எங்கிருந்தோ வந்த விதை
அத்தியாயம் - 8
கீதா விளக்கை அணைத்துவிட்டு, இரவு விளக்கைப் போட்டார். அருண் படுத்துக்கொண்டு போர்வையைப் போர்த்திக் கொண்டான். கீதா கட்டிலருகே இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு அருணின் சிறுவயதுச் சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அன்றுபோலவே இன்றும் இரவில் கேள்வி கேட்கும் அருணைப் பார்க்கும்போது கீதாவுக்குப் பெருமையாக இருந்தது.

இன்னும் சில வருஷங்களில் அருண் கல்லூரிக்குச் சென்றுவிடுவான். அதன் பின்னர் இந்த மாதிரித் தருணங்கள் கிடைக்குமா என்று யோசித்துப் பார்த்தார். அருண் பேசட்டும் என்று இருந்தார். அந்த அறையில் இரவின் நிசப்தம் நிலவியது.

"எப்பம்மா இந்த மாதிரி G.M.O. (மரபணு மாற்றிய உயிரினங்கள்) எல்லாம் செய்ய ஆரம்பிச்சாங்க?"

"ம்… ஒரு முப்பது வருஷம் முன்னாடிலேருந்து. அமெரிக்கா போன்ற நாடுகள்லதான் ஆரம்பம் ஆச்சு. ஹோர்ஷியானா போன்ற நிறுவனங்கள் பெரிய விஞ்ஞானிகளை வச்சு ஆராய்ச்சியைத் தொடங்கினாங்க. முதல்ல எல்லாம் விஞ்ஞான ஆர்வத்திலும் விவசாய நலனுக்காகவும் மட்டும்தான் பண்ணிட்டு இருந்தாங்க."

"நாம இயற்கைக்குப் புறம்பா பண்றது தப்பில்லையா? இயற்கை எல்லாமே ஒரு காரணத்தோடுதானே செய்யுதுன்னு நீங்க சொல்லிக் கேட்டிருக்கேன். எதுக்காக ஒரு செடியோடு அடிப்படை குணங்களை மாத்தணூம். அது தப்பில்லையாம்மா?"

கீதா கொட்டாவி விட்டார். எழுந்து நின்று பிறகு உடலை அப்படி இப்படி வளைத்தார். "அம்மா, தூக்கம் வருதுன்னா பரவாயில்லை. நம்ம இன்னொரு நாள் பேசலாம். ரெஸ்ட் எடுங்கம்மா."

"இல்லை கண்ணா. இது ரொம்ப முக்கியமான விஷயம். அதுவும் உன்னை மாதிரிப் பசங்க தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். எனக்கு ஒரு 5 நிமிஷம் கொடு. நான் கடகடன்னு முகம் கழுவிகிட்டு வந்துடறேன்."

கீதா அறையை போய்விட்டுச் சில நிமிடங்களில் திரும்பி வந்தார்.

"அப்பாடா, நல்ல ஜில் தண்ணி முகத்துல பட்டதும் எல்லாத் தூக்கமும் பறந்து போச்சு. இப்ப கேளு" என்று மலர்ச்சியோடு சொன்னார்.

"எதுக்கு இந்த G.M.O எல்லாம் அம்மா? மனித சமுதாயம் ஆயிரக்கணக்கான வருஷங்கள் G.M.O. இல்லாமதான இருந்தது?"

"விஞ்ஞான வளர்ச்சியால நாம நிறைய நன்மை அடைஞ்சிருக்கோம். கார், விமானம், கம்ப்யூட்டர் இன்னும் பல. ஏன், பழைய காலத்து மனிதர்கள் போலே நாமே எல்லா இடத்துக்கும் நடந்தே போலாமே? அதைப்போலத்தான் விவசாயம் சம்பந்தப்பட்ட வளர்ச்சியும். இன்னிக்கு இருக்கிற ஜனத்தொகைக்கு அரிசி, கோதுமை போன்ற பயிர்கள் வருடத்தில் மூன்று முறை விளைச்சல் கொடுக்கிற மாதிரி தேவைப்படுது. ஜனத்தொகை எல்லாத்துக்கும் சாப்பாடு வேணுமே. இயற்கை கொடுக்கிறத அப்படியே உபயோகிச்சால், உணவுப் பற்றாக்குறை வர வாய்ப்பு இருக்கிறது. இதுல இந்த பாழாப்போன புவி வெப்பமாதல் வேற. உண்மையைச் சொன்னா, இந்த G.M.O-வின் அடிப்படை, உலக நலனுக்குத்தான். ஆனா, காலப்போக்கில் ஹோர்ஷியானா போன்ற நிறுவனங்கள் அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன."

"ஆயுதமா?"

அருணுக்கு வியப்பாக இருந்தது. விவசாய நலனுக்காகச் செய்யப்படும் ஒன்று எப்படி ஆயுதம் ஆகக்கூடும்?

"ஆமாம் கண்ணா. கொஞ்சம் கொஞ்சமா விவசாயிகளை வற்புறுத்தி இப்ப G.M.O. விதைகள் தவிர வேற எதுவுமே இல்லாம பண்ணிடுச்சு இந்த நிறுவனங்கள். இந்த விதைகளுக்கு நிறையப் பணம் கொடுக்கணும்."

"அரசாங்கம் எதுவும் பண்ணாதா? அவங்களுக்கு நாட்டு மக்களோட நலன் முக்கியம் இல்லையா? பாவம் ஏழை விவசாயிகள். அவங்க கடன் கொடுமையில கஷ்டப்படறது தப்பாப் படலையா அரசாங்கத்துக்கு?"

அவன் கேட்டது சரியான கேள்வி. பணபலம் உள்ள நிறுவனங்கள் தாங்கள் நினைத்தபடி நடக்கத் தொடங்கினால் அப்புறம் விவசாயிகளால் என்ன செய்யமுடியும்? அரசாங்கம் என்பது மக்களுக்காகத்தானே?

"என்னம்மா, மௌனமா இருக்கீங்க? நான் கேக்கறது சரிதானே?"

"100 சதவீதம் சரி கண்ணா. நெத்தில அடிச்ச மாதிரி கேட்டே."

"அது என்னன்னா, இந்த நிறுவனங்கள் தனக்கு ஏத்த மாதிரி சட்டத்தை அமைச்சுக்க நிறையப் பணம் செலவு பண்ணி லாபியிஸ்ட்ஸை (lobbyists) உபயோகப்படுத்தி பல தலைவர்களை வசப்படுத்திடறாங்க. அந்தத் தலைவர்களும் – எல்லாரும் இல்லை, ஒரு சிலர் மட்டும் – நிறுவனங்கள் கொடுக்கிற நன்கொடைக்காகத் தங்களது மனசை அடமானம் வெச்சுடறாங்க. இதனால பாதிக்கப்படறது நம்மள மாதிரி சாதாரண மக்கள்தான்."

கீதாவின் செல்ஃபோனில் ஒரு குறுஞ்செய்தி வந்தது, அதைப் பார்த்தார்:

Sarah: Aunty, is Arun still up? May I call him?

"யாரும்மா இந்த நேரத்துல?"

கீதா செல்ஃபோனை அருணுக்குக் காண்பித்தார். அருண் எதுவும் சொல்லுமுன் கீதாவே டயல் செய்தார். ஒருமுறை மணி அடித்ததுமே மறுமுனையில் சாராவின் குரல் கேட்டது.

"கீதா ஆன்ட்டி?"

"ஒரு நிமிஷம் இரு சாரா. அருண்கிட்ட கொடுக்கறேன்."

அருண் செல்ஃபோனை வாங்கி, அதன் ஸ்பீக்கரில் போட்டான்.

"ஹை சாரா. எப்படி இருக்க? நான் ஸ்பீக்கர் போட்டிருக்கேன்."

"கூல். தூங்கப் போய்ட்டயா அருண்? எனக்குத் தூக்கமே வரலை. அதான் கூப்பிட்டேன்."

"நான் அம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன் சாரா. நிறையக் கேக்கறதுக்கு இருக்கு. இன்னிக்கு நடந்ததைப் பத்தித்தான்."

"கீதா ஆன்ட்டி, எனக்கும் நிறையக் கேள்விகள் இருக்கு. கேக்கலாமா?"

கீதா சிரித்துக் கொண்டார். இன்று இரவு சிவராத்திரிதான் என்று தோன்றியது. "தாராளமா சாரா. அருணுக்கு இப்பத்தான் ஒரு சில விஷயங்களை விளக்கிட்டு இருக்கேன்."

"ஆன்ட்டி, இந்த G.M.O விதைகள் எப்படி எங்க வீட்டுக்கு வந்ததுன்னு சட்டம் கவலைப்படாதாமே? அப்பா சொன்னாங்க. அது எப்படி வந்தாலும் ஹோர்ஷியானாவின் காப்புரிமைப் பொருள் என்பதுதான் முக்கியமாம். இதென்ன ஆன்ட்டி அநியாயமா இருக்கு! எங்க வீட்டுக்குப் பின்னாடி வளந்த செடிக்கு நாங்க ஒண்ணும் பொறுப்பு இல்லையே. அதுவா காத்துல வந்து விழுந்தா நாங்க என்ன செய்யமுடியும்?" சாராவின் குரலில் ஆக்ரோஷம் தெரிந்தது.

"நீ சொல்றது சரிதான் சாரா. இப்படித்தான் பல விவசாயிகளும் மாட்டிக்கிட்டு கஷ்டப்படறாங்க. ஒரு விவசாயி பணம் கொடுத்து இந்த G.M.O விதைகளை வாங்கி உழவு பண்ணிருப்பாரு. ஆனா, அவர் செடியிலிருந்து காத்து அடிச்சு எங்காவது அடுத்த நிலத்து விவசாயி வயல்ல விழுந்திச்சுன்னா, அவங்களும் பணம் கொடுக்கற மாதிரி பண்ணிடுவாங்க ஹோர்ஷியானா மாதிரி நிறுவனங்க. உங்களுக்கு இப்ப நடந்ததும் அப்படித்தான். ஹோர்ஷியானாவின் காப்புரிமப் பொருள் உங்ககிட்ட இப்ப இருக்கு. அதுக்கு அவங்க பணம் கேக்கறாங்க. இதெல்லாம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டதுதான்."

மேலும் சில மணி நேரம் பேச்சு போனது. கீதா வலுக்கட்டாயமாக அதை முடித்துக்கொள்ளச் சொன்னார்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com