முதுமுனைவர் இரா. இளங்குமரனார்
கவிஞர், பேராசிரியர், தமிழாய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பல திறக்குகளில் இயங்கிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் (94) காலமானார். திருநெல்வேலியை அடுத்த வாழவந்தாள்புரத்தில், 1927ல் பிறந்த இவரது இயற்பெயர் கிருஷ்ணன். இளவயதிலேயே தமிழார்வம் கொண்டு விளங்கிய இவர். ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். தனித்தேர்வராகச் சென்னைப் பல்கலை மூலம் புலவர் பட்டம் பெற்றார். இலக்கியமும் இலக்கணமும் ஈர்க்க இதழ்களில் அது குறித்துக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். 'குண்டலகேசி' என்னும் காவியத்தை இயற்றி அதனை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அரங்கேற்றினார். 'திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு' என்னும் இவரது நூலை 1963ல் நேரு வெளியிட்டுச் சிறப்பித்தார். 'காக்கைபாடினியம்', 'இலக்கண வரலாறு', 'தமிழிசை இயக்கம்', 'தனித்தமிழ் இயக்கம்', 'திருக்குறள் தமிழ் மரபுரை', 'நாலடியார் தெளிவுரை', 'செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் (10 தொகுதிகள்)' என ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்தவர். இவரது 'சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு' நூலை வெளியிட்டுச் சிறப்பித்தவர் அப்துல்கலாம்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தந்த 'வாழ்நாள் சாதனையாளர் விருது', பாரதிதாசன் பல்கலைக் கழகம் வழங்கிய 'முதுமுனைவர்' பட்டம், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, 'திரு.வி.க. விருது', 'திருவள்ளுவர் விருது', ஈரோடு குரலியம் அமைப்பு வழங்கிய 'செந்தமிழ் அந்தணர்' விருது, 'குறள் ஞாயிறு, 'திருக்குறள் செம்மல்', 'கம்பர் விருது', 'தமிழ் இயக்கச் செம்மல்', 'தமிழ்ச் செம்மல்' விருது, வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு வழங்கிய 'வாழ்நாள் சாதனையாளர் விருது', 'கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது' எனப் பல விருதுகள் பெற்றவர்.

முதுமை காரணமாக உயிர்நீத்த இவரது உடலின் நல்லடக்கம் தமிழக அரசின் முழு அரசு மரியாதையுடன் நடந்தது.

இவரது நூல்களைக் கீழ்கண்ட சுட்டியில் இலவசமாக வாசிக்கலாம் : www.ulakaththamizh.in

© TamilOnline.com