முன்னொரு காலத்தில் சத்தியவிரதன் என்றோர் அரசன் இருந்தான். சத்தியமே அவனது வாழ்க்கையும் இலக்கும் வழிகாட்டியுமாக இருந்த காரணத்தால் அவன் அப்பெயரால் அழைக்கப்பட்டான். சத்தியத்தைத் தவறாமல் கடைப்பிடிப்பதில் அவன் ஆனந்தம் அடைந்தான். ஒருநாள் அதிகாலையில் பிரம்மமுகூர்த்த சமயத்தில் அவன் சமுத்திரத்தில் நீராடுவதற்காகத் தனது கோட்டையின் பிரதான வாசல் வழியே வெளியே போனான். அன்றைய தினம் அப்படிப் புனித நீராடுவதற்குச் சிறந்ததெனக் கருதப்பட்டது.
வெளியே போகும்போது அவன் அழகிய மங்கை ஒருத்தியைப் பார்த்தான். அவளைச் சுற்றிப் பிரகாசமான ஒளிவட்டம் இருந்தது. அவள் யாரென்றும் அந்த அதிகாலை வேளையில் அவள் ஏன் வெளியே போகிறாள் என்றும் அறியும் ஆவலுடன் அரசன் அவளை அணுகினான். நான் செல்வங்களின் தேவதையான தனலக்ஷ்மி என்ற அவள், "நான் இங்கே வெகுநாள் இருந்துவிட்டேன். ஒரே இடத்தில் நான் நெடுநாள் இருப்பதில்லை என்பதால் வெளியேறுகிறேன்" என்றாள். "செல்லுங்கள் தாயே! நான் ஆட்சேபிக்கவோ தடுக்கவோ இல்லை" என்றான் சத்தியவிரதன். அப்போது ஓர் அழகிய ஆடவனும் கோட்டை வாசல் வழியே வெளியேறுவதைச் சத்தியவிரதன் பார்த்தான். நீங்கள் யார், என்ன வேலையாக வெளியே போகிறீர்கள் என்று அவரை அரசன் கேட்டான். "நான்தான் கொடை. தனலக்ஷ்மி இங்கிருந்து போனபின் எனக்கு இங்கு என்ன வேலை?" என்றார் அவர். அரசன் அவரையும் போக அனுமதிக்க, அவர் நகர்ந்தார்.
சில கணங்களில் மற்றொரு வசீகரமான நபர் வெளியேறினார். அவர்தான் சதாசாரம் (பொதுவெளியில் நன்னடத்தை) என்று அரசன் அறிந்துகொண்டான். "செல்வமும், தானமும் இல்லாமல் சமுதாயத்தில் நல்லுறவை எப்படி வளர்க்க முடியும்? அவர்கள் இருவரும் போனதால் நானும் போகிறேன்" என்றார் அவர். அதை அரசன் ஏற்றுக்கொண்டான், அவர் போய்விட்டார். அடுத்தாற்போல வெளியேறிய கீர்த்தி (புகழ்), மற்ற மூவரும் இல்லாத காரணத்தால் தான் போக விரும்புவதாகக் கூறினார். அரசன் அவரைப் போக அனுமதித்தான். "செல்வம், தானம், இனிய சமுதாய வாழ்க்கை இல்லாமல் புகழ் எப்படி இருக்கமுடியும்?" என்றார் அவர். அதுவும் சரிதான் என்று அரசன் நினைத்தான்.
இந்தச் சமயத்தில், அபார ஒளிபொருந்திய ஒருவர், நகரத்தை விட்டு வெளியே போவதற்காகக் கோட்டை வாசலுக்கு வந்தார். அவர் யார் என்று கேட்டபோது, "நான்தான் சத்தியம்" என்றார். உடனேயே அரசன் அவரிடம் நீங்கள் இந்த நகரம், இந்த ராஜ்யம், எனது மாளிகை மற்றும் மக்களின் வீடுகளில் இருக்கவேண்டும் என்று கெஞ்சினான். நீங்கள் போய்விட்டால் அது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும், வாழ்க்கை வாழவே தகுதியற்றதாகிவிடும் என்றான். இதைக் கேட்டதும் சத்தியம் அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.
அதே கணத்தில் புகழ் கோட்டைக்குத் திரும்பியது, ஏனென்றால் புகழ் தழைக்கச் சத்தியம் ஒன்றே போதுமானதாகும். நல்லொழுக்கம் திரும்பி வந்து செழித்தது. அடுத்து தானமும் செல்வமும் திரும்பி வந்து ராஜ்யத்தில் நிலைபெற்றன. யாவருமே சத்தியத்தின் மகிமையில் பங்குபெற்று மகிழ்ந்தனர்.
நன்றி: சனாதன சாரதி, மார்ச் 2021
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |