பாவை நோன்பு
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். இங்கே நாம் அந்தப் பாவை நோன்பைப் பற்றிச் சில செய்திகளைக் காண்போம்.

எம்பாவாய் என்னும் பாவை யார்?

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடியது முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவை; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்ற வைணவப் பாசுரங்களின் தொகுப்பில் அது அடக்கம். மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவைப் பாடல்கள் இருபதும் திருவாசகத் தொகுப்பில் அடக்கமாகும். திருப்பாவை திருவெம்பாவை இரண்டிலும் ஒவ்வொரு பாடல் முடியும் பொழுது ஏலோர் எம்பாவாய்என்று பாவை ஒன்றை நோக்கி எம்முடைய பாவையே என்று விளிக்குமாறு இருக்கும். அந்தப் பாவை கொற்றவை அல்லது துர்க்கையாக இருக்கலாம் என்று ஊகமுண்டு.

அதற்கு அடிப்படை பாகவதபுராணம் என்னும் நூலாகும்; அது வடமொழியி லிருந்தாலும் அது தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ்ப்பிராமணர் தோராயமாகக் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இயற்றியதென்று ஆய்வாளர்களின் கருத்து; அது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலிருந்தும் மற்றதமிழ்ச்சூழலில் இருந்தும் நிறைய செய்திகளை ஏற்று வடமொழியில் பாடியுள்ளது. அவற்றுள் ஒன்று பாவைநோன்பு; அதில் காத்தியாயனி என்னும் தெய்வத்தைக் குறித்துக் கன்னியர் நோன்பு நோற்பதை ஆய்வாளர் தெரிவிக்கின்றனர். அதன் பொருட்டு மார்கழியில் அதிகாலையில் எழுந்து ஒருவரை ஒருவர் கூவித் திரட்டி அருகில் உள்ள ஆறு குளங்களில் நீராடிப் பாவையை வேண்டுவது வழக்கம். நமக்குக் கிடைத்துள்ள பாவைப்பாடல்களில் காணும் நெறி என்னவென்றால், தமக்குப் பிடித்த கடவுளைப் போற்றிப் பாவைத் தெய்வத்தையும் கூவி வேண்டுவது தெரிகிறது. திருமாலையோ சிவனையோ பாடிப் பாவைக்கும் சாற்றி நீராடுவது தெரிகிறது.

பாவை நோன்பின் குறிக்கோள்

பொதுவாகப் பாவை நோன்பு கன்னியர்கள் தந்தமக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று குறித்து நோற்பதாகும் என்பதே பலரின் கருத்தாகும். இதன் சுவட்டை மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் ஒன்பதாம் பாட்டில்

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
உன்னடியார் தாள் பணிவோம்; ஆங்கவர்க்கே பாங்காவோம்;
அன்னவரே எம்கணவர் ஆவார்; ...
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்; ஏலோர் எம்பாவாய்!

(திருவாசகம்: திருவெம்பாவை: 9)

என்று பாடுவதில் இருந்து காணலாம். இங்கே முந்தைய பழைய பொருளுக்கெல்லாம் முந்திய பழம்பொருலாகிய சிவனே! உன்னடியார் கால்களுக்குப் பணிவோம்; உன்னடியார்க்கே துணையாவோம்; அத்தகையவரே எம் கணவர்; இந்த வழியாகவே எம் தலைவா நீ நல்குவாய் ஆகில் நாங்கள் என்ன குறையும் இல்லோம் ஆவோம்; ஏலோர் எம்பாவையே! என்று வேண்டுவது தெரிகிறது. பிறகும் திருவெம்பாவை பத்தொன்பதாம் பாட்டில்

எம்கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க!
(திருவாசகம்: திருவெம்பாவை: 19)

என்று சொல்கிறது; அதாவது எம் மார்பின் இருநகில்கள் நின் அன்பர் அல்லாதவர் தோளைச் சேரவேண்டா!என்கின்றனர் நோன்பு நோற்கும் கன்னியர்.

மழை பெய்ய வேண்டுகோள்:

மற்றபடி உலகம் முழுதும் மழை மாதந்தோறும் மும்மாரியாகப் பெய்து வளம் பெருகவேண்டும் என்னும் பொதுநோக்கும் பாவைநோன்புக் கன்னியர் கொள்வதைக் காண்கிறோம். ஆண்டாள் திருப்பாவையில்

... ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடுகயல் உகள
.. சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!

(திருப்பாவை: 3)

[கயல் = கயல்மீன்; உகள = துள்ள; சீர்த்த = செழித்த; வாங்க = இழுக்க]

உயர வளர்ந்து மூவடியால் உலகளந்த பெரியவனாகிய திருமாலின் பெயர் பாடி நாங்கள் நம்முடைய பாவைத்தெய்வத்திற்குச் சாற்றி நீராடினால் நாடெல்லாம் தீங்கின்றி மும்மழை பெய்து உயர்ந்த கொழுத்த செந்நெல்லின் ஊடாகக் கயல்மீன்கள் துள்ளச் செழித்த மடியைப் பற்றி இழுக்கப் பாலைக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள் முதலான நீங்காத செல்வம் நிறைகஎன்று வேண்டுகிறது திருப்பாவை.

இங்கே கவனிக்க வேண்டியது என்னவெண்றால் திருமாலின் பெயர் பாடிப் பாவைக்கும் நீராடுதலைக் குறிப்பிடுவதாகும். முன்பே சொல்லியதுபோல் தமக்குப் பிடித்த கடவுளையும் போற்றிப் பாவைக்கு நீராடி நோன்பு நோற்பது இதில் தெரிகிறது.

சங்கக்காலத்தில் அம்பாவாடல் என்ற கன்னியர் நீராட்டு நோன்பில் வெம்பாதாக வியன் நிலம்அதாவது அகன்ற நிலம் ஈரம் ஆகுகஎன்று வேண்டுவது பரிபாடல் மூலம் தெரிகிறது.

தாய்லாந்தில் திருவெம்பாவை

தாய்லாந்து நாட்டில் திருவெம்பாவையும் திருப்பாவையும் கடந்த பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுள்ளன. தாய்நாட்டார் ஆண்டுதோறும் திரியம்பாவை திரிபாவைவிழாக் கொண்டாடுகின்றனர். தாய்நாட்டு அரசனின் முடிசூட்டு விழாவில் நிகழும் சடங்கிலும் திருவெம்பாவையின் பாடல்களை மந்திரமாக ஓதுகின்றனர்.

மார்கழி நீராடலா தைந்நீராடலா?

இக் காலத்தில் மார்கழி முதல்நாள் தொடங்கி நீராடி அம்மாதத்திற்குள்ளேயே பாவை நோன்பு முடிப்பது காண்கிறோம். திருப்பாவையும் மார்கழி நீராட (திருப்பாவை: 4) என்று பாடும். இங்கே நாம் சங்க இலக்கியத்தில் உள்ள பழைய சான்றுகள்படி மார்கழியில் நோன்பா அல்லது தையில் நோன்பா அல்லது இரண்டிலுமா என்று அடுத்தபடி ஆய்வோம்.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com