மகான்களால் பொலிவுற்றது நம் மகத்தான பாரத பூமி. அதிலும் தமிழகம் மகான்களாலும், ஞானியர்களாலும், சித்தர்களாலும் வழிநடத்தப் பெற்ற புண்ணிய பூமி. திருவருட்பிரகாச வள்ளலார், மகான் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி, சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள், மகாயோகி ஸ்ரீ அரவிந்தர், பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியராகவே வாழ்ந்த ஸ்ரீ அன்னை எனப் பலர் சமய, ஆன்மீக மறுமலர்ச்சிக்கு, ஆன்ம உயர்வுக்கு உழைத்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள்.
அவதார புருடர் இவர் மதுரையை அடுத்த சமயநல்லூரில், ராமஸ்வாமி ஐயர் (எ) அண்ணாசாமி ஐயர் - திரிபுரசுந்தரி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இறையருளால் தோன்றிய இவரது இயற்பெயர் ராமன். ராமன் ஒளி பொருந்திய கண்களுடனும், காலில் சங்கு, சக்கரத்துடனும் மிக அழகாக இருந்தான். குழந்தை பிறந்தால் அதை மீனாட்சிக்கே அர்ப்பணித்து விடுவதாக முன்னரே பெற்றோர்கள் வேண்டிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஒரே சமயத்தில் ராமன், லட்சுமணன் என இரட்டையர் வாய்க்கவே, எந்தக் குழந்தையை அன்னைக்கு அர்ப்பணிப்பது எனக் குழப்பம் ஏற்பட்டது. அதனை அன்னையே தீர்க்கட்டும் என மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குச் சென்றனர் அப்போது ஆலய அர்ச்சகருக்கு அருள் வந்து, காலில் சங்கு சக்கரம் உள்ள குழந்தையை விட்டுச் செல்லுமாறு ஆணை வந்தது. அதன்படி குழந்தை ராமன் ஆலயத்தில் தனித்து விடப்பட்டான். அன்னை மீனாட்சியின் அருளாலும், அர்ச்சகர்களின் ஆதரவாலும் குழந்தை வளர்ந்தது. தக்க வயதில் உபநயனமும் செய்விக்கப்பட்டது. ராஜகோபாலன் என்ற தீட்சாநாமம் சூட்டப்பட்டது.
குழந்தையானந்தர் அதிஷ்டானம், மதுரை
குரு வந்தார்... ஒருநாள், அன்னை மீனாட்சியைத் தரிசிக்கக் காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். ஒரு நல்ல சீடனைத் தேடிக் கொண்டிருந்த அவருக்குச் சிறுவன் ராஜகோபாலனைக் கண்டதும் அவனே தகுதியானவன் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆலயத்தினரின் அனுமதி பெற்று, பெற்றோரின் உத்தரவுடன் ராஜகோபாலனைக் காசிக்கு அழைத்துச் சென்றார் கணபதி பாபா. அன்னை மீனாட்சி அருளால் பல ஆன்மீக, சமய நுணுக்கங்களை ராஜகோபாலன் ஏற்கனவே கற்றிருந்தாலும், குரு தீட்சையாக மேலும் பல விஷயங்கள் அவனுக்குப் போதிக்கப்பட்டன. குருநாதர் பல ஆற்றல்களையும் வழங்கி, பல்வேறு ரகசிய தீட்சைகளைச் சீடருக்கு அளித்தார். காசியில் ஸ்ரீ கணபதி பாபாவிடமிருந்து பல சாஸ்திரங்களையும் பயின்று தேர்ந்தார் ராஜகோபாலன். பின் குருவின் அனுமதியுடன் புனிதத் தலங்களை தரிசிப்பதற்காகத் தல யாத்திரை மேற்கொண்டார்.
இளவரசன் பிழைத்து எழுந்தான்! காசியிலிருந்து புறப்பட்டவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் அங்கு திடீரென இறந்துவிட்டார். அதனால் மன்னன் முதலானோர் அப்போது மிகுந்த வருத்தத்துடன் இருந்தனர். சுவாமிகளின் மகிமையைப்பற்றி முன்பே அறிந்திருந்த அவர்கள் சுவாமிகளின் பாதம் பணிந்து தங்கள் குறையைத் தீர்க்கக் கோரிக் கதறினர்.
குழந்தையானந்தர் அதிஷ்டானத்தில் ஸ்ரீசக்ரம்
சுவாமிகள், ராஜகுமாரனின் பிணம் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார். உள்ளே கதவைத் தாளிட்டுக் கொண்டுவிட்டார். அனைவரும் சுவாமிகள் செய்வது நல்லதுக்குத்தான் என்று பொறுமையாகக் காத்திருந்தனர். நாட்கள் நகர்ந்தன. மூன்று நாள் கழித்து, விடியற்காலை வேளையில், சுவாமிகள் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். சற்று நேரத்தில் இறந்து கிடந்த ராஜகுமாரன், தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தவன் போல வெளியே வந்தான்.
மன்னர் உட்பட அனைவரும் வியப்புற்றனர். நன்றி கூறி சுவாமிகளின் பாதம் பணிந்தனர். 'எல்லாம் குருவருள்' என்று கூறிவிட்டுச் சுவாமிகள் புறப்படத் தயாரானார். சுவாமிகளின் மகிமையை உணர்ந்த அரச வம்சத்தினர் ஸ்ரீ சுவாமிகள் தங்களுடன் சில காலம் தங்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். சுவாமிகள் உடன்பட்டுச் சில நாள் அங்கே தங்கினார். மன்னருக்கும் மக்களுக்கும் பல்வேறு தத்துவங்களைப் போதித்தார். மன்னர் குடும்பத்தினரும் சுவாமிகளுக்கு தங்கள் அன்புக் காணிக்கையாக மகர கண்டியையும், ருத்திராட்ச மாலையையும் வழங்கி ஆசி பெற்றனர்.
குழந்தையானந்தர் - மூன்று அவதாரங்கள்
சமாதி பின்னர் சுவாமிகள் காசி க்ஷேத்திரத்திற்குச் சென்று சில காலம் வசித்தார். தனது சீடன் பல்வேறு ராஜ குடும்பத்தாரால் பூஜிக்கப்படுவது கண்டு மகிழ்ந்த குருநாதர் கணபதி பாபா, சீடனுக்கு 'ராஜபூஜித' என்ற சிறப்புப் பெயரை அளித்துக் கௌரவித்தார். அதுமுதல் 'ராஜபூஜித ராஜகோபால சுவாமிகள்' என்று பக்தர்களால் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார். அவர் முதுகில் லிங்கம் போன்ற மூன்று குழிகள் இருந்ததால் 'த்ரைலிங்க சுவாமிகள்' என்றும் அழைக்கப்பட்டார். அவரை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சந்தித்து உரையாடியிருக்கிறார். பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தரும் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார்.
சில வருடங்களில் கணபதி பாபா மகா சமாதி அடைந்தார். அவர் சமாதிக்குப் பின் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், அங்கேயே சமாதி ஆனார். அது தான் அவரது முதல் சமாதி ஆலயமாகும். அது பஞ்சகங்கா காட் அருகே அமைந்துள்ளது.
அடுத்தடுத்த அவதாரங்கள் அதன் பின் சமாதியிலிருந்து அடுத்த அவதாரமாக மீண்டும் தோன்றிய சுவாமிகள், பல தலங்களுக்கும் சென்று இறுதியில் தென்காசிக்குச் சென்று சில காலம் வசித்தார், அங்கேயே சமாதி ஆனார். அது 'குழந்தை வேலப்பர்' சமாதி என்று அழைக்கப்படுகிறது. பின்னர் மறுபடியும் அவதரித்துத் திருண்ணாமலைக்குச் சென்று நிஷ்டையில் ஆழ்ந்து அங்கேயே சமாதி கொண்டார்.
குழந்தையானந்தர் அதிஷ்டானம், சித்தாலங்குடி
மதுரையில் மகா சித்தர் தொடர்ந்து நான்காவது அவதாரமாகத் தோன்றியவர், மதுரைக்கு வந்து சேர்ந்தார். குள்ளமான உருவம், பருத்த தொந்தி, வட்ட,முகம் சாளவாய் ஒழுகும் வாய், மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவம் அமைந்திருந்தது. 'கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ' என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தைபோல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு 'குழந்தையானந்தர்' என்ற பெயர் நிலைத்துவிட்டது.
சுவாமிகள், தன்னை நாடி வந்தவர்களின் துயரங்களைப் போக்கினார். தஞ்சம் என்று வந்தவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தார். அதே சமயம், தகுதியுடையோருக்கு மட்டுமே அருள் புரியவேண்டும் என்ற அருள் நோக்கம் கொண்டிருந்தார். அதனால் தம் தபோபலத்தை அனைத்து மாந்தருக்கும் காட்டாமல், சாதாரண மனிதர் போலவே பழகி வந்தார். மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், பழனி, தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் எனத் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தகுதியுள்ள அன்பர்களின் வீட்டில் மட்டுமே சுவாமிகள் தங்குவார். அறிவுரை வழங்குவார், குறைகளைத் தீர்ப்பார். மற்றவர்களிடம் ஒன்றும் வெளிக்காட்டாது சாதாரண மனிதர் போலவே பழகுவார். இது அவரது இயல்பாக இருந்தது.
இருவரும் ஒருவரே! ஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள். அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு த்ரைலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். அதைப் பார்த்த சுவாமிகள், "அடேய், எனது அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்" என்றார் புன்னகையுடன். இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வஜென்மமே ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள் என்ற உண்மையை பக்தர்கள் அறிந்துகொண்டனர்.
குழந்தையானந்தர் ஆச்ரமம், வத்தலக்குண்டு
மீனாட்சி மைந்தன் தினந்தோறும் அன்னை மீனாட்சி ஆலயத்திற்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள். அன்னை மீது பல்வேறு பாடல்களை அவர் புனைந்திருக்கிறார்.
பராத்பரி பரமேச்வரி வர தாயகி ஞானேச்வரி மதுரா நாயகி மந்தஹாசினி சோமசுந்தரேச ப்ரிய நாயகி
ஆலவாய் மதுராபுரி தன்னிலே காவலாய் அமைந்து கருணை செய்தாய் ராஜகோபாலன் என் அன்பிற்குரியாளே அன்னையே நாயகி அகிலாண்டேச்வரி
என்ற ஸ்ரீ சுவாமிகளால் இயற்றப் பெற்ற பாடலை எப்போதும் பக்தர்கள் பாடுவது வழக்கம். சுவாமிகள் அன்னை மீனாக்ஷி மீது 'மீனாக்ஷி அஷ்டகம்' என்ற துதி நூலையும் இயற்றியிருக்கிறார்.
காசியில் உள்ள த்ரைலிங்க சுவாமிகள் சிலை
அற்புதங்களும் அதிசயங்களும் சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படுவது.
நகராத ரயில் நகர்ந்தது ஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர். அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி. தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடுங்கோபம் கொண்டார். உடனடியாக அங்கிருந்து எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார். ஆனால் சுவாமிகள் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார்.
அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று புகார் செய்தார். அப்போது கல்யாணராம ஐயர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். அவர் சுவாமிகளைப் பரிசோதித்து, டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கிவிட்டார்.
சுவாமிகள் பிளாட்ஃபாரத்தில் அமர்ந்துவிட்டார். பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமையை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமையை எடுத்துக்கூறி அவரிடம் மன்னிப்புக் கேட்கும்படி அறிவுறுத்தினர். கல்யாணராம ஐயரும் சுவாமிகளைப் பணிந்து மன்னிப்பு வேண்டினார். சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.
மகான் த்ரைலிங்க சுவாமிகள்
உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க "டேய், ரயில் இனிமேல் போகும்டா" என்றார்.
உடனே டிரைவர் எஞ்சினை இயக்க, அதிசயமாக, ரயில் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் கிளம்பியது!
போயே போச்சு திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் பரசுராம ஐயர். குழந்தையானந்தரின் தீவிர பக்தர். சுவாமிகளுக்கு மிக நெருக்கமானவர். சீதாலட்சுமி அம்மாள் அவரது சகோதரி. அவருக்கும் சுவாமிகள் மீது மிகுந்த பக்தி உண்டு. சுவாமிகள் திண்டுக்கல்லுக்கு விஜயம் செய்தபோது அவருக்குத் தேவையான பணிவிடைகள் பலவற்றைச் செய்தவர். அவருக்குத் திடீரென முதுகில் ஒரு பெரிய கட்டி ஏற்பட்டது. பல வைத்தியங்களை மேற்கொண்டும் குணமாகவில்லை. அதனால் அவர் மதுரை சென்று ஸ்ரீ சுவாமிகளை தரிசித்து வேதனையைக் கூறி அழுதார்.
உடனே சுவாமிகள், அந்த அம்மாளுக்கு திருநீறு அளித்து ஆசி கூறிவிட்டு, "விரைவில் குணமாகி விடும். எதற்கும் கவலைப்படாதே!" என்று ஆறுதல் கூறி, தான் அளித்த திருநீற்றை தினந்தோறும் கட்டிமீது தடவி வருமாறு சொல்லி அனுப்பினார். அந்த அம்மாளும் மிகுந்த பயபக்தியோடு அந்தத் திருநீற்றைக் கட்டிமீது பூசி வந்தார். ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு மாதத்துக்குள் கட்டி உடைந்து அந்தப் பிளவை நோய் நீங்கியது.
இவரே அவர் என்னும் கல்வெட்டு
மகா சமாதி நாளடைவில் குழந்தையானந்த சுவாமிகளின் முதுகில் மிகப்பெரிய மூன்று கட்டிகள் தோன்றி அவரை வருத்தின. ஒரு சமயம் சீடர்கள் சிலர், சுவாமிகள் ஏதாவது சித்துக்கள் செய்து அதனை நீக்கிக்கொள்ளக் கூடாதா எனக் கண்ணீர் மல்கக் கேட்டனர். அதற்குச் சுவாமிகள், "இதுவரை மூன்று ஆகிவிட்டது என்பதற்கான அடையாளச் சின்னமடா இது! நான்காவதற்கு வேளை வந்துவிட்டது" என்று பதில் கூறினார். இதுவரை தாம் மூன்று முறை சமாதி ஆகியிருக்கிறோம். இப்போது நான்காவது சமாதி கொள்ளும் வேளை வந்துவிட்டது என்பதே அவர் கூற வந்தது. ஆனால் பக்தர்களால் அந்த சூட்சுமத்தினைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
அது 1932ம் வருடம். நவராத்திரி சமயம். மதுரை மாநகரின் எல்லா இடங்களும் விழாக் கோலம் பூண்டிருந்தன. சுவாமிகள் தங்கியிருந்த மடத்திலும் சிறப்பான பூஜைகள், அவர் பூஜை செய்துவந்த ஸ்ரீ சக்ரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சரஸ்வதி பூஜை நன்னாளும் வந்தது. தனது பக்தர்கள் அனைவரையும் குடும்பத்தோடு விசேஷத்தைக் கொண்டாடுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டு, ராமலிங்கய்யர் என்னும் அணுக்கத் தொண்டர் வீட்டிற்குச் சென்று தங்கி விட்டார் சுவாமிகள்.
குழந்தையானந்தர் மங்கள மாலிகா ஸ்தோத்திரம்
அன்று விஜயதசமி. கீழே பூஜை நடந்து கொண்டிருந்தது. சுவாமிகள் மாடியில் படுத்துக் கொண்டிருந்தார். பூஜை முடிய மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. அபிஷேகப் பாலை எடுத்துக்கொண்டு ராமலிங்க ஐயரும், அவரது தாயாரும் மாடிக்குச் சென்றனர். சுவாமிகள் உறங்கிக் கொண்டிருந்தார். இருமுறை அழைத்தும் பதில் தராதவர், மூன்றாம் முறை ஐயர் உரக்கக் குரல் எழுப்பவும் விழித்துக்கொண்டார். நைவேத்யப் பாலைப் பருகும்படி இருவரும் வேண்டிக்கொண்டனர். சுவாமிகள் வாயைத் திறந்தார். இரண்டு வாய் உள்ளே போயிற்று. மூன்றாவது வாய்ப் பால் வெளியில் வழிந்தது. சுவாமிகள் தமது சுவாசத்தை வெளிவிடாமல் உந்திச் சுழியிலேயே அடக்கிக்கொண்டு மகாசமாதி ஆகிவிட்டார்.
தகவல் பரவியது. அனைவரும் வந்து ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளைத் தொழுதனர். திருமந்திர முறைப்படிச் சடங்குகள் நடந்தேறி மதுரை அரசரடியில் அவரது சமாதி அமைக்கப்பட்டது.
மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவசமாதி ஆலயத்திலிருந்து இன்றும் சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் உதவி வருகிறார் என்பது அடியவர்களின் நம்பிக்கை. மகானை மனப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும் என்பது சத்தியமான உண்மை.
பா.சு. ரமணன் |