காட்சிப் பிழைதானோ!
சமர் அவென்யூவில் இருந்து வெளியே வரும் வழியில், மெயின் ரோடு தொடக்கத்தில் இருக்கிறது எனது காஃபி ஷாப். கடையின் பக்கவாட்டில் ஒரு ஜூஸ் கடை. வெளியே வந்து பார்வையைத் திருப்பினால் அந்தக் கடைதான் கண்ணில் படும். கடையில் வியாபாரம் இல்லாத நேரங்களில் அந்தக் கடையை வேடிக்கை பார்ப்பது என் வழக்கம். இன்றும் அப்படித்தான். ஃபோன் பேசிக்கொண்டே வெளியே வந்த நான் அந்தக் கடையைப் பார்த்து அதிர்ந்து போனேன். காட்சிப் பிழையோ? கண்களைக் கசக்கிக்கொண்டு அகல விரித்து நன்றாகப் பார்த்தேன். அவள்தான். அவளேதான். ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தாள்.

நாகையிலிருந்து இங்கே எப்போது வந்தாள்? ஸ்கூட்டியில் வந்திருக்கிறாள் என்றால் வீடு அருகில்தான் எங்கோ இருக்கவேண்டும். என் முன்னாள் காதலி என் அருகிலேயே இருக்கிறாளா? ஒன்பது வருடம் கழித்து அவளைப் பார்க்கிறேன். ஜூஸ் பார்சல் வாங்கிக் கொண்டு வண்டியைத் திருப்பினாள். நான் வெடுக்கென்று கடைக்குள் நுழைந்துகொண்டேன். என்னைப் பார்த்தால் சங்கடப்படுவாள் பாவம்.

ஆனாலும், வீடு எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் பைக்கை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தேன். பார்த்துவிடப் போகிறாள் என்கிற பயத்தில் திருப்பங்களில் கவனமாகப் பின்வாங்கிக் கொண்டேன். மூன்றாவது நகரில் திரும்பி வெளிர்ப்பச்சை நிற வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினாள். இங்கே எப்போது வந்தாள்! இவ்வளவு பக்கத்தில் இருப்பவளை எப்படி இவ்வளவு நாள் கவனிக்காமல் விட்டேன்!

மறைந்து நின்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுவிட்டாள்.

செய்வதறியாமல் அவள் வீட்டின் வெளியே நின்று முகப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இங்கே தான் இருக்கிறேன் என்று தெரிந்தால் துடித்துப் போவாள். அவளால் சத்தியமாக இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாது.

உள்ளே பேச்சுக் குரல் கேட்டது.

"இந்தாங்கப்பா ஜூஸ் குடிங்க" அதே தேன்குரல்.

"எங்கம்மா வாங்குன?"

"வித்யாசங்கரோட காஃபி ஷாப் பக்கத்துல இருக்குற கடையிலதான்பா."

நான் விக்கித்து நின்றேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

விஷ்வசாந்தி சரவணகுமார்,
இர்விங், டெக்சஸ்

© TamilOnline.com