பேராசிரியர் சோ. சத்தியசீலன்
ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் பங்கேற்றுப் பேசியுள்ள பேராசிரியர் சோ. சத்தியசீலன் (88) காலமானார். 1933ல், பெரம்பலூரில் பிறந்த இவர், பொருளியலில் இளங்கலைப் பட்டமும், தமிழில் முதுகலைப்பட்டமும் பெற்றார். வள்ளலார்மீது கொண்ட ஈர்ப்பால், 'வள்ளலாரின் சமுதாய, ஆன்மீகக் கொள்கைகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர் கல்லூரி ஆசிரியர், முதல்வர் எனத் தனது தனித்திறமையால் உயர்ந்தார்.

தமிழ் இலக்கியங்கள் மீதும் சைவத்தின் மீதும் இவர் கொண்டிருந்த பற்று இவரைச் சொற்பொழிவாளராக்கியது. பேச்சாளராகத் தொடங்கி பட்டிமன்ற நடுவராக உயர்ந்து தமிழின் பெருமையை, தமிழ் இலக்கியங்களின் உயர்வைப் பலரும் அறியச் செய்தார். சொல்லில் உறுதி, தெளிவான உச்சரிப்பு, கேட்பவர் மனதைப் பிணைக்கும் பாங்கு, மேதைமை ஆகியவற்றால் பட்டிமன்றங்களின் பெருமையைப் பரப்பினார். வானொலி நிகழ்ச்சிகள் மூலம் பாமரர்களுக்கும் இலக்கிய அறிவை ஊட்டியவர். தமிழகம் மட்டுமில்லாது உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து பட்டிமன்றங்களை, கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், பாடத்திட்டக் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகள் வகித்தவர். வயலூர் முருகன் கோயில் அறங்காவலர், சமரச சன்மார்க்க சங்கத் தலைவர் போன்ற பொறுப்புகளையும் திறம்படக் கையாண்டவர்.

'அழைக்கிறது அமெரிக்கா', 'திருக்குறள் சிந்தனை முழக்கம்', 'விடுதலைக்கு ஒரு விளக்கம்', 'பாதை பழசு பயணம் புதுசு', 'வள்ளலார் வழியில்' என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். இனிமையாக உரையாடக்கூடியவர். மாணவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். ஆன்மிக, இலக்கியப் பணிகளுக்காக தமிழக அரசின் 'கலைமாமணி', 'சொல்லின் செல்வர்' பட்டங்களைப் பெற்றவர். 'கம்பன் காவலர் விருது', 'சொற்றமிழ்ச் சக்கரவர்த்தி', 'நற்றமிழ்வேள்', 'செஞ்சொற் செவ்வேள்', 'இயற்றமிழ் வித்தகர்' எனப் பல விருதுகள் பெற்றவர். முதுமை காரணமாக இவர் காலமானார்.



© TamilOnline.com