ஆகஸ்ட் 31ம் தேதி பாரதத்துக்கு ஒரு பொன்னாள். முதலில், பாராலிம்பிக்ஸ் எனப்படும் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் பந்தயங்களில் பாரதத்தின் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்த நாள். அதில் 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் அடக்கம். முன்னர் நடந்த டோக்யோ ஒலிம்பிக்ஸிலும் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் எனப் பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்று பெருமை சேர்த்தது நினைவிருக்கலாம். ஒலிம்பிக்ஸில் வென்றவர்களுக்கு மத்திய மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும் பரிசு மழை பொழிந்தன. அதற்கு இணையான ஊக்கத்தைப் பாராலிம்பிக்ஸ் வெற்றியாளர்களும் பெற்றால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
அது மட்டுமல்ல, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரே நாளில் 1.28 கோடி தடுப்பூசிகள் போட்டுச் சாதித்ததும் இதே நாளில்தான். இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியான 64.4 கோடிப் பேருக்கு ஒரு முறையாவது தடுப்பூசி போடப்பட்டு விட்டது என்பதும் இங்கே பெருமை கொள்ளத் தக்கது. மனவுறுதி கொண்ட அரசும் அதற்குப் பின்பலமாக நிற்கும் நிர்வாகமும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை மேற்கண்ட இரண்டும் காண்பிக்கின்றன.
★★★★★
இந்தியா நூற்றுக்கணக்கான உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களை உலக நாடுகள் பலவற்றிலும் எந்த மறைமுக நோக்கமும் இல்லாமல் செய்து, அந்த மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமின்றி, கொரோனாவின் தொடக்க காலத்தில் எந்த நிபந்தனைகளுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் மில்லியன் கணக்கில் தடுப்பூசி மருந்தை அனுப்பி உதவியதை அவை நினைவில் கொண்டிருக்கின்றன. "வருகிற பத்தாண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளைப் புதிதாக ஏற்படுத்தவும், வலுப்படுத்தவும் சுமார் 2 ட்ரில்லியன் செலவழிக்கத் திட்டமிட்டிருப்பது, இந்தியாவை உலகநாடுகளிடையே முன்னணியில் நிறுத்தும்" என்று இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா கூறியிருப்பதும் நமக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறது.
★★★★★
தனக்கெனத் தமிழில் ஒரு தனி நடையை வரித்துக்கொண்டு, எழுத்தையே வாழ்வாகக் கொண்டு வீறுநடை போடும் கவிஞர் எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்களோடான நேர்காணல் வாசிக்கச் சுகமானது. ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் வரலாறு ஓர் ஆன்மீக அற்புதம். தமிழ் நாட்டுக்கு வெளியே பிறந்து மாறுபட்ட படைப்புகளால் தமிழுக்குச் செழுமையூட்டிய எழுத்தாளர் விந்தியாவைக் குறித்த கட்டுரை வியக்க வைக்கும். ஒரு குட்டிக் கதையும், நீண்ட கதையும் உங்கள் கற்பனைக்கு நல்ல தீனி. இனி தென்றல் உங்கள் கையில்...
வாசகர்களுக்கு விநாயக சதுர்த்தி மற்றும் உழைப்பாளிகள் தின வாழ்த்துகள்.
தென்றல் செப்டம்பர் 2021 |