(அ)சைவம்
ஒரு சாதாரண அரசு ஊழியராக, சம்பளத்தை மட்டுமே நம்பியிருந்த முத்து, ஒரே மகன் மோகனை எஞ்சினியரிங் படிக்கவைத்தார். இதற்கு அவர் பட்ட கஷ்டநஷ்டங்களைச் சொல்லி மாளாது. ரிடையர் ஆனபோது கிடைத்த பணத்தைக்கொண்டு எம்.பி.ஏ. படிக்கவைத்தார். மோகனுக்குச் சென்னையில் நல்ல வேலை கிடைத்தது. அவனுக்குக் கைநிறையச் சம்பளம். திருமணத்துக்குப் பின் சென்னையில் தனிக்குடித்தனம் போய்விட்டான்.

மகனைப் பார்க்க அடிக்கடி சென்னை சென்ற பெற்றோருக்குப் பிடித்த விதவிதமான அசைவ உணவுகளை வாங்கிவந்து மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொல்வான் மோகன்.

கடைத்தெருவில் தோழியைச் சத்தித்த மோகனின் மனைவி, "அந்த ரெண்டு கெழமும் திரும்பவும் இன்னைக்கு வந்திடுச்சுங்க. என் வீட்டுக்காரர்ட்ட ஒண்ணும் சொல்லமுடியலே. வடிச்சிக் கொட்றதே பெரிய வேலயாப் போச்சி. கொஞ்சம்கூட ரெஸ்ட் இல்லே. ஒரு டிவி பாக்கமுடியலே" என்று புலம்பித் தள்ளினாள்.

ஐடியாத் திலகமான அவள், "சரி, நான் சொல்றதக் கேளு" என்று காதுக்குள் ஏதோ ஓதினாள்.

மோகனின் மனைவி வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் கேட்கும்படி, "என்னங்க, இன்னையிலேர்ந்து நவராத்திரி ஆரம்பம். நான் விரதமிருக்கப் போறேன். எனக்கு எங்கே தெரியப்போவுதுன்னு ஹோட்டல்லகூட அசைவம் சாப்பிடாதிங்க, என்ன புரியுதா?" என்றாள்.

மோகனின் பெற்றோருக்கு இது மனதில் ஒருவித வலியை உண்டாக்கியது. இதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக எண்ணினர். இனிமேலும் இங்கு தங்குவது சரியல்ல என்று முடிவு செய்தனர்.

"மோகன் பென்சன் ஆபீசில ஒரு வேலை இருக்கு. அத முடிச்சுட்டு அப்படியே ஊருக்குப் போயிட்டு வாரோம்" என்றார் முத்து.

அப்போது ஒரு செல்ஃபோன் அழைப்பு வரவே வீட்டுக்கு வெளியே சென்று பேசினான் மோகன். "அங்கேயே இருங்க. நாங்க ரெண்டு பேரும் வந்திடறோம்" என்று பதில் சொன்னான்.

ஆளுக்கொரு டூ வீலரில் இருவரையும் ஏற்றிக்கொண்டு பஸ் ஸ்டாண்டில் கொண்டுபோய் விட்டனர். ஏறி உட்கார்ந்தார்கள். மகனும் மருமகளும் போய்விட்டனர். பஸ் புறப்பட்டது. வழியில் கடைத்தெருவில் ஒரே நெரிசலாக இருக்கவே, பஸ் சற்று நின்றது.

எதிர்பாராமல் அங்கு நின்றுகொண்டிருந்த தனது சம்பந்திகளைச் சன்னல் வழியாகப் பார்த்த முத்து ஆர்வக்கோளாறில் "சம்பந்தி நல்லா இருக்கிங்களா" என்று குரல் விட்டார். அருகிலிருந்த மீன்கடையில் மோகனும் மருமகளும் மீன் வாங்கிக் கொண்டிருந்தனர். பஸ்ஸிலிருந்த எங்களைப் பார்த்த இருவருக்கும் முகம் பேய் அறைந்ததைப் போலாயிற்று.

முத்துவும் அவரது மனைவியும் ஒருவரையொருவர் பரர்த்துக்கொண்டனர். "நல்லவேளை, நமக்கு பென்சன் வருதுங்க" என்றார் முத்துவின் மனைவி.

பாவலர் தஞ்சை தர்மராசன்,
செயின்ட் லூயி, மிசௌரி

© TamilOnline.com