால், ஒரு வணிக வகையறாவில் ஒரே ஒரு நிறுவனந்தான் இருந்தது என்றால், அது ஒரு வகையே இல்லை, அதனால் சந்தை அளவு மிகச்சிறியது என்று மூலதனத்தார் கணித்து மூலதனம் இட முன்வர மாட்டார்கள். ஆனாலும் முன்குறிப்பிட்ட அணுகுமுறை அல்லது தொழில்நுட்ப வித்தியாசம் அத்தியாவசியமானது. அந்த வகையில் இருப்பதாக அறியப்பட்ட நிறுவனங்களில் மற்றொன்றைப் போன்று அப்பட்டமாக அப்படியே இருந்தால் மூலதனம் கிட்டாது! எப்படிப்பட்ட வித்தியாசம் உள்ளது என்பதை நன்கு உங்களுக்கே விளக்கிக்கொண்டு (இல்லாவிட்டால் வித்தியாசத்தை உருவாக்கிக் கொண்டு!) மூலதனத்தாருக்கும் எளிதில் விளக்க முடியவேண்டும்.

உதாரணமாக, மென்பொருள் வரையறுத்த விரிபுலன் வலைத் துறையை (Sofware Defined WAN - SDWAN) எடுத்துக் கொள்வோம். நாங்கள் வெலோக்ளௌட் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தோம். அதே சமயம் இன்னும் சில நிறுவனங்களும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால் உத்தியை நன்கு கலந்தாலோசித்ததில் மேகக்கணினியை வேகமாகப் பயன்படுத்த உதவும் சேவையாக அளிப்பது வலுவான வித்தியாசம் என்று கணித்து ஆரம்பித்தோம். நிறுவனமும் மூலதனம் பெற்று பெருவெற்றி கண்டது.

அவ்வாறு, ஒரே வணிக வகையில் பல நிறுவனங்கள் (கரப்பான் பூச்சிகள்!) இருப்பதாலும், வித்தியாசத்தைக் கணிக்கும் நிர்ப்பந்தம் இருப்பதாலும் உங்கள் யோசனையை மறைத்து வைத்துப் பலனில்லை. பலரிடம் கலந்தாலோசித்தால்தான் மூலதனம் கிட்டும் நிலைக்குச் செல்ல இயலும்.

அடுத்து கலந்தாலோசிக்க வேண்டும் என்பதற்கான நான்காவது காரணத்தைக் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com