ஜூலை மாதத் தென்றல் இதழில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநர், கால்நடை உயிரித் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், சிறந்த பேச்சாளர், கல்வியாளர் ஐ.ஏ.எஸ்., மற்றும் போட்டித் தேர்வு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருபவர், அவர்களுக்காகப் பல நூல்களையும் எழுதியுள்ளவர், தமிழால் இயலும் என்று அபாரமான நம்பிக்கை கொடுக்கும் 'கையளவு களஞ்சியம்' மூலமாகப் பாராட்டுதல்கள் பெற்றவர் டாக்டர் சங்கர சரவணன் அவர்களது நேர்காணல் படித்தேன். இவை தவிர வருங்காலத் தலைமுறையினருக்குத் தமிழ் மொழியைச் சிறப்பாகக் கற்பதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளார். அவரின் பெருந்தொண்டு மேலும் சிறக்க வாழ்த்தி வரவேற்கிறோம்.
நம்பிக்கையோடு அழைப்பவர்களை கடவுள் ஏமாற்றுவது இல்லைஎன்ற சின்னக்கதையும் மேலோர்வாழ்வில் அருணகிரிநாதரும் மிகவும் அருமை. ஹரிமொழியில் 'தாகமும் ,தண்ணீரும் கேள்விகளும்' என்பதில் நடைபெறப் போகும் முக்கிய நிகழ்வுகளுக்காக, முன்கூட்டியே நடைபெறும் சம்பவங்களை எடுத்துக்காட்டாகக் காண்பித்திருப்பது மிகவும் அற்புதமாக உள்ளது, கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடிவரும் மருத்துவர் செவிலியர், முன்களப் பணியாளர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அப்துல்லா ஜெகபர்தீனின் 'செவிலியர்' என்ற சிறுகதையும் மு. தனஞ்செயன் எழுதிய 'இரண்டு கைகள்' சிறுகதையும், சிந்திக்க வைத்த எழுத்தாளர் த.நா. .சேனாபதி அவர்கள் எழுதிய 'ஞாபகச்சின்னம்' என்ற உண்மைக்கதையாக மனதில் பட்ட அந்தச் சிறுகதையும் மிகவும் சிறப்பாக இருந்தன.
எங்கெங்கோ அமைந்துள்ள கோவில்களைப்பற்றியும் தெய்வங்களைப் பற்றியும் பல விஷயங்களைத் தெரிவிக்கும் கட்டுரைகளை எழுதிவரும் சீதா துரைராஜ் அவர்களுக்கும் மிக்க நன்றி.
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |